Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஸ்கிரிப்ட் டு ஸ்கிரீன்

ஸ்கிரிப்ட் டு ஸ்கிரீன்

ஸ்கிரிப்ட் டு ஸ்கிரீன்

கடந்த சில பத்தாண்டுகளாக, பாக்ஸ் ஆபிஸிற்கு கோடி கோடியாக பணம் குவிக்கும் சூப்பர்ஹிட் படங்களை ஹாலிவுட் தயாரித்திருக்கிறது. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, எப்படியெனில் அமெரிக்க சினிமா படங்கள் பல, வெளிநாடுகளிலும் திரையிடப்படுகின்றன​—⁠அமெரிக்காவில் வெளிவந்து சில வாரங்களிலேயே, சில படங்களைப் பொறுத்தவரை, சில நாட்களிலேயே வெளிநாடுகளில் திரைக்கு வந்துவிடுகின்றன. சில படங்கள் உலகெங்கிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. “இந்த வியாபாரம் சர்வதேச அளவில் வளர்ந்து வருகிறது, அதுவும் மிக விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதனால், நாங்கள் சினிமா படங்கள் தயாரிக்கும்போது, உலகளவில் நல்ல லாபம் கிடைக்குமா என்று பார்க்கிறோம்” என கூறுகிறார் டான் ஃபெல்மன், இவர் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உள்ளூர் விநியோகிப்பு பிரெஸிடென்ட். முக்கியமாக இன்றைக்கு, ஹாலிவுட்டில் நடப்பது உலகளவில் பொழுதுபோக்குத் துறையைப் பாதிக்கிறது. a

ஆனால் வெளிப் பார்வைக்குத் தெரிகிறபடி, ஒரு படத்தைத் தயாரித்து லாபம் சம்பாதிப்பது சாமானிய விஷயமல்ல. பல படங்கள் புரொடக்‍ஷன் செலவையும் மார்க்கெட்டிங் செலவையும் ஈடுகட்டுவதற்கே 450 கோடிக்கும் அதிகமான ரூபாயை சம்பாதித்தாக வேண்டும். அதோடு, அந்தப் படம் வெற்றிப் படமா என்பதை தீர்மானிப்பது ரசிகர்களுடைய கையில்தான் இருக்கிறது, அவர்களுடைய ரசனையை ஒருபோதும் கணிக்க முடியாது. “ரசிகர்கள் எந்த நேரத்தில் எதை ரசிப்பார்கள், எது அவர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை உங்களால் ஒருபோதும் கணிக்க முடியாது” என கூறுகிறார் டேவிட் கூக், இமோரி யுனிவர்சிட்டி பிலிம் ஸ்டடீஸ் பேராசிரியர். ஆகவே, வெற்றிப் படம் தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ன செய்கிறார்கள்? இதற்குப் பதிலைப் பெற, முதலில் ஒரு படம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். b

முன்தயாரிப்பு​—⁠அஸ்திவாரம் போடுதல்

படத் தயாரிப்பில் முன்தயாரிப்பு வேலையே பெரும்பாலும் மிக நீளமாய் இழுத்துக்கொண்டே போகும் வேலை​—⁠ஆனால் இது மிக முக்கியமான வேலைகளில் ஒன்று. எந்தவொரு பெரிய புராஜெக்டிலும் இருப்பதைப் போல, தயாரிப்பே வெற்றிக்கு வழி. முன்தயாரிப்புக்குச் செலவழிக்கப்படும் பணம், படமெடுக்கும்போது ஆகும் செலவை பேரளவில் மிச்சப்படுத்தும் என்பதே நம்பிக்கை.

ஒரு கதையை வைத்துத்தான் படத் தயாரிப்பே தொடங்குகிறது, அது புனைகதையாகவோ நிஜக் கதையாகவோ இருக்கலாம். எழுத்தாளர் அந்தக் கதைக்கு ஸ்கிரிப்ட் வடிவம் கொடுக்கிறார். ஸ்கிரிப்ட்​—⁠இது திரைக்கதை என்றும் அழைக்கப்படுகிறது​—⁠திரைவடிவம் பெறுவதற்கு முன்பு பல தடவை மாற்றப்படலாம். திரைவடிவம் பெறும் கதையில் அந்தப் படத்திற்குரிய ‘டயலாக்’கும், ஆக்‍ஷன் சம்பந்தமாகச் சுருக்கமான விவரமும் இருக்கும். காமிரா கோணம், காட்சி மாற்றம் போன்ற டெக்னிக்கல் விவரங்களும் அதில் இருக்கும்.

