கடைச் சாமான்களைத் திருடுதல்—யாருக்கு நஷ்டம்?
கடைச் சாமான்களைத் திருடுதல்—யாருக்கு நஷ்டம்?
ஜப்பானிலுள்ள ஒரு கடையில் பொடிப் பையன் ஒருவன் தன் ‘கைவரிசையைக்’ காட்டிக் கொண்டிருந்தபோது அந்தக் கடை முதலாளியிடம் வசமாக மாட்டிக்கொண்டான். உடனே அந்த முதலாளி போலீஸுக்குத் தகவல் அனுப்பினார். போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து இறங்கியதும், சடாரென அவன் ஓட ஆரம்பித்தான். போலீஸார் அவனைத் துரத்திச் சென்றனர். தண்டவாளத்தைத் தாண்டி ஓடும்போது அந்தப் பையன் இரயிலில் அடிப்பட்டு செத்துப்போனான்.
இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்தது, போலீஸாரை வரவழைத்ததற்காக அந்தக் கடை முதலாளியைச் சிலர் கண்டனம் செய்தார்கள். அந்த அமளியெல்லாம் ஓய்ந்துபோகும்வரை அவர் தன் கடையை மூட வேண்டியதாயிற்று. கொஞ்ச நாள் கழித்து, கடையைத் திறந்தபோது, திருடர்கள் மீண்டும் ‘விஜயம் செய்ய’ ஆரம்பித்தார்கள். ஆனால், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட கொடூர வடுக்களின் காரணமாக, திருடர்களை எதிர்க்கவே அவர் பயப்பட்டார். அவருடைய கடைச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போவது வெகு சுலபம் என்பதைத் திருடர்கள் இப்போது கண்டுகொண்டார்கள். சீக்கிரத்திலேயே, கடையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
இதுபோன்ற அவல நிலை, பெரும்பாலான கடைக்காரர்களுக்கு ஏற்படாவிட்டாலும்கூட, இச்சம்பவம் முக்கியமான ஓர் உண்மையை எடுத்துக் காட்டுகிறது. கடைச் சாமான்களைத் திருடுவது மிகுந்த நஷ்டத்தை, தீங்கை அல்லது துன்பத்தை உண்டாக்குகிறது—ஆம், பல வழிகளில் உண்டாக்குகிறது, பல பேருக்கு உண்டாக்குகிறது. இந்தப் பாதகச் செயலின் காரணமாக என்னென்ன பயங்கர நஷ்டங்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி இப்போது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.
கடைக்காரர்களுக்கு ஏற்படும் நஷ்டங்கள்
கடைத் திருட்டுகளினால் உலகெங்குமுள்ள வியாபாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரங்கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 1,80,000 கோடி ரூபாய்க்கும் மேலாக நஷ்டமாகிறது எனச் சிலர் கணக்கிடுகிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை இழந்தால் கடைக்காரர்கள் எப்படித் தாக்குப்பிடிப்பார்கள்? நிறைய கடைக்காரர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். திருடர்கள் அத்துமீறி கடைக்குள் நுழையும்போது, வியாபாரிகள் வாழ்நாள் பூராவும் இரத்த வியர்வை சிந்தி உருவாக்கிய தொழிலையே பறிகொடுக்க நேரிடலாம்.
நியு யார்க் நகரில் கடை வைத்திருக்கும் லூக் இவ்வாறு சொல்கிறார்: “வியாபாரத்தில் போட்டா போட்டி இருக்கிறது, அந்தக் கவலை போதாதென்று கடைத் திருட்டை நினைத்தும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை நாட்களுக்கு எங்களால் தொழில் செய்ய முடியுமோ தெரியவில்லை” என்கிறார். கடையில் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி அமைப்பை வைக்குமளவுக்கு அவரிடம் பண வசதியில்லை. திருடர்களைப் பற்றிச் சொல்லும்போது, “யார் கண்டார்கள், அடிக்கடி என் கடைக்கு வரும் கஸ்டமர்கள்கூட ஒருவேளை அப்படிச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போகிறவர்களாக இருக்கலாம்” என்கிறார்.
லூக்கிற்கு உள்ள பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையே இல்லை எனச் சிலர் நினைக்கிறார்கள். “இந்த மாதிரியான கடைக்காரர்களுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைக்கிறது, அதனால் அவர்கள் கடையிலிருந்து ஒருசில சாமான்களை எடுத்துக்கொள்வதால் அவர்களுக்குப் பெரிதாக எந்தவொரு நஷ்டமும் ஏற்பட்டுவிடாது” என அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், சில்லறை கடைக்காரர்களுக்கு உண்மையிலேயே அந்தளவு பெரிய லாபம் கிடைக்கிறதா என்ன?
