Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரே பாலினத்தவர் திருமணத்தைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா?

ஒரே பாலினத்தவர் திருமணத்தைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா?

பைபிளின் கருத்து

ஒரே பாலினத்தவர் திருமணத்தைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா?

சர்ச்சில் நடைபெறும் சடங்காச்சார நிகழ்ச்சியில் பிரபல எப்பிஸ்கோப்பல் பிஷப் முன்பாக இரண்டு ஆண்கள் கைகோர்த்து நிற்கிறார்கள். அவர்கள் “கடவுளுக்கும் சர்ச்சுக்கும் முன்பாக . . . ஓர் ஒப்பந்தம்” செய்கிறார்கள். பொன்னிறத்திலும், வெள்ளை நிறத்திலும் அலங்கார ஆடையை அணிந்திருக்கும் அவர்களுடைய பந்தத்தை அந்தப் பிஷப் பகிரங்கமாக ஆசீர்வதிக்கிறார். பிறகு அந்தத் “தம்பதியர்” ஒருவரையொருவர் அணைத்து முத்தமிடுகிறார்கள், கூடிவந்திருந்தவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்புகிறார்கள். இந்தப் பிஷப்பைப் பொறுத்தவரை இத்தகைய ஒரே பாலினத்தவர் பந்தம் “பரிசுத்தமானது, ஆசீர்வதிக்கப்பட வேண்டியது, . . . புனிதமானதென அழைக்கப்பட தகுதியானது.”

இருப்பினும், ஒரே பாலினத்தவர் திருமணத்திற்கு பிற மதத் தலைவர்கள் பலத்த எதிர்ப்புக் குரலெழுப்புகிறார்கள். அமெரிக்கன் ஆங்கலிக்கன் கவுன்சிலின் பிரதிநிதியான சிந்தியா பிரெஸ்ட் என்பவர் இவ்வாறு சொன்னார்: “இந்த [இந்தப் பிஷப்புடைய] தீர்மானத்தால் நாங்கள் ரொம்பவே நிலைகுலைந்து போயிருக்கிறோம். இப்படி ஒரே பாலினத்தவரை ஆசீர்வதிப்பது, திருமணத்தையும் பாலுறவையும் பற்றிய பைபிளின் தெளிவான போதனையிலிருந்து முரண்படுகிறது. பாலுறுவு . . . ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான புனிதமான மண பந்தத்திற்கு மட்டுமே உட்பட்டது.”

இந்தப் பிரச்சினை சம்பந்தப்பட்ட காரசாரமான விவாதங்கள் மத வட்டாரத்தில் மட்டுமே தலைதூக்கவில்லை. அரசியல் வட்டாரத்திலும் உலகெங்கும் தலைதூக்கியிருக்கின்றன; ஏனென்றால் ஓய்வூதியங்கள், கூட்டு உடல்நல பராமரிப்பு, வரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட சமூக, அரசியல், பொருளாதார பின்விளைவுகள் பெருமளவு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.

மக்களின் உரிமைகள், சட்டப்பூர்வ அங்கீகாரம் போன்ற பிரச்சினைகள் பெரும்பாலும் அதிக சிக்கலானவை, கருத்து வேறுபாடுகளை உண்டாக்குபவை. மெய்க் கிறிஸ்தவர்கள் அரசியல் சொற்போர்களைத் தவிர்ப்பதன் மூலம் நடுநிலைமையைக் காத்துக்கொள்வதில் கவனமாய் இருக்கிறார்கள். (யோவான் 17:16) a எனினும், பைபிளை மதிக்கும் சிலர், ஒரே பாலினத்தவர் திருமணத்தையும் ஓரினச் சேர்க்கையையும் குறித்ததில் குழம்பிப் போயிருக்கிறார்கள். ஒரே பாலினத்தவர் திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? திருமணம் சம்பந்தமாக கடவுள் வைத்திருக்கும் தராதரம் என்ன? இதன் பேரிலான உங்கள் மனப்பான்மை, கடவுளுடன் உங்களுக்கிருக்கும் பந்தத்தை எப்படிப் பாதிக்கும்?

நம் படைப்பாளர் தராதரத்தை நிர்ணயிக்கிறார்

அரசாங்கங்கள் திருமண சட்டங்களை ஏற்படுத்துவதற்கு வெகு காலத்திற்கு முன்பே நம் படைப்பாளர் அதற்கான சட்டங்களை வகுத்தார். பைபிளின் முதல் புத்தகம் இவ்வாறு நமக்குச் சொல்கிறது: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்.” (ஆதியாகமம் 2:24) வைன்ஸ் எக்ஸ்பாசிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் பிப்ளிக்கல் உவர்ட்ஸ் என்ற புத்தகத்தின்படி, “மனைவி” என்பதற்குரிய எபிரெய வார்த்தை “ஒரு பெண்ணைக் குறிக்கிறது.” திருமண பந்தத்தில் பிணைக்கப்படுபவர்கள் “ஆணும் பெண்ணுமாக” இருக்க வேண்டும் என்பதை இயேசு உறுதிப்படுத்தினார்.​—⁠மத்தேயு 19:4.

