Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அனைத்து பேரழிவுகளுக்கும் முடிவு விரைவில்!

அனைத்து பேரழிவுகளுக்கும் முடிவு விரைவில்!

அனைத்து பேரழிவுகளுக்கும் முடிவு விரைவில்!

“பிள்ளைகளே, பிள்ளைகளின் பிள்ளைகளே. கேளுங்கள்! . . . இன்றோ நாளையோ இந்த மலை பற்றியெரியப் போகிறது. ஆனால் அது நடப்பதற்கு முன், இப்போது அது பொருமிக் கொண்டிருக்கிறது, உருமிக் கொண்டிருக்கிறது, நிலமும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. புகையையும், மின்னல் ஒளியையும், தீ ஜுவாலைகளையும் அது கக்கிக் கொண்டிருக்கிறது; காற்று அதிர்கிறது, இரைகிறது, ஓலமிடுகிறது. எனவே, எவ்வளவு தூரத்திற்கு முடியுமோ அவ்வளவு தூரத்திற்குத் தப்பியோடுங்கள். . . . இந்த எரிமலை விடுக்கும் எச்சரிப்புகளை நீங்கள் அசட்டை செய்தால், உயிரைவிட சொத்துபத்துகளை அதிகமாக நேசித்தால், உங்கள் உயிரையே அது பறித்துவிடும். உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் பற்றிக் கவலைப்படாதீர்கள், மறுயோசனையின்றி சீக்கிரமாக ஓடிப்போங்கள்.”

இத்தாலியில் உள்ள வெசுவியஸ் என்ற மலை அடிவாரத்திலிருந்த போர்டீச்சீ என்ற ஊரில் காணப்படும் ஒரு நினைவுப் பலகையில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளே இவை; இந்த எச்சரிப்பு 1631-⁠ல் அந்த வெசுவியஸ் எரிமலை வெடித்த பிறகு பொறிக்கப்பட்டது; ஆன்ட்ரூ ராபின்ஸன் என்பவர் பூமி திடுக்கிடுகிறது (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த எரிமலை வெடிப்பில் 4,000-⁠த்திற்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. “1631-⁠ல் நடந்த இந்த வெடிப்புக்குப் பின்னர் . . . வெசுவியஸ் மிகவும் பிரபலமடைந்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று” என்கிறார் ராபின்ஸன். எப்படி? போர்டீச்சீ ஊர் புதுப்பிக்கப்பட்டதால்தான் ஹெர்குலேனியம் என்ற நகரமும், பாம்ப்பே என்ற நகரமும் கண்டுபிடிக்கப்பட்டன. வெசுவியஸ் எரிமலை பொ.ச. 79-⁠ல் வெடித்தபோது இவ்விரு நகரங்களும் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போயிருந்தன.

நடந்த அந்தப் பேரழிவின்போது தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர்தான் இளைய ப்ளைனி; ரோம குடிமகனாகிய இவர் பிற்பாடு ஓர் ஆளுநராக ஆனவர்; வழக்கத்திற்கு மாறாக இருந்த நிலநடுக்க எச்சரிப்புகளைக் குறித்து எழுதியது இவர்தான். இவரும், இவருடைய தாயாரும், மற்றவர்களும் அந்த எச்சரிப்புகளுக்குச் செவிகொடுத்து உயிர்தப்பினார்கள்.

நம்முடைய காலத்திற்கான எச்சரிப்பு அடையாளம்

இவ்வுலகிலுள்ள பொருளாதார, சமுதாய, அரசியல் அமைப்புகளுக்கு முடிவு வெகு விரைவில் வரப்போகிறது. அது நமக்கு எப்படித் தெரியும்? கடவுள் கணக்குத் தீர்க்கப்போகிற நாள் வெகு அருகில் இருக்கிறது என்பதைக் காட்ட அடுத்தடுத்து நிகழப்போகும் உலகச் சம்பவங்களை இயேசு கிறிஸ்து ஓர் அடையாளமாக முன்னறிவித்ததால் அது நமக்குத் தெரியும். ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன் எப்படிப் பொருமுகிறதோ, புகைகிறதோ, தணலைக் கக்குகிறதோ, அப்படியே பெரிய போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவை இயேசு கொடுத்த அந்தக் கூட்டு அடையாளத்தின் பாகமாக, 1914 முதற்கொண்டு வரலாறு காணாத அளவுக்கு இவ்வுலகை நாசப்படுத்தி வந்திருக்கின்றன.​—மத்தேயு 24:3-8; லூக்கா 21:10, 11; வெளிப்படுத்துதல் 6:1-8.

