Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்டர்நெட் டேட்டிங் நிஜமாகவே ஆபத்தானதா?

இன்டர்நெட் டேட்டிங் நிஜமாகவே ஆபத்தானதா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இன்டர்நெட் டேட்டிங் நிஜமாகவே ஆபத்தானதா?

“இன்டர்நெட்டில், உங்களோடு தொடர்பு வைத்திருப்பவர் யாரென்று தெரிய உங்களுக்கு வாய்ப்பே இல்லை.”​—⁠டான், 17. a

“இன்டர்நெட்டில் ஆட்கள் பொய் சொல்ல முடியும். வேறொரு நபர் போல நடிக்க முடியும், அது ரொம்ப ஈஸி.”​—⁠ஜார்ஜ், 26.

இன்டர்நெட் டேட்டிங் உலகெங்கும் பிரபலமாகிக்கொண்டே வருகிறது. இத்தொடரின் முந்தின கட்டுரை கலந்தாலோசித்தபடி, இப்படிப்பட்ட இன்டர்நெட் காதல்கள் சட்டென மலர்ந்தாலும், உண்மை தெரியவரும்போது பெரும்பாலும் அவை வாடிவதங்கி விடுகின்றன. b அவை ஏமாற்றத்தில் மட்டுமல்ல, வேறு விதமான கவலைகளிலும் உங்களை ஆழ்த்திவிடலாம். இந்த விதத்தில் டேட்டிங் செய்வது சரீர ரீதியிலோ, உணர்ச்சி ரீதியிலோ, ஆன்மீக ரீதியிலோ உங்களைப் படுகுழியில் சிக்க வைத்துவிடலாம்.

ஆனால், எந்தத் தீங்கும் செய்யாதது போலவும் பாதுகாப்பானது போலவும் தெரிகிற ஒரு சாதனத்தால், உங்கள் வீட்டிலேயே இருக்கும் ஒரு கம்ப்யூட்டரால் உங்களுக்கு எப்படி ஆபத்துண்டாக்க முடியும்? அத்தகைய ஆபத்துகளில் சில முக்கியமான ஒரு பைபிள் நியமத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் [அதாவது, நாணயமாய்] நடக்க விரும்புகிறோம்.’ (எபிரெயர் 13:18) ஆனால் கொஞ்சம் பொறுங்கள், இன்டர்நெட்டை உபயோகிப்பது நாணயமற்ற செயலென்று குறிப்பிடுவதற்கோ இன்டர்நெட்டை உபயோகிப்பது உங்களை நாணயமற்றவராக்கிவிடும் என்று குறிப்பிடுவதற்கோ இந்த வசனம் இங்கு கொடுக்கப்படவில்லை. என்றாலும், மற்ற ஜனங்கள் பெரும்பாலும் நாணயமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; அதோடு, இக்கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள மேற்கோள்கள் காண்பிக்கிறபடி, இன்டர்நெட்டில் சில வகையான தில்லுமுல்லுகளைச் செய்வது சுலபமாகத் தெரியலாம், அவற்றைக் கண்டுபிடிப்பது வெகு கடினமாகத் தோன்றலாம். முக்கியமாக, காதல் விவகாரங்கள் என்று வரும்போது, நாணயமற்ற செயல்கள் படுபயங்கரமான ஆபத்துகளில் ஆட்களைச் சிக்க வைத்துவிடுகின்றன.

உதாரணமாக, பின்வரும் பைபிள் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள நாணயமற்ற செயலைக் கவனியுங்கள்: “வீணரோடே [அதாவது, பொய்யரோடே] நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் [“தங்கள் அடையாளத்தை மறைப்பவர்களிடத்தில்,” NW] நான் சேருவதில்லை.” (சங்கீதம் 26:4) ‘தங்கள் அடையாளத்தை மறைப்பவர்கள்’ யார்? சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் “மாய்மாலக்காரர்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளன. இந்த வார்த்தை “தங்கள் குறிக்கோள்களையோ திட்டங்களையோ மற்றவர்களுக்குச் சொல்லாமல் மறைத்துவைக்கிற நபர்களைக் குறிக்கலாம் அல்லது தங்கள் சுயரூபத்தையும் உள்நோக்கங்களையும் ஒளித்துவைக்கிற நபர்களைக்” குறிக்கலாம் என்று ஒரு புத்தகம் சொல்கிறது. இத்தகைய தில்லுமுல்லுகள் இன்டர்நெட்டில் எப்படி நடக்கின்றன? காதலிக்க விரும்புபவர்கள் இதன் மூலம் என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்க நேரிடலாம்?

ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்கள்

மைக்கேல் என்ற ஒரு தகப்பனை எடுத்துக்கொள்ளுங்கள்; ஆபத்துமிக்க வெப் சைட்களைப் பார்க்கக் கூடாதென்று பெற்றோர் சொல்வதைப் பெரும்பாலான பிள்ளைகள் சட்டைபண்ணுவதே இல்லையென்பதை ஒரு கருத்தரங்கிலிருந்து அறிந்து திடுக்கிட்டுப்போனார். “சிறு பிள்ளைகளை கேவலமான விதத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காக சில காமுகர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான விஷயம்தான் என் மனதை இன்னுமதிகமாக வேதனையடையச் செய்தது” என்கிறார் அவர். இளைஞர்கள் புதிய ஆட்களோடு தொடர்புகொள்வதற்காக இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விதத்தில் அவர்கள் ஆபத்துக்குள்ளாகி விடலாம்.

ஆம், தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள சிறு பிள்ளைகளைத் தேடி அலையும் காமவெறியர் பலர், இன்டர்நெட்டில் இளைஞர்களைப் போல் பாசாங்கு செய்கிறார்கள் என்று செய்தி அறிக்கைகள் வந்துள்ளன. ஓர் ஆய்வின்படி, “இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிற ஐந்து பிள்ளைகளில் ஒரு பிள்ளை பாலியலில் ஈடுபட அழைக்கப்படுகிறது.” 10-லிருந்து 17 வயதுள்ள 33 பிள்ளைகளில் 1 பிள்ளை கம்ப்யூட்டர் உரையாடல்கள் மூலம் “தொடர்ந்து நச்சரிக்கப்படுகிறது” என ஒரு செய்தித்தாள்கூட அறிவித்தது.

இன்டர்நெட்டில் “இளைஞர்” ஒருவரைத் தாங்கள் காதலிப்பதாக நினைத்துக்கொண்டிருந்த சில இளவட்டங்களுக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது, காரணம்? தாங்கள் காதலிக்கத் தொடங்கிய அந்த நபர்கள் வயதில் மூத்த சிறைக்கைதிகள் என்ற உண்மை பிற்பாடு அவர்களுக்குத் தெரியவந்ததே. வேறுசில இளசுகள் தெரிந்தோ தெரியாமலோ காமுகர்களின் வலையில் விழுந்துவிட்டிருக்கிறார்கள். இந்த மோசமான ஆசாமிகள் தங்களுடைய பலியாளை முதலில் “தயார்படுத்துகிறார்கள்,” ஆம், ஆன்-லைனில் நட்புத்தோரணையில் செய்திகளை அனுப்பி தங்கள் மீது நம்பிக்கை வளரும்படிச் செய்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தங்களுடைய தகாத ஆசைகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களை நேரில் சந்திக்க முயலுகிறார்கள். இதன் விளைவாக அநேக இளைஞர்கள் அடிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, ஏன் கொலைகூட செய்யப்பட்டிருப்பது வருந்தத்தக்க விஷயம்.

ஆம், கெட்ட ஆட்கள் இன்டர்நெட்டில் தங்களுடைய பலியாட்களைக் கண்டுபிடிப்பதற்காக ‘தங்கள் அடையாளத்தை மறைக்கத்தான் செய்கிறார்கள்.’ அத்தகைய காமுகர்கள், “ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருகிற” பொய்த் தீர்க்கதரிசிகள் பற்றிய இயேசுவின் உவமையை உங்கள் நினைவுக்குக் கொண்டுவரலாம், அவர்கள் உண்மையில் “பட்சிக்கிற ஓநாய்கள்.” (மத்தேயு 7:15) இன்டர்நெட்டில் தொடர்புகொள்வது யாரென்றே தெரியாததால், அத்தகைய மோசடியைக் கண்டுபிடிப்பது முடியாத காரியமாக இருக்கலாம். முன்பு குறிப்பிடப்பட்ட ஜார்ஜ் இவ்வாறு சொல்கிறார்: “ஒருவரை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்போது, அவருடைய முக பாவனையையும் குரல் தொனியையும் வைத்து நீங்கள் அதிகத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இன்டர்நெட்டில் அப்படி எதுவுமே உங்களால் செய்ய முடியாது. ரொம்ப சுலபமாக முட்டாளக்கப்பட்டு விடலாம்.”

அதனால்தான், “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்ற பைபிளின் அறிவுரை ஞானமானதாக இருக்கிறது. (நீதிமொழிகள் 22:3) இன்டர்நெட்டில் நீங்கள் சந்திக்கிற எல்லாருமே கொடிய காமுகர்கள் அல்ல என்பதென்னவோ உண்மைதான், ஆனால் ஆட்கள் வேறு சில வழிகளிலும் ‘தங்கள் அடையாளத்தை மறைத்துப்போடுகிறார்கள்.’

