Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைச் சாமான்களைத் திருடுதல்—ஏன்?

கடைச் சாமான்களைத் திருடுதல்—ஏன்?

கடைச் சாமான்களைத் திருடுதல்​—⁠ஏன்?

“கடையிலிருந்து சில சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போவதைத் திருட்டு என்று நான் சொல்ல மாட்டேன், வறுமையில் தவிக்கும் ஒருவருக்குப் போய்ச் சேர வேண்டிய பங்கு என்றுதான் சொல்வேன்.”​—⁠சர்ச் ஆஃப் இங்லண்ட்டின் ஒரு பாதிரி.

ராபின் ஹுட்​—⁠கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பழங்கதைகள் சிலவற்றில் வரும் கதாநாயகன். அந்தக் கதைகள் உண்மையோ பொய்யோ, திருடுவதில் எந்தத் தவறும் இல்லை என நினைத்தவன்தான் ராபின் ஹுட். பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கிய ‘வள்ளல்’ என்று ஆங்கில பழங்கதைகள் சில இவனைப் பற்றிச் சொல்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாதிரியும்கூட அவ்வாறே நினைக்கிறார், அதாவது, வறுமையின் காரணமாகத் திருடுவதில் எந்தத் தவறுமில்லை என்றே நினைக்கிறார். கடைச் சாமான்களைத் திருடிக்கொண்டு போகிறவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “அவர்களைக் கண்டால் எனக்கு ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது, அவர்கள் அப்படிச் செய்வது எல்லா விதத்திலும் நியாயம் என்றுதான் நினைக்கிறேன்” என்கிறார். பெரிய பெரிய கடைகள் எல்லாமே வருடத்திற்கு ஒருமுறை ஏழை எளியோருக்காகத் திறந்துவிடப்பட வேண்டுமென்றும், அவற்றின் அலமாரிகளிலுள்ள எல்லாச் சாமான்களையும் காசு கொடுக்காமல் எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் அவர் ஆலோசனை கூறுகிறார்.

ஆனால், கடைச் சாமான்களைக் களவாடுகிற அநேகர் மற்ற காரணங்கள் நிமித்தமாகவே அவ்வாறு செய்கிறார்கள், வறுமையின் காரணமாக அல்ல. ஜப்பான் போலீஸார் தங்கள் சக அதிகாரிகள் இருவரைக் கைது செய்தார்கள், காரணம்? கடைச் சாமான்களைத் திருடியதற்காக! அமெரிக்காவில், உணவுக் கூட்டுறவு குழு உறுப்பினர் ஒருவர் கூட்டுறவு அங்காடியிலிருந்து திருடிக்கொண்டிருக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டார். பாக்கெட் நிறைய நோட்டுகளை வைத்திருக்கும் டீனேஜர்கள் அடிக்கடி கடைகளிலிருந்து திருடுகிறார்கள், அதுவும் தங்களுக்குத் தேவையே இல்லாத பொருள்களை! இவர்கள் ஏன் இப்படிக் கடைச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போகிறார்கள்?

‘ரொம்ப ஜாலியா இருக்கு’

த்ரில். திகில். திறன். சென்ற கட்டுரையில் சொல்லப்பட்ட இரு பெண்களுக்கு ஏற்பட்ட இத்தகைய உணர்ச்சிகள், கடைச் சாமான்களை அபேஸ் செய்யும் சிலருக்கு அதிகளவில் கிடைக்கின்றன. இந்த உணர்ச்சிகளெல்லாம் ஜிவ்வென்று தலைக்கேறுகிற அனுபவம் இருக்கிறதே, அதற்காகத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள். முதல் முறையாகத் திருடிவிட்டு வந்த ஒரு பெண் இவ்வாறு சொன்னாள்: “எனக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடைக்காரரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வந்த குஷி. பயங்கர ‘த்ரில்’!” சில காலம் இப்படியே தன் கைவரிசையைக் காண்பித்த அவள், பிற்பாடு தன் உணர்ச்சிகளைப் பற்றிச் சொன்னது இதுதான்: “என்னைப் பார்க்க எனக்கே அவமானமாக இருந்தது​—⁠ஆனாலும் உற்சாகக் காற்றில் ஊஞ்சலாடுவது போல் இருந்தது. துடிப்பும் துள்ளலுமாக இருந்தேன். மாட்டிக்கொள்ளாமல் திருடிவிட்டு வந்த ஒவ்வொரு முறையும், ‘எவ்வளவு பெரிய ஆள் நான்!’ என்று பெருமிதப்பட்டுக் கொள்வேன்.”

