Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிபட்ட சிட்டுக்குருவிக்கு ஒரு புதிய வீடு

அடிபட்ட சிட்டுக்குருவிக்கு ஒரு புதிய வீடு

அடிபட்ட சிட்டுக்குருவிக்கு ஒரு புதிய வீடு

“இருக்கிற வேலை போதாதென்று இது வேறா?” கூட்டிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்ட ஒரு சிட்டுக்குருவியை என் மனைவி வீட்டுக்குத் தூக்கி வந்ததைப் பார்த்ததும் நான் முதலில் அப்படித்தான் கேட்டேன். நடுநடுங்கிக் கொண்டிருந்த அந்தக் குருவியைப் பக்கத்தில் போய் பார்த்ததும் என் மனம் உருகியது. இருந்தாலும், பரிதாபமான நிலையிலிருக்கும் இந்தக் குருவி எப்படிப் பிழைக்கப் போகிறதோ என நினைத்தேன். a

முதல் நாள், நன்கு மசித்த உணவில் கொஞ்சத்தையாவது எங்கள் குட்டி விருந்தாளிக்கு ஊட்ட தாஜா பண்ண வேண்டியிருந்தது. ஆனால் மறுநாளிலிருந்து சாப்பாட்டுக்காக அதுவே கூப்பாடு போட ஆரம்பித்தது. அதன் கிறீச்சொலியை, இரட்டைக் கதவுகளுள்ள எங்கள் அப்பார்ட்மெண்டையும் தாண்டி வெளியே உள்ள மாடிப்படியில் கேட்க முடிந்தது!

அந்தச் சிட்டுக்குருவியின் இறகுகளைப் பார்த்தே அது ஒரு பெண் குருவியென தெரிந்துகொண்டோம். மெல்ல மெல்ல அதன் உடல் தேறியது, அதால் பறக்க முடிந்தது. ஆனால் உல்லாசமாக வாழ்வதற்கு அதை மீண்டும் வெளியே பறக்க விட்டபோது, அது வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டது! ‘வீட்டை விட்டு வெளியேற அதற்கு அவ்வளவு தைரியமில்லை போலும்’ என நாங்கள் நினைத்துக்கொண்டோம். எனவே அந்தச் சின்னஞ்சிறு சிட்டுக்காக ஒரு கூண்டை வாங்கினோம், அதை எங்கள் செல்லப் பறவையாக வைத்துக் கொண்டோம். அதற்கு “ஸ்பாட்ஸி” என பெயர் வைத்தோம்; ஜெர்மானிய மொழியில் “சிட்டுக்குருவியை” செல்லமாக அப்படித்தான் அழைப்பார்கள்.

ஒருநாள் நாங்கள் கொஞ்சம் சாதம் சமைத்தோம்; இது ஸ்பாட்ஸிக்குப் பிரியமான உணவுகளில் ஒன்றாகும். ஆனால் அது கொஞ்சம் சூடாக இருந்ததால் என் மனைவி அதைத் தள்ளி வைத்துவிட்டு அதற்குப் பதிலாக சில தானியங்களைத் தூவினாள். எங்கள் சின்னச் சிட்டு என்ன செய்தது தெரியுமா? அது தன் தலையைச் சாய்த்துப் பார்த்தது, பிறகு தன் அலகால் தானியங்களை எல்லாம் மேசையிலிருந்து கீழே தள்ளிவிட்டது! ஆச்சரியப்பட்டுப்போன நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தோம். பிறகு, ஆறியிருந்த அந்தச் சாதத்தில் கொஞ்சத்தை எடுத்து அதற்கு முன் வைத்தோம், அப்போதுதான் அதற்குப் பரம திருப்தி ஏற்பட்டது!

இந்தச் செல்லச் சிட்டை வளர்ப்பது, இயேசு தம் சீஷர்களிடம் சொன்னதை எங்களுக்கு நினைப்பூட்டுகிறது; “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை [அதாவது, சிட்டுக்குருவிகளை] விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது” என அவர் சொன்னார். அதோடு, ‘பயப்படாதிருங்கள்; அநேகம் சிட்டுக்குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்’ என்றும் சொன்னார்.​—⁠மத்தேயு 10:29-31.

நாம் படும் பாடுகளை யெகோவா பார்க்கிறார் என்றும், நம் சகிப்புத்தன்மையை அவர் மறப்பதில்லை என்றும் அறியும்போது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! (ஏசாயா 63:9; எபிரெயர் 6:10) ஆம், ஒரு சின்னஞ்சிறிய பறவையிடம் நமக்கு ஏற்படும் அனுதாபம், யெகோவா தேவன் தம் வணக்கத்தாரிடம் காட்டும் அன்புக்கு ஒரு சிறிய அடையாளம் மட்டுமே!​—⁠அளிக்கப்பட்டது. (g05 5/8)

[அடிக்குறிப்பு]

a சில சமயங்களில், வியாதிப்பட்ட அல்லது அடிபட்ட பறவையைப் பராமரிப்பதால் ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் அல்லது அது உள்ளூர் சட்டங்களை மீறுவதாக இருக்கலாம்.