Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி”யைக் காண வாரீர்!

“திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி”யைக் காண வாரீர்!

“திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி”யைக் காண வாரீர்!

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அந்த மூதாட்டியின் ஒய்யாரமான குடியிருப்பைச் சுற்றி சன்னல்கள் இல்லாத பிரமாண்டமான மதிற்சுவர்கள் கம்பீரமாக நிற்கின்றன. இளஞ்சிவப்பு தொங்குவால் கோட்டு, சிவப்பு நிற வெய்ஸ்ட் கோட்டு, கருப்பு தொப்பி ஆகியவற்றை பகட்டாக அணிந்த காவலாளிகள் அதன் நுழைவாயிலில் நிற்கிறார்கள். மறைவாக வைக்கப்பட்டுள்ள காமராக்கள் அங்கு வந்து போகும் ஆட்களைக் கண்காணிக்கின்றன. இந்த “திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி” யார்? அவருக்கு ஏன் இந்தளவு கெடுபிடி பாதுகாப்பு?

இந்த “மூதாட்டி,” உலகின் முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பாங்க் ஆஃப் இங்லண்ட்தான். ஒரு பாங்கிற்கு இப்படியொரு விநோதமான பெயர் எப்படிக் கிடைத்தது? திரெட்நீடில் ஸ்ட்ரீட் என்பது லண்டனில் உள்ள ஒரு தெரு; ஒருகாலத்தில் இங்கு தொழில் சங்கங்கள் ஏராளம் இருந்தன. ஊசி தயாரிப்பாளர்களுடைய நிறுவனத்தின் சின்னத்திலிருந்த மூன்று ஊசிகளின் அடிப்படையிலேயே ஒருவேளை இப்பெயரை அந்தப் பேங்க் பெற்றிருக்கலாம். இது “பிறந்து” சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இதை “நகரத்தில் நீடூழி வாழுகிற, நற்பெயர் பெற்ற மூதாட்டி” என அரசியல்வாதியும் நாடகாசிரியருமான ரிச்சர்ட் ஷெரடன் என்பவர் பாராளுமன்றத்தில் விமர்சித்தார். கேலிச் சித்திர கலைஞரான ஜேம்ஸ் கில்ரே, மூதாட்டி போன்று பேங்க் இருக்கிறதென்ற கருத்தை உடனடியாக பயன்படுத்திக்கொண்டு சித்திரங்களைத் தீட்டினார், அப்போது முதல் அது “திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி” என்ற பெயரில் பிரபலமடைந்தது.

தேசிய வங்கிக்கான தேவை

17-⁠ம் நூற்றாண்டில் லண்டனிலிருந்த பெரும்பாலான பேங்குகளைப் பொற்கொல்லர்கள் நடத்தி வந்தார்கள். இந்த ஏற்பாடு முதலில் ஓரளவுக்குச் சுமுகமாகச் செயல்பட்டு வந்தது; அதன் பிறகோ ஸ்டூயர்ட் வம்ச அரசர்கள் பணத்தைக் கடனாக வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுக்காமல் போனார்கள். இதனால் கடைசியில் பொற்கொல்லர்களின் பிரபல பேங்குகள் திவாலாயின; பிரான்சுடன் நடந்த போருக்காக இந்தச் சமயத்தில் அரசுக்குப் பணம் ரொம்பவே தேவைப்பட்டது.

