Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னை காதலிக்கும் பெண்ணை நான் எப்படி நடத்த வேண்டும்?

என்னை காதலிக்கும் பெண்ணை நான் எப்படி நடத்த வேண்டும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

என்னை காதலிக்கும் பெண்ணை நான் எப்படி நடத்த வேண்டும்?

“சூசன்தான் முதலில் வந்து என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். எனக்கு அது தவறாகத் தோன்றவில்லை. எல்லாம் எனக்கு ரொம்ப நல்லதாகவே முடிந்தது.”​—ஜேம்ஸ். a

“தன்னை உண்மையாகக் காதலிக்கும் பெண்ணிடம் ஓர் ஆண் போலியாகப் பழகினால் விபரீதங்கள் ஏற்படலாம்.”​ரோபெர்டோ.

ஓர் இளம் பெண் ஏதோ ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புவதாகச் சொல்கிறாள் என வைத்துக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் இருக்கையில் பலமுறை அவளைப் பார்த்திருக்கிறீர்கள். அவள் கலகலப்பாகப் பேசிப் பழகுவதும் அவளோடு சேர்ந்து காரியங்களை செய்வதும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒருநாள் அவள் உங்களைக் காதலிப்பதாகச் சொல்கிறாள், உங்கள் மனதிலிருப்பதைச் சொல்லும்படியும் கேட்கிறாள், உங்களுக்கு அப்படியே ஷாக்காகி விடுகிறது.

ஆண்கள்தான் முதலில் தங்கள் காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று நம்புகிறவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், அவள் அப்படிக் கேட்டதை உங்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். ஆண்களே பொதுவாக முதற்படி எடுக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவள் முதற்படி எடுத்ததால் பைபிள் நியமங்களை அவள் மீறவில்லை என்பதை நினைவில் வையுங்கள். b அதை நினைவில் வைப்பது, சரியான விதத்தில் அவளுக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவும்.

அவள் சொன்னதைக் குறித்து யோசித்துப் பார்த்த பிறகு, காதலிக்க உங்களுக்கு வயசு போதாது என்றோ இப்போதைக்கு அவள் மேல் உங்களுக்கு காதல் இல்லை என்றோ நீங்கள் முடிவு செய்யலாம். அதே சமயம் அவளுக்கு ஏதாவது தவறான ‘சிக்னல்’ கொடுத்துவிட்டீர்களோ என்று நினைத்து உங்கள் மனம் உறுத்தலாம். அப்போது என்ன செய்வது? முதலில் அந்தப் பெண்ணின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுங்கள்

இந்தச் சூழ்நிலையில் அந்தப் பெண் என்னவெல்லாம் எதிர்ப்பட்டிருப்பாள் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்களிடம், தட்டுத்தடுமாறாமல் தன் காதலைச் சொல்வதற்கு எத்தனை நாட்கள் ஒத்திகை பார்த்திருப்பாள். என்ன சொல்ல வேண்டும், புன்முறுவலுடன் எப்படிப் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எந்தளவு யோசித்திருப்பாள். ஒருவேளை நீங்கள் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து எப்படிப் பயப்பட்டிருப்பாள். கடைசியாக பயத்தை விரட்டி, தைரியத்தைத் திரட்டி தன் மனதில் இருப்பதை உங்களிடம் சொல்கிறாள்.

ஏன் இந்தளவு கஷ்டப்பட்டாள்? ஒருவேளை உங்கள் மீது அவளுக்கு ஒருவித மோகம் ஏற்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால், மற்றவர்கள் கவனிக்காத நல்ல குணங்களை அவள் உங்களிடம் கண்டு மயங்கியிருக்கலாம். எனவே இலைமறைவு காய்மறைவாக, உங்களை ‘ஸ்பெஷலாக’ பாராட்டியிருப்பாள்.

