Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படிப்பட்ட படங்களை நீங்கள் பார்ப்பீர்கள்?

எப்படிப்பட்ட படங்களை நீங்கள் பார்ப்பீர்கள்?

எப்படிப்பட்ட படங்களை நீங்கள் பார்ப்பீர்கள்?

சமீப பத்தாண்டுகளில், வெள்ளித்திரைகளிலும் சின்னத்திரைகளிலும் வரும் செக்ஸ், வன்முறை, ஆபாச வசனங்கள் ஆகியவற்றைக் குறித்து பலரும் பலவிதமாக பேசியிருக்கிறார்கள். சில செக்ஸ் காட்சிகள் படுமோசமாக இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள், வேறு சிலரோ அதெல்லாம் “கலை” என்று சொல்கிறார்கள். சினிமாவில் வரும் வன்முறையெல்லாம் தேவையே இல்லாதவை என்று சிலர் வாதிடுகிறார்கள், மற்றவர்களோ அதெல்லாம் தேவைதான் என்று வாதிடுகிறார்கள். ஆங்காங்கே உரையாடலில் தூவப்படும் ஆபாச வசனங்களெல்லாம் அருவருப்பாக இருக்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள், வேறு சிலரோ அதெல்லாம் எதார்த்தமானவை என்று கூறுகிறார்கள். அசிங்கம் என ஒருவர் சொல்வதை, விஷயங்களை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் சுதந்திரம் என்று வேறொருவர் சொல்கிறார். இருதரப்பினருடைய வாதங்களையும் கேட்கிற ஒருவருக்கு, அற்பமான விஷயங்களுக்குத் தர்க்கம் செய்வது போல் தோன்றலாம்.

ஆனால் திரையில் பார்க்கும் காட்சிகளாக இருந்தாலும்சரி கேட்கும் வசனங்களாக இருந்தாலும்சரி, இதையெல்லாம் பற்றி பேசுவதை அற்பமான விஷயத்திற்காக செய்யப்படும் வாக்குவாதங்களாக எடுத்துக்கொள்ள முடியாது. இதெல்லாம் மிக முக்கியமாய் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள், பெற்றோர்கள் மட்டுமல்ல, ஒழுக்க தராதரங்களை உயர்வாக மதிக்கிற எல்லாருமே மிக முக்கியமாய் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள். “எப்பொழுதெல்லாம் என்னுடைய மனம் சொல்வதைக் கேட்காமல் துணிந்து ஒரு சினிமா தியேட்டருக்குப் போகிறேனோ அப்பொழுதெல்லாம் ஒரு மோசமான ஆளைப் போலத்தான் தியேட்டரைவிட்டு வெளியே வருவதாக உணருகிறேன்” என ஓர் இளைஞி புலம்பினாள். “இப்படிப்பட்ட படத்தை எடுத்தவர்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன், இப்படிப்பட்ட படத்தைப் பார்த்ததற்காக என்னைக் குறித்தும் நான் வெட்கப்படுகிறேன். நான் இப்போது பார்த்த காட்சிகளெல்லாம் என்னுடைய சுபாவத்தையே சீரழித்துவிட்டதைப் போல் உணருகிறேன்” என்றும் அவள் கூறினாள்

தராதரங்கள் வைத்தல்

திரைப்படத்தில் வரும் விஷயங்களைப் பற்றி கவலைப்படுவது ஒன்றும் புதிதல்ல. சினிமா படமெடுக்க ஆரம்பித்த காலத்திலேயே செக்ஸ் காட்சிகளையும் வன்முறை சம்பவங்களையும் பற்றி மக்கள் மத்தியில் சூடான வாக்குவாதம் எழுந்தது. கடைசியாக, 1930-களில், சினிமாவில் எப்படிப்பட்ட காட்சிகளை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஐக்கிய மாகாணங்களில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: சினிமா படங்கள் மீது போடப்பட்ட புதிய விதிமுறைகள் “மிகவும் ஒடுக்குவதாக இருந்தன, பொதுவாக வயதுவந்தவர்களுக்குரிய எந்தவொரு விஷயத்தையும் திரையில் காட்டுவதைத் தடை செய்தன. ‘காம உணர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகளை’யும் விபச்சாரம், முறைதகா பாலுறவு, மோசடி, கற்பழிப்பு போன்றவை மிகவும் அவசியமாக இருந்தால் தவிர, இலைமறைவு காய்மறைவாகவும்கூட காண்பிக்க முடியாது; அப்படியே காட்டினாலும் இத்தகைய செயல்களுக்கு தண்டனை வழங்குவது போல கடைசியில் கதை முடிய வேண்டும்.”

