Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகமா?

போலந்து, எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சி குழு ஒன்று, எகிப்தில், பூர்வ அலெக்சாண்டிரியாவின் பல்கலைக்கழகம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. மொத்தம் 5,000 மாணவர்கள் உட்காரும் வசதி படைத்ததும், ஒரே அளவுள்ளதுமான 13 லெக்சர் ஹால்களை அந்தக் குழு கண்டுபிடித்திருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் சொல்கிறது. அந்த லெக்சர் ஹால்களில், “மூன்று புறமும் இருக்கைகள் படிப்படியாக, வரிசை வரிசையாகச் சுவற்றை ஒட்டிக் கட்டப்பட்டிருந்தன; சில சமயங்களில், அவை ஒரு முனையில் இணைந்திருப்பதால் ‘U’ போன்ற தோற்றமளித்தன” என்று அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. நடுவில் இருந்த உயரமான இருக்கை லெக்சரருடையதாக இருக்கலாம். “மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலுமே உள்ள கிரேக்க-ரோம பிராந்தியங்களில், இத்தகைய லெக்சர் ஹால்களின் தொகுதிகள் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன” என சொல்கிறார் ஸெஹி ஹாவெஸ்; இவர் எகிப்தின் சுப்ரீம் கௌன்சில் ஆஃப் ஆன்டிக்குவிட்டிஸ் என்ற அமைப்பின் தலைவர். இது, “உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக இருக்கலாம்” என அவர் விவரிக்கிறார். (g05 6/8)

பூண்டு ஐஸ்கிரீமா?

பூண்டு மருத்துவக் குணங்களைப் பெற்றிருப்பதால் அது பல காலமாகப் புகழப்பட்டு வருகிறது. வட பிலிப்பைன்ஸிலுள்ள மார்யானோ மார்கோஸ் மாகாண பல்கலைக்கழகம், “ஆரோக்கியமான” காரணங்களுக்காக பூண்டு ஐஸ்கிரீமை தயாரித்திருக்கிறது என பிலிப்பைன் ஸ்டார் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சில வியாதிகளின் வேதனையைப் பூண்டால் தணிக்க முடியுமென கருதப்படுகிறது; அத்தகைய வியாதிகளால் அவதிப்படுகிறவர்களுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்குமென நம்பப்படுகிறது. ஜலதோஷம், காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், சுவாசக் கோளாறுகள், மூட்டுவாதம், பாம்புக்கடி, பல்வலி, காசநோய், கக்குவான் இருமல், காயங்கள் ஆகியவற்றிற்கும், ஏன் வழுக்கைக்கும்கூட பூண்டு பயனுள்ள மருந்தாகக் கருதப்படுகிறது. சரி, இப்போது பூண்டு ஐஸ்கிரீம் சாப்பிட யாராவது ரெடியா? (g05 6/8)

அதிக கார்கள்​—⁠அதிக சவால்கள்

“சைக்கிள்களின் சாம்ராஜ்யமாக விளங்கிய சீன நாடு இப்போது மோட்டார் வாகனங்கள் நிறைந்த நாடாக முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோடுகிறது” என குறிப்பிடுகிறது சைனா டெய்லி செய்தித்தாள். தற்போது உலகளவில் 1,000 பேருக்கு 120 பேரிடம் வாகனங்கள் இருக்கையில் சீனாவில் 1,000 பேருக்கு 20 பேரிடம் வாகனங்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அநேக வாகனங்கள் இருந்தால் அநேகருடைய வாழ்க்கைத் தரம் உயருமென சென் சிங்டை என்பவர் நம்புகிறார்; இவர் டெவலெப்மென்ட் ரிசார்ச் சென்டர் ஆஃப் த ஸ்டேட் கவுன்சில் என்ற அமைப்பின் துணை இயக்குநர் ஆவார். ஆனால் சவால்களும் இருப்பதாக இவர் சொல்கிறார்: “வாகனங்கள் கக்கும் புகையைத் திறம்பட கட்டுப்படுத்தாவிட்டால், நகரங்களில் உள்ள காற்று மாசுபடுவதற்கு வாகனங்கள் காரணமாகிவிடும், நிலக்கரி அல்ல.” சீன நகரங்கள் சிலவற்றில் வாகனங்கள் பெருமளவு கார்பன் மோனாக்சைடையும் நைட்ரஜன் ஆக்சைடையும் ஏற்கெனவே கக்கி வருகின்றன. பெய்ஜிங்கில் 2008-⁠ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகக் காற்று மாசுபடுவதைக் குறைக்க வேண்டும் என்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (g05 5/22)

