Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நள்ளிரவில் சூரியன் எப்படிப் பிரகாசிக்க முடியும்?

நள்ளிரவில் சூரியன் எப்படிப் பிரகாசிக்க முடியும்?

நள்ளிரவில் சூரியன் எப்படிப் பிரகாசிக்க முடியும்?

“சூரியன் எப்படி அஸ்தமிக்காமலே இருக்க முடியும்?” பாப்புவா நியூ கினியில் மிஷனரியாக சேவை செய்யும் பின்லாந்து நாட்டவரான என்னிடம் இது போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கின்றன. வெப்ப மண்டல பகுதிகளில், பகல் நேரமானது மாதாமாதம் கிட்டத்தட்ட ஒரேபோல்தான் இருக்கிறது. ஆகவே, ஆர்க்டிக் பகுதிகளில் சூரியன் மாதக்கணக்கில் அஸ்தமிப்பதில்லை என்று சொல்லும்போது வெப்ப மண்டல வாசிகளுக்கு அதைக் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதைவிட, குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதே இல்லையென விளக்கும்போது இன்னமும் ரொம்பவே குழம்பிவிடுகிறார்கள்.

நள்ளிரவில் சூரியன் எப்படிப் பிரகாசிக்கிறது? சூரியனைப் பூமி வருடத்திற்கு ஒரு முறை சுற்றி வருகையில் அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையிலேயே இந்தக் குறிப்பிடத்தக்க இயற்கைச் சம்பவம் நிகழ்கிறது. எனவே வட அரைக்கோளத்தில் கோடைக் காலத்தின்போது வட துருவம் சூரியனை நோக்கி சாய்ந்திருக்கும், ஆனால் குளிர் காலத்தில் அது சூரியனிலிருந்து விலகியிருக்கும். பூமி அதன் அச்சில் தினமும் ஒருமுறை சுழல்வதால் ஆர்க்டிக் வட்டத்தில் வருடத்திற்கு ஓர் இரவில், அதாவது ஜூன் 21 வாக்கில், சூரியன் அஸ்தமிப்பதில்லை. அதேபோல் வருடத்திற்கு ஒரு பகலில், அதாவது டிசம்பர் 21 வாக்கில், சூரியன் உதிப்பதில்லை; இருப்பினும் நண்பகலில், விடியலுக்கு முன்னான வெளிச்சத்திற்கு ஒத்த வெளிச்சமிருக்கும்.

ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் இன்னும் வடக்கு நோக்கி செல்லச் செல்ல, கோடைக் காலத்தில் அநேக இரவுகளில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை, அதே போல் குளிர் காலத்தில் அநேக நாட்களுக்கு சூரியனைப் பார்க்கவே முடியாது. இரு துருவங்களிலும் பகற்பொழுதும் சரி, இரவுப் பொழுதும் சரி, ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். a

துருவப் பிரதேச வாசிகள் கோடைக் காலத்தில் சூரியன் அஸ்மதிக்காதபோது எப்படித் தூங்குகிறார்கள்? குளிர் காலத்தில் சூரிய வெளிச்சமே இல்லாமல் நீண்ட இரவுகளை எப்படிச் சமாளிக்கிறார்கள்? கடந்த காலத்தில் சில கலாச்சாரத்தினர், கோடைக் கால இரவுகளில் தூங்கியதைவிட குளிர் காலத்தின் இரவு வேளையில் இரண்டு மடங்குக்கும் அதிக நேரம் தூங்கினார்கள். இப்போது அநேகர் நவீன வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றுவதால் ஒவ்வொரு இரவும் ஒரே அளவு நேரம் தூங்குகிறார்கள். ஆனால் கோடைக் காலங்களின் நீண்ட பகல் பொழுதுகள் பூமியின் வடக்கே உள்ளவர்களுக்கு கூடுதல் தெம்பை அளிக்கின்றன. “இரவில் 11 மணியாகியும் இன்னும் பட்டப்பகல் போல வெளிச்சமிருக்கும்போது படுக்கைக்குப் போக எனக்கு இஷ்டமே இருப்பதில்லை. சில சமயங்களில் வெளியே போய் புல் வெட்டுகிறேன் அல்லது வேறு ஏதாவது வேலை செய்கிறேன்” என்று சொல்கிறார் அலாஸ்கா வாசியான பேட்ரிக்.

மறுபட்சத்தில், பல மாதங்களாக வெளிச்சமாயிருப்பதோ இருட்டாயிருப்பதோ உடலுக்கும் மனதுக்கும் சோர்வூட்டுவதாக இருக்கலாம். எனவே சிலர் கோடைக் கால மாதங்களில் சூரிய வெளிச்சம் தங்கள் படுக்கை அறைக்குள் தலைகாட்டாதபடி அதை கும்மிருட்டாக வைத்துக்கொள்கிறார்கள், குளிர் காலத்தில் வீட்டை ஜகஜோதியாக்கி தங்களை வெளிச்சத்தில் வைத்துக்கொள்கிறார்கள்; இவை எல்லாம் தூக்க நேரத்தைச் சமநிலைப்படுத்தவும், தளர்ச்சியையும் மனச்சோர்வையும் தவிர்க்கவுமே. இத்தகைய சவால்கள் இருப்பினும் நள்ளிரவில் சூரியனைப் பார்ப்பது மறக்க முடியாத அனுபவம் என்பதை உள்ளூர் வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் ஒப்புக்கொள்கிறார்கள்.​—⁠அளிக்கப்பட்டது. (g05 5/22)

[அடிக்குறிப்பு]

a அண்டார்க்டிக்கிலும் இதே போன்ற இயற்கை நிகழ்வுகளைக் காணலாம், ஆனால் அண்டார்க்டிக்கில் கோடை காலமாக இருக்கும்போது ஆர்க்டிக்கில் குளிர் காலமாக இருக்கும்.

[பக்கம் 31-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், இரு துருவங்களும் கோடைக் காலம் முழுவதும் பகலாகவும் குளிர் காலம் முழுவதும் இரவாகவும் இருக்கின்றன (காட்டப்பட்டுள்ள உதாரணம், வட அரைக்கோளத்திற்குரியது)

இலையுதிர் காலம் ←

குளிர் காலம் கோடைக் காலம்

பூமி அதன் அச்சில்

தினமும் ஒருமுறை

→ இளவேனிற் காலம் சுழல்கிறது

[பக்கம் 31-ன் படம்]

நள்ளிரவு சூரியன், ஸ்லோ மோஷன் காமிராவில் எடுக்கப்பட்ட படம்

[படத்திற்கான நன்றி]

© Paul Souders/WorldFoto