கடைச் சாமான்களை வாங்குவதற்காகச் சில கடைக்காரர்கள் தாங்கள் கொடுத்த விலையைவிட 30, 40, அல்லது 50 சதவீதம் கூடுதலான விலைக்கு விற்பது என்னவோ உண்மைதான், ஆனால் அதை மொத்த லாபமாகக் கருத முடியாது. கடையை நடத்துவதற்கான செலவுகளுக்கு, அதாவது கடை வாடகை, வரிகள், வேலையாட்களுக்குச் சம்பளம், கூடுதல் உதவிகள், கட்டடப் பராமரிப்பு, கருவிகளைப் பழுதுபார்ப்பது, காப்பீடு, மின்சாரம், தண்ணீர், எரிபொருள், டெலிபோன், செக்யூரிட்டி அமைப்புகள் போன்ற அத்தனை செலவுகளுக்கும் அதை அவர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த எல்லாச் செலவுகளும் போக அவர்கள் கையில் ஒருவேளை 2 அல்லது 3 சதவீத லாபமே மீதியிருக்கும். எனவே, ஒரு கடையிலிருந்து யாராவது எதையாவது திருடும்போது, அந்தக் கடைக்காரரின் பிழைப்பே நாசமாகிப் போய்விடுகிறது.
சின்னச் சின்ன திருட்டு, ‘ஓகே’யா?
ஒரு குட்டிப் பையன் தன் அம்மாவோடு ஒரு கடையில் இருக்கிறான், பிறகு, ஸ்வீட்டுகள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குத் தனியாகச் செல்கிறான். அங்குள்ள ஓர் அட்டைப் பெட்டியைத் திறக்கிறான், ஒரு சாக்லேட் பாரை எடுக்கிறான், நைஸாக அதைத் தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்கிறான். இத்தகைய மலிவு விலை பொருள்கள் களவாடப்படுவது கடைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
குற்றங்களைக் குறைத்தல்—உள்ளேயும் வெளியேயும் என்ற சிற்றேட்டில் அமெரிக்க சிறு தொழில் நிர்வாகம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “இங்கிருந்து ஒரு பால்பாயின்ட் பென், அங்கிருந்து ஒரு பாக்கெட் சைஸ் கால்குலேட்டர் என்று ‘கூலாக’ அமுக்கிக்கொண்டு போகும் ஒரு போக்கிரிக்கு இந்தச் சில்லறை திருட்டெல்லாம் பெரிய ஒரு குற்றமாகவே தோன்றாது. ஆனால் முன்னேற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தொழிலையோ அது கொன்றுபோட்டு விடுகிறது.” மிகக் குறைந்தளவே லாபம் கிடைப்பதால், கடைத் திருட்டுகளால் ஒரு வருடத்தில் ஏற்படுகிற 45,000 ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு கடைக்காரர் கூடுதலாக 900 சாக்லேட் பார்களை அல்லது 380 சூப் பாக்கெட்டுகளை ஒவ்வொரு நாளும் விற்றாக வேண்டும். போக்கிரி பொடிசுகள் நிறைய பேர் சாக்லேட் பார்களை இப்படியே திருட ஆரம்பித்தால், அந்தத் தொழில் ஒரேயடியாகப்
படுத்துவிடும். ஆக, பிரச்சினையே இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது.இனம், பின்னணி என்ற வித்தியாசமில்லாமல் இளசுகள் பெரிசுகள், வசதியானவர்கள் வறியவர்கள் என கோடிக்கணக்கானோர் மார்க்கெட்டுகளிலிருந்தும் கடைகண்ணிகளிலிருந்தும் சாமான்களைத் திருடுகிறார்கள். விளைவு? அமெரிக்காவிலுள்ள மூன்று கடைகளில் ஒன்று இழுத்து மூடப்படுகிறது என அமெரிக்க தேசிய குற்றத்தடுப்புக் கழகம் ஒன்று அறிவிக்கிறது. மற்ற நாடுகளிலுள்ள கடைகளும் இதே பிரச்சினையில்தான் சிக்கித் தவிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டங்கள்
ஜனங்கள் கடைகளிலிருந்து திருடும்போது, சாமான்களின் விலை உயர்ந்துவிடுகிறது. எனவே, சில இடங்களில், வாடிக்கையாளர்கள் சாமான்களை வாங்கும்போது ஒரு வருடத்தில் சராசரியாக 13,500 ரூபாய் அதிகமாகக் கொடுக்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 2,700 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால், மற்றவர்கள் திருடிச் சென்றதை ஈடுகட்ட ஐந்து நாள் சம்பளத்தை ஒவ்வொரு வருடமும் நீங்கள் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். இப்படியே போனால் உங்களுக்குக் கட்டுப்படி ஆகுமா? பென்ஷனை நம்பியே காலத்தைத் தள்ளும் ரிடையர்ட் ஆட்களுக்கு அல்லது குடும்பத்தை ஓட்ட தனியாகப் போராடிக் கொண்டிருக்கிற ஒரு தாய்க்கு ஐந்து நாள் ஊதியத்தை இழப்பதென்பது சாதாரணமல்ல, அது பயங்கரமான நெருக்கடிக்குள் அவர்களை அமிழ்த்திவிடும். கடைத் திருட்டுகளால் ஏற்படுகிற நஷ்டங்கள் இத்தோடு முடிவடைவதில்லை.