என்றாலும், ஒரு திரைக்கதை ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கு விற்கப்படுகிறது. c எப்படிப்பட்ட திரைக்கதையில் ஒரு தயாளிப்பாளர் ஆர்வம் காட்டுவார்? உதாரணமாக, கோடை விடுமுறையில் படம் பார்க்கும் பருவ வயதினரையும் வாலிப வயதினரையும் மனதில் வைத்து படம் தயாரிக்கப்படுகிறது​—⁠இவர்களை “பாப்கார்ன் கூட்டம்” என ஒரு விமர்சகர் அழைக்கிறார். ஆகவே, இத்தகைய இளசுகளைக் கவரும் ஒரு கதையைப் படமாக்குவதில் தயாரிப்பாளர் ஆர்வம் காட்டலாம்.

இளசுகளையும் பெரிசுகளையும் கவரும் படங்களே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உதாரணமாக, காமிக் புத்தகத்தில் வரும் ஒரு சூப்பர் ஹீரோவைப் பற்றிய கதையைப் படமாக்கும்போது அது நிச்சயம் வாண்டுகளைக் கவரும், அதில் வரும் கேரக்டர் அவர்களுக்குப் பட்டென்று தெரியும். அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய ‘மம்மி’ ‘டாடி’யும் படம் பார்க்க வருவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் சினிமா தயாரிப்பாளர்கள் எப்படி பருவ வயதினரையும் வாலிப வயதினரையும் கவருகிறார்கள்? “மசாலா படமே” முக்கியமாக கவருகிறது என த வாஷிங்டன் போஸ்ட் மேகஸினில் லிஸா மன்டி எழுதுகிறார். ஆபாச வசனங்கள், அதிரடி சண்டைகள், அப்பட்டமான செக்ஸ் காட்சிகள்​—⁠இதுவே “லாபத்தைப் பெருக்குவதற்கு அனைவரையும் சுண்டியிழுக்க பயன்படுத்தப்படும் பார்முலா.”

ஒரு திரைக்கதை நல்ல விலைபோகும் என ஒரு தயாரிப்பாளர் உணர்ந்தால், அதை வாங்கி பிரபல இயக்குநரையும் நடிகர் நடிகையையும் வைத்து படமாக்குவதற்கு ஒப்பந்தம் செய்கிறார். ஒரு பிரபல இயக்குநரையும் நட்சத்திரத்தையும் வைத்து படம் எடுத்தால் அது ரிலீஸ் ஆகும்போது சக்கைபோடு போடும். என்றாலும், அந்த ஆரம்ப கட்டத்திலும், பிரபலமான நடிகர்களே அந்தப் படத்திற்குப் பணம் முதலீடு செய்பவர்களைக் கவருவார்கள்.

முன்தயாரிப்பில் உட்பட்டுள்ள மற்றொரு அம்சம்தான் ‘ஸ்டோரிபோர்டிங்,’ அதாவது காமிக் புத்தகத்தில் வருவதுபோல் படங்கள் வரைதல். எடுக்கப்போகும் சினிமா படத்தின் பல்வேறு காட்சிகளை, முக்கியமாக ஆக்‍ஷன் காட்சிகளை, சித்தரித்துக் காட்டுவதே ‘ஸ்டோரிபோர்டு.’ இது, காமிராமேனுக்கு புளூபிரின்ட் போல் கைகொடுக்கிறது. படமெடுப்பதற்கு ஆகும் அதிகப்படியான நேரத்தை இந்த ‘ஸ்டோரிபோர்டு’ மிச்சப்படுத்துகிறது. “‘செட்’டில் நின்றுகொண்டு காமிராவை எந்தக் கோணத்தில் வைத்து படமெடுப்பது என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஷூட்டிங் நாளை வீணாக்குவதைப் போல மோசமான காரியம் எதுவுமில்லை” என கூறுகிறார் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான பிராங்க் டரபான்ட்.