பித்தலாட்டம் செய்வது, மூடி மறைப்பது ஆகியவற்றால் வரும் ஆபத்துகள்

இன்டர்நெட் காதலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக தங்களுடைய நல்ல குணங்களைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகவே சொல்வது அல்லது “ரீல் விடுவது” சகஜம்; தங்களுடைய மோசமான குணங்களைப் பற்றி அவ்வளவாகக் குறிப்பிடாமல் இருப்பது அல்லது மூடி மறைப்பதும்கூட சகஜம். அதோடு, த வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் ஒரு நூலாசிரியர் சொன்ன விஷயத்தை பின்வருமாறு மேற்கோள்காட்டியது: “இன்டர்நெட் டேட்டிங் ரொம்பவும் மோசமானது, ஏனென்றால் ஜனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆட்கள் பெரும்பாலும் வேறொரு பாலினரைப் போல் நடிக்கிறார்கள். . . . வருமானம், . . . இனம், குற்றப்பதிவுகள், மன ஆரோக்கியம், மணமானவரா இல்லையா ஆகிய விவரங்களெல்லாம் நட்பு மலர்ந்து வெகு நாட்களுக்குப் பிறகும்கூட பெரும்பாலும் மறைத்தே வைக்கப்படுகின்றன.” மற்றவர்களை எச்சரிப்பதற்காக, இன்டர்நெட் டேட்டிங்கினால் தாங்கள் மோசம் போனதைப் பற்றிய வேதனைமிக்க அனுபவங்களை அநேகர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆட்கள் தங்களுடைய ஆன்மீக நிலையைப் பற்றிக்கூடவா பொய் சொல்வார்கள்? ஆம், சிலர் தாங்கள் உண்மை கிறிஸ்தவர்களாக இல்லாவிட்டாலும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள், வருத்தப்பட வேண்டிய விஷயம் இது. ஆனால் ஏன் இந்தப் பித்தலாட்டம்? இன்டர்நெட்டில் அப்படிச் சொல்வது வெகு சுலபம் என்பது இதற்கு ஒரு காரணம். “கம்ப்யூட்டரில் நீங்கள் வேறொரு நபர் போல நடிப்பது ரொம்ப ரொம்ப ஈஸி” என்று ஒத்துக்கொள்கிறார் அயர்லாந்தைச் சேர்ந்த ஷான் என்ற இளைஞன்.

இப்படிப்பட்ட பித்தலாட்டங்களை நிறைய பேர் அதிக ஸீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை, காதலிக்க ஆரம்பிக்கும்போது அப்படி இப்படியென்று கொஞ்சம் பொய் சொல்வது சகஜம்தான் என அவர்கள் நியாயம் பேசுகிறார்கள். ஆனால், பொய் சொல்வதைக் கடவுள் வெறுக்கிறார் என்பதை ஞாபகம் வையுங்கள். (நீதிமொழிகள் 6:16-19) அதுவும் நல்ல காரணத்திற்காகவே அவ்வாறு வெறுக்கிறார். இன்றைய உலகில் பெரும்பாலான துன்பங்களும் துயரங்களும் ஆரம்பமானதற்கு காரணமே பொய்தான். (யோவான் 8:44) நேர்மையற்ற நடத்தை எந்தவொரு உறவையும் முறித்துப்போட்டுவிடும், குறிப்பாக வாழ்நாள் பூராவும் நீடிக்க வேண்டிய உறவைப் பாழாக்கிப்போட்டுவிடும். அதைவிட கொடுமை என்னவென்றால், அப்படிப்பட்ட நடத்தை அந்த நபருடைய ஆன்மீகத்துக்கே கேடு விளைவித்துவிடும்; அதாவது, யெகோவா தேவனோடு அவர் வைத்துள்ள உறவை அது நாசப்படுத்திவிடும்.

வருத்தகரமாக, சில இளைஞர்கள் மற்றொரு விதத்திலும் நேர்மையில்லாமல் நடந்துகொள்கிறார்கள். இன்டர்நெட் மூலம் அவர்கள் சிலரோடு நட்பு வைத்துக்கொள்கிறார்கள், ஆனால் அதைத் தங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் மூடி மறைத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு, டீனேஜிலுள்ள ஒரு பையனின் பெற்றோர் ஒருநாள் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார்கள், காரணம் வேறொரு கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த ஓர் இளம் பெண் 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணப்பட்டு தங்கள் வீட்டிற்கு திடுதிப்பென்று வந்திறங்கினாள். அவர்களுடைய பையன் ஆறு மாதங்களாக அந்தப் பெண்ணோடு ஆன்-லைன் டேட்டிங் செய்து கொண்டிருந்திருக்கிறான், ஆனால் அதுவரை அவளைப் பற்றி அவர்களுக்கு சுத்தமாகத் தெரிந்திருக்கவில்லை!