அபூர்வ தொல்லியல் கண்டுபிடிப்பு

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சவக்கடல் அருகே உள்ள குகைகளில் ஆய்வு நடத்தி வரும்போது ஆபரணங்களையும் வேறு சில பொருள்களையும் கண்டுபிடித்தார்கள்; இவை 2,500 வருடங்கள் பழமையானவையாக, அதாவது பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் தாயகம் திரும்பிய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டுமென நம்புகிறார்கள். ஜெருசலேமிலுள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தையும், ராமாட் கானிலுள்ள பார் இலான் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் உலோகங்களைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி இந்தப் பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தப் பொக்கிஷங்களில் ஒரு சிறிய வெண்கலக் கண்ணாடியும், வெள்ளி டாலரும், தங்க ஆரமும், குறைந்த விலையுள்ள மணிகற்களும், பாபிலோனைச் சேர்ந்த மாணிக்கக்கல் பதக்கமும், பாபிலோனின் ஆசாரியன் சந்திரனை நமஸ்கரிப்பதைச் சித்தரிக்கும் ஒரு முத்திரையும் இருந்ததாக அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை செய்கிறது. “இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் அபூர்வமானது. இவை மதிப்பிலும் சரி, அந்தக் குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த பழமையிலும் சரி வெகு அபூர்வமானவை” என்றார் ஸ்விகா சுக்; இவர் இஸ்ரேல் நேச்சர் அண்டு நேஷனல் பார்க்ஸ் ப்ரொட்டக்‍ஷன் அத்தாரிட்டி என்ற அமைப்பின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் தலைவராக இருக்கிறார். (g05 5/22)

பிள்ளைகளுக்கும் ஸ்ட்ரோக் வரலாம்

“கனடா நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு பிள்ளையாவது ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுகிறது” என வான்கூவர் சன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஸ்ட்ரோக் தாக்கும் பிள்ளைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் “பெரிய ஸ்ட்ரோக் வரும், நரம்பு மண்டலமும் பெருமளவு சேதமடையும்” என கேப்ரீயெல் டாவெபர் சொல்கிறார்; இவர் கனேடியன் பீடியாட்ரிக் ஸ்கீமிக் ஸ்ட்ரோக் ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்பின் இயக்குநரும் நரம்பியல் நிபுணருமாவார். “ஸ்ட்ரோக் வந்த மூன்று மணிநேரத்துக்குள் இரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. ஆனால் பிள்ளைப் பருவத்தில் ஏற்படும் ஸ்ட்ரோக், “திடீர் வாதம் என்றோ ஒற்றைத் தலைவலி என்றோ தவறாக முடிவு செய்யப்படுகிறது.” ஸ்ட்ரோக்குக்கான அறிகுறிகளில் “முக்கியமாக, உடலின் ஒரு பக்கம் மரத்துப்போவதும் அல்லது தளர்ந்துபோவதும், குழப்பம் ஏற்படுவதும், வாய் குளறுவதும், பார்வை மங்குவதும், தலைசுற்றுவதும், திடீரென மண்டையைப் பிளக்கும் தலைவலி வருவதும் அடங்கும்” என அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. இளவயதில் இருதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் அளிக்கப்படும் குறிப்பிட்ட சிகிச்சைகளும் ஸ்ட்ரோக் வரக் காரணமாயிருக்கலாம்; அதோடு “சிறுவயதில் பருமனாக இருப்பதும் கொழுப்புச் சத்துமிக்க உணவை உட்கொள்வதும்” அதற்குக் காரணமாகலாம் என சில நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள். (g05 5/22)

