சுத்தமான வீடு அதில் நம் அனைவரின் பங்கு
சுத்தமான வீடு அதில் நம் அனைவரின் பங்கு
மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
குப்பைக்கூளம் இல்லாத, சுத்தமான சுற்றுப்புறத்தில் வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கும்! ஆனால் நகரங்களில் குப்பை மலையாகக் குவிந்து வருவதால் நம் சுற்றுப்புறத்தைத் துப்புரவாக வைப்பது பெரும்பாடாகவே இருக்கிறது.
குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்வதன் மூலம் தெருக்களைச் சுத்தமாக வைக்க நகராட்சிகள் பிரயாசப்படுகின்றன. ஆனாலும் சில இடங்களில் குப்பைகள் மீண்டும் மீண்டும் குவிந்துவிடுகின்றன. அவற்றைப் பார்க்கவே சகிக்க முடிவதில்லை; பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அவை உலைவைத்தும் விடுகின்றன. குவிந்துகிடக்கும் குப்பைக் கூளங்கள், நோய் பரப்புகிற எலிகளுக்கும், கரப்பான் பூச்சிகளுக்கும், மற்ற பூச்சிகளுக்கும் சாம்ராஜ்யமாக ஆகிவிடுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாக முடியும், உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு வழி காண முடியும்.
சரியான மனப்பான்மை தேவை
வீடும் சுற்றுப்புறமும் அசுத்தமாக இருப்பதற்கு வறுமையே காரணம் எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் எப்போதுமே அதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. வசதி இல்லாதவர்கள் சுற்றுப்புறத்தைச் தூய்மையாக வைத்துக்கொள்ள ரொம்ப சிரமப்படுகிறார்கள் என்பது உண்மையே. என்றாலும், “வறுமை, சுத்தத்திற்கு எதிரி அல்ல” என்கிறது ஸ்பானிய பழமொழி. அதற்காக, வசதி உடையவர்கள் எல்லோருமே சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.
வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைப்பது நம் மனப்பான்மையைச் சார்ந்திருக்கிறது; இந்த மனப்பான்மையே நம்மை செயல்படத் தூண்டுகிறது. சொல்லப்போனால், முழு குடும்பத்தின் மனப்பான்மையையும் அது பெருமளவில் சார்ந்திருக்கிறது. எனவே வீட்டை, ஏன் சுற்றுப்புறத்தைக்கூட சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்பதை ஆராய்வது நன்மை பயக்கும்.
சுத்தம் செய்ய ஓர் அட்டவணை
தாய்மார்களின் வேலை ஓயவே ஓயாது என்று பொதுவாகச் சொல்வார்கள். சமையல் செய்து, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதோடு வீட்டையும் சுற்றுப்புறத்தையும்கூட அவர்கள் சுத்தமாக வைக்க வேண்டியிருக்கிறது. அநேக சமயங்களில், பிள்ளைகள் அங்குமிங்கும் போட்டுச் செல்கிற அழுக்குத் துணிகளையும் பொருட்களையும் தாய்மார்களே எடுத்து வைக்க வேண்டியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? குடும்பத்திலுள்ள எல்லோருமே பங்கு பெறுகிற விதத்தில் நல்லவொரு அட்டவணையை அமைக்கும்போது தாய்மார்களின் வேலைப் பளு குறையும்.
எதையெல்லாம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும், எதையெல்லாம் வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்று சில இல்லத்தரசிகள் திட்டமிடுகிறார்கள். உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில், அதாவது பெத்தேல் வீடுகளில், துணிமணிகளையும் மற்ற பொருட்களையும் வைக்கும் ரூம்கள் வருடத்திற்கு ஒரு முறை நன்றாகச் சுத்தம் செய்யப்படுகின்றன. தேவையில்லாத பொருட்களை கழித்துவிட்டு, எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கான
சமயம் அது. சுவர்களை தவறாமல் சுத்தம் செய்வதற்கான அட்டவணையும் பின்பற்றப்படுகிறது.வீட்டில், பாத்ரூம் போன்ற இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம். தினமும் பாத்ரூமை மேலோட்டமாகச் சுத்தம் செய்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கிருமிகளுக்கு ‘குட்பை’ சொல்ல முடியும். டாய்லெட்களில் அழுக்கு படிவதைத் தடுக்க முடியாது என்றும் படிந்த அழுக்கை அகற்ற முடியாது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில், டாய்லெட்கள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றனவே, அது எப்படி? சரியான க்ளீனிங் பொருட்களைப் பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்வதாலேயே.
