Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்

மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்

மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்

இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீர் ஆவியாகி, மேகங்களாக உருவாகி, மழையாக பொழியும் இந்த இயற்கை நிகழ்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதே நீரின் இந்தச் சிக்கனமான மறுசுழற்சி முறை பூமியில் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் போதுமான நீரைக் கொடுக்கிறது. அப்படியானால், ஏன் இன்று தண்ணீர் தட்டுப்பாடு பூதாகரமாக உருவெடுத்து மனிதரைத் தவிக்க வைக்கிறது? என்ன தீர்வு இருக்கிறது? பதிலைப் பெற இந்தியாவில் தண்ணீரின் நிலையை ஆராய்வோம்.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவில், நீர் வளம் படுமோசமடைந்திருப்பது யாவரறிந்த விஷயம். இம்மக்கள் எங்கிருந்து தண்ணீரைப் பெறுகிறார்கள்? வடக்கே தொலைதூரத்தில், இமயத்திலுள்ள பனிக்கட்டிகளும் பனியாறுகளும் உருகுவதால் வசந்த காலத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. என்றாலும் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பெரும் பகுதி, வானம் பார்த்த பூமியாகவே காணப்படுகிறது; வறண்ட பூமி நனையவும், கிணறுகளும் ஏரிகளும் நிரம்பவும், நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் நதிகள் கரைபுரண்டோடவும் வருடா வருடம் பெய்யும் பருவ மழையையே அது நம்பியிருக்கிறது. ஆனால் இந்தப் பருவ மழையை நம்பவே முடியாது; இது “புரியா புதிரான, முன்னுரைக்க முடியாத இயற்கை நிகழ்வு” என விவரிக்கப்படுகிறது. “செயற்கைகோள் முதல் ஆற்றல்மிக்க சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரை இன்று தொழில்நுட்பம் எல்லா விதத்திலும் முன்னேறியிருந்தாலும் . . . [பருவ மழையை] முன்னறிவிக்க முடியாதிருப்பது ஆச்சரியமே.”

பருவ மழை சாதாரணமாக மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பெய்கிறது, ஆனால் அந்தச் சமயத்தில் எப்போதும் அடை மழைபோல் பொழியாமல், அவ்வப்போது கொஞ்ச நேரத்திற்குக் கனத்த மழை பெய்கிறது. அப்போது, அணைகள் நிரம்பி வழிவதால் தண்ணீரைத் திறந்துவிட வேண்டியிருக்கிறது. ஆறுகள் கரைபுரண்டோடி, வயல்களையும் வீடுகளையும் வெள்ளத்தில் மூழ்கடிக்கின்றன. நவீன தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக எங்கும் காடுகள் அழிக்கப்படுவதால் “மதிப்புமிக்க” மழை நீரை வேர்களில் சேமித்து வைத்து, பின்னர் மெல்ல மெல்ல நிலத்தில் கசிய விடுவதற்குப் போதுமான மரங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. எனவே பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மேற்பரப்பிலுள்ள மண் அடித்துச் செல்லப்படுகையில் நில அரிப்பு ஏற்படுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் வண்டல் மண் மண்டிவிடுவதால் அவற்றின் ஆழம் குறைந்து, போதுமான நீரைத் தேக்கி வைக்க முடியாதவையாய் ஆகின்றன. இவ்வாறு, மதிப்புமிக்க மழைநீர் பெருமளவு வீணாகிறது.

ஒரு வழியாக மழைக் காலம் ஓய்கிறது. இனி வருடத்தின் மீதமுள்ள நாளெல்லாம் வெயில் அடிக்கிறது; சுட்டுப் பொசுக்கும் கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம்! மளமளவென நிலம் வறண்டுவிடுகிறது, வயல்கள் இறுகிப் போய், வெடித்து, பொட்டல் காடாய் ஆகின்றன. பாய்ந்தோடிய ஆறுகள் மணல் நிறைந்த ஆற்றுப்படுகையில் சிற்றோடைகளாக காட்சியளிக்கின்றன. நீர்வீழ்ச்சிகள் மாயமாய் மறைகின்றன. நிலத்தடி நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைப் பெறுவதற்காக வெகு ஆழத்திற்கு ஆழ் துளைக் கிணறுகளைத் தோண்ட வேண்டியிருக்கிறது, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மழை பொய்த்துப் போனாலோ, வறட்சி தலைதூக்குகிறது, விவசாயம் நொடிந்துவிடுகிறது, ஆடுமாடுகள் செத்து மடிகின்றன, போதாக்குறைக்கு, கிராமவாசிகள் நகரை நோக்கி படையெடுக்கிறார்கள், இதனால் நகர்புறத்தில் இன்னுமதிக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