தெரு முனையிலுள்ள ஒரு கடை மூடப்படும்போது, அந்த முழு ஏரியாவுமே அவதிக்குள்ளாகிறது. சில அறிக்கைகளின்படி, நெருக்கமான அமெரிக்க குடியிருப்புப் பகுதியிலிருந்த மருந்துக்கடை ஒன்று சமீபத்தில் கடைத் திருட்டுகளின் காரணமாக இழுத்து மூடப்பட்டது. அதனால் இங்குள்ள வயதானவர்களும் சுகவீனர்களும் தங்களுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக இரண்டரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள வேறொரு மருந்துக் கடைக்குப் போக வேண்டியிருக்கிறது. “அவ்வளவு தூரம் வீல்சேரில் போய்ப் பாருங்கள், அப்போது தெரியும் கஷ்டம்” என்கிறார் ஓர் அதிகாரி.
பெற்றோர்களுக்கு ஏற்படும் பெரிய நஷ்டங்கள்
ப்ரூஸ்—நேர்மை தவறாதவர், ஒழுக்க சீலர், நாணயமாக நடக்க தன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பவர். ஒருநாள் அவருடைய மகள் ஒரு கடையில் திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்டாள். “என் நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது” என்கிறார் அவர். “உங்கள் பெண் கடையிலிருந்து திருடும்போது பிடிபட்டாள் என்ற செய்தியை யாரோ உங்களுக்கு டெலிபோனில் சொல்கிறார்களென்றால், எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்கள். எங்கள் மகளை ஒழுக்கமுள்ளவளாக வளர்ப்பதற்கு வருடக்கணக்கில் நேரம் செலவிட்டோம், என்ன பிரயோஜனம், இப்போது இப்படி நடந்துவிட்டது. இந்த மாதிரி மோசம் செய்வாள் என்று கொஞ்சங்கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் அவர்.
ப்ரூஸ், தன்னுடைய மகளைப் பற்றியும் அவளுடைய எதிர்காலத்தைப் பற்றியும் சதா நினைத்து நினைத்து உருகினார். அதுமட்டுமல்ல, ஒரு மதப் போதகராக வாலண்டியர் வேலை செய்து கொண்டிருந்ததிலிருந்தும் விலகிக்கொண்டார். “எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் சபையாரைப் பார்ப்பேன்? ஒரு நல்ல மனசாட்சியோடு என்னால் எப்படி அவர்களுக்கு பிள்ளை வளர்ப்பு பற்றி அறிவுரை வழங்க முடியும்? அது எனக்குச் சரியாகப் படவில்லை.” தான் செய்த குற்றம் தன்னுடைய அப்பாவை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை அவள் கொஞ்சங்கூட யோசித்துப் பார்க்கவில்லை போலும்.
கடைச் சாமான்களைத் திருடுபவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்கள்
அந்தக் காலத்திலெல்லாம், கடை முதலாளிகள் தங்கள் கடையிலிருந்து திருடுபவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கும்போது
பெரும்பாலும் கடுமையாக எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். இன்றோ, முதல் முறையாக இப்படி வரம்பு மீறுபவர்களைக்கூட கடை முதலாளிகள் போலீஸில் ஒப்படைத்து விடுவதையே அடிக்கடி கேள்விப்படுகிறோம். அப்படிச் செய்யும்போது தங்களுடைய குற்றம் எப்பேர்ப்பட்ட பின்விளைவுகளை வருவிக்கிறது என்பதை அந்தத் திருடர்கள் புரிந்துகொள்கிறார்கள். நட்டலி என்ற ஓர் இளம் பெண்ணின் அனுபவம் அதுதான்.“எவ்வளவுக்கு எவ்வளவு திருடினேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு தன்னம்பிக்கை ஏற்பட்டது” என்கிறாள் அவள். “அப்படியே பிடிபட்டாலும் பரவாயில்லை, சூப்பரான அந்த எல்லாத் துணிமணிகளுக்கும் ஆகும் செலவோடு ஒப்பிட, கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் நான் கொட்ட வேண்டிய பணம் ரொம்பவே குறைவாகத்தான் இருக்கும் என்று எனக்கு நானே கணக்குப் போட்டுக்கொள்வேன்” என்கிறாள் நட்டலி. ஆனால் அவள் போட்டது தப்புக்கணக்கு.