கிச்சனையும்கூட நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் பாத்திரங்களைக் கழுவி, ஸ்டவ்வை துடைத்து, திட்டைச் சுத்தம் செய்தாலும் அவ்வப்பொழுது—மாதத்தில் ஒரு முறையாவது—கிச்சனை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும். அதாவது, ஸ்டவ் மற்றும் ஃபிரிட்ஜிற்கு பின் புறமும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்குக்கு அடியிலும் சுத்தம் செய்ய வேண்டும். கிச்சன் ஷெல்ஃபுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கரப்பான் பூச்சிகளுக்கும் நோய் பரப்புகிற மற்ற பூச்சிகளுக்கும் ‘நோ என்ட்ரி’ சொல்லலாம்.
குடும்பத்தின் ஒத்துழைப்பு
பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சில நியதிகளை வகுத்திருக்கிறார்கள், வேலைகளைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கியிருக்கிறார்கள். எனவே பிள்ளைகள்
காலையில் ஸ்கூலுக்குப் போகும் முன் படுக்கையைச் சரிசெய்துவிட்டு, அழுக்குத் துணிகளை அதற்குரிய இடத்தில் போட்டுவிட்டு, தங்கள் பொருட்களையெல்லாம் சரியான இடத்தில் வைத்துவிட்டுச் செல்கிறார்கள். எல்லோருக்கும் பயனளிக்கும் ஒரு நியதி இதோ: “பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்.”வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையைப் பிரித்துத் தரலாம், அல்லது சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு இடத்தைத் தரலாம். உதாரணத்திற்கு, அப்பா, கார் ஷெட்டை வருடத்திற்கு ஒரு முறையாவது முழுமையாகச் சுத்தம் செய்து பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்கிறாரா? இந்த வேலையைச் செய்வதற்கு ஒரு பிள்ளையாவது அவருக்கு உதவ முடியுமா? வீட்டிற்கு முன் வளர்ந்து கிடக்கிற களைகளைப் பிடுங்கிப்போடுவதும் புற்களை வெட்டுவதும் யார்? வீட்டின் முன்புறம் பார்வையாக இருப்பதற்கு எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்ய வேண்டும்? மொட்டை மாடியில் அல்லது வீட்டிற்குள் ஸ்டோர் ரூம் ஏதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் வேண்டாத பொருட்களெல்லாம் கழிக்கப்பட்டு அது சுத்தமாக இருக்கிறதா? இல்லையென்றால் யார் அதைச் சுத்தம் செய்வது? இப்படிப்பட்ட வேலைகளைச் சில பெற்றோர் பிள்ளைகளுக்கு சுழற்சி முறையில் தருகிறார்கள்.
