Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

வெள்ளை முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

“முதலைகளின் வருடாந்தரக் கணக்கெடுப்பின்போது . . . ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள பித்தர்கானிகா தேசிய பூங்காவின் வன அதிகாரிகள் 15 அரிய வெள்ளை நிற முதலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என இந்தியாவில் வெளியாகும் த ஹிண்டு நாளேடு குறிப்பிடுகிறது. வெள்ளை நிற முதலைகள் வெகு அரியவை, “உலகில் வேறெங்கும் காணப்படாதவை.” அடிக்கடி சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டதால் இப்பகுதியிலுள்ள உவர்நீர் முதலைகள் 1970-களில் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடும் நிலையில் இருந்தன; ஆனால் ஐக்கிய நாடுகளின் செயல்திட்டங்களுடைய உதவியோடு மாநில அரசு அந்தப் பூங்காவிலேயே முதலை வளர்ப்பு திட்டத்திற்கு வழிசெய்தது. எக்கச்சக்கமான சதுப்புநில தாவரங்களும், மாசுபடியாத தண்ணீரும், ஏராளமான உணவும், குறைவான மனித நடமாட்டமும் அவற்றின் இனப்பெருக்க ஏற்பாடு வெற்றி பெற உதவி செய்திருக்கின்றன. அந்த நாளேட்டின்படி, சாதாரண நிற முதலைகளையும் அரிய வெள்ளை நிற முதலைகளையும் சேர்த்து இந்தப் பூங்காவில் தற்போது சுமார் 1,500 முதலைகள் உள்ளன. (g05 4/8)

புகையிலையும் வறுமையும் வியாதியும்

“புகைப்பது வறுமைக்கும், வறுமை புகைப்பதற்கும் மாறி மாறி காரணமாயிருக்கும் ஏழை நாடுகளில்தான் கிட்டத்தட்ட 84 சதவீதத்தினர் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்களென உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கிறது” என்று ஸ்பெயின் நாட்டு செய்தித்தாள் டியாரியோ மிடிகோ குறிப்பிடுகிறது. அதோடு, ஒவ்வொரு நாட்டிலும் “வறுமையின் கோரப்பிடியில் அல்லாடும் ஜனங்களே பெருமளவு புகைபிடிக்கிறார்கள், புகையிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாலும் இவர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.” வளர்ச்சி அடைந்த பெரும்பாலான நாடுகளில் புகையிலையை உபயோகிப்பது குறைந்திருக்கிறபோதிலும் உலகளவில் இது “வியாதிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான அம்சங்களுள் நான்காவது இடத்தில் இருக்கிறது” என அச்செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஸ்பெயினில் புகையிலையால் ஏற்படும் வருடாந்தர மரண வீதம் 60,000-⁠த்தை எட்டியிருக்கிறது; புகைப்பது “வியாதிக்கும், குறைபாட்டுக்கும், அநாவசியமான மரணத்திற்கும் முக்கிய காரணியாக” ஆகியிருக்கிறது. (g05 4/8)

நைட்டிங்கேலின் பாட்டு Vs போக்குவரத்து இரைச்சல்

“இரைச்சல் அதிகரிக்கையில் நைட்டிங்கேல் பறவைகள் சத்தமாகப் பாடுகின்றன” என ஜெர்மனியில் வெளியாகும் பெர்லீனர் ட்ஸைடுங் என்ற தினசரி குறிப்பிடுகிறது. பெர்லினிலுள்ள ஃப்ரீ யூனிவர்சிட்டியின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பையாலஜியில் பணியாற்றும் ஹென்ரிக் ப்ரும் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்; அதன்படி, பறவைகள் தங்கள் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவதற்கும் பெண் பறவைகளைக் கவருவதற்கும் பாடும் பாடல்களின் தொனி, சுற்றுவட்டாரத்தின் இரைச்சலைப் பொறுத்து 14 டெசிபெல்கள் அதிகரிக்கலாம் என கண்டுபிடித்தார். “இது அவ்வளவு ஒன்றும் அதிகமல்ல என நீங்கள் நினைக்கலாம், ஆனால் சத்தத்தின் அழுத்தம் ஐந்து மடங்கு அதிகரிப்பதை அது குறிக்கிறது; அதாவது பறவையின் நுரையீரல்களில் ஏற்படும் அழுத்தம் ஐந்து மடங்கு அதிகரிப்பதைக் குறிக்கிறது” என்கிறார் ப்ரும். அமைதியான பகுதிகளில் பறவையின் பாடல்கள் 75 டெசிபெல்களாகப் பதிவாயின. ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் 89 டெசிபெல்களாக பதிவாயின. “போக்குவரத்து இரைச்சலுக்கு ஏற்ப பறவைகள் ஒவ்வொரு நாளும் தங்களை மாற்றியமைத்துக் கொள்வதாகத் தோன்றியது; இந்த உண்மையே முக்கியமாக அந்த ஆராய்ச்சியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வாரயிறுதி நாட்களில் வேலைக்கு போய் வருவோர் இல்லாததால் பறவைகள் மற்ற நாட்களைவிட ரொம்பவே தாழ்ந்த குரலில் பாடின” என அந்தத் தினசரி குறிப்பிடுகிறது. (g05 4/8)

