Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

மோசடி “மோசடி ஜாக்கிரதை!” (ஆகஸ்ட் 8, 2004) தொடர் கட்டுரைகளுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. வீட்டிலிருந்தே சிறிய தொழில் ஒன்றைச் செய்து வருகிறேன், நானும் மோசடிக்கு பலியானவன்தான். கட்டுரைகளில் விவரிக்கப்பட்ட அதே விதமான உணர்ச்சிகளை நானும் அனுபவித்தேன்; முட்டாளாக்கப்பட்டதால் அவமானத்தில் கூனிக்குறுகினேன், குற்ற உணர்வில் துடித்தேன், நிலைகுலைந்து போனேன். கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்த ஆலோசனையை அப்படியே பின்பற்றினேன். என் தவறை ஒப்புக்கொண்டேன், யெகோவாவிடம் ஜெபித்தேன், என் நண்பராக இருக்கும் ஒரு மூப்பரிடம் மனதிலிருந்ததைக் கொட்டினேன். இந்தக் கட்டுரைகளின் உதவியோடு பிரச்சினையைச் சரிசெய்தேன். அது எப்பேர்ப்பட்ட நிம்மதியை அளித்திருக்கிறது!

டி. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

திருமணத்திற்கு முன் உடலுறவு “இளைஞர் கேட்கின்றனர் . . . திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் என்ன தப்பு?” (ஆகஸ்ட் 8, 2004) என்ற கட்டுரை எனக்குப் பக்கபலமாக அமைந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இளைஞர்கள் எண்ணிய விதமாகவே நானும் எண்ணினேன். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு யெகோவா நன்மையை வழங்காதிருக்க மாட்டார் என சொல்லும் சங்கீதம் 84:11-லுள்ள வார்த்தைகள் முக்கியமாய் என் நெஞ்சைத் தொட்டன.

டி. யூ., ஜெர்மனி

ஓர் இளைஞியாக யெகோவாவின் பார்வையில் கற்புடன் இருக்க எப்போதும் போராடியிருக்கிறேன், ஆனால் சில சமயங்களில் அது பெரும் சவாலாக இருக்கிறது. என் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதற்கு இந்தக் கட்டுரை என்னைப் பலப்படுத்தியது, சாத்தானின் உலகில் நான் மட்டும் அல்ல, இன்னும் அநேகர் இப்படிப் போராடுகிறார்கள் என்பதையும் இது நினைப்பூட்டியது. இளைஞர்கள்மீது யெகோவா எந்தளவுக்குக் கரிசனை வைத்திருக்கிறார் என்பதை அறிவது உண்மையிலேயே உற்சாகத்தை அளிக்கிறது.

எஃப். பி., போட்ஸ்வானா

போஸ்ட் போலியோ சின்ட்ரோம் (PPS) “தாக்குதல் ஒருமுறை பாதிப்போ இருமுறை” (ஆகஸ்ட் 8, 2004) என்ற தலைப்பில் ஜாக் மேன்ஸ்மா என்பவரின் அனுபவத்தை வெளியிட்டதற்கு நன்றி. கடந்த 23 ஆண்டுகளாக பாலிஆர்த்தரிட்டீஸ் நோயால் அவதிப்பட்டு வருகிறேன், கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அதே அறிகுறிகளோடு நானும் அவதிப்படுகிறேன். பயனுள்ள கருவிகளைப் பற்றியும் பாதிக்கப்பட்ட தசைகளை அதிகளவு பயன்படுத்தாதிருப்பதைப் பற்றியும் தகவல் அளித்ததற்காக சகோதரர் மேன்ஸ்மாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

யூ. கே., ஆஸ்திரியா

எனக்கு இரண்டரை வயதிருக்கும்போது போலியோ வந்தது, 25 வயதில் PPS தாக்கியது. இதன் அறிகுறிகளைப் பற்றி டாக்டர்களுக்கு அவ்வளவாகத் தெரியாதிருந்ததால் வியாதியைக் கண்டுபிடிப்பதற்குள் அவர்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள். இந்தப் பொருளில் இத்தகைய விளக்கமான, முழுமையான தகவலை நான் இதற்கு முன்பு எங்குமே பார்க்கவில்லை.

ஜே. ஈ., பிரான்சு

ஆறு வயதாக இருக்கையில் என் அம்மாவை போலியோமைலைட்டிஸ் தாக்கியது. அந்த வியாதியைப் பற்றித் தெள்ளத் தெளிவாக விளக்கியிருப்பது அவருடைய நிலையைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது.

டி. வி., இத்தாலி

பதினெட்டு மாதக் குழந்தையாக இருக்கையில் எனக்கு போலியோ வந்தது, சகோதரர் மேன்ஸ்மாவைப் போல் அந்தளவுக்கு மோசமாக நான் பாதிக்கப்படவில்லைதான். ஆனால் என் தசைகள் பலவீனமாக இருப்பதால் உடலில் வலுவில்லை. என் சக்தியை எப்படி வீணாக்காதிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள இக்கட்டுரை எனக்கு உதவியது. யெகோவா பார்க்கிறார், பராமரிக்கிறார் என்பதை வாசித்தறிந்ததே இக்கட்டுரையிலிருந்து நான் அடைந்த மிகப் பெரிய பலன்!

எல். ஜே., ஐக்கிய மாகாணங்கள் (g05 5/8)

தனிமை “தனிமரம் ஆனால் தனிமையில் இல்லை” (ஜூலை 8, 2004) என்ற அட்டைப்பட கட்டுரைகள் அருமையிலும் அருமை. பக்கம் 7-⁠ல் “தனிமையுணர்வை சமாளிக்க வழிகள்” என்ற பெட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள ஆலோசனைகளை முக்கியமாய் ரசித்துப் படித்தேன். அவற்றில் பலவற்றைக் கடைப்பிடித்துப் பார்த்திருக்கிறேன், அவை மற்றவர்களுக்கு அதிகளவு உற்சாகத்தை அளிக்குமென நம்புகிறேன்.

ஈ. எம்., ஐக்கிய மாகாணங்கள் (g05 4/8)