ஆனால் தொன்றுதொட்டே இந்த நிலைதான் என சொல்ல முடியாது. பண்டைய காலத்தில் இந்தியா எங்குமிருந்த மக்கள், பருவ மழை ஓய்ந்துபோனால் ஆறுகளும் ஏரிகளும் வறண்டுவிடும் என்றும் அவற்றை மட்டுமே நம்பியிருப்பதில் பயனில்லை என்றும் அறிந்திருந்தார்கள். உடனடி தேவைகளைக் கவனிப்பதற்காகவும் மழை காலத்துக்குப் பிறகு பயன்படுத்துவதற்காகவும், மழை நீர் விழுகிற இடத்தில் அந்நீரைப் பிடித்து வைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார்கள். இப்படித்தான் மழை நீரை சேமித்து வைத்தார்கள்.

இன்று மழை நீரை சேமிப்பதன் அவசியம்

நவீன தொழில்நுட்பத்தாலும், பெரிய அணைகள், தடுப்பு அணைகள், நீர்ப்பாசன கால்வாய்கள் ஆகியவை கட்டப்படுவதாலும்​—⁠அதுவும் இந்தியாவில் இவையெல்லாம் எக்கச்சக்கமாக இருப்பதாலும்​—⁠பண்டைய நீர் சேமிப்பு முறைகள் எதற்கு என ஒருவர் நினைக்கலாம். சொல்லப்போனால், வீடுகளில் அல்லது கிராமங்களில் குழாய் தண்ணீர் கிடைக்க ஆரம்பித்தபோது இந்த முறைகளில் பல பின்பற்றப்படாமல் மறைந்தே விட்டன. ஆனால் இதைக் குறித்து கவனம் செலுத்த காரணம் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் தேவைகள் கிடுகிடுவென அதிகரித்திருக்கின்றன; ஒருகாலத்தில் வேளாண்மை சமுதாயமாக இருந்த ஒன்று தொழில்மயமாக்கப்பட்ட சமுதாயமாக மளமளவென மாறியிருக்கிறது; தண்ணீர் பயன்பாடு சம்பந்தப்பட்ட மெகா திட்டங்களால் இவற்றை சமாளிக்க முடியவில்லை. இந்நாட்டவரின் தாகத்தைத் தீர்க்க போதுமான நீர் சேமித்து வைக்கப்படவில்லை.

சூழியல் ஆய்வாளர்களும் அக்கறையுள்ள அதிகாரிகளும் நீரை சேமிக்கும்படி ஒவ்வொரு தனி நபரையும் உற்சாகப்படுத்துவது அவசியமென நினைக்கிறார்கள். வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பள்ளிகளிலும், சொல்லப்போனால் குறைந்த அளவு நீரைச் சேமித்து வைப்பது சாத்தியமாக இருக்கும் எந்த இடத்திலும் மழை நீரைச் சேமித்து வைக்கும்படி மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, அநேக நகரங்களும் மாநிலங்களும், புதிய வீடுகளைக் கட்டும்போது அவற்றில் மழை நீரை சேமிப்பதற்குரிய வசதிகளோடு கட்டுவதைக் கட்டாயத் தேவையாக்கி இருக்கின்றன!

அநேக இடங்களில், கோடிக்கணக்கான லிட்டர் மழைநீர், சேமித்து வைக்கப்படாமல் அப்படியே ஆவியாகிவிடுகிறது அல்லது கடலில் ஓடி கலக்கிறது. இருப்பினும், அது விழுகிற இடத்தில் அதைப் பிடித்து வையுங்கள் என்ற கருத்தின் அடிப்படையிலேயே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. தனி நபர்கள் நீரைச் சேமிக்கிறார்கள். இதற்கு சல்லிக் காசு கொடுக்க வேண்டியதில்லை! ஆனால் அணைகளிலும் கால்வாய்களிலும் உள்ள தண்ணீரைக் காசுகொடுத்து வாங்க வேண்டும், ஏழை எளியவர்களுக்கு அதனால் மிஞ்சுவதெல்லாம் பணச் சுமை மட்டுமே.