வன்முறை சம்பந்தமாக, “பொதுவாக பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் காட்டுவதோ அவற்றைப் பற்றி பேசுவதோ, குற்றச்செயலைப் பற்றிய விவரங்களைக் காட்டுவதோ, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் குற்றவாளிகளின் கைகளில் சாவது போல் காட்டுவதோ, மூர்க்கத்தனத்தை அல்லது கொலை செய்வதை மிதமீறி தெரிவிப்பதோ, அல்லது கதைக்கு மிகவும் முக்கியமாக இருந்தால் தவிர, படுகொலை செய்வதை அல்லது தற்கொலை செய்வதை காட்டுவதோ படங்களில் தடை செய்யப்பட்டன. . . . எந்தச் சூழ்நிலைகளிலும் எந்தக் குற்றச்செயலையும் நியாயப்படுத்திக் காட்டக் கூடாது.” சுருக்கமாகச் சொன்னால், “படம் பார்க்கிறவர்களுடைய ஒழுக்க தராதரங்களைக் குறைக்கும் எந்தவொரு படத்தையும் தயாரிக்கக் கூடாது” என அந்தச் சட்டம் குறிப்பிட்டது.

கட்டுப்பாடுகளிலிருந்து தரம் பிரித்தல் வரை

1950-களுக்குள், இந்த விதிமுறைகளெல்லாம் காலத்திற்கு ஒவ்வாதென உணர்ந்து, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பலர் அவற்றைத் தூக்கியெறிய ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, 1968-⁠ல் இந்த விதிமுறைகளெல்லாம் நீக்கப்பட்டு A படமா U படமா என்றெல்லாம் தரம் பிரிக்கும் முறை (ரேட்டிங்ஸ்) உருவானது. a இந்தத் தரம் பிரிக்கும் முறை உருவானதால், ஒரு படத்தில் அப்பட்டமான காட்சிகளோ ஆபாச வசனங்களோ வரலாம், ஆனால் அது எப்படிப்பட்ட படமென (அதாவது A படமா U படமாவென) முத்திரை குத்தப்படும். இவ்வாறாக, அந்தப் படம் வயதுவந்தோருக்குரியதா இல்லையா என பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டது. “பெற்றோர்களுக்கு முன்னதாகவே ஓரளவு எச்சரிப்பு கொடுப்பதன் மூலம் தங்களுடைய பிள்ளைகள் எப்படிப்பட்ட சினிமா படங்களைப் பார்க்க வேண்டும், எப்படிப்பட்ட சினிமா படங்களைப் பார்க்கக் கூடாது என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ள விடுவதே இதன் இலக்காக இருந்தது” என கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க திரைப்பட சங்கத்தின் தலைவராக இருந்த ஜேக் வேலென்டி கூறினார்.

இந்தத் தரம் பிரித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் அணைக்கட்டு உடைந்தது போலானது. செக்ஸ், வன்முறை, ஆபாசம் ஆகியவை ஹாலிவுட் திரைப்படங்களுக்குள் வெள்ளம் போல் பாயத் தொடங்கின. திரைப்படங்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் புதிய சுதந்திரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அலையென திரண்டு வந்தது. என்றாலும், இந்தத் தரம் பிரித்தல் முறையால், பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் இது உங்களுக்குச் சொல்கிறதா?

