இயற்கைப் பேரழிவுகளும் மனித நடவடிக்கைகளும்
இயற்கைப் பேரழிவுகளும் மனித நடவடிக்கைகளும்
நல்ல நிலையிலுள்ள ஒரு காரில் பயணம் செய்வது நமக்குப் பாதுகாப்பாய் இருக்கலாம். ஆனால் அந்த கார் சரிவர பராமரிக்கப்படாமல் அசட்டையாக விடப்பட்டால், அதில் செல்வது உயிருக்கே ஆபத்தாகிவிடலாம். சில அம்சங்களில், இந்தப் பூமியைக் குறித்தும் அவ்வாறே சொல்லலாம்.
மனித நடவடிக்கைகளால் பூமியின் வளிமண்டலத்திலும் சமுத்திரங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நம்முடைய கிரகத்தை ஆபத்துமிக்க இடமாக ஆக்கியிருக்கின்றன, முன்பைவிட மிக அடிக்கடியும் மிகப் பயங்கரமான விதத்திலும் இயற்கைப் பேரழிவுகளை உண்டாக்கியிருக்கின்றன—நிறைய விஞ்ஞானிகளுடைய கருத்து இது. அப்படியானால், எதிர்காலம்?! ஒன்றும் சொல்வதற்கில்லை. “நம்முடைய நடவடிக்கைகளால் இந்தப் பூமியில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கணிக்கவே முடியாத நிலையில் இருக்கிறோம்” என விஞ்ஞானம் என்ற ஆங்கில பத்திரிகையில் சீதோஷ்ண மாற்றங்களைப் பற்றி வெளிவந்த தலையங்கக் கட்டுரை ஒன்று சொன்னது.
மனித நடவடிக்கைகள் எவ்வாறு இயற்கைப் பேரழிவுகளின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் அதிகரிக்கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, அத்தகைய இயற்கை நிகழ்வுகள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் இன்னுமதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, சூறாவளி போன்ற பயங்கரமான புயல்கள் ஏன் உருவாகின்றன?
கிரகத்தின் வெப்ப பரிமாற்ற ‘இயந்திரங்கள்’
சூரிய வெப்பத்தை ஆற்றலாக மாற்றி அதைப் பரப்புகிற ஓர் இயந்திரத்திற்கு இப்பூமியின் சீதோஷ்ண நிலை a பூமியின் அன்றாட சுழற்சியின் காரணமாக நகர்ந்துகொண்டே இருக்கும் ஈரப்பதமுள்ள இந்தக் காற்று சுழல்காற்றாக உருவாகிறது, சில இடங்களில் அது குறைந்தழுத்தக் காற்று மண்டலமாக உருவாகிறது. பிறகு, இந்தக் குறைந்தழுத்தக் காற்று மண்டலம் புயலாக மாறலாம்.
ஒப்பிடப்படுகிறது. வெப்பமண்டலப் பகுதிகளில் சூரிய வெப்பம் மிக மிக அதிகமாக இருப்பதால், தட்பவெப்பத்தில் சமநிலை இல்லாமல் போகிறது, இதனால் காற்று இடம்பெயர ஆரம்பிக்கிறது.வெப்பமண்டல புயல்கள் பொதுவாக எந்தத் திசையில் நகர்ந்து செல்கின்றன என்பதை ஆராய்ந்தீர்கள் என்றால், அவை பூமியின் நிலநடுக்கோட்டை விட்டு, வட புறமாகவோ தென் புறமாகவோ குளிர் பிரதேசங்களை நோக்கிச் செல்வதையே கவனிப்பீர்கள். இதன் மூலம் புயல்கள் வெப்ப பரிமாற்றம் செய்கிற மிகப் பெரிய ‘இயந்திரங்கள்’ போல் செயல்பட்டு, சீதோஷ்ணத்தைச் சமநிலைப்படுத்துகின்றன. ஆனால், சீதோஷ்ணம் என்ற இயந்திரத்தின் ‘பாய்லர் ரூம்’ போலிருக்கும் சமுத்திரத்தின் மேல்மட்டத்திலுள்ள தட்பவெப்ப நிலை சுமார் 27 டிகிரி செல்சியஸையும் கடந்துவிடும்போது, வெப்பமண்டல புயல்கள் சுழல்காற்றாகவோ, சூறாவளியாகவோ மாறும் அளவுக்குச் சக்தி பெற்றுவிடுகின்றன.