ஒரு டிரஸ்ஸைத் திருடும்போது வசமாகச் சிக்கிக்கொண்டாள், போலீஸார் அவளுக்குக் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர். போலீஸ் ஸ்டேஷனில், அவளுடைய கைரேகை பதிவாக்கப்பட்டது, மற்ற குற்றவாளிகளோடு சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டாள். தன் பெற்றோர் வந்து ஜாமீனில் வெளியே எடுக்கும் வரை பல மணிநேரம் அவள் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது.
திருட வேண்டுமென்ற எண்ணமுள்ளவர்களுக்கு நட்டலி சொல்வது இதுதான்: “என் பேச்சைக் கேளுங்கள், ‘பாழாய்ப்போன’ அந்த டிரஸ்ஸையோ ஜீன்ஸையோ காசுகொடுத்தே வாங்கிவிடுங்கள்.” திருடுவதற்குத் தீர்மானித்தீர்களென்றால், “அப்படித் திருடியதை நினைத்து நினைத்து ரொம்ப நாளைக்கு உங்களையே நொந்துகொள்வீர்கள்” என்கிறாள் அவள்.
‘குற்றவாளி’ என்று சட்டப்பூர்வமாக முத்திரை குத்தப்படுவது நொந்துகொள்ள வேண்டிய விஷயம்தான். கடைகளிலிருந்து சுருட்டுபவர்கள் நினைக்கிறபடி அவர்களுடைய குற்றம் ஒரேயடியாய் மறக்கப்படுவதில்லை, மாறாக, ஒரு டிரஸ்ஸிலோ சட்டையிலோ உள்ள கறையைப் போல அது மீண்டும் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகிறது; இதனால் அவர்களுக்கு விளைவது ஏமாற்றமும் எரிச்சலும்தான். கடைச் சாமான்களைச் சுருட்டுபவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க முயற்சி எடுக்கும்போது, செய்த குற்றத்தை ஒருவேளை அவர் தெரியப்படுத்த வேண்டியிருக்கும். மருத்துவம், பல்மருத்துவம், அல்லது கட்டிடக்கலை போன்ற துறைகளில் அவர் நுழைய முடியாமல் போகலாம். அப்படிப்பட்டவருக்கு வேலை கொடுக்க கம்பெனிக்காரர்கள் தயங்கலாம். அதுமட்டுமல்ல, தான் செய்த குற்றத்திற்காக கோர்ட்டில் அபராதம் கட்டியிருக்கலாம், திருடும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டிருந்தாலும், இந்தப் பிரச்சினைகள் அவரைப் பின்தொடரலாம்.
கடைச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போகிறவர் குற்றவாளி எனத் தீர்க்கப்படாவிட்டாலும், அது அவருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். இந்தத் தொடர் கட்டுரைகளில், முன்பு குறிப்பிடப்பட்ட ஹெக்டர் அதை உணர்ந்தார். “எப்படியோ நான் நழுவிக்கொண்டே போனேன், கையும் களவுமாக மாட்டிக்கொள்ளவே இல்லை” என்கிறார். ஆனால் அதன் பின்விளைவுகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. “வாலிபப் பிள்ளைகள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். போலீஸிடம் மாட்டிக்கொள்ளா விட்டாலும், அதன் பின்விளைவுகளை நீங்கள் சந்தித்தே தீருவீர்கள்.”
கடைச் சாமான்களைச் சுருட்டுவது பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிற ஒரு ‘க்ரைம்’தான். அப்படிச் சுருட்டப்படும் சாமான்களுக்கு விலையில்லாமல் இல்லை. அதில் ஈடுபடும் ஒருவர் அந்தப் பழக்கத்திலிருந்து முழுவதுமாக வெளிவர வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட திருட்டுக்கு முழுக்குப் போட ஒருவர் எவ்வாறு மனோபலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்? இந்தக் குற்றம் முற்றிலுமாக ஒழிக்கப்படுமா? (g05 6/22)
[பக்கம் 7-ன் படம்]
கடைச் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு போவது, தொழில்களை நொடிந்துபோகச் செய்கிறது
[பக்கம் 7-ன் படம்]
கடைச் சாமான்கள் திருடப்படுவதால் எல்லாருக்குமே நஷ்டம்தான்
[பக்கம் 8-ன் படங்கள்]
கடைச் சாமான்களைத் திருடுவது உங்கள் எதிர்காலத்தையே பாதிக்கும்
[படத்திற்கான நன்றி]
கைரேகைகள்: © Morocco Flowers/ Index Stock Imagery