Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அப்படியே சாப்பிட்டு விடலாம் போலிருக்கிறது!

அப்படியே சாப்பிட்டு விடலாம் போலிருக்கிறது!

அப்படியே சாப்பிட்டு விடலாம் போலிருக்கிறது!

ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ருசியான உணவு போல் தெரியும் ஒன்றை நீங்கள் உற்றுப் பார்க்கிறீர்கள். அதைப் பார்த்ததும் உங்களுக்குப் பசி வந்துவிடுகிறது, வாயில் எச்சில் ஊறுகிறது. ஆனால் விசித்திரமாக, அந்த “உணவுக்கு” மணமும் இல்லை, சுவையும் இல்லை, சத்தும் இல்லை. அது கெட்டே போகாது, அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அது என்ன உணவு? இதற்கு ஜப்பானில் ஒரேவொரு பதில்தான் இருக்கிறது​—⁠பிளாஸ்டிக் உணவு மாடல். பிளாஸ்டிக் உணவு என்பது ஒரு ஹோட்டல் மெனு கார்டிலுள்ள ஒரு ஐட்டத்தின் அச்சு அசலான மாடலாகும். நிஜ ஐட்டத்தின் அளவு, வடிவம், நிறம் எப்படியிருக்குமோ அப்படியே அதன் மாடல் தயாரிக்கப்படுகிறது.

சுஷி போன்ற ஜப்பானின் பாரம்பரிய உணவு வகைகள் முதற்கொண்டு, பீட்ஸா மற்றும் ஸ்பகட்டி போன்ற மேற்கத்தியவரின் பிரியமான உணவு வகைகள் வரை விதவிதமான மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன. பானங்கள், பசியைக் கூட்டுகிற உணவு வகைகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றிற்கும் மாடல்கள் உள்ளன. தினுசு தினுசான அவை நம்மை மலைக்க வைக்கின்றன. சொல்லப்போனால், ஓர் உற்பத்தியாளர் 10,000-⁠த்திற்கும் அதிகமான உணவு ஐட்டங்களைத் தயாரித்துத் தருகிறார்!

பிளாஸ்டிக் உணவு பார்ப்பதற்கு அப்படியே அசல் உணவு போல இருக்கும். வேக வைத்த சிக்கனின் தோலிலுள்ள குட்டிக் குட்டி மேடுபள்ளங்கள், தர்பூசணி பழக்கீற்றில் ஆங்காங்கே உள்ள விதைகள், லேசாக மடிந்துகிடக்கும் சாலட் இலை போன்ற சகல நுணுக்கங்களுடனும் அவை திறம்பட உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஜப்பான் ரெஸ்டாரென்ட்டுகளில் பிளாஸ்டிக் உணவு எப்படி இந்தளவு பிரபலமடைந்திருக்கிறது?

19-⁠ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், சில ரெஸ்டாரென்டு ஓனர்கள் தாங்கள் தயாரிக்கும் வெளிநாட்டு உணவு வகைகளை ஜப்பானிய பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக அவற்றின் நிஜ சாம்பிள்களைப் பார்வைக்கு வைத்தார்கள். இதனால் வீதியில் வருவோர் போவோரெல்லாம் ரெஸ்டாரென்டுக்குள் நுழையாமலேயே அந்த உணவுகளைப் பார்வையிட முடிந்தது. உணவு வகைகளை அவ்வாறு காட்சிக்கு வைத்தது ஜனங்களை மட்டுமல்ல, மிருகங்களையும் ஈக்களையும்கூட கவர்ந்திழுத்தது. அதேசமயத்தில், உஷ்ணமும் ஈரப்பதமும் அந்த உணவுகளைக் கெட்டுப்போக வைத்தன, அதுமட்டுமல்ல அந்த சாம்பிள் உணவுகளை தினந்தோறும் தயாரித்து வைப்பதற்கு அதிக செலவும் பிடித்தது.

