Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழிபாட்டில் உருவப் படங்களைப் பயன்படுத்தலாமா?

வழிபாட்டில் உருவப் படங்களைப் பயன்படுத்தலாமா?

பைபிளின் கருத்து

வழிபாட்டில் உருவப் படங்களைப் பயன்படுத்தலாமா?

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-⁠ம் தேதி கிரேக்க தீவான டீநாசில் மாபெரும் மத கொண்டாட்டம் நடைபெறுகிறது. இயேசுவின் தாயான மரியாளையும் அவருடைய உருவப் படத்தையும் வழிபட்டு கௌரவிக்க ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு வருகிறார்கள்; அந்த உருவப் படத்திற்கு அற்புத சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். a கிரேக்க ஆர்த்தடாக்ஸ் புத்தகம் ஒன்று இவ்வாறு விளக்குகிறது: “கடவுளைச் சுமந்த மகா புனிதவதியான எங்கள் தெய்வத் தாயை விசேஷ விசுவாசத்தோடும் பக்தியோடும் நாங்கள் கௌரவிக்கிறோம்; பாதுகாப்பு அளிக்கும்படியும், விரைந்து வந்து காக்கும்படியும், உதவும்படியும் அவரிடம் வேண்டுகிறோம். அற்புதங்களைச் செய்யும் புனிதர்களான ஆண்களிடமும் பெண்களிடமும் எங்கள் ஆன்மீக, சரீர தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்படி கேட்கிறோம் . . . ஆழ்ந்த பக்தியுடன் நாங்கள் அவர்களுடைய புனிதப் பொருட்களையும் உருவப் படங்களையும் முத்தமிட்டு வழிபடுகிறோம்.”

கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் வேறு பல பிரிவினர்கூட இதே போன்ற வழிபாடுகளில்தான் ஈடுபடுகிறார்கள். ஆனால் வழிபாட்டில் உருவப் படங்களைப் பயன்படுத்துவதை பைபிள் போதனைகள் ஆதரிக்கின்றனவா?

ஆரம்பகால கிறிஸ்தவர்கள்

பொ.ச. 50 வாக்கில் என்ன நடந்தது என்பதை சற்று சிந்தியுங்கள். அப்போஸ்தலன் பவுல் அத்தேனே பட்டணத்திற்கு விஜயம் செய்த சமயம் அது; அப்பட்டணம் சிலை வழிபாட்டிற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. எனவே அத்தேனே பட்டணத்தாரிடம், ‘கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் [கடவுள்] வாசம்பண்ணுகிறதில்லை . . . தமக்கு யாதொன்று தேவையானது போல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை. . . . மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது’ என பவுல் விளக்கினார்.​—⁠அப்போஸ்தலர் 17:24, 25, 29.

சொல்லப்போனால், சிலைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய இத்தகைய எச்சரிப்புகள், புதிய ஏற்பாடு எனவும் அழைக்கப்படுகிற கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, “விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக” என கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் யோவான் புத்திமதி கூறினார். (1 யோவான் 5:21) “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?” என கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 6:16) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர், கிறிஸ்தவர்களாவதற்கு முன்பு வழிபாட்டில் சிலைகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதுகையில், ‘ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு நீங்கள் விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினீர்கள்’ என்பதை நினைப்பூட்டினார். (1 தெசலோனிக்கேயர் 1:9) அப்படியானால், யோவானையும் பவுலையும் போலவே, உருவப் படங்களை வழிபாட்டில் பயன்படுத்தக் கூடாதென்று அந்தக் கிறிஸ்தவர்களும் நம்பியது தெளிவாகத் தெரிகிறது.

“கிறிஸ்தவர்கள்” உருவப் படங்களை ஏற்றுக்கொண்டது

“கிறிஸ்தவ சர்ச் தோன்றிய முதல் மூன்று நூற்றாண்டுகளின் போது . . . கிறிஸ்தவ உருவப்படங்கள் இருக்கவில்லை, பொதுவாக சர்ச்சும் அதைக் கடுமையாய் எதிர்த்தது. உதாரணமாக, படைப்பாளரை விட்டுவிட்டு படைப்பை வழிபடும்படி (புற) மத உருவப்படங்கள் ஜனங்களை ஊக்குவித்ததால் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த கிளமென்ட் அவற்றைக் கண்டித்தார்” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.