முன்னணியில்

எனவே இந்தியாவில் மழை நீரைச் சேமிப்பதில் ஆர்வம் காட்டும் அநேகர் இதை செயல்படுத்துவதற்குக் களம் இறங்கியிருக்கிறார்கள். சிலர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் ராஜேந்திர சிங்; இவர் 2001-⁠ல் சமுதாய முன்னேற்றத்திற்கான மாக்சைசை என்ற கௌரவ விருதைப் பெற்றார். அரசு சார்பற்ற தனது அமைப்பின் மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் அடியோடு மறைந்துபோகவிருந்த அரவாரி ஆறு மீண்டும் ஓட ஏற்பாடு செய்தார்; நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 8 சதவீத மக்களையும் அதன் மொத்த நீர் வளத்தில் ஒரேவொரு சதவீதத்தையும் பெற்றிருக்கும் இம்மாநிலத்திற்கு இது உற்ற நேரத்தில் கைகொடுத்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜேந்திர சிங்கின் ஆட்கள் மரங்களை நட்டார்கள், நீரை சேமிக்க 3,500 பாரம்பரிய ஜோஹட்-களை, அதாவது டேங்குகளைக் கட்டினார்கள்; இவ்வாறு அங்கிருந்த கிராமவாசிகளின் வாழ்க்கையை வளமாக்கினார்கள். இன்னும் சிலர் நீரைச் சேமிப்பதில் மும்முரமாய் ஈடுபடுகிறார்கள்; அவர்களது முயற்சியைப் பலரும் கண்டுகொள்ளாதபோதிலும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிந்ததை எண்ணி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

நகராட்சித் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்வது போக, மழை நீரைச் சேமித்து வைப்பது பல விதங்களில் பயனுள்ளதாய் இருப்பதை தொழிலதிபர்கள் காண்கிறார்கள். தென்னிந்தியாவில், பெங்களூரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை, அதன் கூரையில் விழும் நீரைச் சேமிக்கும் வகையில் எளிய, செலவில்லாத அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருகாலத்தில் சாலையில் கொட்டி, விரயமாக்கப்பட்ட மழைநீர் இப்போது குழாய் வழியாக 42,000 லிட்டர் கொள்ளளவு டேங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. மழை காலத்தில் நாளொன்றுக்கு சேமிக்கப்படும் 6,000 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, சமையல் பாத்திரங்களையும் தொழிற்சாலை கேண்டீனையும் கழுவுவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த வேலைகளுக்கு, நகராட்சித் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை.

இது மிகச் சிறிய அளவாயிற்றே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதை சிந்தித்துப் பாருங்கள்: உங்களுக்கு ஒரு பேங்க் அக்கௌன்ட் இருக்கிறது, வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் அதில் பணம் போடுகிறீர்கள். தினசரி தேவைகளுக்காக அதிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல போட்டதைவிட அதிக பணத்தை எடுக்கிறீர்கள். அப்படியானால் ஒருநாள் அக்கௌன்ட்டில் இருப்பதைவிட அதிக பணத்தை எடுத்து கடனாளி ஆவீர்கள். ஆனால், வருடத்தில் சில மாதங்கள் வேலை பார்த்து, உங்கள் அன்றாட தேவைகளைக் கவனித்தது போக அதிக பணம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது பேங்கிலுள்ள பணம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதே நியமத்தை தண்ணீர் சேமிப்புக்கும் பொருத்திப் பாருங்கள். உங்கள் சிறுசேமிப்பை ஆயிரக்கணக்கான தடவை பெருக்கிப் பாருங்கள், உங்களிடம் இப்போது என்ன இருக்கிறது? தீரத் தீர நிரப்பப்பட்ட நீர்நிலைகள், அதிகரிக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம், நிரப்பப்பட்ட நிலத்தடி நீர்த்தேக்கங்கள் ஆகியவை மழை நீரை சேமிக்க முடியாத காலத்தில் நமக்குத் தண்ணீர் தருவதன் மூலம் “கூலி” கொடுக்கின்றன. ஆனால் கிடைக்கும் தண்ணீருக்கு ஒரு அளவுண்டு, அது இல்லாதபோது கடன் வாங்கவே முடியாது என்பதை நினைவில் வையுங்கள்.