காலப்போக்கில், அசல் உணவை சாம்பிளாக வைப்பதற்குப் பதிலாக கலர் கலரான மெழுகுகளில் உண்டாக்கப்பட்ட அவற்றின் டூப்ளிகேட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் மெழுகுக்கு ஒரு பெரிய குறை இருந்தது​—⁠ஆம், உஷ்ண காலத்தில் அது உருக்குலைந்துபோனது. பிறகு, கடைசியில், மெழுகுக்குப் பதில் வினைல் பிளாஸ்டிக் உபயோகிக்கப்பட்டது. நீடித்து உழைப்பதும், வெப்பத்தைத் தாக்குப்பிடிப்பதும், அதே சமயத்தில் கரெக்டான வாடிக்கையாளர்களை​—⁠ஜனங்களை​—⁠கவர்ந்திழுப்பதுமான ஒரு பொருள் இப்போது ஒருவழியாக கிடைத்துவிட்டது! ஆனால் இந்த பிளாஸ்டிக் உணவுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?

முதலாவதாக, உணவு ஐட்டத்தின் அச்சு தயாரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, மாட்டிறைச்சியின் ஒரு துண்டு சதுரப் பாத்திரம் ஒன்றில் வைக்கப்படுகிறது, பிறகு அந்தக் கறித்துண்டு முழுவதும் மூழ்குமளவுக்கு அதன் மீது சிலிகான் ஊற்றப்படுகிறது. அந்த சிலிக்கான் அச்சு காய்ந்த பிறகு, அது திருப்பிப் போடப்படுகிறது. பிற்பாடு கறித்துண்டு அகற்றப்படுகிறது, இப்போது அதன் அடையாளம் அதில் விழுந்திருக்கிறது. அதன் பின், கலர் வினைல் அந்த அச்சுக்குள் ஊற்றப்பட்டு, 82 டிகிரி செல்சியஸில் ‘பேக்’ (bake) செய்யப்படுகிறது. ஆற வைத்ததும், டூப்ளிக்கேட் கறித்துண்டு வெளியே எடுக்கப்படுகிறது. இப்போது அதன்மீது பெயின்ட் அடிக்கப்படுகிறது.

ஒரு பிளாஸ்டிக் சான்ட்விச் தயாரிக்கப்பட வேண்டுமென்றால், அதில் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு பொருளும்​—⁠பிரெட், கறித்துண்டு, சீஸ், கீரை வகை ஆகியவை​—⁠தனித்தனியாக அச்சில் வார்க்கப்பட வேண்டும். அதன் பிறகு, ஒரு நிஜ சான்ட்விச்சை தயாரிக்க பிரெட் துண்டுகளுக்கு இடையே எப்படி வெவ்வேறு ஐட்டங்கள் ஒன்றன்மீது ஒன்று வைக்கப்படுகிறதோ அப்படியே இதன்மீதும் வைக்கப்படுகிறது. ஆனால், பிளாஸ்டிக் சான்ட்விச் விஷயத்தில் அந்த எல்லா ஐட்டங்களும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்வதற்காகப் பசையிடப்படுகிறது.

பிளாஸ்டிக் உணவைத் தயாரிப்பது ஒருவித கலை எனச் சொல்லலாம். “பிளாஸ்டிக் உணவை, நிஜ உணவு போலவே தோன்றும் வண்ணம் தயாரிப்பதில் உட்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயம், நிஜ உணவை நுணுக்கமாகக் கவனிப்பதாகும்” என்கிறார் காட்ஸூஜி கானெயாமா; இவர் இந்தத் தொழிலில் கால்பதித்து சுமார் 23 வருடங்கள் ஆகின்றன. “ஜனங்கள் பொதுவாக உணவு வகைகளை, சாப்பிடும் பொருள்களாகப் பார்க்கிறார்கள். நாங்களோ அவற்றை, தயாரிக்கும் பொருள்களாகப் பார்க்கிறோம்” என்கிறார் மேலுமாக.

ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வடித்து வைக்கப்படும் ஜப்பானியரின் சாதத்தை உற்றுப் பார்த்தால், அதன் ஒவ்வொரு பருக்கையும் உதிரி உதிரியாக இருப்பது போல் தெரியும். அந்த முழு பாத்திரத்திலுள்ள சாதமும் “கீழிருந்து மேல் வரை எழும்பி, அப்படியே கோபுரம் போல் நிற்கும்” என விளக்குகிறார் கானெயாமா. பிளாஸ்டிக் சாதத்தையும் இதேபோல செய்வதற்காக, ஒவ்வொரு பருக்கையையும் தனித்தனியாக அச்சில் வார்க்க வேண்டியிருக்கிறது. எல்லாப் பருக்கைகளையும் வெறுமனே அள்ளிப்போட்டு வைப்பது சரிப்பட்டு வராது, காரணம் அவை கீழே சரிந்துவிடும். அதனால், அந்தப் பருக்கைகளை மிகக் கவனமாக அதனதன் இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும், அதுவும் நிஜமான சாதத்தைப் போலவே குவித்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் உணவுகளை அச்சு அசலாகச் செய்தால்தான், அவற்றை உற்றுப் பார்ப்போரின் கண்களுக்கு அது அதிக ‘ருசியான’ உணவாகக் காட்சியளிக்கும்.

பிளாஸ்டிக் உணவுகளைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்களாய் ஆவதற்கு பல வருட அனுபவம் தேவைப்படுகிறது. இந்தத் தொழிலைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர் ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறார், அதாவது காளான் போன்ற எளிதான ஐட்டங்களைத் தயாரிப்பதில் உள்ள நுணுக்கங்களை முதலில் கற்றுக்கொள்கிறார். புதிதாகப் பிடிபட்ட மீனின் நுணுக்கமான தோல் அமைப்பையும் கலரையும் அப்படியே நிஜத்தில் வடிப்பதற்கு ஏறத்தாழ பத்து வருட ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இந்தத் தொழிலில் வல்லுநராக ஆவதற்கு, குறைந்தது 15 வருட அனுபவமாவது தேவைப்படலாம்.

ஜப்பானில், ஒரு ரெஸ்டாரென்ட் பக்கமாக நீங்கள் நடந்து செல்ல நேரிட்டால், அதுவும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சுவைமிக்க உணவு வகைகளைப் பார்க்க நேரிட்டால், பாடுபட்டு அவை உருவாக்கப்பட்ட கதையைக் கொஞ்சம் உங்கள் மனதில் ஓடவிட்டுப் பாருங்கள். அப்போது, நிஜ உணவைத் தயாரிப்பதற்கு அதிக திறமை தேவையா அல்லது பிளாஸ்டிக் உணவைத் தயாரிப்பதற்கு அதிக திறமை தேவையா என்று நீங்கள் குழம்பிப்போவீர்கள்! (g05 5/8)

[பக்கம் 27-ன் பெட்டி]

காமிரா லைட்டில்

அடுத்த முறை சினிமாவிலோ, டிவி நிகழ்ச்சியிலோ, விளம்பரத்திலோ ஒரு உணவு வகையைப் பார்த்தீர்களென்றால், அதைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள். அது ஒருவேளை அசல் உணவாக இருக்காது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிறிஸ் ஆலவர் என்ற உணவு அலங்கரிப்பாளர் சொல்கிறபடி, சில சமயம் ஒரு ஸீன் எடுத்து முடிப்பதற்கு மணிக்கணக்காகி விடுவதால் அப்படிப்பட்ட ஸீன்களில் டூப்ளிகேட் உணவு வகைகளை வைப்பதுதான் சிறந்தது. “அசல் உணவைவிட இது விலை அதிகம்தான், ஆனால் அதைவிட எத்தனையோ மடங்கு வசதியானது” என்கிறார். ஆம், சுரீரென்று அடிக்கும் காமிரா லைட்டில் வைப்பதற்கு அசல் உணவைவிட பிளாஸ்டிக் உணவுதான் பெஸ்ட்.

[பக்கம் 26-ன் படம்]

எது அசல் என்று உங்களால் சொல்ல முடியுமா? (பதில் 27-⁠ம் பக்கத்தில்)

பதில்: அந்தப் பெண்ணின் வலது கையிலுள்ள தட்டில் இருப்பதுதான் அசல் உணவு.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

கீழே படங்கள்: Hachiman Town, Gujyo City, Gifu Prefecture, Japan