தரம் பிரித்தல் முறையால் தெரிந்துகொள்ள முடியாதவை

ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தத் தரம் பிரிக்கும் முறையிலுள்ள கட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்டதாக சிலர் சந்தேகப்படுகின்றனர். ஹார்வார்டு பொது சுகாதாரப் பள்ளியின் ஆராய்ச்சி இந்தச் சந்தேகத்திற்கு ஆதாரம் அளிக்கிறது. இளைஞர்களுக்கு ஏற்றவையாக கருதப்பட்ட படங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பைவிட இப்போது அதிகமான வன்முறையும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருப்பதை அது கண்டுபிடித்தது. “ஒரே தரத்தைக் கொண்ட திரைப்படங்களுக்கு இடையே ஆட்சேபணைக்குரிய விஷயங்களில் பெரும் வேறுபாடு இருக்கலாம்” என்றும், “ஒரு படத்தில் எந்தளவு வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள், வசனங்கள் இடம் பெறுகின்றன என்பதைப் பற்றிய தகவல்களை வயதின் அடிப்படையில் செய்யப்படும் தரம் பிரிக்கும் முறை போதுமான அளவு தருவதில்லை” என்றும் இந்த ஆராய்ச்சி முடிவுக்கு வந்தது. b

பெரியவர்களுடைய துணையின்றி பிள்ளைகளைப் படம் பார்க்க அனுப்பும் பெற்றோர்கள் எப்படிப்பட்ட படம் இன்றைக்குப் பொருத்தமாக கருதப்படுகிறது என்பதை அறியாமல் இருக்கலாம். உதாரணமாக, அமெரிக்காவில் இளைஞர்களுக்குப் பொருத்தமானதென தரம் பிரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரத்தை “‘தாராள’ குணம் படைத்த 17 வயது மங்கை” என திரைப்பட விமர்சகர் ஒருவர் விவரிக்கிறார். “அந்தப் படத்தில் அந்தப் பெண் தினமும் குடிக்கிறாள், போதைப்பொருளைப் பயன்படுத்துகிறாள், பார்ட்டிகளில் கலந்துகொண்டு பாலுறவில் திளைத்திருக்கிறாள், அப்போதுதான் சந்தித்த ஒரு பையனுடன் பலவந்தமாக பாலுறவு கொள்கிறாள்.” படங்களில் இந்த மாதிரியான காட்சிகள் ரொம்ப சர்வசாதாரணம். சொல்லப்போனால், இளைஞர்களுக்கு ஏற்றவையென தரம் பிரிக்கப்படும் திரைப்படங்களில் வாய்வழி செக்ஸ் “சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படுவது” போல் தெரிகிறது என வாஷிங்டன் போஸ்ட் மேகஸின் குறிப்பிடுகிறது. ஒரு படம் எப்படிப்பட்டது என்பதை மதிப்பிட அதற்குக் கொடுக்கப்படும் தரத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேம்பட்ட வழிகாட்டி ஏதாவது இருக்கிறதா?

“தீமையை வெறுத்துவிடுங்கள்”

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் இடத்தை தரம் பிரிக்கும் முறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவர்கள் தாங்கள் எடுக்கும் எல்லா தீர்மானங்களிலும்​—⁠பொழுதுபோக்கு காரியங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும்கூட​—சங்கீதம் 97:10-⁠ல் உள்ள அறிவுரையைப் பின்பற்ற கடினமாக முயலுகிறார்கள். “தீமையை வெறுத்துவிடுங்கள்” என அந்த வசனம் சொல்கிறது. தீமையை வெறுக்கும் ஒருவர் கடவுள் வெறுக்கிற காரியங்களைப் பார்ப்பது தவறென கருதுகிறார்.

எப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பதற்குப் பிள்ளைகளை அனுமதிக்கிறோம் என்பதில் முக்கியமாக பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். சூதுவாது அறியாமல், தரத்தை மட்டுமே பார்த்துவிட்டு பிள்ளைகளைப் படம் பார்க்க அனுப்பிவிடாதீர்கள். உங்கள் பிள்ளையின் ஒத்த வயதினருக்கான படங்களிலும்கூட உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் இருப்பதற்கு அதிக சாத்தியம் உண்டு. இது கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியமானதல்ல, ஏனென்றால் கடவுளுடைய தராதரங்களுக்கு எதிர்மாறான சிந்தையையும் செயலையுமே இந்த உலகம் சந்தோஷமாய் வரவேற்கிறது. cஎபேசியர் 4:17, 18; 1 யோவான் 2:15-17.

எல்லா படங்களுமே மோசமானவை என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இதன் சம்பந்தமாக மே 22, 1997 விழித்தெழு! இதழ் இவ்வாறு குறிப்பிட்டது: “ஒவ்வொரு தனி நபரும் காரியங்களை கவனமாய் மதிப்பிட்டுப் பார்த்து, கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக ஒரு சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ளும்படியான தீர்மானங்களைச் செய்ய வேண்டும்.”​—1 கொரிந்தியர் 10:31-33.