ஆகவே, உங்கள் வீட்டைப் பராமரிப்பதற்கு நன்கு திட்டமிடுங்கள். நீங்களாகவே சுத்தம் செய்தாலும் சரி, உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சுத்தம் செய்தாலும் சரி, அல்லது ஒரு ஆளை வேலைக்கு வைத்து சுத்தம் செய்தாலும் சரி,
ஒழுங்காகத் திட்டமிடுவது ரொம்ப அவசியம். வீட்டை எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்கும் ஒரு தாய் தன் முழு குடும்பமும் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “நானும் என் மூன்று மகள்களும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வோம். நோர்மா ஆட்ரியானா, ஹாலையும் இரண்டு பெட்ரூம்களையும், முற்றத்தையும், வாசலையும் சுத்தம் செய்வாள். ஆன்னா க்கோயாக்கினா, சமையலறையைச் சுத்தம் செய்வாள். மாரியா டெல் கார்மன், பாத்திரங்களைக் கழுவுவாள். நான் துணிகளைத் துவைத்து மற்ற வேலைகளையும் பார்த்துக்கொள்வேன்.”வீட்டிற்கு வெளியே நல்ல தோற்றம்
வீட்டின் வெளிப்புறம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது? நீங்கள் பங்களாவில் வசித்தாலும் சரி, ஓர் எளிய வீட்டில் வசித்தாலும் சரி, வெளிப்புறத்தைச் சுத்தமாக வைக்கத் திட்டமிடுவது அவசியம். உதாரணத்திற்கு, காம்பவுண்டு கேட்டின் ஒரு கீல் உடைந்து போயிருக்கலாம். அதை ரிப்பேர் செய்யாமலேயே விட்டுவிட்டால் பார்ப்பதற்கு எவ்வளவு அசிங்கமாக இருக்கும்! கடைசியில் அந்த கேட்டே கீழே விழுந்துவிடும். அதேபோல்தான் வீட்டின் முன்புறத்திலும், நடைபாதையிலும் கிடக்கிற குப்பைகளை அப்படியே விட்டுவிட்டால்கூட பார்க்க சகிக்காது. சில சமயங்களில் தகர டப்பாக்கள், ஸ்பானர், ஸ்க்ரூடிரைவர் போன்ற பல சாமான்கள், வீட்டிற்கு வெளியே அலங்கோலமாகக் கிடக்கும். இப்படியே போட்டு வைத்தால் பூச்சி பூராண்தான் அடையும்.
சில குடும்பங்கள் வீட்டைச் சுற்றியும்—தெருவாசலையும் நடைபாதையையும்கூட—கூட்டி சுத்தம் செய்கிறார்கள். இதை தினமும் ஒரு முறை அல்லது வாரத்தில் ஒரு முறை அல்லது தேவைக்கேற்றாற்போல் சுத்தம் செய்கிறார்கள். சில இடங்களில் தெருக்கள் சுத்தமாக இருக்க நகராட்சிகள் நல்ல ஏற்பாட்டை செய்திருக்கின்றன. ஆனால் மற்ற இடங்களிலோ அப்படி எந்த ஏற்பாடும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்கை செய்தால், நம்முடைய சுற்றுச்சூழல் கண்களுக்கு விருந்தாகவும் ஆரோக்கியத்திற்கு மருந்தாகவும் இருக்கும், இதில் சந்தேகமே இல்லை.
சில குடும்பங்கள் மேலே சொல்லப்பட்டபடி நன்கு திட்டமிடுவது மட்டுமல்லாமல், அவற்றை எழுதி கண்ணில்படும் இடத்தில் ஒட்டி வைக்கிறார்கள். இந்தப் பட்டியலை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் பார்த்து தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள். இது அருமையான பலன்களை அளிக்கலாம். எனினும் சுத்தத்தைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய எல்லாத் தகவல்களும் இக்கட்டுரையில் கொடுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ற க்ளீனிங் பொருட்களையும் உங்கள் வருவாய்க்கேற்ற சாதனங்களையும் நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்றாலும், இந்தச் சுருக்கமான தகவல் உங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்க வேண்டிய அவசியத்தை முழு குடும்பத்திற்குமே உணர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆக, வீடும் சுற்றுப்புறமும் தூய்மையாய் இருப்பது உங்கள் வசதியைப் பொறுத்தல்ல, ஆனால் உங்கள் மனப்பான்மையைப் பொறுத்தே இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். (g05 6/8)
[பக்கம் 20, 21-ன் பெட்டி]
வீட்டைச் சுத்தம் செய்ய நடைமுறையான அட்டவணை