போலந்திலுள்ள பள்ளிகளில் குற்றச்செயல்

2003-⁠ல் “[போலந்து நாட்டிலுள்ள] பள்ளிகளில் இருபதாயிரம் திருட்டுகள் நடந்தன, 80 சதவீத [போலந்து நாட்டு] பள்ளி குழந்தைகளுக்கு அவர்களுடைய பள்ளிகளைக் கண்டாலே பிடிப்பதில்லை; காரணம் அவர்கள் தனிமையாக உணருகிறார்கள், ஆசிரியர்களோடும் பிற மாணவர்களோடும் ஒத்துப் போவதற்குக் கஷ்டப்படுகிறார்கள்” என அறிக்கை செய்கிறது போலந்தில் வெளியாகும் ஸ்வேர்சாட்வா என்ற பத்திரிகை. ஏன் இத்தனை அதிகப் பிரச்சினைகள்? “வெளி உலகத்தால் பாதிக்கப்படாதபடி பள்ளிகள் தனித்து இயங்குவதில்லை. சமுதாயத்தில் நடப்பதையே அவை பிரதிபலிக்கின்றன” என்கிறார் மனநல ஊழியரான வால்செக் ஐகல்பர்கர். “நாம் உருவாக்கும் தராதரங்கள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் இயங்குகின்றன.” இப்பிரச்சினையை எதிர்த்துப் போராட பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட வேண்டும், அதன் மூலம் தங்களுக்குத் தங்கள் பிள்ளைகள்தான் முக்கியமென்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறார் ஐகல்பர்கர். (g05 4/8)

கட்டுக்கோப்பான தேகத்தைப் பெற போராட்டம்

“இளைஞர்கள், அதிலும் முக்கியமாக இளைஞிகள் ரொம்ப சின்ன வயதிலேயே சிக்கென உடலை வைத்திருப்பதற்குப் பெரிதும் போராடுகிறார்கள்; இதனால் மோசமான உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்” என கனடாவில் வெளியாகும் குளோப் அண்டு மெயில் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. 10 முதல் 14 வயது சிறுமிகளின் சாப்பாட்டு பழக்கங்களைப் பற்றி நடத்தப்பட்ட சுற்றாய்வில் 2,200-⁠க்கும் அதிகமானோர் பங்குகொண்டார்கள். “7 சதவீதத்திற்கும் குறைவான சிறுமிகளே உண்மையில் பருமனாக இருந்தார்கள், ஆனால் 31 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் ‘ரொம்ப குண்டாக’ இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள், 29 சதவீதத்தினர் தற்போது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொன்னார்கள்” என குளோப் அறிக்கை செய்கிறது. ஆரோக்கியமான பெண் பிள்ளைகள் எடையைக் குறைக்க ஆசைப்படுவதேன்? அந்தச் செய்தித்தாளின்படி, எப்போதும் கட்டுப்பாட்டுடன் சாப்பிட்டுக் கொண்டும், குண்டாக இருப்பவர்களைக் கேலி செய்துகொண்டும் இருக்கும் ரோல் மாடல்களான பெரியவர்களே இவர்களைக் கெடுக்கிறார்கள். “ஊசிபோன்ற உடல்வாகுடைய ரோல் மாடல்களை எப்போதும் காட்டிக் கொண்டே இருக்கும் மீடியாவும் டீனேஜர்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்துகிறது” என குளோப் குறிப்பிடுகிறது. “உடலின் எடை கூடுவது இயல்புதான், வளரும் பிள்ளைகளுக்கு அது அவசியமும்கூட” என்பதை பிள்ளைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருமே புரிந்துகொள்வது அவசியம் என்று வியாதிப்பட்ட பிள்ளைகளுக்கான டோரான்டோ ஆஸ்பத்திரியில் ஆராய்ச்சி நடத்தும் டாக்டர் கேல் மெக்வே குறிப்பிடுகிறார். (g05 4/8)