பொருத்தமான பொழுதுபோக்கை கண்டுபிடித்தல்

தங்கள் குடும்பம் எந்தப் படங்களைப் பார்க்கலாம் என்பதை பெற்றோர்கள் எப்படி தீர்மானிக்கலாம்? உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் தரும் குறிப்புகளைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய குடும்பம் தரமான பொழுதுபோக்கை அனுபவிப்பதற்கு அவர்கள் சொல்லும் குறிப்புகள் உதவலாம்.​—⁠பக்கம் 14-⁠ல், “வேறுசில பொழுதுபோக்குகள்” என்ற பெட்டியையும் காண்க.

“பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த சமயத்தில், சினிமா பார்க்கச் செல்லும்போது நானோ என்னுடைய மனைவியோ எப்போதும் எங்கள் பிள்ளைகளுடன் செல்வோம்” என ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த குவான் கூறுகிறார். “அவர்கள் ஒருபோதும் தனியாகவோ வேறுசில இளைஞர்களுடனோ சென்றதில்லை. இப்போது, அவர்கள் இளைஞர்களாக இருக்கிறார்கள், படம் வெளிவந்தவுடனே அதைப் பார்க்கப் போவதில்லை. அதைப் பற்றி விமர்சனம் வரும்வரை நாங்கள் காத்திருக்கிறோம், அல்லது படம் பார்த்த நம்பகமான சிலர் சொல்வதை கேட்கிறோம். பிறகு, அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினால் நாங்கள் குடும்பமாக பேசி தீர்மானிக்கிறோம்.”

ஓடிக்கொண்டிருக்கும் படங்களைப் பற்றி தன்னுடைய டீனேஜ் மகன் என்ன நினைக்கிறான் என்பதை மனந்திறந்து சொல்லும்படி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாற்கு உற்சாகப்படுத்துகிறார். “நானும் என்னுடைய மனைவியும் உரையாடலைத் தொடங்குகிறோம், அந்தப் படத்தைப் பற்றி அவனுடைய அபிப்பிராயத்தைக் கேட்கிறோம்” என மாற்கு கூறுகிறார். “அவனுடைய கருத்துகளைத் தெரிந்துகொள்வதற்கும் அதைப் பற்றி அவனுடன் நியாயங்காட்டி பேசுவதற்கும் இது உதவுகிறது. இதனால், நாங்கள் எல்லாருமாக சேர்ந்து பார்க்கக்கூடிய படங்களைத் தேர்ந்தெடுக்க முடிகிறது.”

பார்க்க விரும்பும் படங்களைப் பற்றி கவனமாக மதிப்பிடுவதற்குப் பிரேசிலைச் சேர்ந்த ரோஸேரியு என்பவரும் தன்னுடைய பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறார். “பட விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர்களுடன் சேர்ந்து நாங்கள் வாசிக்கிறோம். ஒரு படம் மோசமானது என்பதை சுட்டிக்காட்டுகிற அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களை வீடியோ கடைக்கு அழைத்துச் சென்று சொல்லிக் கொடுக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த மேத்யூ தனது பிள்ளைகள் பார்க்க விரும்புகிற சினிமாக்களைப் பற்றி அவர்களுடன் பேசுவதை பயனுள்ளதாக கருதுகிறார். “குடும்பமாக நாங்கள் பார்க்க விரும்பிய சினிமா படங்களிலுள்ள விஷயங்களைப் பற்றி பேசியபோது சிறுவயதினராக இருந்த எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய உரையாடலில் சேர்த்துக்கொண்டோம். குறிப்பிட்ட ஒரு படத்தைப் பார்க்கக் கூடாது என நாங்கள் தீர்மானித்தால், வெறுமனே அந்தப் படத்தைப் பார்க்கக் கூடாதென சொல்வதற்குப் பதிலாக, நானும் என்னுடைய மனைவியும் அதற்குரிய காரணத்தை விளக்கினோம்.”