1900-ம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று, டெக்ஸஸ் மாகாணத்தின் கால்வஸ்டன் தீவை ஒரு சூறாவளி தாக்கியதுதான் அமெரிக்க சரித்திரத்திலேயே நடந்த படுமோசமான, அதாவது மிக அதிகமானோரைக் கொன்று குவித்த இயற்கைப் பேரழிவாகும். அந்தச் சூறாவளியின்போது எழுந்த கடல் அலைகள், அங்கு வசித்தவர்களில் 6,000 முதல் 8,000 பேரை இழுத்துச் சென்றன, பக்கத்து ஊர்களிலிருந்த ஏறக்குறைய 4,000 பேரையும் வாரிக்கொண்டுபோயின, அதோடு சுமார் 3,600 வீடுகளைப் பாழாக்கின. சொல்லப்போனால், கால்வஸ்டன் தீவிலிருந்த எந்தவொரு கட்டடமும் அதன் கோரப் பிடியிலிருந்து தப்பவில்லை.
சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி, சமீப ஆண்டுகளில் படுபயங்கரப் புயல்கள் ஏராளமான முறை தாக்கியிருக்கின்றன. இதற்கு புவிச்சூடேற்றம் காரணமாக இருக்குமோ என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்; புவிச்சூடேற்றத்தினால் ஒருவேளை இத்தகைய புயல்கள் அதிக தீவிரமடையலாம். என்றாலும், சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவிச்சூடேற்றத்தின் ஒரு விளைவு மட்டுமே. அதன் மற்றொரு ஆபத்தான விளைவு ஏற்கெனவே தெளிவாகத் தெரிகிறது.
கடல்மட்டத்தின் உயர்வும் காடுகளின் அழிவும்
“கடந்த நூறு ஆண்டுகளில், கடல்மட்டம் 10-லிருந்து 20 சென்ட்டிமீட்டர் வரை [நான்கிலிருந்து எட்டு அங்குலம் வரை] உயர்ந்திருக்கிறது; வருங்காலத்தில் அது இன்னுமதிகமாக உயரும் என நாம் எதிர்பார்க்கலாம்” என்று விஞ்ஞானம் பத்திரிகையில் வெளிவந்த தலையங்கக் கட்டுரை ஒன்று சொன்னது. புவிச்சூடேற்றத்தினால்தான் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என நாம் எப்படிச் சொல்ல முடியும்? இரண்டு காரணங்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு காரணம், துருவப் பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டிகளும் பனிப் பாறைகளும் உருகுவதாகும்; இதனால் கடல்நீரின் கன அளவு அதிகரிக்கலாம். இரண்டாவது காரணம், வெப்ப விரிவடைவு, அதாவது கடல்நீர் சூடாகும்போது, அதன் கன அளவு அதிகரிப்பதாகும்.
கடல்மட்டம் உயர்ந்து வருவதை பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலூ என்ற குட்டித் தீவுகளில் வசிப்போர் ஏற்கெனவே உணர்ந்திருக்கலாம். அங்கே கடல்மட்டம் “கடந்த பத்து ஆண்டுகளில் வருடத்திற்குச் சராசரியாக 5.6 மில்லிமீட்டர் அளவு உயர்ந்து வருவதை’’ புனாஃபுடி என்ற தீவுகளின் வட்டப்பவழத் திட்டுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் காண்பிப்பதாக ஸ்மித்ஸோனியன் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.