முன்தயாரிப்பு வேலையின்போதே இன்னும் பல முக்கியமான விஷயங்களை முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, எந்த லொகேஷனில் படமெடுப்பது? அதற்கு வெகுதூரம் பயணம் செய்ய வேண்டுமா? உட்புற செட்டிங் எப்படி அமைப்பது? ‘காஸ்டியூம்’ தேவைப்படுமா? ‘லைட்டிங்,’ ‘மேக்-அப்,’ ஹேர்ஸ்டைல் இதையெல்லாம் யார் பார்த்துக்கொள்வார்? சவுண்ட், சண்டைக் காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்கள் ஆகியவற்றைப் பற்றியென்ன? படமெடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு சிந்திக்க வேண்டிய அநேக அம்சங்களில் இவையெல்லாம் சில மட்டுமே. மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சினிமா படத்தில் எழுத்துப் போடும்போது வரும் பெயர்களைக் கவனியுங்கள், ஒரு படத்தில் நூற்றுக்கணக்கான ஆட்கள் சம்பந்தப்பட்டிருப்பதைக் கவனிப்பீர்கள்! “ஒரு படம் தயாரிக்க வேண்டுமென்றால் அநேகருடைய ஒத்துழைப்பு தேவை” என கூறுகிறார் பல்வேறு படங்களுக்குப் பணியாற்றிய டெக்னீஷியன் ஒருவர்.

ஷூட்டிங் எடுத்தல்

ஒரு படத்தை ஷூட்டிங் செய்வதென்றால் நிறைய நேரம் செலவாகும், சலிப்பூட்டுவதாக இருக்கும், அதோடு பயங்கர செலவும் பிடிக்கும். சொல்லப்போனால், ஒரு நிமிடம் வீணானால்கூட அது ஆயிரக்கணக்கான ரூபாயை விழுங்கிவிடும். சிலசமயங்களில், நடிகர்களையும் வேலையாட்களையும் அதிக தூரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, படக்கருவிகளையும் கொண்டு செல்ல வேண்டும். ஷூட்டிங் எங்கு நடந்தாலும்சரி, படமெடுக்கும் ஒவ்வொரு நாளும் பெருந்தொகை செலவாகிவிடும்.

லைட்டிங் அமைப்பவர்கள், ஹேர்-டிரெஸ்ஸர்கள், மேக்-அப் கலைஞர்கள் ஆகியோரே ‘செட்’டுக்கு முதலில் வருபவர்கள். ஷூட்டிங் நடைபெறும் ஒவ்வொரு நாளும், திரைப்பட நட்சத்திரங்கள் காமிரா முன் வந்து நிற்பதற்கு தயாராவதற்கே பல மணிநேரம் எடுக்கிறது. பிற்பாடுதான் படப்பிடிப்பே ஆரம்பமாகும், இது மணிக்கணக்காக நீடிக்கும்.

ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்படுவதை இயக்குநர் கூர்ந்து கவனிக்கிறார். சிலசமயத்தில், ஒரு சாதாரண காட்சியைப் படமெடுப்பதிலேயே ஒருநாள் ஓடிவிடலாம். பெரும்பாலான காட்சிகள் ஒரேவொரு காமிராவிலேயே படம் பிடிக்கப்படுகின்றன. அதனால்தான், ஒரு காட்சியைப் பல்வேறு கோணங்களில் திரும்பத் திரும்ப எடுக்க வேண்டியிருக்கிறது. அதோடு, படம் நன்றாக வரும்வரை அல்லது டெக்னிக்கல் பிரச்சினையை சரி செய்யும்வரை, ஒவ்வொரு ஷாட்டையும் மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். இப்படி ஒவ்வொரு தடவையும் படம் எடுப்பது ஒரு ‘டேக்’ என அழைக்கப்படுகிறது. பெரிய காட்சிகளுக்கு, 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ‘டேக்’ தேவைப்படலாம்! பிற்பாடு​—⁠பொதுவாக ஷூட்டிங் முடித்த ஒவ்வொரு நாள் கடைசியிலும்​—⁠இயக்குநர் அந்த எல்லா ‘டேக்’குகளையும் பார்த்து எவற்றையெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார். மொத்தத்தில், ஒரு படம் எடுத்து முடிக்க பல வாரங்களோ மாதங்களோகூட ஆகலாம்.

எடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்தல்

இந்தக் கடைசி கட்ட வேலையில், தொடர்ச்சியான இயங்கு திரைப்படம் போல் வருவதற்கு, எடுக்கப்பட்ட ஒவ்வொரு ‘டேக்’கையும் எடிட்டிங் செய்வது ஆரம்பமாகிறது. முதலில், அந்தப் படத்துடன் ஆடியே டிராக் சேர்க்கப்படுகிறது. பிற்பாடு, எடிட் செய்யப்படாத படச்சுருள்களை அந்த எடிட்டர் ‘அசெம்பிள்’ செய்து, அந்தப் படத்தின் ஆரம்ப பதிப்பை தயாரிக்கிறார்.

சவுண்ட் எஃபெக்ட்களும் விஷுவல் எஃபெக்ட்களும், இந்தக் கட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. ஒரு படத் தயாரிப்பில் மிகவும் சிக்கலான அம்சங்களில் ஒன்றுதான் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஒளிப்பதிவு; இது சிலசமயங்களில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியால் செய்து முடிக்கப்படுகிறது. இதன் விளைவே மெய்சிலிர்க்க வைக்கும் தத்ரூபமான காட்சிகள்!

ஒரு சினிமாவிற்காக அமைக்கப்படும் இசையும் இந்தக் கட்டத்தில்தான் இணைக்கப்படுகிறது. இன்றைய சினிமா படங்களில் இது மிகவும் முக்கியமான ஓர் அம்சமாக விளங்குகிறது. “முன்பைவிட இப்போது சினிமாவில் அதிகளவில் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை விரும்புகிறார்கள்​—⁠வெறுமனே இருபது நிமிட இசையையோ திடீர் திருப்பங்களில் வரும் இசையையோ அல்ல, ஆனால் ஒருமணி நேரத்திற்கும் அதிகமான இசையையே பெரும்பாலும் விரும்புகிறார்கள்” என பிலிம் ஸ்கோர் மன்த்லி இதழில் எழுதுகிறார் எட்வின் பிளாக்.

சிலசமயங்களில், எடிட் செய்யப்பட்ட ஒரு படத்தைக் குறிப்பிட்ட ஆட்களுக்குப் போட்டுக் காட்டுகிறார்கள்​—⁠ஒருவேளை இயக்குநர்களுடைய நண்பர்களுக்கு அல்லது இந்தப் படத் தயாரிப்பில் ஈடுபடாத மற்றவர்களுக்குப் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களுடைய கருத்துகளை வைத்து, இயக்குநர் சில காட்சிகளை மீண்டும் படமாக்கலாம் அல்லது நீக்கிவிடலாம். சில சந்தர்ப்பத்தில், ஒரு படத்தின் கிளைமாக்ஸே மாற்றப்படுகிறது, ஏனென்றால் அந்த கிளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர்கள் சொல்லலாம்.

கடைசியாக, தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. அப்போதுதான் இது ‘பிளாக்பஸ்டரா’ அல்லது ‘பிளாப்’பா​—⁠அல்லது இரண்டுங்கெட்டதா என்பதே தெரியவரும். கோடிகள் கொட்டுகிறதா லட்சங்கள் குவிகிறதா என்பதைவிட அநேக பாதிப்புகள் இதில் உட்பட்டுள்ளன. தொடர்ந்து படம் தோல்வியடைந்தால், ஒரு நடிகருடைய படவாய்ப்புகள் பாதிக்கப்படலாம், ஒரு இயக்குநருடைய புகழ் கெட்டுவிடலாம். “நான் சினிமா துறையிலிருந்த சமயத்தில் சில படங்களுக்குப்பின் அநேகர் காணாமல் போய்விட்டார்கள்” என சொல்கிறார் இயக்குநர் ஜான் பூர்மன். “உங்களை வைத்து படம் எடுத்தவர்களுக்குப் பணம் கொட்டவில்லையென்றால் நீங்கள் வெளியில் கொட்டப்படுவீர்கள் என்பதே சினிமா தயாரிப்பில் கசப்பான உண்மை.”

