Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நகைச்சுவை உணர்வோடு நோயைச் சமாளித்தல்

நகைச்சுவை உணர்வோடு நோயைச் சமாளித்தல்

நகைச்சுவை உணர்வோடு நோயைச் சமாளித்தல்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கோன்ச்சி​—⁠எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்மணி; கடந்த ஏழு வருடங்களாக, புற்றுநோயுடன் போராடி வருகிறார். மார்பகப் புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது தொடங்கி, இதுவரை ஏழு முறை வெவ்வேறு ஆபரேஷன்கள் அவருக்குச் செய்யப்பட்டுள்ளன, வேகமாகப் பரவுகிற கட்டிகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவை செய்யப்பட்டன. இந்தக் கஷ்டத்தையெல்லாம் அவர் எப்படிச் சமாளிக்கிறார்?

“ஒவ்வொரு முறையும் டாக்டர்கள் என்னிடம் கெட்ட செய்தியைச் சொல்வார்கள், அப்போது அழ வேண்டும் போல் தோன்றினால், துக்கத்தைக் குறைப்பதற்காக முடிந்தளவு அழுது தீர்த்துவிடுவேன். பிறகு, எப்போதும் போல் என்னுடைய அன்றாட வேலைகளிலும் எனக்குப் பிடித்தமான காரியங்களிலும் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன், அதாவது சீன மொழியைக் கற்றுக்கொள்வது, கிறிஸ்தவ மாநாடுகளில் கலந்துகொள்வது, சொந்தபந்தங்களோடு விடுமுறையைக் கழிப்பது போன்றவற்றில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன். ‘கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?’ என்ற இயேசுவுடைய வார்த்தைகளை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன்” என்கிறார் அவர்.​—மத்தேயு 6:27.

“அதுமட்டுமல்ல, எப்போதும் நல்ல நகைச்சுவை உணர்வோடு இருக்கவே முயற்சி செய்கிறேன்” என்று தொடர்கிறார். “டாக்டர்களோடு ஜோக் அடிப்பேன், குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கிற சினிமா படங்களைப் பார்ப்பேன், முக்கியமாக நண்பர்களோடும் சொந்தக்காரர்களோடும் தவறாமல் தொடர்புகொள்வேன். வாய்விட்டுச் சிரிப்பதற்கு நண்பர்கள் இருப்பது அருமையான ஒரு ‘டானிக்.’ ஒருசமயம், எனக்கு ஆபரேஷன் நடப்பதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன், சில நண்பர்களும் சொந்தக்காரர்களும் அதற்கு முந்தைய இராத்திரி நடந்த ஒரு கூத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். அதைக் கேட்டு, விழுந்து விழுந்து சிரித்தேன், அந்தளவு சிரித்ததால் ஆபரேஷன் தியேட்டருக்குப் போகும்போது எனக்கு கொஞ்சங்கூட ‘டென்ஷனே’ இருக்கவில்லை.”

நம்முடைய உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க நல்ல நகைச்சுவை உணர்வும் நம்பிக்கையான மனநிலையும் நமக்கு உதவலாம் என்பதைக் கண்டுபிடித்திருப்பது கோன்ச்சி மட்டுமல்ல. நம்முடைய வலியையும் வியாதியையும் எதிர்த்துப் போராடுவதில் நகைச்சுவை உணர்வு அருமையான பங்கு வகிக்கிறது என்பதை இன்றைய டாக்டர்களும்கூட புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

உடலிற்கும் மனதிற்கும் நன்மையளிக்கிறது

இது ஒரு புதிய கருத்தல்ல. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே, சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து.” (நீதிமொழிகள் 17:22, பொது மொழிபெயர்ப்பு) அதேபோல, 17-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டவரான லோப்பே டி வேகா என்ற கலைஞர், “நகைச்சுவை உணர்வை பெற்றிருப்போமானால், நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியுமென நினைக்கிறேன்” என்று எழுதினார். ஆனால், அழுத்தமிக்க இன்றைய உலகில், நகைச்சுவை உணர்வு வெளிக்காட்டப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒருவருக்குள் பதுக்கியே வைக்கப்படுகிறது. தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை நாம் ஒரு பொற்காலத்தில் வாழ்கிறோம் எனச் சொல்லலாம், ஆனால் நகைச்சுவையைப் பொறுத்தவரை ஓர் இருண்ட காலத்தில்தான் வாழ்கிறோம். நவீன சமுதாயத்தைப் பற்றிச் சொல்லும்போது, எல் ஆர்ட்டி டி லா ரிசா (சிரிக்கும் கலை) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஹோமோ ஸேப்பின்ஸ் [மனிதர்கள்] மறைந்துபோய் ஹோமோ டிஜிட்டெல்ஸ் தோன்றியிருக்கிறார்கள்.” அதாவது, சிரிப்பு, அபிநயம், புன்னகை ஆகியவற்றை டிஜிட்டல் ஸிஸ்டம்களும் கம்ப்யூட்டர்களும் மாற்றீடு செய்திருப்பது போல் சிலசமயம் தோன்றுகிறது.

நோயாளிகள் இன்னுமதிக நம்பிக்கையூட்டுகிற சிந்தனைகளோடும் உணர்ச்சிகளோடும் நடத்தையோடும் இருக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உதவுகிறது. நோயின் கடுமையைத் தணிக்கும் சிகிச்சையிலும், புற்றுநோய் சிகிச்சையிலும் நிபுணராக உள்ள டாக்டர் ஹைமே ஸான்ஸ் ஆர்ட்டிஸ் என்பவர் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையின்படி, நகைச்சுவை உணர்வு “பேச்சுத்தொடர்பை எளிதாக்குகிறது, நோய்த்தடுப்புச் சக்தியை பலப்படுத்துகிறது, வலியைத் தணிக்கிறது, கவலையைக் குறைக்கிறது, உணர்ச்சி மற்றும் தசைகளிலுள்ள இறுக்கத்தைத் தளர்த்துகிறது, அதோடு படைப்பாற்றலையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.”

