Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயர்வடைய ஆசைப்படுவது தவறா?

உயர்வடைய ஆசைப்படுவது தவறா?

பைபிளின் கருத்து

உயர்வடைய ஆசைப்படுவது தவறா?

“பணம், புகழ், பதவி​—⁠இவற்றைப் பெறுவதில் தவறென்ன?” மத அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது; “நன்னெறி சம்பந்தப்பட்டக் குழப்பங்கள்” என்ற தலைப்பின் கீழ் அது கேட்கப்பட்டது. இந்த அறிக்கை, ஆபிரகாமிடம் கடவுள் சொன்ன பின்வரும் வார்த்தைகளைக் குறிப்பிட்டது: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி உன்னை ஆசிர்வதித்து, உன் பேரை மேன்மைப்படுத்துவேன்.”​—⁠ஆதியாகமம் 12:2.

“மற்றவர்களுக்குத் தீங்கிழைத்து உயர்வடையக் கூடாது” என்று அந்த அறிக்கை சொன்னது. ஆனாலும் புகழ்பெற்ற முதல் நூற்றாண்டு யூத மதகுரு ஒருவர் சொன்னதையும் அது மேற்கோள் காட்டியது. “என்னுடைய குறிக்கோள்களையும் எண்ணங்களையும் நான் பிரபலப்படுத்தாமல் வேறு யார் பிரபலப்படுத்துவார்கள்” என்று அந்த மதகுரு கேட்டதாகவும், “வாழ்க்கையில் வெற்றிபெற நாம் முன்முயற்சி எடுக்கவில்லையெனில், வேறு யாருமே நமக்காக அதைச் செய்ய மாட்டார்கள்” என்று முடிவாகக் கூறியதாகவும் அது குறிப்பிட்டது. கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புவோருக்கு, உயர்வடைய வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறதா? வாழ்க்கையில் வெற்றிபெறுவது என்பதன் அர்த்தம் என்ன? உயர்வடைய ஆசைப்படுவது தவறா? இதைக் குறித்ததில் பைபிளின் கருத்து என்ன?

ஆபிரகாம் உயர்வடைய ஆசைப்பட்டாரா?

ஆபிரகாம், விசுவாசத்திற்குத் தலைசிறந்த உதாரணமென்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:8, 17) அவரைப் பெரிய ஜாதியாக்குவதாகவும் அவருடைய பெயரை மேன்மைப்படுத்துவதாகவும் சொன்னபோது, கடவுள் அவரை உயர்வடைவதற்குத் தூண்டவில்லை. மாறாக அவர் மூலமாக முழு மனிதவர்க்கத்தையும் ஆசீர்வதிப்பதற்கான தம்முடைய நோக்கத்தையே வெளிப்படுத்தினார். அதாவது, உயர்வடைய வேண்டுமென்ற மனிதனின் அற்ப ஆசையைவிட அதிமுக்கியத்துவம் வாய்ந்த தம்முடைய நோக்கத்தையே வெளிப்படுத்தினார்.​—⁠கலாத்தியர் 3:14.

தேவ பக்தியின் காரணமாக ஆபிரகாம், ஊர் பட்டணத்தில் அனுபவித்த செல்வச் செழிப்பான, செளகரியமான வாழ்க்கையை விட்டுக்கொடுத்தார். (ஆதியாகமம் 11:31) பிரச்சினையின்றி சமாதானமாய் இருப்பதற்காக, வளமிக்க நிலத்தைத் தன் உறவினனான லோத்துவிற்கே கொடுத்தார்; இவ்வாறு, அதிகாரத்தையும் ஸ்தானத்தையும் விட்டுக்கொடுக்க மனமுள்ளவராய் இருந்தார். (ஆதியாகமம் 13:8, 9) ஆபிரகாம் உயர்வடைய ஆசைப்பட்டதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. மாறாக விசுவாசம், கீழ்ப்படிதல், மனத்தாழ்மை போன்ற குணங்களையே அவர் வெளிக்காட்டினார்; இதனால்தான் கடவுள் அவரை உண்மையான ‘சிநேகிதனாக’ கருதினார்.​—⁠ஏசாயா 41:8.

பதவி, புகழ், அதிகாரம்​—⁠வித்தியாசமான கண்ணோட்டம்

உயர்வடைய ஆசைப்படுவது, “பதவி, புகழ், அதிகாரம் போன்றவற்றைப் பெற பேராசைப்படுவதைக்” குறிக்கிறது. பூர்வ காலங்களில் வாழ்ந்த சாலொமோன் ராஜாவுக்கு பதவி, புகழ், அதிகாரம், ஆஸ்தி இவையெல்லாமே இருந்தன. (பிரசங்கி 2:3-9) ஆனால் அவற்றையெல்லாம் பெற வேண்டும் என்ற பேராசை அவருக்கு இருக்கவில்லை என்பது கவனத்திற்குரிய விஷயம். அவர், ராஜாவாகப் பதவியேற்றபோது தனக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் கேட்கும்படி கடவுள் சொன்னார். அவரோ, ஞானமுள்ள இருதயத்தையும் கடவுளுடைய ஜனங்களை ஆட்சி செய்வதற்கான விவேகத்தையும் தரும்படி தாழ்மையுடன் கேட்டார். (1 இராஜாக்கள் 3:5-9) தன்னிடம் குவிந்து கிடந்த எல்லா ஆஸ்திகளைப் பற்றியும் தான் பெற்றிருந்த எல்லா அதிகாரத்தைப் பற்றியும் ஒரு சமயம் சொன்னபோது, “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது” என்றார்.​—⁠பிரசங்கி 2:11.

மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதைப் பற்றி சாலொமோன் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? ஒரு விதத்தில் ஆம் என்றே சொல்லலாம். தன்னுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பின், “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே” என்று அவர் முடிவாகச் சொன்னார். (பிரசங்கி 12:13) ஆகவே, மனிதர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்து முடிப்பதன் மூலம்தான் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களே தவிர பதவி, புகழ், அதிகாரம் போன்றவற்றைப் பெறுவதன் மூலம் அல்ல.

மனத்தாழ்மை உயர்வுக்கு வழிநடத்தும்

நம்மீதே நாம் ஓரளவு அக்கறை காட்டுவதில் தவறேதும் இல்லை என்பது உண்மைதான். நம்மில் அன்புகூருவது போல மற்றவர்களிடத்திலும் அன்புகூர வேண்டும் என்று பைபிளே கட்டளையிடுகிறது. (மத்தேயு 22:39) அதோடு, செளகரியமாக, சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவது இயல்புதான். ஆனால் கடின உழைப்பு, மனத்தாழ்மை, அடக்கம் போன்ற பண்புகளை வளர்க்கும்படியும் பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 15:33; பிரசங்கி 3:13; மீகா 6:8; NW) நேர்மையாகவும் நம்பகமாகவும் நடந்துகொண்டு, கடினமாக உழைக்கும் ஆட்கள் எப்போதும் பாராட்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது, மற்றவர்களின் மதிப்பும் கிடைக்கிறது. அவர்களைப் போல் வாழ்வதே சிறந்தது. பிறரை ஏமாற்றி நன்மை அடைவதும், பதவிக்காக மற்றவர்களுடன் போட்டிப் போடுவதும் சரியல்ல.

கல்யாண வீட்டில் முதன்மையான இடத்தைத் தேடி உட்காருவதைக் குறித்து தமக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தோரை இயேசு எச்சரித்தார். கல்யாண வீட்டில் தாழ்ந்த இடத்தில் போய் உட்காரும்படியும், விருந்தளிப்பவர் வந்து முதன்மையான இடத்தில் உட்கார சொல்லும்வரை காத்திருக்கும்படியும் அறிவுறுத்தினார். அதில் அடங்கியுள்ள நியமத்தை இவ்வாறு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டினார்: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”​—⁠லூக்கா 14:7-11.

உயர்வடைய ஆசைப்படுவதை உண்மை கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள்

மனிதன் உயர்வடைய வேண்டுமென துடிப்பது அபூரணத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:5, 6) ஒரு காலத்தில் அப்போஸ்தலன் யோவான்கூட, உயர்வடைய வேண்டுமென்று ஆசைப்பட்டார். தன் சகோதரனுடன் சேர்ந்துகொண்டு, ராஜ்யத்தில் முதன்மையான இடம் தரும்படி இயேசுவிடம் துணிந்து கேட்டார். பதவிக்காக அவர் அந்தளவு ஆசைப்பட்டார். (மாற்கு 10:37) ஆனால் பிற்பாடு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். சொல்லப்போனால் தன்னுடைய மூன்றாம் கடிதத்தில், ‘முதன்மையாக இருக்க விரும்பிய’ தியோத்திரேப்பை வன்மையாகக் கண்டித்து எழுதினார். (3 யோவான் 9, 10) இன்று, கிறிஸ்தவர்கள் இயேசுவின் அறிவுரையை மனதில் பதித்து தாழ்மையுடன் இருக்கிறார்கள். அதேசமயம், வயதான அப்போஸ்தலன் யோவானின் மாதிரியைப் பின்பற்றி, உயர்வடைய வேண்டும் என்ற எண்ணத்தை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

ஒரு நபருடைய திறமைகள், ஆற்றல்கள், நற்செயல்கள், கடின உழைப்பு இவற்றையெல்லாம் மற்றவர்கள் கவனிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சில சமயம் அவருக்கு பாராட்டு கிடைக்கலாம், சில சமயம் கிடைக்காமலும் போகலாம். (நீதிமொழிகள் 22:29; பிரசங்கி 10:7) சில நேரங்களில் குறைவான தகுதியுள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம், அதிக தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். அபூரண மனிதர்கள் வாழும் இவ்வுலகில், பதவியையும் அந்தஸ்தையும் அடையும் ஒருவர் அதிகத் தகுதி வாய்ந்தவராக இருப்பார் என்று அடித்துச் சொல்ல முடியாது.

உண்மை கிறிஸ்தவர்களுக்கு, உயர்வடைய வேண்டுமா வேண்டாமா என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் தூண்டுதலால் உயர்வடைவதற்கான ஆசையை வெறுத்து ஒதுக்குகிறார்கள். எல்லாச் சமயத்திலும், தேவனுடைய மகிமைக்காகத் தங்களால் இயன்ற மிகச் சிறந்ததைச் செய்துவிட்டு, மற்றதை கடவுள் கையில் விட்டுவிடுகிறார்கள். (1 கொரிந்தியர் 10:31) கிறிஸ்தவர்கள் கடவுளுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முயலுகிறார்கள். (g05 6/8)

[பக்கம் 12, 13-ன் படம்]

உயர்வடையும்படி ஆபிரகாமை கடவுள் தூண்டிவிட்டாரா?