அட்டவணையின் மீதமுள்ள இடத்தில் உங்கள் குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு: க்ளீனிங் பொருட்களை ஒன்றோடொன்று கலப்பது ரொம்ப ரொம்ப ஆபத்தாக இருக்கலாம். முக்கியமாக ப்ளீச்சுடன் அமோனியாவை கலக்காதீர்கள்
✔தினமும்
❏ பெட்ரூம்: படுக்கையைச் சரிசெய்யுங்கள்; ரூமை ஒழுங்குபடுத்துங்கள்
❏ கிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். திட்டுகளையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்
❏ பாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்
❏ ஹாலும் மற்ற ரூம்களும்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள், அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்யுங்கள்
❏ வீடு முழுவதும்: குப்பைகளை அகற்றுங்கள்
✔ வாரம் ஒரு முறை
❏ பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்
❏ கிச்சன்: ஸ்டவ்வையும், திட்டின் மேல் வைக்கப்படும் மிக்ஸி போன்ற சாதனங்களையும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்கையும் சுத்தம் செய்யுங்கள். தரையைத் துடைத்து சுத்தம் செய்யுங்கள்
❏ பாத்ரூம்: சுவர்கள், வாஷ் பேஸின் போன்றவற்றைக் கழுவிவிடுங்கள். டாய்லெட்டையும், ஷெல்ஃபையும், மற்ற இடங்களையும் சுத்தம் செய்வதற்குக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். டவல்களைத் துவையுங்கள். தரையைப் கூட்டிவிட்டுத் துடையுங்கள்
✔ மாதம் ஒரு முறை
❏ பாத்ரூம்: சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவிவிடுங்கள்
❏ வீடு முழுவதும்: கதவு நிலைகளைச் சுத்தம் செய்யுங்கள். சோஃபாவை வாக்யூம் செய்யுங்கள், அல்லது நன்கு தூசிதட்டி விடுங்கள்
❏ தோட்டம், முற்றம், கார் ஷெட்: தேவைப்பட்டால் கூட்டி சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்
✔ ஆறு மாதத்திற்கு ஒரு முறை
❏ பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை, தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி துவையுங்கள்
❏ கிச்சன்: ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்
❏ பாத்ரூம்: ஷெல்ஃபுகளையும் டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடுங்கள்
❏ வீடு முழுவதும்: லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்
✔வருடம் ஒரு முறை
❏ பெட்ரூம்: துணிகளையும் மற்ற பொருட்களையும் வைக்கும் ஷெல்ஃபுகளைக் காலி செய்துவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை கழித்துக்கட்டுங்கள். கம்பளங்களைத் துவையுங்கள். மெத்தைகளை வாக்யூம் செய்யுங்கள் அல்லது நன்கு தூசிதட்டி சுத்தம் செய்யுங்கள். தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி தலையணைகளைச் சுத்தம் செய்யுங்கள்
❏ கிச்சன்: ஷெல்ஃபுகள், கப்போர்டுகள், டிராயர்கள் இவற்றையெல்லாம் காலி செய்துவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத பொருட்களை அகற்றி விடுங்கள். ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை நகர்த்தி வைத்து தரையைச் சுத்தம் செய்யுங்கள்
❏ வீடு முழுவதும்: எல்லாச் சுவர்களையும் நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். குஷன்களையும் ஸ்கிரீன்களையும் தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி சுத்தம் செய்யுங்கள்
❏ கார் ஷெட் அல்லது ஸ்டோர் ரூம்கள்: மூலைமுடுக்கெல்லாம் கூட்டி சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற பொருட்களை ஒழுங்குபடுத்துங்கள் அல்லது பிறரிடம் கொடுத்து விடுங்கள்
[பக்கம் 24-ன் படங்கள்]
“பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்”
[பக்கம் 24-ன் படங்கள்]
நீங்கள் உபயோகிக்காத பொருட்களைப் பிறருக்கு கொடுத்துவிடுங்கள்