விலையேறப்பெற்ற நகைச்சுவை உணர்வு

நல்ல நகைச்சுவை உணர்வு நோய்த்தீர்க்கும் நிவாரணி போல் ஏன் பிரமாதமாகச் செயல்படுகிறது? ஏனென்றால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியில்லாத சமயங்களிலும்கூட பிரச்சினைகளை நம்பிக்கையோடு கையாள இந்தக் குணம் நமக்கு உதவுகிறது. “நகைச்சுவையையும் சிரிப்பையும் நம்முடைய அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொண்டால், நாம் நல்ல தெம்போடு இருக்கலாம், களைப்பைத் தணித்துவிடலாம், சுய பச்சாதாபத்தையும் துரத்தியடிக்கலாம்” என்று உறுதியளிக்கிறார் ஸான்ஸ் ஆர்ட்டிஸ்.

உண்மைதான், புன்னகைக்க வைக்கிற அல்லது சிரிக்க வைக்கிற காரியங்கள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன, அதோடு கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வித்தியாசப்படுகின்றன. “அழகு என்பது பார்ப்பவருடைய கண்களைப் பொறுத்தே இருப்பது போல, நகைச்சுவை என்பது ஒருவருடைய மனதைப் பொறுத்தே இருக்கிறது” என விளக்குகிறார் ஸான்ஸ் ஆர்ட்டிஸ். நம்முடைய பின்னணி அல்லது படிப்பறிவு என்னவாக இருந்தாலும், நகைச்சுவை உணர்வு என்பது பேச்சுத்தொடர்பு கொள்வதற்குச் சிறந்த ஒரு வழியாக இருக்கிறது, அதோடு நம்முடைய கவலை, பதற்றம், அல்லது பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றிற்கு நல்லவொரு வடிகாலாகவும் இருக்கிறது. நகைச்சுவை உணர்வால் நமக்கு இந்தளவு உதவ முடியுமென்றால், அதை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

முதல் படியாக, நம்முடைய பிரச்சினைகளைப் பற்றியோ நம்முடைய வியாதியைப் பற்றியோ அளவுக்கதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு நொடியும் அளிக்கிற நம்பிக்கையான அம்சத்தை மகிழ்ந்து அனுபவிக்க முயல வேண்டும். அதோடு, நியாயமாகச் சிந்திப்பதற்கும், நம்முடைய இக்கட்டான நிலையை மிகைப்படுத்துகிற தவறான அல்லது நியாயமற்றச் சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளுவதற்கும் நாம் பிரயாசப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, காரியங்களை வேறொரு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொள்வதன் மூலமும் நகைச்சுவை உணர்வை நாம் வளர்த்துக்கொள்ளலாம். அதற்காக, எப்போதுமே சிரித்துக்கொண்டோ புன்னகை பூத்துக்கொண்டோ இருக்க வேண்டும் என்றில்லை, ஆனால் நாம் எதிர்படுகிற சூழ்நிலையிலுள்ள ஏதாவதொரு வேடிக்கையான அம்சத்தைக் கவனிப்பது, பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்குக் கைகொடுக்கும். “நகைச்சுவை உணர்வு அந்தக் கணத்திலே நம்முடைய கவனத்தைக் கவலைகளிலிருந்து திசைதிருப்பிவிடுகிறது, பிரச்சினைக்கு புதிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது, . . . அதைச் சமாளிப்பதற்கு வேறு முறைகளைக் கையாண்டு பார்க்க உதவுகிறது” என்று தொடர்ந்து சொல்கிறார் ஸான்ஸ் ஆர்ட்டிஸ்.

ஆனால், நகைச்சுவை உணர்வு என்பது வாழ்க்கையில் நாம் சந்திக்கிற நெருக்கடியான ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு மாற்று மருந்தல்ல என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; என்றாலும், பிரச்சினைகளை அதிக நம்பிக்கையான மனநிலையோடும் சமநிலையோடும் கையாளுவதற்குப் பெரும்பாலும் அது நமக்கு உதவுகிறது. கோன்ச்சி இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “நோய்வாய்ப்படுவது நகைப்புக்குரிய விஷயமல்ல, ஆனால் நகைச்சுவை உணர்வை காண்பிக்க நீங்கள் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். என்னுடைய வாழ்க்கை காய்கறி தோட்டம் போல் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வேன், அந்தத் தோட்டத்தில் நிறைய காய்கறிகள் இருக்கின்றன, ஆனால் வருத்தகரமாக அதில் ஒன்று என்னுடைய வியாதியாகும். என்றாலும், அது மற்ற காய்கறிகளை நெருக்கிப்போட்டு விடாதபடிக்கு அதை ஓர் ஓரத்தில் வைத்துவிட முயற்சி செய்கிறேன். உண்மைதான், புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டதாக என்னால் சொல்ல முடியாது, ஆனால் வாழ்க்கையை இன்னமும் சந்தோஷமாகத்தான் அனுபவித்து வருகிறேன், அதுதானே ரொம்ப முக்கியம்.” (g05 4/22)

[பக்கம் 17-ன் படம்]

கணவர் ஃபேலிக்ஸ், தங்கை பிலி ஆகியோரிடமிருந்து உற்சாகத்தைப் பெற்று வருகிறார் கோன்ச்சி