பள்ளிகளில் டிஜிட்டல் ஸ்கிரீன்

மெக்சிகோவில் 21,000-⁠க்கும் அதிகமான ஆரம்பப் பள்ளி வகுப்பறைகளில், காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பிளாக் போர்டு, சாக்பீஸ், டஸ்டர் ஆகியவற்றின் இடத்தை தற்போது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரானிக் போர்ட் பிடித்துள்ளது என மெக்சிகோ நகரில் வெளியாகும் எல் யூனிவெர்சால் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. கிட்டத்தட்ட ஆறடி அகலமும் மூன்றடி உயரமுமுள்ள இந்த போர்ட்டுகள் தற்போது ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. சரித்திரம், அறிவியல், கணிதம், புவியியல், இன்னும் பிற பாடங்களையும் கற்பிப்பதற்கு டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட ஏழு புத்தகங்கள் உள்ளன. இந்த போர்ட்டில் வீடியோக்களையும் காட்டலாம். இதனால் ஓர் ஆசிரியையின் வகுப்பிலிருந்த மாணவர்கள், வீடியோவிலேயே, “டீகால், பாலெங்கெ ஆகிய இடங்களிலுள்ள பிரமிட்டுகளைப் பார்த்தார்கள், மாயா இனத்தவரின் பாரம்பரியங்களைப் பார்த்தார்கள், [அவர்களுடைய] இசைகளைக் கேட்டார்கள்.” பயன்கள்? “மாணவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், நன்றாகப் பதிலளிக்கிறார்கள்” என்கிறார் அந்த ஆசிரியை. (g05 6/8)

வருடத்திற்குப் பத்து லட்சம் தற்கொலைகள்

உலகெங்கும் வன்முறைக்குப் பலியாகிறவர்களில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பேர் தற்கொலையால் இறக்கிறார்கள். வருடா வருடம் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது, 2001-⁠ல் கொலையினாலும் போரினாலும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும், 10 முதல் 20 பேராவது தற்கொலை செய்ய முயன்று தோல்வியடைகிறார்கள். இந்த விவரத்தை, சுவிட்சர்லாந்தில், ஜெனிவாவிலுள்ள உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டது. ஒவ்வொருவர் இறக்கும்போதும், “எண்ணற்ற குடும்பங்களும், நண்பர்களும் உணர்ச்சி ரீதியிலும் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சிதைந்து போகிறார்கள்” என WHO சுட்டிக்காட்டுகிறது. “அதிக சுயமரியாதை,” நண்பர்களும், குடும்பத்தாரும் தரும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவு, நிலையான பந்தபாசம், மதத்தில், அதாவது ஆன்மீகத்தில் பற்று போன்றவை தற்கொலையிலிருந்து காக்கும் அம்சங்களில் சில என்று அந்த அறிக்கை கூறுகிறது. (g05 6/8)

கணிக்க முடியாத இராட்சத அலைகள்

ஒவ்வொரு வாரமும் உலகில் எங்கோ ஓரிடத்தில் சராசரியாக இரண்டு பெரிய கப்பல்கள் மூழ்கிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. 650 அடிக்கும் அதிக நீளமுள்ள பிரமாண்டமான எண்ணெய் கப்பல்களும் மாபெரும் சரக்குக் கப்பல்களும்கூட கடலில் மூழ்கிவிடுகின்றன. பெரும்பாலான இந்தப் பேரழிவுகளுக்கு இராட்சத அலைகளே காரணம் என்பதாக நம்பப்படுகிறது. பெரிய கப்பல்களையே மூழ்கடிக்கும் வலிமை படைத்த வானளாவிய அலைகளைப் பற்றிய அறிக்கைகள், கப்பலோட்டிகள் மிகைப்படுத்திக் கூறும் கட்டுக்கதைகள் என பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய யூனியனின் ஆய்வு திட்டம் ஒன்று அத்தகைய கதைகள் நம்பகமானவை என்கிறது. மாபெரும் கடல் அலைகளைக் கண்டுபிடிப்பதற்காகப் பெருங்கடல்களில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் ரடார் படங்கள் ஆராயப்பட்டன. சூயட்டாய்ச்ச ட்ஸிடுங் செய்தித்தாளின்படி, அந்தத் திட்டத்தின் தலைவரான உல்ஃப்கேங் ரோசன்டால் இவ்வாறு சொல்கிறார்: “யாருமே நினைத்துப் பார்த்ததைவிட இந்த இராட்சத அலைகள் சகஜமாகக் காணப்படுகின்றன என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம்.” மூன்று வார காலத்தில் அவருடைய குழுவினர் சுமார் பத்து அலைகளையாவது கண்டுபிடித்தார்கள். அத்தகைய அலைகள் கிட்டத்தட்ட செங்குத்தாக நின்று, 130 அடி உயரத்திற்கு மேலெழுந்து கப்பல்மீது விழும்போது அதை மோசமாகச் சேதப்படுத்தலாம் அல்லது அதை மூழ்கடிக்கவே செய்து விடலாம். சில கப்பல்கள்தான் அந்த அலைகளைத் தாக்குப்பிடிக்கின்றன. “அந்த அலைகளை முன்னறிவிக்க முடியுமாவென நாம் இப்போது ஆராய வேண்டும்” என்கிறார் ரோசன்டால். (g05 6/8)