ஹெக்டர்​—⁠வாலிபப் பையன். கடைகளிலிருந்து திருடுவதைப் பல மாதங்களாக நிறுத்திவிட்டிருந்தான், ஆனால் திருட வேண்டுமென்ற தூண்டுதல் மறுபடியும் அவனுக்கு ஏற்பட்டது. a “இந்தக் கெட்ட ஆசை என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது, அதற்கு அடிமையாகிவிட்டது போல் உணர்ந்தேன். பெரிய ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்குள் நுழைந்து, ஒரு கடை ஷோ-கேஸில் ரேடியோ ஒன்றைப் பார்த்ததும், ‘இந்த ரேடியோவை அபேஸ் செய்வது எத்தனை ஈஸி. யார் கண்ணிலும் மாட்டாமல் அதை என்னால் எடுத்துவிட முடியும்’ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிடுவேன்.”

கடைச் சாமான்களைத் திருடிக்கொண்டு போகும் சிலருக்கு அந்தச் சாமான்கள் தேவையே இருக்காது, ஆனால் அவ்வாறு திருடுவதில் கிடைக்கும் ஒருவித “த்ரில்”லையும் திகிலையும் அனுபவிப்பதற்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள். இந்திய செய்தித்தாள் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறபடி, செய்யக் கூடாத ஏதோவொன்றைச் செய்யும்போது கிடைக்கும் “த்ரில்”தான் அப்படித் திருடுவதற்கு ஆட்களை பலமாகத் தூண்டுகிறது. . . . திருடிவந்த பொருள்களைச் சிலர் அதே இடத்தில் கொண்டுபோய் வைத்தும் விடுகிறார்கள்.”

வேறு காரணங்கள்

மனச்சோர்வு கோடிக்கணக்கானோரை ஆட்டிப்படைக்கிறது. அதினால் அவதியுறுபவர்கள் கடைச் சாமான்களைக் களவாடுவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் சில சமயம் தங்கள் மனச்சோர்வை வெளிப்படுத்துகிறார்கள்.

பிரச்சினை இல்லாத அருமையான ஒரு குடும்பத்தில் 14 வயது நிரம்பிய ஓர் இளம் பெண் இருந்தாள். நல்ல வசதி வேறு. இப்படிச் சகல செளபாக்கியங்களும் அவளுக்கு இருந்தபோதிலும், இனந்தெரியாத ஒரு விரக்தி “கருமேகமாய்” அவள் மனதைச் சூழ்ந்துகொண்டிருந்தது. “மனதிலிருந்த அந்த விரக்தியை என்னால் விரட்டியடிக்கவே முடியவில்லை” என்கிறாள் அவள். மதுபானங்களையும் போதைப் பொருள்களையும் உபயோகிக்க ஆரம்பித்தாள். பிறகு ஒருநாள் கடையிலிருந்து சாமான்களைத் திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்டாள். அதன்பின், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றாள்.

நல்நடத்தையுள்ள ஓர் இளைஞன் அல்லது இளைஞி திடீரென கடைச் சாமான்களைத் திருட ஆரம்பித்தால், ஒருவேளை மனோரீதியான பிரச்சினை அதற்குக் காரணமாய் இருக்குமோ என்று அவனு(ளு)டைய பெற்றோர் சிந்திக்க வேண்டியிருக்கலாம். பருவ வயதினரின் உடல்நல நிபுணரான ரிச்சர்ட் மெக்கன்ஸி இவ்வாறு கூறினார்: “உங்கள் பிள்ளை ஏதோவொரு விதத்தில் விநோதமாக நடந்துகொள்ள ஆரம்பித்தால், வேறொரு காரணம் இருப்பது நிரூபிக்கப்படாத பட்சத்தில், அதற்கு ஒருவேளை மனச்சோர்வே காரணமாக இருக்குமென்று நினைக்கிறேன்.”