“அறிவுக்கூர்மை” குறையாமலிருக்க

“வயதாகும்போது “அறிவுக்கூர்மை” குறையாமல் இருக்க இருமொழி பேசுவது உதவுகிறது” என டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. யார்க் பல்கலைக்கழக மனநல மருத்துவர் எல்லன் பையாலிஸ்டாக் என்பவர் 30 முதல் 59 வயதுள்ள 104 பெரியவர்களையும் 60 முதல் 88 வயதுள்ள 50 பெரியவர்களையும் வைத்து அவர்கள் அறிவுத்திறனுடன் செயல்படும் விதத்தைச் சோதித்தார்; இவர்கள் அனைவரும் ஒரேயளவு படித்திருந்தார்கள், ஒரேயளவு சம்பாதித்திருந்தார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் பாதிப் பேர் இருமொழி பேசுபவர்களாக இருந்தார்கள். நேரெதிரான இரு தெரிவுகளோடு எளிய பணி ஒன்றை செய்து முடிக்கும்படி ஒவ்வொருவரிடமும் சொல்லப்பட்டது; அதற்கு அவர்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டது. “இந்தச் சோதனையில் இருமொழி பேசுபவர்கள் ஒரு மொழி பேசுபவர்களைவிட வேகமாக செயல்பட்டார்கள்” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இருமொழி பேசும் ஆட்களுக்கு எப்போதும் இருமொழிகளில் தெரிவுகள் செய்ய வாய்ப்புள்ளது, பதிலளிக்க எந்த மொழியைப் பயன்படுத்துவதென அவர்களுடைய மூளை தீர்மானிக்க வேண்டியுள்ளது என பையாலிஸ்டாக் கருத்து தெரிவிக்கிறார். “காலப்போக்கில், மனதுக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சி, வயதாகும்போது பல்வேறு பணிகளைச் செய்வதில் இயல்பாக ஏற்படும் தளிர்ச்சியிலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது.” (g05 4/22)

சிக்கனமும் கருக்கொலையும்

பலரது கருத்துக்கு மாறாக “ஆஸ்திரேலியாவில் கருக்கொலை செய்துகொள்பவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த [பெண்கள்]; பலருடன் உடலுறவு கொள்ளும் பருவ மங்கையர் அல்ல” என அறிக்கை செய்கிறது த சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற செய்தித்தாள். சம்பாதிப்பதற்காக கணவர்கள் முழுநேர வேலையையும் மனைவிகள் பகுதிநேர வேலையையும் பார்க்கும்போது, கிடைக்கிற வருவாயை வைத்தே அவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் வேண்டாம் என தீர்மானிக்கிறார்கள். “தாயாகும்போது அது அவருடைய வேலையையும் பாதிக்கிறது, வருவாயையும் பாதிக்கிறது” என சொல்கிறார் பீட்டர் மெக்டானல்ட்; இவர் ஆஸ்ட்ரேலியன் நேஷனல் யூனிவர்சிட்டியில் மக்கள் தொகையியல் பேராசிரியராக இருக்கிறார். “ஒரு குழந்தை இல்லாதபோது [பெண்கள்] சம்பாதிக்கும் இந்த ஊதியம் அதிகமாக இருக்கிறது, ஆனால் ஒரு குழந்தை இருக்கிறதென்றால் அவர்களுடைய ஊதியம் குறைவாகவே இருக்கிறது.” ஹெரால்ட் குறிப்பிடுகிறபடி, ஆஸ்திரேலியாவில் கர்ப்பிணிகளில் மூன்று பேரில் ஒருவருக்கு கருக்கொலை செய்யப்படுகிறது. (g05 4/22)