Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோட்ட வேலை உங்களுக்கு நல்லது

தோட்ட வேலை உங்களுக்கு நல்லது

தோட்ட வேலை உங்களுக்கு நல்லது

உங்களுக்குத் தோட்ட வேலை பிடிக்குமா? பொழுதுபோக்குக்காக இதில் ஈடுபடுகையில் சந்தோஷம் மட்டுமல்ல, இன்னும் அநேக நன்மைகளும் கிடைக்கின்றன. லண்டனில் வெளியாகும் இண்டிப்பெண்டன்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறபடி, “தோட்ட வேலை உங்கள் உடலுக்கு நல்லது, மன அழுத்தத்தை மட்டுப்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, சொல்லப்போனால் தீர்க்காயுசுக்கும் வழிசெய்கிறது” என்பதற்கான ஆதாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“நாள் முழுவதும் ஓய்வொழிச்சலில்லாமல் வேலை பார்த்து, மன அழுத்தத்தில் உழன்று, வீடு திரும்பிய பின்பு, சாவகாசமாக உங்கள் தோட்டத்தில் நேரத்தைச் செலவிடுவது நிம்மதிப் பெருமூச்சை வரவழைக்கிறது” என்கிறார் கே சர்ச் என்ற எழுத்தாளர். தோட்ட வேலை திருப்தியளிப்பதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருப்பதோடுகூட ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வதைவிட சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைகிறது. எப்படிச் சொல்லலாம்? அந்த எழுத்தாளரின்படி, “குழி தோண்டுவது, இலைதழைகளைச் கூட்டுவது ஆகியவை சீரான உடற்பயிற்சியாகும்; இவை சைக்கிள் ஓட்டுவதைவிட அதிகமான கலோரிகளைக் குறைத்துவிடுகின்றன.”

தோட்டத்தைப் பராமரிப்பது முக்கியமாய் வயதானவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கிறது. ஓர் இளம் தளிர் முளைப்பதை அல்லது துளிர்ப்பதை காண்பது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க அவர்களுக்கு உதவுகிறது. அதோடு, வயோதிகத்தால் வரும் “வலிக்கும், அதிருப்திக்கும் தோட்டம் நிவாரணியாக செயல்படுகிறது” என்கிறார் ராயல் தோட்டக்கலை சங்கத்தைச் சேர்ந்த பிரிஜிட் போர்ட்மன். வயதானவர்கள் மற்றவர்களை பெருமளவு சார்ந்திருப்பதால் அடிக்கடி உற்சாகமிழந்துவிடுகிறார்கள். டாக்டர் போர்ட்மன் குறிப்பிடுகிறபடி, “தோட்டத்தில் நாம் என்ன நடுகிறோம், எப்படி நடுகிறோம், தோட்டத்தை எப்படிப் பண்படுத்துகிறோம் போன்றவை, நம்முடைய கட்டுப்பாட்டில் காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசையைத் திருப்தி செய்கின்றன. பராமரிப்பதற்கான தேவையையும்கூட பூர்த்தி செய்கின்றன.”

மனநல பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் அழகான, அமைதியான சூழலில் வேலை செய்யும்போது பெரும்பாலும் ‘ரிலாக்ஸாக’ உணருவார்கள். மேலும் பூச்செடிகளை வளர்ப்பது அல்லது மற்றவர்கள் சாப்பிட காய்கறிகளைப் பயிர் செய்வது அவர்களுக்கு மீண்டும் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையும் பெற்றுத் தருகிறது.

இருந்தாலும், அந்தப் பசுமையான சூழலிலிருந்து பயனடைபவர்கள் தோட்ட வேலை செய்பவர்கள் மட்டுமே அல்ல. டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜர் உல்ரிக் என்பவர், மன அழுத்தத்தைத் தூண்டுவிக்கும் சோதனையை ஒரு தொகுதியினரை வைத்து நடத்தினார். நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டபோது, மரங்கள் சூழ்ந்திருந்த பசுமையான இடத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் மற்றவர்களைவிட வெகு விரைவில் குணமடைந்தார்கள். இதுபோன்ற மற்றொரு சோதனை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வந்த நோயாளிகளை வைத்து நடத்தப்பட்டது; மரங்களைப் பார்த்தபடி அமைந்திருந்த அறையிலிருந்தவர்கள் பயனடைந்ததாக அது காட்டியது. மற்ற நோயாளிகளுடன் ஒப்பிட “அவர்கள் வேகமாக குணமடைந்தார்கள், சீக்கிரத்தில் வீடு திரும்பினார்கள், அந்தளவு வலி நிவாரணிகளை உபயோகிக்காதிருந்தார்கள், பெரிதாகப் புகார் எதுவும் செய்யாதிருந்தார்கள்.” (g05 4/22)