இவ்வாறு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலையான, அன்னியோன்னியமான பந்தமாகத் திருமணம் இருக்கும்படியே கடவுள் அதை ஏற்பாடு செய்தார். ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாக இருக்கும் விதத்திலேயே ஆணையும் பெண்ணையும் படைத்திருக்கிறார்; இவ்வாறு, உணர்ச்சி ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும், பாலியல் ரீதியிலும் தேவைகளையும் ஆசைகளையும் ஒருவருக்கொருவர் திருப்தி செய்ய முடிகிற விதத்தில் படைத்திருக்கிறார்.

ஓரினச் சேர்க்கையைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை சோதோம் கொமோரா பட்டணங்களைப் பற்றிய பைபிள் பதிவு காட்டுகிறது; இது யாவரும் அறிந்த ஒரு பதிவு. ‘சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருந்தது, அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருந்தது’ என கடவுள் அறிவித்தார். (ஆதியாகமம் 18:20) அந்தச் சமயத்தில் அப்பட்டணங்களில் வசித்தவர்கள் எந்தளவுக்கு ஒழுக்கத்தில் சீர்குலைந்திருந்தார்கள் என்பது நீதிமானான லோத்துவைச் சந்திக்க இரண்டு விருந்தாளிகள் சென்றபோது வெட்டவெளிச்சமானது. “சோதோம் நகரின் மக்களுள் இளைஞர் முதல் கிழவர் ஈறாக எல்லா ஆண்களும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு லோத்தைக் கூப்பிட்டு, ‘இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா’ என்றனர்.” (ஆதியாகமம் [தொடக்க நூல்] 19:4, 5, பொது மொழிபெயர்ப்பு) “சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்” என பைபிள் சொல்கிறது.​—⁠ஆதியாகமம் 13:13.

ஆண்கள் “ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பி”ப்பவர்களாக இருந்தார்கள். (ரோமர் 1:27) அவர்கள் ‘இயற்கைக்கு மாறான சிற்றின்பத்தில் மூழ்கியிருந்தார்கள்.’ (யூதா 7, பொ.மொ.) ஓரினச் சேர்க்கைக்காரர்கள் உரிமை கோரி பெரும் பிரச்சாரம் நடத்தும் நாடுகளில், அப்பழக்கத்தை “இயற்கைக்கு மாறானது” என்று விவரிப்பதைச் சிலர் ஆட்சேபிக்கலாம். இருப்பினும், அது இயற்கைக்கு மாறானதா இல்லையா என்பதை இறுதியில் தீர்மானிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உள்ளது அல்லவா? அவர் தம்முடைய பூர்வ கால ஜனத்தாருக்குப் பின்வரும் கட்டளையைக் கொடுத்தார்: “பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ண வேண்டாம்; அது அருவருப்பானது.”​—⁠லேவியராகமம் 18:22.

நீங்கள் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்

இந்த விஷயத்தில் பைபிள் தெள்ளத் தெளிவாக இருக்கிறது: ஓரினச் சேர்க்கை பழக்கத்தைக் கடவுள் ஆதரிப்பதும் இல்லை, கண்டும் காணாமல் இருப்பதுமில்லை. ‘அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களை’ அவர் அங்கீகரியாமலும் இருக்கிறார். (ரோமர் 1:32) அப்படிப்பட்ட ஓரினச் சேர்க்கைக்கு, “திருமணம்” கௌரவத் தோற்றத்தைத் தருவதில்லை. “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதா”யிருக்க வேண்டுமென்ற கடவுளுடைய அறிவுரையின்படி, ஒரே பாலினத்தவரின் உறவு தகாதது; அத்தகைய உறவை அவர் அருவருக்கிறார்.​—எபிரெயர் 13:⁠4.

இருப்பினும், கடவுளுடைய உதவியோடு யார் வேண்டுமானாலும் “வேசிமார்க்கத்துக்கு விலகியிரு”க்க பழகிக்கொள்ளலாம், “தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்”ளலாம். (1 தெசலோனிக்கேயர் 4:3, 5) இது எப்போதும் எளிதானதல்ல என்பது உண்மைதான். ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை பழக்கத்தில் ஈடுபட்டு வந்த நேதன் b என்பவர், தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவே முடியாதென நினைத்தார். ஆனால் ‘நமது தேவனுடைய ஆவியின்’ உதவியால் அதை இப்போது அவர் மாற்றியிருக்கிறார். (1 கொரிந்தியர் 6:11) நேதன் கண்டறிந்தபடி, யெகோவாவால் சரிசெய்ய முடியாதளவுக்கு பெரிய பிரச்சினை எதுவுமில்லை; அவருடைய தராதரங்களைப் பின்பற்றி அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு தேவையான சக்தியையும் உதவியையும் அளிக்க அவரால் முடியும்.​—⁠சங்கீதம் 46:1. (g05 4/8)

[அடிக்குறிப்புகள்]

a நாட்டின் சட்டங்கள் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியுடன் முரண்படும் சமயத்திலும் யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய சட்டங்களை மாற்றச் சொல்லி போராட்டங்களிலோ அரசியல் பிரச்சாரங்களிலோ ஈடுபடுவதில்லை.

b அவருடைய நிஜப் பெயரல்ல.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

Photo by Chris Hondros/Getty Images