அதற்குள்ளாக, 1689-⁠ல் மூன்றாம் வில்லியமும் இரண்டாம் மேரியும் அரியணை ஏறியதால் அரசு வங்கியாகவும் நிதி திரட்டும் நிறுவனமாகவும் செயல்பட தேசிய வங்கி ஒன்று உடனடியாகத் தேவை என அவசர கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பல்வேறு திட்டங்கள் முன் வைக்கப்பட்டன; இறுதியில், ஸ்காட்லாந்து வணிகரான வில்லியம் பேட்டர்ஸனின் திட்டத்தைப் பலத்த எதிர்ப்பின் மத்தியில் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. கடனாக பணம் தரும்படி லண்டன் வாசிகளிடம் அரசு கேட்டது; இவ்வகையில் மொத்தம் 12,00,000 பவுண்டுகளைத் திரட்ட அது திட்டமிட்டது. கடன் கொடுப்பவர்களுக்கு அரசு 8 சதவீத வட்டியைத் தருவதோடு, அவர்களை, கவர்னர் அண்ட் கம்பெனி ஆஃப் த பாங்க் ஆஃப் இங்லண்ட் என்ற கார்ப்பரேஷனின் உறுப்பினர்களாகவும் ஆக்கவிருந்தது. இரண்டே வாரத்தில் பணம் கைக்குக் கிடைத்தது, 1694-⁠ல் பாங்க் ஆஃப் இங்லண்ட் செயல்பட ஆரம்பித்தது.

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, திரெட்நீடில் ஸ்ட்ரீட்டிற்கு பாங்க் மாற்றப்பட்டது. 1930-கள் முதல் இன்று வரை ஏழு மாடிக் கட்டடத்தில் பேங்க் இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் நிலத்தடியில் பெரிய சேமிப்பு பெட்டகங்களும் உள்ளன. மொத்தம் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.

முன்னேற்றமும் முடக்கமும்

பாதுகாக்கும்படி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பவுண்டுகள், ஷில்லிங்குகள், பென்னிக்கள் ஆகியவற்றிற்கு, பாங்க் நோட்டில் கைப்பட எழுதிய ரசீதை அது ஆரம்பத்தில் வினியோகித்தது. இந்தப் பாங்க் நோட்டுகளை, அதாவது பணத்தை யார் வேண்டுமானாலும் பாங்கில் கொடுத்து தங்கமாகவோ நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால், எல்லாரும் ஒரே நேரத்தில் தங்கள் பணத்தைக் கேட்டால் பாங்க் திவாலாகிவிடும் ஆபத்து இருந்தது. பல முறை பாங்க் கிட்டத்தட்ட இந்த நிலைக்கு வந்தது. உதாரணமாக, 1797-⁠ல் பிரான்சுடன் நடந்த யுத்தம் மீண்டும் நாட்டின் பணத்தை கிட்டத்தட்ட முழுமையாக விழுங்கியது எனலாம். பதற்றமடைந்த முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பைத் திரும்பப் பெற்றபோது பாங்கில் பணமில்லாமல் போனது; இதன் காரணமாக, அதற்குப் பிறகு 24 ஆண்டுகளுக்குத் தங்கத்துக்குப் பதிலாகக் குறைந்த மதிப்புள்ள பாங்க் நோட்டுகளையே அது வினியோகித்தது. இந்தத் “தடைக் காலத்தில்”தான் பாங்க் “திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி” என்ற பட்டப்பெயரைப் பெற்றது. அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பாங்க் நோட்டுகள், கள்ளநோட்டுப் புழக்கத்திற்கு வர வழிசெய்தன; ஆனால் இப்படிப்பட்ட மோசடிக்காக அந்தக் காலத்தில் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. 300-⁠க்கும் அதிகமானோர் தூக்கிலிடப்பட்டார்கள்.

மற்றொரு பெரும் பிரச்சினையிலிருந்தும் பாங்க் மயிரிழையில் தப்பியது. 1780-⁠ல் லண்டனிலிருந்த கலகக்காரர்கள் இந்தக் கட்டடத்தைக் கைப்பற்ற முயன்றார்கள். அதற்குப் பிறகு, 1973-⁠ம் ஆண்டு வரை, நாட்டின் தங்கத்தைப் பத்திரப்படுத்துவதற்கு, விசேஷ படையினர் தினமும் இரவில் கட்டடத்தைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