அவளைப் பற்றி இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், உங்கள் மனதை மாற்றுவதற்கு அல்ல. மாறாக, அன்போடு நடந்துகொள்ள உங்களுக்கு நினைப்பூட்டுவதற்கே. ஜூலி என்ற ஓர் இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “தன் காதலைத் தெரிவிக்கும் பெண் மீது ஓர் ஆணுக்கு விருப்பம் இல்லாவிட்டால்கூட, தன்னை ஒரு பெண் கவனித்திருக்கிறாள் என்பதில் அவன் பூரித்துப்போக வேண்டும். அதற்காகவாவது, முகத்தில் அடித்தாற்போல் மறுப்பு சொல்லாமல், சாந்தமாக அவன் பதிலளிக்க வேண்டும்.” சரி, “சாந்தமாகவே” உங்கள் மறுப்பைத் தெரிவிக்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் ஏற்கெனவே அவளுடைய காதலை மறுத்திருக்கிறீர்கள் என்றால் என்ன செய்வது? இம்முறை அவளுக்கு உறைக்கிற மாதிரி சொல்ல வேண்டுமென்று துடிப்பீர்கள். அப்படி மட்டும் செய்து விடாதீர்கள். “சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்” என்று நீதிமொழிகள் 12:18 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. ஆனால் ‘ஞானிகளின் சொற்களை’ பேசுவது எப்படி?

அவள் தன்னுடைய மனதில் இருந்ததைச் சொன்னதற்கும் உங்களை மிக உயர்வாக மதிப்பிட்டதற்கும் நன்றி சொல்லுங்கள். உங்களையே அறியாமல் அவளுக்குத் தவறான சிக்னலை கொடுத்துவிட்டதற்காக மன்னிப்பு கேளுங்கள். உங்களுக்கு அவள் மீது எந்தக் காதலும் இல்லை என்பதை அவளுக்குப் புரியும்படி, தெளிவாக, அதே சமயம் அன்பாகச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இன்னுமதிக உறுதியுடன் சொல்லுங்கள். அப்போதும்கூட புண்படுத்தும் வார்த்தைகளையோ கடுகடுப்பான குரலையோ தவிருங்கள். அவளுடைய பூப்போன்ற மனம் புண்ணாகிவிடும் என்பதால் பொறுமையோடு பேசுங்கள். ஒருவேளை, நீங்கள் போய் அந்தப் பெண்ணை அணுகுகிறீர்கள் என்றால், அவள் உங்களைச் சாந்தமாக நடத்த வேண்டுமென்று தானே விரும்புவீர்கள்?

நீங்கள் வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக அவள் சொல்லலாம். தன்னுடைய உணர்ச்சிகளைத் தூண்டிய சில சம்பவங்களை அவள் சொல்லிக் காட்டலாம். ‘அன்றைக்கு நீங்கள் பூ கொடுத்தீர்களே, ஞாபகம் இல்லையா?,’ ‘போன மாதம் நாம் இரண்டுபேரும் ஒன்றாக நடந்துபோனபோது என்னிடம் பேசிய விஷயங்களை மறந்துவிட்டீர்களா?’ என்றெல்லாம் கேட்கலாம். இப்போது நீங்கள் தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்

பழங்கால ஆய்வாளர்கள் தாங்கள் கண்டுபிடித்த நிலங்களைக் கைப்பற்றவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவுமே விரும்பினார்கள். அதேபோல்தான் இன்று சில ஆண்களும் பெண்களை நடத்த விரும்புகிறார்கள். இவர்களுக்கு காதலிக்க மட்டும் ஆசை, ஆனால் கல்யாண பொறுப்புகளை ஏற்க ஆசையில்லை. எவ்வித வாக்குறுதியும் தராமலேயே, பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாடி அவர்களை வசீகரிக்கிறார்கள். ஏமாற்றியே அவர்களுடைய அன்பைப் பெறுகிறார்கள். ஒரு கிறிஸ்தவ மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “சில இளம் ஆண்கள் பல பெண்களைக் காதலித்து, பிறகு கைவிடுகிறார்கள். அவ்வாறு பெண்களுடைய உணர்ச்சிகளுடன் விளையாடுவது சரியல்ல.” இப்படிப்பட்ட சுயநலம் எங்கு போய் முடியும்?

“கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே தனக்கடுத்தவனை வஞ்சித்து, நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.” (நீதிமொழிகள் 26:18, 19) ஓர் ஆண் சுயநலத்திற்காக ஒரு பெண்ணைக் காதலித்தால் அவனுடைய சுயரூபம் சீக்கிரத்திலேயே அந்தப் பெண்ணிற்குத் தெரிந்துவிடும். அது அவளது மனதை ரணமாக்கும். அதைத்தான் பின்வரும் அனுபவம் காட்டுகிறது.

ஓர் இளைஞன் ஒரு பெண்ணோடு நெருங்கிப் பழகினான். ஆனால் அவளைக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆசை அவனுக்கு இருக்கவில்லை. அவளை நல்ல நல்ல ரெஸ்டாரன்டுகளுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் ஒன்றாக பார்ட்டிகளுக்குச் சென்றார்கள். அவளோடு ஜாலியாக பொழுதைக் கழித்தான். அவளும் அவனுடைய காதல் உண்மையென்று நினைத்து அவன் பார்த்த ஒவ்வொரு பார்வையிலும் சொக்கிப் போனாள். ஆனால் அது காதல் அல்ல, ‘ஜஸ்ட் ஃபிரண்ட்ஷிப்’ என்று அவன் சொன்னவுடன் அப்படியே நொறுங்கிப் போய்விட்டாள்.

உங்களைக் காதலிப்பதாகச் சொன்ன பெண்ணிற்கு நீங்கள் முன்பு தவறான அபிப்பிராயத்தைக் கொடுத்திருந்தால்​—⁠உங்களை அறியாமலேயே கொடுத்திருந்தாலும்​—⁠என்ன செய்வது? உங்கள் பங்கில் எந்தத் தவறும் இல்லையென நியாயப்படுத்திப் பேசாதீர்கள். அது அந்தப் பெண்ணின் மனதை இன்னுமதிகமாக நோகடிக்கும். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என பைபிள் அறிவுறுத்துகிறது. (நீதிமொழிகள் 28:13) எனவே உண்மையைப் பேசுங்கள். அவள் தவறாகப் புரிந்துகொள்ளும்படி நீங்கள் ஏதாவது செய்திருந்தால் அதை ஒத்துக்கொள்ளுங்கள். அவளுடைய உணர்ச்சிகளுடன் வேண்டுமென்றே விளையாடியிருந்தால் நீங்கள் செய்தது மிகப் பெரிய தவறு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மனம்விட்டு மன்னிப்புக் கேளுங்கள்.

ஆனால், மன்னிப்புக் கேட்டதோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். அந்தப் பெண் சில காலத்திற்கு உங்கள் மீது கோபமாக இருக்கலாம். எனவே, அவளுடைய பெற்றோரிடம் சென்று, நடந்தது என்ன என்பதை நீங்கள் விளக்க வேண்டியிருக்கலாம். மற்ற எதிர் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கலாம். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று கலாத்தியர் 6:7 சொல்கிறது. ஆனால் நீங்கள் மன்னிப்புக் கேட்டு, நடந்த தவறை சரி செய்வதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதன் மூலம் அவள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவீர்கள். வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும், ஏன் எதிர்பாலாருடன் பழகும் விஷயங்களிலும்கூட ‘வஞ்சக மொழியை உங்கள் வாயிலிருந்து விலக்க’ வேண்டும் என்பதை இந்த அனுபவம் உங்களுக்கு நன்றாகவே கற்பிக்கும்.​—சங்கீதம் 34:13, பொ.மொ.

பதில் சொல்வதற்கு முன்பு நன்றாக யோசியுங்கள்

ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வது? அப்படியென்றால் காதலிப்பது ஒரு ‘டைம் பாஸ்’ அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். காதலர்களுக்கு இடையே உருவாகும் பலமான உணர்ச்சிகள் திருமணத்திற்கு வழிநடத்தும் அறிகுறிகளாகும். திருமணத்திற்குப் பிறகும், அப்படிப்பட்ட உணர்ச்சிகள் அவர்களுக்கு இடையே உள்ள பந்தத்தை வலுவாக்குகின்றன. இதைப் பற்றி தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன பலன்?