உலகிலுள்ள ஏராளமான இடங்களில் ஜனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க, கிராமப்புறங்கள் நகரங்களாக மாறிவருவதும் அதிகரிக்கிறது, குடிசைவாழ் பகுதியும் அதிகரிக்கிறது, சுற்றுச்சூழல் சீரழிவும் அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்புகள் இயற்கைப் பேரழிவுகளின் தீவிரத்தை ஒருவேளை பெரிதுபடுத்தலாம். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
ஹெய்டி என்ற தீவின் ஜனத்தொகை வெகு அதிகம், அதுமட்டுமல்ல, அங்கு காடுகள் அழிக்கப்படுவதும் அதிகம்.
அத்தேசத்தில் பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்சினைகளெல்லாம் படுமோசமாக இருந்தாலும், காடுகள் அழிக்கப்படும் பிரச்சினைதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறதென சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி அறிக்கை தெரிவித்தது. இந்த அச்சுறுத்தல் 2004-ம் ஆண்டு பயங்கரமான ரூபமெடுத்தது; அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக நிலச் சரிவுகள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள்.டைம் என்ற ஆசிய பத்திரிகை குறிப்பிடுகிறபடி, “புவிச்சூடேற்றம் அடைதல், அணைகளைக் கட்டுதல், காடுகளை அழித்தல், மரங்களை எரித்துவிட்டு பயிர்செய்தல்” ஆகியவை தென் ஆசியாவில் இயற்கைப் பேரழிவுகள் மிக அதிகளவில் நடைபெற காரணமாக இருந்திருக்கின்றன. அது ஒரு பக்கமென்றால், காடுகளை அழித்து நிலத்தை விரைவாகவே வறண்டுபோகச் செய்வது இன்னொரு பக்கமாகும்; இது வறட்சியை மேலும் மோசமாக்கி விடலாம். பொதுவாக இந்தோனேஷியாவிலும் பிரேஸிலிலும் உள்ள காடுகள் ரொம்பவே ஈரப்பதத்தோடு இருக்கும்; ஆனால் சமீப ஆண்டுகளில், வறட்சியின் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத் தீ அங்கிருந்த காடுகளையெல்லாம் பொசுக்கித் தள்ளியிருக்கிறது. என்றாலும், இயற்கைப் பேரழிவுகளுக்குக் கடுமையான சீதோஷ்ண நிலை மட்டுமே காரணமல்ல. பல நாடுகளில், பூமிக்கு அடியில் நடக்கும் சில காரியங்களும் அதற்குக் காரணமாக இருக்கின்றன.
பயங்கர நிலநடுக்கம் ஏற்படுகையில்
பூமியின் மேலோடு வெவ்வேறு அளவுகளை உடைய தட்டுகளால் ஆனது; அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு நகருகின்றன. சொல்லப்போனால், இந்த மேலோட்டில் மிக அதிகளவில் அசைவுகள் இருப்பதால், ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான தடவை பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் ஏற்படுவதால் கவனிக்கப்படாமலே போய்விடுகின்றன.
புவியோட்டிலுள்ள பிளவுகளில் இருக்கும் தட்டுகளின் எல்லைகளில்தான் சுமார் 90 சதவீத பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில சமயம், படுபயங்கர அதிர்வுகள் அந்தத் தட்டுகளுக்குள்ளும் நடைபெறுகின்றன, ஆனால் அவை வெகு அபூர்வமே. 1556-ம் ஆண்டில் சீனாவிலிருந்த மூன்று மாகாணங்களை உலுக்கித் தள்ளிய பூமியதிர்ச்சிதான் பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிக மிகக் கொடியதாக இருந்தது. கிட்டத்தட்ட 8,30,000 பேர் அதில் கொல்லப்பட்டிருக்கலாம்!