19-⁠ம் நூற்றாண்டில் பிரிட்டனின் பவுண்டும் பாங்க் ஆஃப் இங்லண்டின் நோட்டுகளும் உலகிலேயே மிக நம்பகமான கரன்சியாக இருந்தன. ஆனால் இதையெல்லாம் முதல் உலகப் போர் தலைகீழாக மாற்றியது. பெரும் செலவை ஏற்படுத்திய அந்தப் போர் நாட்டை படுமோசமாகப் பாதித்தது. முதலீட்டாளர்களில் அநேகர் முண்டியடித்துத் தங்கள் பாங்க் நோட்டுகளைத் தங்கமாக மாற்றியதால், விரைவில் தங்க நாணயங்களே இல்லாமல் போனது. அந்த நாணயங்களுக்குப் பதிலாக குறைந்த மதிப்புள்ள பாங்க் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. அதற்குப் பிறகு தங்க நாணயங்கள் அன்றாடப் புழக்கத்திலிருந்து அடியோடு மறைந்தன. 1931-⁠ல் பிரிட்டன் தங்க நாணயத்தைப் பயன்படுத்துவதை முற்றிலும் கைவிட்டது; அதாவது பவுண்ட் ஸ்டெர்லிங் நாணயத்தின் மதிப்பு குறிப்பிட்ட அளவு தங்கத்தின் மதிப்போடு அதற்குப் பிறகு இணைக்கப்படவே இல்லை.

பாங்கின் நீண்ட கால சரித்திரத்தில், அது தனியார் கம்பெனியாகவே செயல்பட்டு வந்திருந்தது. இருப்பினும் 1946-⁠ல் இதன் நிர்வாகப் பொறுப்பை அரசு ஏற்றது.

சுறுசுறுப்பாய் செயல்படும் “மூதாட்டி”

பாங்க் ஆஃப் இங்லண்ட் ஒரு தேசிய வங்கியாகும். இது அரசாங்க வங்கியாக செயல்பட்டு, நிதி கொள்கைகள் சம்பந்தமாக ஆலோசனை வழங்கி, பொருத்தமான வட்டி வீதத்தை நிர்ணயிப்பதன் மூலம் நிதி நிலவரம் நிலையாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறது. அயல் நாட்டு கமர்ஷியல் பாங்குகளும் சென்ட்ரல் பாங்குகளும் இதன் மற்ற வாடிக்கையாளர்கள் ஆவர். இதன் நிலத்தடி சேமிப்பு பெட்டகங்களில் நாட்டின் தங்கம் பூட்டி வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. லண்டனுக்கு வெளியே பாதுகாப்பான மற்றொரு இடத்தில், புதிய பாங்க் நோட்டுகள் அச்சிடப்படுவதை இது மேற்பார்வை செய்கிறது.

லண்டன் நகரம், உலகின் நேர மண்டலங்களின் (time zones) மையத்திற்கு அருகே அமைந்திருப்பதால் உறங்குவதே இல்லை. நகரத்தில் இந்தப் பாங்க் முக்கிய பங்காற்றுகிறது. சன்னல்கள் இல்லாத இந்த மதிற்சுவர்களுக்குள் நடக்கும் பணிகள் உலகெங்கும் உள்ள நிதி நிறுவனங்கள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆம், “திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி” நாட்டின் பணப் பையை இறுக்கப் பிடித்துக்கொண்டு எப்போதும்போல் சுறுசுறுப்பாய் செயல்பட்டு வருகிறார். (g05 4/8)

[பக்கம் 24-ன் படம்]

1694, பாங்கின் முதல் சாசனம்

[பக்கம் 24-ன் படம்]

1793, கைப்பட எழுதப்பட்ட ஐந்து பவுண்ட் நோட்டு

[பக்கம் 24-ன் படம்]

1794, திரெட்நீடில் ஸ்ட்ரீட்டில்

[பக்கம் 24-ன் படம்]

1911, ஒரு பவுண்ட் தங்க நாணயம்

[பக்கம் 24-ன் படம்]

1797, ஜேம்ஸ் கில்ரே வரைந்த முதல் கேலிச் சித்திரத்தின் ஒரு பகுதி

[பக்கம் 25-ன் படம்]

1928, பத்து ஷில்லிங் நோட்டு

[பக்கம் 25-ன் படம்]

1939 முதல் இயங்கி வரும் கட்டடம்