ஆனாலும், அந்தக் கூட்டு அடையாளத்தில் நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியையும் இயேசு சொன்னார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 24:14) ராஜ்ய செய்தியை “சுவிசேஷம்,” அதாவது நற்செய்தி என்று இயேசு அழைத்ததைக் கவனியுங்கள். ஆம், அது உண்மையிலேயே ஒரு நற்செய்திதான், ஏனெனில் கடவுளுடைய ராஜ்யம், அதாவது கிறிஸ்து இயேசுவை ராஜாவாகக் கொண்ட பரலோக அரசாங்கம், மனிதர்கள் உண்டாக்கியுள்ள எல்லாவித தீங்குகளையும் சரிசெய்யும். அதோடு, இயற்கைப் பேரழிவுகள் அனைத்திற்கும் முடிவுகட்டும்.​—லூக்கா 4:43; வெளிப்படுத்துதல் 21:3, 4.

சொல்லப்போனால், இயேசு பூமியிலிருக்கும்போதே இயற்கை சக்திகள் மீது தமக்கு அதிகாரம் இருப்பதைக் காட்டினார், ஆம், ஆபத்துமிக்க புயல்காற்றை அவர் அடக்கினார். பயந்துபோன அவருடைய சீஷர்கள், “இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று ஒருவருக்கொருவர் பிரமிப்புடன் பேசிக்கொண்டார்கள். (லூக்கா 8:22-25) இன்று, இயேசு ஒரு சாதாரண மனிதராக இல்லை, வல்லமைமிக்க ஆவி நபராக இருக்கிறார். எனவே, இயற்கை சக்திகள் தம்முடைய குடிமக்களுக்கு எந்தத் தீங்கும் விளைவித்து விடாதபடிக்கு அவற்றைக் கட்டுப்படுத்துவது அவருக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல!​—சங்கீதம் 2:6-9; வெளிப்படுத்துதல் 11:15.

இது எல்லாம் எங்கே நடக்கப் போகிறதெனச் சிலர் நினைக்கலாம். ஆனால், மனிதர்களின் வாக்குறுதிகளையோ கணிப்புகளையோ போல் அல்லாமல், பைபிளிலுள்ள எல்லாத் தீர்க்கதரிசனங்களும்​—⁠1914 முதற்கொண்டு நிறைவேறி வருகிற தீர்க்கதரிசனங்களும் உட்பட​—⁠ஒன்றுவிடாமல் நிறைவேறியிருக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். (ஏசாயா 46:10; 55:10, 11) ஆம், எதிர்காலத்தில் பூமி அமைதிப் பூங்காவாக மாறப்போவது உறுதி. கடவுளுடைய வார்த்தையை நாம் மனதார ஏற்றுக்கொண்டு, உலகை உலுக்கும் சம்பவங்களைக் குறித்து அது கொடுக்கும் அன்பான எச்சரிப்புகளுக்குச் செவி சாய்த்தோமென்றால், நமக்கும்கூட அமைதியான எதிர்காலம் கிடைப்பது உறுதி.​—மத்தேயு 24:42, 44; யோவான் 17:3. (g05 7/22)

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

இறந்துபோன நம் பிரியமானவர்களுக்கான நம்பிக்கை என்ன?

நமக்குப் பிரியமானவர்கள் யாராவது இறந்துபோகும்போது, துக்கத்தில் நாம் ஒரேயடியாக மூழ்கிப்போய் விடலாம். தம்முடைய நெருங்கிய நண்பரான லாசரு இறந்தபோது இயேசு கண்ணீர்விட்டு அழுததாக பைபிள் சொல்கிறது. என்றாலும், சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரமிப்பூட்டும் ஓர் அற்புதத்தை அவர் நிகழ்த்தினார்​—⁠லாசருவை உயிரோடு எழுப்பினார்! (யோவான் 11:32-44) அவ்வாறு செய்வதன் மூலம், “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்டு . . . எழுந்திருக்கும் காலம் வரும்” என்று தான் அளித்த மகத்தான வாக்குறுதியின் பேரில் எல்லா மனிதர்களும் திடமான நம்பிக்கை வைப்பதற்கான ஆதாரத்தை அளித்தார். (யோவான் 5:28, 29) பரதீஸ் பூமியில் வாழ்வதற்கு இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்ற அருமையான நம்பிக்கை, பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களை மரணத்தில் இழந்து தவிக்கும் எல்லாருக்கும் ஆறுதலளிப்பதாக!​—⁠அப்போஸ்தலர் 24:15.

[பக்கம் 10-ன் படங்கள்]

தற்போதைய உலகம் கடைசி நாட்களில் இருக்கிறது என்ற எச்சரிக்கைக்குக் கவனம் செலுத்துகிறீர்களா?

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

USGS, David A. Johnston, Cascades Volcano Observatory