இதோடு, சினிமா படங்களைப் பற்றி இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்வதை பெற்றோர்கள் சிலர் பயனுள்ளதாக கண்டிருக்கின்றனர். சினிமா படங்களைப் பற்றிய விலாவாரியான தகவல்களைத் தரும் வெப்சைட்டுகள் நிறைய இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு சினிமாவில் எப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள இவற்றைப் பயன்படுத்தலாம்.

பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் பயன்கள்

‘நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்களைப்’ பற்றி பைபிள் பேசுகிறது. (எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, எப்படிப்பட்ட பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பதென பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானம் எடுப்பதற்கு உதவியாக பெற்றோர்கள் பிள்ளைகளின் மனதில் ஒழுக்கநெறிகளைப் புகுத்த வேண்டும்.

இதன் சம்பந்தமாக, யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள இளைஞர்கள் பலர் சிறந்த பயிற்றுவிப்பை பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த பில்லும் செர்ரியும் பருவவயதிலுள்ள தங்களுடைய இரண்டு மகன்களுடன் படத்திற்குப் போவதை அனுபவித்து மகிழுகிறார்கள். “தியேட்டரைவிட்டு வெளியே வந்தவுடன் அந்தப் படத்தைப் பற்றி, அதாவது அது எத்தகைய நெறிமுறைகளைக் கற்பித்தது, அவை சரியான நெறிமுறைகளா இல்லையா என்பதைப் பற்றி, நாங்கள் குடும்பமாக பேசுகிறோம்” என பில் சொல்கிறார். அதேசமயத்தில், எந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதைக் குறித்து பில்லும் செர்ரியும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணருகிறார்கள். “படம் பார்க்கச் செல்வதற்கு முன்பு அந்தப் பட விமரிசனத்தை நாங்கள் வாசிக்கிறோம். எங்களுக்குப் பிடிக்காத ஏதாவது காட்சிகள் படத்தில் வந்தால் எந்தவித தயக்கமுமின்றி உடனே வெளியே எழுந்து வந்துவிடுகிறோம்” என பில் சொல்கிறார். பொறுப்போடு தீர்மானம் எடுப்பதில் பிள்ளைகளையும் உட்படுத்துவதால், எது சரி எது தவறு என்பதைக் குறித்து பிள்ளைகள் சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவி செய்யப்படுவதாக பில்லும் செர்ரியும் உணருகிறார்கள். “எப்படிப்பட்ட சினிமா படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள் என்ற விஷயத்தில், அவர்கள் ஞானமான தீர்மானங்கள் எடுக்கிறார்கள்” என பில் சொல்கிறார்.

பில்லையும் செர்ரியையும் போல, பொழுதுபோக்கு விஷயத்தில் பகுத்துணரும் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்கு பெற்றோர்கள் பலர் தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். உண்மைதான், சினிமா துறையினரால் தயாரிக்கப்படும் பெரும்பாலான படங்கள் பார்ப்பதற்கு ஏற்றவையாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மறுபட்சத்தில், பைபிள் நியமங்களால் வழிநடத்தப்படும்போது, ஆரோக்கியமானதும் புத்துணர்ச்சியூட்டுவதுமான நல்ல தரமான பொழுதுபோக்கை கிறிஸ்தவர்கள் அனுபவித்து மகிழலாம். (g05 5/8)

[அடிக்குறிப்புகள்]

a உலகெங்கிலும் பல்வேறு நாடுகள் இதுபோன்ற ரேட்டிங் முறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன; எந்த வயதினர் ஒரு படத்தைப் பார்க்கலாம் என்பதை தரக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது.

b அதோடு, திரைப்படங்களுக்குத் தரக் கட்டுப்பாடு செய்யும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். இளைஞர்களுக்குப் பொருத்தமற்றதென ஒரு நாட்டில் கருதப்படும் சினிமா வேறொரு நாட்டில் இளைஞர்கள் தாராளமாக பார்க்கும் சினிமாவாக இருக்கலாம்.

c சிறுபிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கான படங்களில் பில்லிசூனியம், ஆவியுலகத் தொடர்பு, அல்லது பேய்த்தனமான வேறு வகை காரியங்கள் இருக்கலாம் என்பதை கிறிஸ்தவர்கள் மனதிற்கொள்ள வேண்டும்.​—⁠1 கொரிந்தியர் 10:⁠21.