நிரந்தர தீர்வு

நமது பூமி கோளம் தேவையானவற்றை வாரிவாரி கொடுத்து தன் குடிமக்களைக் கவனித்துக் கொள்கிறது. இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக, மனிதனின் பேராசையும் குறுகிய கண்ணோட்டமும், லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை சூழலைச் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியிருக்கின்றன. நல்லெண்ணம் படைத்த ஆட்கள், பூமியின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால் அப்பிரச்சினைகளை முற்றும் முழுமையாகத் துடைத்தழிக்க மனிதனுக்கு உண்மையிலேயே சக்தியில்லை. ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கப் போவதாகவும்,’ “வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்”படி செய்து தண்ணீர் சுழற்சியை மீண்டும் சமநிலைப்படுத்தப் போவதாகவும் படைப்பாளர் வாக்குறுதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆம் நிச்சயம், “வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.” அந்த மழைநீர் சேமிப்பு எப்பேர்ப்பட்ட புத்துயிர் அளிக்கும்!​—⁠வெளிப்படுத்துதல் 11:18; ஏசாயா 35:6, 7. (g05 4/8)

[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]

அன்று போலவே மழை நீரைச் சேமித்தல்

கூரையில் வழியும் நீர்: எளிய, செலவில்லாத முறை. சற்று சரிவாக கூரைகள் அமைக்கும்போது, அதில் வழியும் தண்ணீர் வடிகாலில் ஓடி, குழாய்கள் வழியாக கீழிறங்கி பிரத்தியேக பீப்பாய்களில் போய் விழுவதற்கு வசதியாக இருக்கிறது. கம்பி வலை, மணல், சரளைக் கல், நிலக்கரி ஆகிய வடிகட்டிகள் நீரை சுத்தம் செய்கின்றன. இத்தண்ணீர் வடிகால் வழியாக நிலத்தடி சம்புகளுக்கோ நிலத்தின் மேலுள்ள டேங்குகளுக்கோ அனுப்பப்படுகிறது. காற்று, சூரிய ஒளி, கரிமப் பொருட்கள் உட்புகாதபடி டேங்குகள் அடைத்து வைக்கப்படுகின்றன; படிகாரத்தைப் பயன்படுத்துவது நீரை தெளிவாக்குகிறது; ப்ளீச்சிங் பவுடர் பாக்டீரியாக்களைக் கொல்லுகிறது. இந்தத் தண்ணீரைத் தோட்டத்திற்கும், கழிவறைகளுக்கும், துவைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை இன்னும் சுத்திகரிக்கையில் குடிக்கவும் செய்யலாம். அதற்கும் அதிகமாக நீரிருந்தால் கிணறுகளில் சேமித்து வைக்கலாம் அல்லது நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதற்கு அதை நிலத்தில் விடலாம். இதுவே நகரத்தார் பின்பற்றுவதற்குரிய முக்கிய முறையாகும்.

நாலாக்கள்: நீரைத் தேக்குவதற்காக ஓடைகளுக்கு இடையே கற்சுவர்கள் அதாவது தடுப்பு அணைகள் எழுப்பப்படுகின்றன. நிழல் தரும் மரங்களை அவற்றின் ஓரங்களில் நடுவது நீர் ஆவியாவதைப் பெருமளவு தடுக்கிறது, மூலிகை தாவரங்களை இந்தச் சிறிய அணைகளில் போட்டு வைப்பது நீரைச் சுத்தப்படுத்துகிறது.

கசியும் தொட்டிகள், ராபாட்கள்: மழை நீரைச் சேமிக்க மணலிலோ பாறையிலோ கட்டப்படும் சிறிய தொட்டிகள். இதில் கொஞ்ச நீர் உபயோகிக்கப்படுகிறது; மீதி நீர் நிலத்தடி நீர்த்தேக்கங்களுக்குக் கசிந்து சென்று கிணறுகளை நிரப்புகிறது.

பண்டாராக்கள்: ஊற்றுகளிலிருந்து நீரைச் சேமிக்க நிலத்தடியில் கட்டப்படும் டேங்குகள்; நகரத்தாரின் உபயோகத்திற்காகக் குழாய் மூலம் அங்குள்ள டேங்குகளுக்கு அனுப்பப்படும்.

காநாட்கள்: மழை நீரைப் பிடிக்க மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள செங்குத்தான குழிகள். நிலத்தடி வாய்கால்களில் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது, இது புவியீர்ப்பு சக்தியால் தொலை தூர கிணறுகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இணைந்து செயல்படும் டேங்குகள்: வடிகால்களின் மூலம் டேங்குகளுக்கு அனுப்பப்படுகிற மழை நீர், நிரம்பி வழிந்து அவற்றின் கீழேயுள்ள பல டேங்குகளுக்குச் செல்கிறது.

[படத்திற்கான நன்றி]

நன்றி: S. Vishwanath, Rainwater Club, Bangalore, India

[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]

UN/DPI Photo by Evan Schneider

[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]

UN/DPI Photo by Evan Schneider