Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

தனிமை “தனிமரம் ஆனால் தனிமையில் இல்லை” (ஜூலை 8, 2004) என்ற தொடர் கட்டுரையைப் படித்ததும் உங்களுக்குக் கடிதம் எழுதியே தீருவதென முடிவு செய்தேன். முதலில் அந்தக் கட்டுரைகளைப் பார்த்ததும் எனக்கு படிக்கத் தோன்றவில்லை. ஆனால் என் உணர்ச்சிக் குமுறல்களை எனக்குள்ளே போட்டு புதைத்து வைத்திருக்கிறேன் என்பதைக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்ததும் புரிந்துகொண்டேன். அதிலிருந்த மணி மணியான ஆலோசனைகள்தான் எனக்குத் தேவைப்பட்டவை.

ஏ. வி., ஐக்கிய மாகாணங்கள்

வலிப்பு நோயாலும் மனச் சோர்வாலும் ரொம்பவே கஷ்டப்படுகிறேன், அதற்காக மருந்து சாப்பிடுவதால் எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருக்கிறேன். எனவே பெரும்பாலான சமயங்களில் தன்னந்தனியாக இருப்பது போல உணருகிறேன், மகிழ்ச்சியின்றி தவிக்கிறேன். இந்தக் கட்டுரைகள் தனிமையை உணரும்போதுகூட நாம் தனியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவின.

ஜே. சி., ஐக்கிய மாகாணங்கள்

என் கணவர் பிஸினஸ் விஷயமாக வெளியூர் போனபோது நான் தனியாக இருந்தேன்; அந்தச் சமயத்தில் வாட்டமாக இருந்ததற்கான காரணத்தை புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவின. தனிமையுணர்வு ஏற்படுவது எல்லாருக்கும் சகஜம்தான், அதை சமாளிப்பதற்கு, முதிர்ந்த சிநேகிதியிடம் பேச வேண்டும் என அறிவுரை கூறியிருந்தது எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது.

ஜே. ஹெச்., செக் குடியரசு

பிரசங்கிப்பாளர் அதிகம் தேவைப்படும் ஒரு புதிய இடத்திற்கு நான் சீக்கிரத்தில் செல்லப்போகிறேன். என் அம்மாவுக்கு இதில் சந்தோஷம்தான், ஆனால் சிலசமயங்களில் அவர் தனிமரமாய் இருப்பதாக நினைக்கிறார். அதற்கு என்ன செய்வதென நான் யோசித்துக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன. என் அம்மாவுடன் தவறாமல் தொடர்புகொள்ள வேண்டும், ஊழியத்தில் கிடைக்கும் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென இப்போது யோசித்திருக்கிறேன்.

என். கே., ஜப்பான் (g05 3/22)

மக்கள் தொகையியல் “மக்கள் தொகையியலும் பைபிளும் எதிர்காலமும்” (ஜூன் 8, 2004) என்ற கட்டுரையில் 215 வருடங்களுக்குப் பிறகு இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள் என குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் யாத்திராகமம் 12:40, 41 அதை 430 வருடமென குறிப்பிடுகிறதே.

ஆர். சி., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதிலளிக்கிறது: “இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம்” என யாத்திராகமம் 12:40 சொல்கிறது. ‘இஸ்ரவேல் புத்திரர் குடியிருந்த காலம்’ என்பது யூதர்கள் எகிப்திலே செலவிட்ட காலத்தை மட்டுமே குறிப்பதில்லை என்பதைக் கவனியுங்கள்; மாறாக, இது ஆபிரகாம் கானான் தேசத்திற்கு வந்தது முதற்கொண்டுள்ள காலத்தைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆபிரகாமின் உடன்படிக்கை செயல்பட துவங்கியபோது இந்த 430 வருடம் ஆரம்பமானது என அப்போஸ்தலன் பவுல் காட்டினார். (கலாத்தியர் 3:16, 17) இது பொ.ச.மு. 1943-⁠ல் ஆபிரகாம் கானான் தேசத்தில் பிரவேசித்தபோது ஆரம்பமானது. இது யூதர்கள் எகிப்துக்கு வருவதற்கு 215 வருடங்களுக்கு முன் சம்பவித்ததாக பைபிள் காலக்கணக்குச் சுட்டிக்காட்டுகிறது. எனவே மீதமுள்ள 215 வருடங்கள்தான் உண்மையில் யூதர்கள் “எகிப்திலே குடியிருந்த” காலம்.​—⁠யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட “வேதாகமங்களின்பேரில் உட்பார்வை” என்ற ஆங்கில புத்தகத்தில் தொகுதி ஒன்றில், “காலக்கணக்கு” என்ற தலைப்பின்கீழ் காண்க. (g05 3/22)

மோசமாக நடத்தும் பாய் ஃப்ரண்ட் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் பாய் ஃப்ரண்ட் என்னை மோசமாக நடத்துவதை எப்படி தடுக்கலாம்?” (ஜூலை 8, 2004) என்ற கட்டுரைக்கு நன்றி. ஒருசமயம், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ரொம்பவே ஆபத்தான ஆளிடம் பழக ஆரம்பித்து சிக்கித் தவித்தேன். அவனைக் கண்டாலே பயந்து நடுங்கியதால் அவனுடைய உறவை முறித்துக்கொள்ள முடியாமல் வெகு நாட்களுக்கு கஷ்டப்பட்டேன். நல்லவேளையாக என் அப்பா அம்மா, கிறிஸ்தவ மூப்பர்கள், யெகோவா தேவன் ஆகியோருடைய உதவியோடு அந்தப் பந்தத்தைத் துண்டித்துக்கொள்ள முடிந்தது. இத்தகைய உதவி உண்மையிலேயே தேவைப்படுகிறவர்களுக்கு இந்தக் கட்டுரை அருமருந்தாய் இருக்கும்.

ஜே. ஏ., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரையை வாசிக்கிற எவரும் தன்னை மோசமாக நடத்துகிற ஒருவனை மணந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். வார்த்தையால் குத்திக் குதறுகிற, உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற, கை ஓங்குகிற ஒருவரை ஆரம்பத்திலேயே உதறித்தள்ள வேண்டும்! இதை வாழ்க்கையில் அடிப்பட்டுத்தான் புரிந்துகொண்டேன்.

டி. ஜி., கனடா (g05 4/8)