சில இளைஞர்கள் நண்பர்களுடைய அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு கடைச் சாமான்களைத் திருடுகிறார்கள்; ஒருவேளை இளசுகளின் பட்டாளத்தில் சேர்ந்துகொள்வதற்கு, அது ‘அட்மிஷன் ஃபீஸாக’ இருக்கலாம். வேறு சிலரோ போரடிக்காமல் இருப்பதற்காக அப்படித் திருடலாம். சிலர் அதைத் தொழிலாகவே ஆக்கிக்கொண்டு, தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள். என்ன காரணமாக இருந்தாலும், திருடர்கள் நாள் ஒன்றுக்குக் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்களைக் கடைகளிலிருந்து சுருட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். இந்த இழப்பையெல்லாம் யாரோ ஒருவர் ஈடுகட்டத்தான் வேண்டியிருக்கிறது. (g05 6/22)

[அடிக்குறிப்பு]

a இந்தத் தொடர் கட்டுரைகளிலுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 5-ன் பெட்டி]

திருடத் தூண்டுகிற ஒருவித மனநோய்

மரியா என்பவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் டீனேஜராக ஆனதிலிருந்தே கடைச் சாமான்களைத் திருடும் பழக்கம் எனக்கு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது மோசமாகி, நாள் ஒன்றுக்கு 22,500 ரூபாய் மதிப்புள்ள சாமான்களைத் திருடும் அளவுக்குச் சென்றேன்.

“திருட வேண்டுமென்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லவே இல்லை, ஆனால் அப்படிச் செய்வதற்கான தூண்டுதல் இருக்கிறதே, அப்பப்பா . . . வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நிஜமாகச் சொல்கிறேன், நான் மாற வேண்டும், அதுதான் என் விருப்பம்.” திருடுவதற்கான தூண்டுதலைத் தன்னால் கட்டுப்படுத்தவே முடியாததால், அப்படித் திருடத் தூண்டுகிற ஒருவித மனநோய் தனக்கு இருக்குமோ என்று மரியா சந்தேகிக்கிறாள்.

இவ்விதமான மனநோய் உள்ளவர்களுக்கு “திருட வேண்டுமென்ற எண்ணம் மனதில் சதா ஓடிக்கொண்டே இருக்கும், ஆனால் எந்தவொரு லாபத்தையும் கருதி அவர்கள் திருடுவதில்லை.” இது ஒரு சாதாரண ‘அடிக்‍ஷன்’ கிடையாது, வெகு ஆழமாகப் பதிந்துவிட்ட உணர்ச்சி ரீதியான பிரச்சினைகளே இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது போல் தெரிகிறது.

அடிக்கடி திருட்டில் ஈடுபடும் ஒருவருக்கு இத்தகைய மனநோய் இருக்கிறது எனச் சிலர் சொல்கிறார்கள்; ஆனால் இவ்வகையான மனநோய் இருப்பது வெகு அபூர்வம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். கடைச் சாமான்களைத் திருடிக்கொண்டு போகிறவர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஆட்களுக்கே இந்நோய் இருப்பதாக அமெரிக்க மனநல மருத்துவ சங்கம் சொல்கிறது. ஆகையால், கடைகளில் திருடும் பழக்கமுள்ள ஒருவருக்கு இந்த மனநோய் இருக்கிறது என்று சட்டென நாம் முடிவுக்கு வருவது சரியல்ல. அந்த நபர் அவ்வாறு திருடுவதற்கு ஒருவேளை வேறு ஏதாவது காரணங்கள்கூட இருக்கலாம்.

[பக்கம் 5-ன் படம்]

பிள்ளைக்குத் திருடும் பழக்கம் ஏன் இருக்கிறதென்று புரிந்துகொள்வதற்கு அக்கறையுள்ள பெற்றோர் முயலுகிறார்கள்