ஒரு தியேட்டரில் ஸ்டில்ஸ் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நிற்கும்போது, சினிமா படத் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி பொதுமக்கள் நினைப்பதில்லை. அவர்களுடைய கவனமே வேறு. ‘இந்தப் படம் நன்றாக இருக்குமா? கொடுக்கும் காசுக்குத் தேறுமா? மோசமான படமாக இருக்குமா? என்னுடைய பிள்ளைகள் பார்க்கலாமா?’ எந்த சினிமா பார்க்கலாம் என தீர்மானிக்கும்போது இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எப்படி பதிலளிக்கலாம்? (g05 5/8)

[அடிக்குறிப்புகள்]

a “இப்பொழுது உள்நாட்டில் கிடைக்கும் லாபத்தைவிட வெளிநாட்டில் கிடைக்கும் லாபம் பெரும்பாலும் அதிகமாக இருந்தாலும், அமெரிக்காவில் ஒரு படம் எப்படி ஓடுகிறது என்பதைப் பொறுத்தே வெளிநாடுகளில் எந்தளவுக்கு ஓடும் என்பது தீர்மானிக்கப்படுகிறது” என கூறுகிறார் ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் பேராசிரியை அனிட்டா எல்பெர்ஸே.

b சில விஷயங்கள் படத்திற்குப் படம் மாறுபடலாம், இங்கு கொடுக்கப்படும் தகவல்கள் எல்லாம் பொதுவாக படம் எடுக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு வழியே.

c சிலசமயங்களில், திரைக்கதைக்குப் பதிலாக ஒரு கதையைப் பற்றி தயாரிப்பாளரிடம் தெரிவிக்கப்படும். அந்தக் கதையில் அவருக்கு விருப்பம் இருந்தால், அதற்கான உரிமையை வாங்கி அதை ஒரு திரைக்கதையாக மாற்றுவார்.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“ரசிகர்கள் எந்த நேரத்தில் எதை ரசிப்பார்கள், எது அவர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை உங்களால் ஒருபோதும் கணிக்க முடியாது.”​—⁠டேவிட் கூக், பிலிம் ஸ்டடீஸ் பேராசிரியர்

[பக்கம் 6, 7-ன் பெட்டி/படங்கள்]

சூப்பர்ஹிட் ஆக்குவதற்கு விளம்பரம்

சினிமா படம் எடுத்து முடித்தாகிவிட்டது. கோடிக்கணக்கானோர் கண்டுகளிக்க இப்போது அது தயாராக இருக்கிறது. அந்தப் படம் வெற்றி பெறுமா? படம் வெற்றி பெறுவதற்கு படத் தயாரிப்பாளர்கள் கையாளும் சில வழிகளைக் கவனியுங்கள்.

பரபரப்பான பேச்சு: வரப்போகும் ஒரு சினிமா படத்தின் மீது மக்களுடைய ஆவலைத் தூண்டுவதற்கு அந்தப் படத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதே மிகத் திறம்பட்ட முறைகளில் ஒன்றாகும். சில சமயங்களில், ஒரு சினிமா படம் வெளிவருவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பான பேச்சு அடிபட ஆரம்பிக்கிறது. சூப்பர்ஹிட் பட வரிசையில் அடுத்து வரும் சினிமா என ஒருவேளை அறிவிப்பு செய்யப்படுகிறது. இதில் அதே நடிகர்கள் நடிக்கிறார்களா? முதல் படம் மாதிரி நன்றாக (அல்லது மோசமாக) இருக்குமா? என மக்கள் யோசிக்கக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில், ஒரு படத்திலுள்ள சர்ச்சைக்குரிய விஷயத்தை சொல்வதன் மூலம் பரபரப்பு ஏற்படுத்தப்படுகிறது​—⁠ஒருவேளை இந்தப் படத்தில் அப்பட்டமான செக்ஸ் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை என வர்ணிக்கலாம். அந்தக் காட்சிகள் உண்மையிலேயே மோசமானவையா? இந்தப் படம் எல்லைமீறி போய்விட்டதா? எதிர் தரப்பினருடைய கருத்துகள் மக்கள் மத்தியில் சர்ச்சை செய்யப்படுகையில், தயாரிப்பாளர்களுக்கு விளம்பரம் இலவசமாக கிடைக்கிறது! சில சமயங்களில், எல்லாரும் சேர்ந்து சர்ச்சையை கிளப்பிவிடும்போது முதல் காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மீடியா: போஸ்டர்கள், செய்தித்தாள் விளம்பரங்கள், டிவியில் அல்லது தியேட்டர்களில் டிரெய்லர்கள், புதிய படத்தைப் பற்றி நடிகர்கள் தரும் பேட்டிகள் ஆகிய பொதுவான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுது, சினிமா விளம்பரத்திற்கு இன்டர்நெட்டும் முக்கிய சாதனமாக பயன்படுத்தப்படுகிறது.