[பக்கம் 12-ன் பெட்டி/படங்கள்]

“நாங்கள் குடும்பமாக சேர்ந்தே தீர்மானிக்கிறோம்”

“நான் சிறுமியாக இருந்தபோது, நாங்கள் எல்லாரும் குடும்பமாக சேர்ந்து சினிமாவுக்குப் போவோம். நான் இப்போது பெரியவளாக வளர்ந்துவிட்டதால், நான் தனியாக போவதற்கு அம்மாவும் அப்பாவும் அனுமதிக்கிறார்கள். இருந்தாலும், அதற்கு முன்பு, அந்தச் சினிமா படத்தின் பெயரையும் அது எந்த மாதிரியான படம் என்பதையும் கேட்பார்கள். அந்தச் சினிமாவைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாதென்றால், அந்தப் படத்தைப் பற்றிய விமரிசனத்தை வாசிப்பார்கள், அல்லது டிவியில் டிரெய்லர் பார்ப்பார்கள். இன்டர்நெட்டிலும் அந்தப் படத்தைப் பற்றிய தகவலை ஆராய்ந்து பார்ப்பார்கள். அந்தப் படம் நல்ல படமல்ல என நினைத்தால், காரணத்தை எனக்கு விளக்குவார்கள். என்னுடைய கருத்தையும் கேட்பார்கள். நாங்கள் தாராளமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்வோம், நாங்கள் குடும்பமாக சேர்ந்தே தீர்மானிக்கிறோம்.”​—⁠19 வயது ஏலாயிஸ், பிரான்சு.

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

கலந்து பேசுங்கள்!

“பெற்றோர்கள் சில பொழுதுபோக்கை தடைசெய்து அதற்கு பதிலாக தங்களுடைய பிள்ளைகளுக்குத் தகுந்த வேறு பொழுதுபோக்கை அளிக்கவில்லை என்றால், பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களே தங்களுடைய ஆர்வப் பசியைத் திருப்தி செய்துகொள்ள ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே, மோசமான படத்தைப் பார்க்க பிள்ளைகள் விரும்பும்போது, பெற்றோர்கள் சிலர் உடனே அதை தடை செய்வதுமில்லை, அவர்கள் பார்ப்பதற்கு அனுமதி அளிப்பதுமில்லை. சூழ்நிலை அமைதலாவதற்கு பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து, நடந்ததைப் பெரிதுபடுத்தாமல், அந்த விஷயத்தைப் பற்றி கலந்து பேசுகிறார்கள், இந்த மாதிரியான பொழுதுபோக்கு நல்லதா என்பதற்கான காரணத்தை அந்த இளைஞனிடம் கேட்கிறார்கள். அப்படிக் கலந்து பேசுவதால், பெற்றோர் சொல்வதை அவர்கள் பெரும்பாலும் கேட்கிறார்கள், அதற்கு நன்றியும் தெரிவிக்கிறார்கள். பிற்பாடு, பெற்றோர்களுடைய தலைமையில், எல்லாரும் சேர்ந்து அனுபவிக்கக்கூடிய வேறு ஏதாவது பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கிறார்கள்.”​—⁠மாஸாக்கி, ஜப்பானில் பயணக் கண்காணி.

[பக்கம் 14-ன் பெட்டி/படங்கள்]

வேறுசில பொழுதுபோக்குகள்

◼ “இயல்பாகவே, சகாக்களுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இளைஞர்களுக்கு இருக்கிறது, அதனால் எங்கள் மகளுக்கு, எங்களுடைய கண்காணிப்பில் நல்ல நண்பர்களுடன் கூட்டுறவு கொள்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய சபையில் நல்ல முன்மாதிரியான இளைஞர்கள் பலர் இருப்பதால், எங்களுடைய மகள் அவர்களுடன் பழகுவதற்கு உற்சாகப்படுத்துகிறோம்.”​—⁠எலிசா, இத்தாலி.

◼ “எங்களுடைய பிள்ளைகளின் பொழுதுபோக்கில் நாங்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறோம். அவர்களுக்காக நல்ல நல்ல காரியங்களை ஏற்பாடு செய்கிறோம், அதாவது ஜாலியாக நடந்துவிட்டு வருவது, எல்லா வயதிலுமுள்ள சக கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து ‘பார்பிகியூஸ்,’ பிக்னிக்ஸ், பார்ட்டிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறோம். இதனால், சகாக்களுடன் மாத்திரமே பொழுதுபோக்கை அனுபவித்து மகிழ வேண்டுமென எங்கள் பிள்ளைகள் நினைப்பதில்லை.”​—⁠ஜான், பிரிட்டன்.