அப்படியென்றால் உருவப் படங்களைப் பயன்படுத்துவது எப்படி இந்தளவுக்குப் பிரபலமடைந்தது? பிரிட்டானிக்கா இவ்வாறு தொடர்ந்து சொல்கிறது: “ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் மத்திபத்தில் படங்களைப் பயன்படுத்துவது ஆரம்பமானது, பொதுவாக கிறிஸ்தவ சர்ச்சுகள் அதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தன; சில சர்ச்சுகள் மட்டும் அதற்கு கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பின. எனினும், 4-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் கிறிஸ்தவ சர்ச் ரோம அரசின்கீழ் வந்தபோதுதான் எல்லா சர்ச்சுகளிலும் படங்களைப் பயன்படுத்துவது ஆரம்பமானது; அப்போது முதல் அவற்றைப் பயன்படுத்துவது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது.”

பேரரசரின் உருவப் படங்களை வழக்கமாக வழிபட்டு வந்த அநேக புறமதத்தினர் அப்போது கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தார்கள். “மக்கள் துணியிலோ மரத்திலோ ஓவியமாகத் தீட்டப்பட்ட பேரரசரின் உருவப் படத்தை வழிபட்டார்கள், அந்தப் பழக்கமிருந்ததால் மற்ற உருவப் படங்களை வழிபடுவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது” என ஐக்கான் பெயின்டிங் என்ற புத்தகத்தில் ஜான் டேலர் விளக்குகிறார். இவ்வாறு, புறமத ஓவியங்களை வழிபடுவதற்குப் பதிலாக இயேசு, மரியாள், தேவதூதர்கள், “புனிதர்கள்” ஆகியோரின் படங்கள் வழிபடப்பட்டன. சர்ச்சுகளில் பயன்படுத்தப்பட்ட இந்தப் படங்கள் மெல்ல மெல்ல கோடிக்கணக்கானோரின் வீடுகளிலும் நுழைந்தன, அங்கும் அவை வழிபடப்பட்டன.

“ஆவியோடும் உண்மையோடும்” வணங்குதல்

கடவுளுடைய ஊழியர்கள் “ஆவியோடும் உண்மையோடும்” வழிபட வேண்டும் என இயேசு சொன்னார். (யோவான் 4:24) ஆகவே, வழிபாட்டில் உருவப் படங்களைப் பயன்படுத்துவது சரியா, தவறா என்பது பற்றி தெள்ளத்தெளிவாக அறிய விரும்பும் நேர்மையான ஒருவர், கடவுளுடைய வார்த்தையை ஆராய வேண்டியிருக்கிறது.

உதாரணமாக, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என இயேசு சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (யோவான் 14:6) “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே . . . மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே” என்றும் ‘கிறிஸ்து . . . நமக்காக வேண்டுதல் செய்கிறார்’ என்றும் பவுல் அறிவித்தார். (1 தீமோத்தேயு 2:5, 6; ரோமர் 8:34) மேலும் கிறிஸ்து, ‘தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்’ என்பதை நாம் வாசிக்கையில் அவர் வகிக்கும் பங்கு இன்னுமதிக அர்த்தமுள்ளதாகிறது. (எபிரெயர் 7:25) இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும். எந்தவொரு மனிதனோ உயிரற்ற உருவப் படமோ உண்மையில் அவருடைய இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள இத்தகைய அறிவு, ‘பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும்’ வழியைக் கண்டுபிடிக்க சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஒருவருக்கு உதவும்; அதோடு, இந்த மேம்பட்ட வழிபாட்டு முறையால் ஆசீர்வாதங்களைப் பெறவும் அது அவருக்கு உதவும். ஆம், “தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்” என இயேசு சொன்னார்.​—⁠யோவான் 4:23. (g05 5/8)

[அடிக்குறிப்பு]

a பொதுவாக, மத உருவப் படம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தவர் வழிபடும் பிரதிரூபமாக அல்லது சின்னமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் கிறிஸ்துவின் உருவப் படங்கள் சில உள்ளன; திரித்துவத்தை, “புனிதர்களை,” தேவதூதர்களை, அல்லது மேலே குறிப்பிட்டவாறு இயேசுவின் தாய் மரியாளை அடையாளப்படுத்தும் பிற படங்களும் உள்ளன. சிலைகளைப் போலவே உருவப் படங்களையும் வழிபாட்டுக்குரியதாகக் கோடிக்கணக்கானோர் கருதுகிறார்கள். பிற மதத்தவர்களும்கூட தங்கள் தெய்வங்களின் உருவப் படங்களையும் சிலைகளையும் இதே விதமாகக் கருதி அவற்றின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]

Boris Subacic/AFP/Getty Images