மார்கெட்டிங்: அட்டைப் படங்கள், ஸ்டிக்கர்கள் போன்றவை ஒரு சினிமா பட வெளியீட்டை கவர்ச்சிகரமாக ஆக்குகின்றன. உதாரணமாக, ஒரு ‘காமிக்’ புத்தகத்தில் வரும் ஹீரோவை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கப்பட்டிருந்தால், அந்த ஹீரோவின் படம் ‘லஞ்ச்’ டப்பாக்கள், கப்புகள், ஆபரணங்கள், உடைகள், கீ செயின்கள், கடிகாரங்கள், விளக்குகள், போர்டு கேம் இவையெல்லாவற்றிலும் இருக்கும். “ஒரு படம் வெளி வருவதற்கு முன்பே அந்தப் படம் சம்பந்தப்பட்ட பொருட்கள் 40 சதவீதம் மார்கெட்டில் வந்து விடுகின்றன” என அமெரிக்கன் பார் அசோஸியேஷன் வெளியிடும் பொழுதுபோக்கு இதழில் எழுதுகிறார் ஜோ சிஸ்டோ.

ஹோம் வீடியோ: பாக்ஸ் ஆபிஸில் படுத்துவிட்ட ஒரு படத்தை ஹோம் வீடியோவிற்கு விற்பதன் மூலம் அதன் இழப்பை ஈடுகட்ட முடியும். “ஹோம் வீடியோவின் மூலம் 40 முதல் 50 சதவீத வருமானம் கிடைப்பதாக” சினிமா படங்களின் மூலம் கிடைத்த பணத்தைப் பற்றிய பதிவுகளை வைக்கும் புரூஸ் நாஷ் கூறுகிறார்.

ரேட்டிங்ஸ்: நல்ல லாபம் சம்பாதிப்பதற்காக சினிமா படத் தயாரிப்பாளர்கள் இந்த ரேட்டிங்ஸை (தரச் சான்றிதழ்) பயன்படுத்த கற்றிருக்கிறார்கள். உதாரணமாக, A படம் என்ற பெயர் வாங்குவதற்காக வேண்டுமென்றே ஒரு படத்தில் காட்சிகளையோ வசனங்களையோ புகுத்தலாம், இப்படி செய்வதன் மூலம் அந்தப் படத்தை ‘அடல்ட் மூவி’ போல் தோன்றச் செய்கிறார்கள். மறுபட்சத்தில், A படம் என்பதை தவிர்த்து அதை டீனேஜர்கள் மத்தியில் விற்க சில காட்சிகளை நீக்கிவிடுகிறார்கள். இளைஞருக்கான படம் என்று தரம் பிரிப்பது, “ஒரு வியாபார தந்திரமாகிவிட்டது: டீனேஜர்களிடமும், டீனேஜராக துடிக்கும் சிறு பிள்ளைகளிடமும் ஒரு செய்தியை சொல்ல ஸ்டூடியோக்கள் அவற்றை உபயோகிக்கின்றன; அதாவது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சங்கள் அப்படத்தில் இருப்பதாக சொல்ல அவற்றை உபயோகிக்கின்றன” என்று வாஷிங்டன் போஸ்ட் மேகஸினில் லிஸா மன்டி எழுதுகிறார். இந்த ரேட்டிங்ஸ், “பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே பிரச்சினையை உண்டாக்குகிறது; பெற்றோர்களை எச்சரிக்கிறது, அதேசமயத்தில் இளம் வட்டங்களைக் கவர்ந்திழுக்கிறது” என மன்டி எழுதுகிறார்.

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

சினிமாக்கள் எப்படி எடுக்கப்படுகின்றன

ஸ்கிரிப்ட்

ஸ்டோரிபோர்டு

காஸ்டியூம்

மேக்-அப்

வெளிப்புற படப்பிடிப்பு

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் படம்பிடித்தல்

இசைப் பதிவு

சவுண்ட் மிக்ஸிங்

கம்ப்யூட்டர் உருவாக்கும் அசைவுகள்

எடிட்டிங்