“இது எப்படி நடந்திருக்க முடியும்?” என்று அவர்கள் கேட்டார்கள். ‘முன்பின் பார்த்தே இராத ஒரு பெண்ணிடம் எங்கள் மகன் நிச்சயம் மனதைப் பறிகொடுத்திருக்க மாட்டான்’ என்றே அவர்கள் நினைத்தார்கள். ஆனால், உண்மையில் அவர்களுடைய மகன் அவர்களை இத்தனை நாட்களாக ஏமாற்றி வந்திருந்தான்​—⁠தன் உண்மையான அடையாளத்தை மறைத்து வந்திருந்தான். இத்தகைய நாணயமற்ற நடத்தை காதல் எனும் கட்டடத்திற்கு மோசமான ஓர் அஸ்திவாரம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?

இன்டர்நெட்டுக்குப் பதிலாக நேருக்கு நேர்

இன்டர்நெட் டேட்டிங்கில் வேறுபல அபாயங்களும் ஏற்படலாம். சில சமயங்களில், நீங்கள் அன்றாடம் பார்க்கிற ஆட்களைவிட ஆன்-லைன் ஃபிரெண்ட் ஒருவர் உங்களுக்கு உசத்தியாகிவிடலாம், நிஜமானவராக ஆகிவிடலாம். குடும்பம், நண்பர்கள், பொறுப்புகள்​—⁠இவையெல்லாம் உங்களுக்கு இரண்டாம் பட்சமாகிவிடலாம். ஆஸ்திரியாவைச் சேர்ந்த மோனிக்கா என்ற இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “ஆன்-லைனில் சந்தித்த நபர்களுடன் எக்கச்சக்கமான நேரத்தை நான் கம்ப்யூட்டர் முன் செலவழித்ததால், முக்கியமான சொந்தபந்தங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டேன்.” இதை உணர்ந்தபோது அவளுடைய மனம் உறுத்தியது, அதனால் இன்டர்நெட் மூலம் ஆட்களுடன் தொடர்புகொள்வதை நிறுத்திவிட வேண்டுமென அவள் தீர்மானித்தாள்.

உண்மைதான், இன்டர்நெட்டை அநேகர் சமநிலையோடு பயன்படுத்துகிறார்கள். சிநேகிதர்களோடும் பிரியமானவர்களோடும் தொடர்புகொள்வதற்கு ஈ-மெயில் ரொம்பவுமே ஒத்தாசையாக இருக்கலாம். ஆனால், நேருக்கு நேர் பேசுவதற்கு இணையாக வேறு எதுவுமே இல்லையென்பதை நீங்கள் கண்டிப்பாகவே ஒத்துக்கொள்வீர்கள். நீங்கள் ‘கன்னிகைப் பருவத்தைக் கடந்துவிட்டீர்களென்றால்,’ இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களென்றால், உங்கள் வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான தீர்மானத்தை எடுக்க இருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 7:36) ஆகவே, பொறுப்புடன் அந்தத் தீர்மானத்தை எடுங்கள்.

பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) நீங்கள் சந்தித்தே இராத ஒருவர் உங்களுக்கு எழுதுகிற எல்லா வார்த்தைகளையும் நம்புவதற்குப் பதிலாக உங்களுடைய நடையின் மேல் நீங்கள் கவனமாயிருங்கள். ஆட்களை நேருக்கு நேர் சந்தித்து நட்பை வளர்த்துக்கொள்வதுதான் மிகவும் ஞானமான செயல். முக்கியமாக, ஆன்மீக இலக்குகள் சம்பந்தமாகவும் மதிப்பீடுகள் சம்பந்தமாகவும் நீங்கள் அந்த நபரோடு நிஜமாகவே ஒத்துப்போகிறீர்களா என்பதைப் பாருங்கள். அப்படிப்பட்ட காதல் உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான திருமணத்திற்கு உங்களை வழிநடத்தலாம். (g05 5/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 22-ன் படங்கள்]

இன்டர்நெட்டில் யாரிடமிருந்து உங்களுக்கு மெயில் வருகிறதென்று நிஜமாகவே உங்களுக்குத் தெரியுமா?

[பக்கம் 24-ன் படம்]

திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பழகுவதுதான் பெஸ்ட்