அந்த இளம் பெண்ணைப் பற்றி யோசித்தப் பிறகு, இவள் பல காரியங்களில் சிறந்து விளங்குகிறாள் என்று நீங்கள் நினைக்கலாம். அவள் திறந்துவிட்ட வழியை மூடாதிருக்க நீங்கள் விரும்பலாம். ஆனால் யோசிக்காமல் கொள்ளாமல் காதலில் குதித்து விடாதீர்கள். நெஞ்சைப் பிளக்கும் வேதனைகளை இருவரும் பிற்பாடு அனுபவிக்காமலிருக்க, இப்போதே தகுந்த நடவடிக்கைகளை எடுங்கள்.

ஒரு கட்டத்தில், அவளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் முதிர்ச்சியுள்ள சில நபர்களிடம் நீங்கள் பேச விரும்பலாம். அவளுடைய குறைநிறைகளைப் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல், அவளையும் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள சொல்லுங்கள். கிறிஸ்தவ மூப்பர்களின் கருத்துகளையும்கூட இருவரும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உங்களுடைய காதலன் அல்லது காதலிக்கு சபையில் நல்ல பெயர் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், ‘என் சொந்த வாழ்க்கையில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்?’ என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில், காதல் போன்ற சொந்த விவகாரங்களில்கூட மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்வது ஞானமான செயல். பைபிளும்கூட அதைத்தான் சொல்கிறது. ‘ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் எண்ணங்கள் உறுதிப்படும்’ என நீதிமொழிகள் 15:22 குறிப்பிடுகிறது. முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்களிடம் நீங்கள் போய்ப் பேசுகையில் அவர்கள் உங்களுக்காகத் தீர்மானங்களை எடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுடைய “உட்கருத்தான ஆலோசனை” நீங்கள் இருவரும் ஒருவரிடம் ஒருவர் கவனித்திராத விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர உதவலாம்.​—⁠நீதிமொழிகள் 27:9.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட ஜேம்ஸ் இதைத்தான் செய்தார். அவர் தன்னுடைய அம்மா, அப்பாவுடன் வசிக்காதபோதிலும், அவர்களிடம் சூசனைப் பற்றி பேசினார். முதிர்ச்சி வாய்ந்த எந்த நபரிடம் தன்னைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜேம்ஸும் சூசனும் தீர்மானித்தனர். எதற்காக? தங்களுக்கு நல்ல பொருத்தம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக. நல்ல பொருத்தம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு சந்தோஷமான மணவாழ்க்கை நடத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க ‘டேட்டிங்’ செய்தார்கள். ஆகவே, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமற் போவதற்கு முன் ஜேம்ஸை போல செய்தால், நீங்கள் இறுதியாக எடுக்கும் முடிவு வெற்றியாக அமையும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவிடம் ஜெபியுங்கள். காதல், திருமணத்திற்கு வழிநடத்துகிற ஒரு படி என்பதால், அந்தப் பெண் உங்களுக்கு ஏற்ற ஜோடியா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள உதவுமாறு யெகோவாவிடம் ஜெபியுங்கள். முக்கியமாக யெகோவாவிடம் நெருங்கி வரச்செய்யும் தீர்மானங்களை இருவரும் எடுக்க உதவும்படி ஜெபியுங்கள். அதில்தான் உங்கள் இருவருக்குமே உண்மையான சந்தோஷம் இருக்கிறது. (g05 6/22)

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b நவம்பர் 8, 2004 மற்றும் ஜனவரி 8, 2005-⁠ன் விழித்தெழு! இதழ்களில் வந்த “இளைஞர் கேட்கின்றனர்” கட்டுரைகள், பெண் தன் மனதில் இருப்பதை எப்படி ஆணிடம் சொல்வது என்பதைப் பற்றி கலந்தாலோசித்தன.

[பக்கம் 19-ன் படங்கள்]

நீங்கள் காதலிக்கவில்லை என்றால், தவறான சிக்னலை கொடுக்காதிருக்க கவனமாயிருங்கள்