◼ “சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து திருப்தியளிக்கும் கூட்டுறவுகளை அனுபவித்து மகிழ்ந்திருக்கிறோம். கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளையும் என்னுடைய பிள்ளைகள் விரும்பி விளையாடுகிறார்கள், ஆகவே அவ்வப்போது மற்றவர்களுடன் சேர்ந்து இப்படி விளையாட ஏற்பாடு செய்கிறோம்.”​—⁠குவான், ஸ்பெய்ன்.

◼ “இசைக் கருவிகளை வாசிக்கும்படி எங்களுடைய பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறோம். நாங்கள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஹாபிகளில் ஈடுபடுகிறோம்; டென்னிஸ், வாலிபால், சைக்கிள் ஓட்டுதல், வாசித்தல், நண்பர்களுடன் கூட்டுறவு கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறோம்.”​—⁠மாற்கு, பிரிட்டன்.

◼ “குடும்பமாகவும் நண்பர்களுடன் சேர்ந்தும் ‘பௌலிங்’ விளையாடப் போகிறோம். அதோடு, மாதத்தில் ஒருமுறை, எல்லாரும் ஒன்றுசேர்ந்து ஸ்பெஷலாக ஏதாவது செய்வதற்கு முயற்சி செய்கிறோம். பிள்ளைகளை எப்போதும் பெற்றோர்களுடைய கண்காணிப்பில் வைத்துக் கொள்வதே பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு முக்கியமான வழி.”​—⁠டானிலோ, பிலிப்பைன்ஸ்.

◼ “சும்மா சேரில் உட்கார்ந்து கொண்டு சினிமா பார்ப்பதைவிட ‘லைவ்’ காட்சிகளைப் பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. கலை கண்காட்சிகள், கார் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நாங்கள் பார்க்கிறோம். இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஒருவரோடொருவர் பேச முடிகிறது. பொழுதுபோக்கில் மிதமிஞ்சி ஈடுபடாமல் இருப்பதற்கும் கவனமாக இருக்கிறோம். அதிகமாக பொழுதுபோக்கில் ஈடுபடும்போது நேரம் வீணாவதோடு, நிகழ்ச்சியே களையிழந்து சப்பென்று ஆகிவிடுகிறது.”​—⁠ஜூடித், தென் ஆப்பிரிக்கா.

◼ “மற்ற பிள்ளைகள் செய்வதெல்லாமே என்னுடைய பிள்ளைகளுக்கு பொருத்தமாக இருக்காது, அதை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்கிறேன். அதேசமயத்தில், என்னுடைய கணவரும் நானும் பிள்ளைகளுக்குத் தரமான பொழுதுபோக்குகளை ஏற்பாடு செய்து கொடுக்க முயற்சி செய்கிறோம். ‘எங்களை எங்கேயுமே கூட்டிக்கிட்டு போறதில்ல. எங்களுக்கு எந்தப் பொழுதுபோக்குமே இல்ல’ என்று அவர்கள் அங்கலாய்க்காமல் பார்த்துக்கொள்கிறோம். குடும்பமாக ஒன்றுசேர்ந்து பூங்காக்களுக்குப் போகிறோம், எங்களுடைய சபையிலுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து பார்ட்டிகள் ஏற்பாடு செய்கிறோம்.” d—⁠மாரியா, பிரேசில்.

[அடிக்குறிப்பு]

d சமூக கூட்டுறவுகள் சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கு, எமது துணைப் பத்திரிகையான காவற்கோபுரம், நவம்பர் 15, 1992-⁠ல் 15-20 பக்கங்களைக் காண்க.

[படத்திற்கான நன்றி]

James Hall Museum of Transport, Johannesburg, South Africa

[பக்கம் 11-ன் படம்]

தீர்மானிப்பதற்கு முன்பு பட விமரிசனத்தைப் படியுங்கள்

[பக்கம் 12, 13-ன் படம்]

பெற்றோர்களே, தேர்ந்தெடுத்துப் பார்ப்பதற்கு உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்