பூமியதிர்ச்சிகளுக்குப் பின்விளைவுகளும் இருக்கலாம், அந்தப் பின்விளைவுகள் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம். உதாரணத்திற்கு, 2,75,000 பேர் வசித்துவந்த போர்ச்சுகலிலுள்ள லிஸ்பனில் நவம்பர் 1, 1755-ம் ஆண்டு ஏற்பட்ட பூமியதிர்ச்சி அந்நகரத்தையே தரைமட்டமாக்கியது. ஆனால், அந்தக் கோரம் அத்துடன் நின்றுவிடவில்லை.
பூமியதிர்ச்சியின் விளைவாக பல இடங்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன, அதோடு அருகிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து ஏறக்குறைய 50 அடி உயர சுனாமி அலைகள் சீற்றத்துடன் எழும்பி வந்தன. மொத்தத்தில், சாவு எண்ணிக்கை 60,000-த்தையும் தாண்டியது.என்றாலும், இந்தளவு பயங்கரமான பேரழிவுக்கும்கூட, மனித நடவடிக்கைகள் ஓரளவு பொறுப்பேற்க வேண்டும். ஒரு காரணம், ஆபத்துமிக்க அப்பகுதிகளில் ஜனத்தொகை அதிகமாக இருந்தது. “நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ள இடங்களில்தான் உலகிலுள்ள சுமார் ஐம்பது சதவீத பெரிய நகரங்கள் அமைந்திருக்கின்றன” என்கிறார் ஆன்ட்ரூ ராபின்ஸன் என்ற நூலாசிரியர். மற்றொரு காரணம் கட்டிடங்கள், முக்கியமாக, அவற்றின் கட்டுமானப் பொருள்களும் கட்டமைப்பின் தரமும் ஆகும். “பூமியதிர்ச்சிகள் மக்களைக் கொல்வதில்லை; கட்டடங்களே அவர்களைக் கொல்கின்றன” என்று ஒரு முதுமொழி சொல்கிறது, இது உண்மை என்றே பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூமியதிர்ச்சியைத் தாக்குப்பிடிக்கும் விதத்தில் வீடுகளைக் கட்டுவதற்கு ஜனங்களிடம் பணமில்லை என்றால், அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
எரிமலைகள்—கட்டுகின்றன, அழிக்கின்றன
“இந்த வார்த்தைகளை இப்போது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே குறைந்தது 20 எரிமலைகளாவது வெடித்துக் கொண்டிருக்கலாம்” என அமெரிக்காவிலுள்ள ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. பொதுவாகச் சொன்னால், பூமியதிர்ச்சிகளும் எரிமலை வெடிப்புகளும் ஒரேமாதிரியான இடங்களில்தான் நடைபெறும், அதாவது கடலடியிலுள்ள பிளவுகளிலும், புவியோட்டிலுள்ள பிளவுகளிலும் (இந்தப் பிளவுகளின் ஆழத்திலிருந்தே கற்குழம்பு மேலே வருகிறது), நில அடுக்கு இறக்கமுள்ள இடங்களிலும்தான் (ஒரு தட்டு மற்றொன்றோடு இடித்துக்கொண்டு உள்ளே செல்கிற இடங்களில்) நடைபெறும் என தட்டு கட்டமைப்பியல் (plate tectonics) என்ற கோட்பாடு சொல்கிறது.
நில அடுக்கு இறக்கமுள்ள இடங்களில் ஏற்படுகிற எரிமலைகள்தான் ஜனங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன, ஏனெனில் அவை ஏராளமான முறை வெடிக்கின்றன, அதோடு குடியிருப்புப் பகுதிகள் அருகே அவை வெடிக்கின்றன. பசிபிக் கடலிலும் கடலோரப் பகுதிகளிலும் (இப்பகுதிகள் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகின்றன) அத்தகைய எரிமலைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. தட்டுகளின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள மைய இடங்களிலும் அத்தகைய எரிமலைகள் சில இருக்கின்றன. ஹவாய் தீவுகள், ஏஸார்ஸ், காலாபகோஸ் தீவுகள், சொஸைட்டி தீவுகள் ஆகியவை இத்தகைய எரிமலை வெடிப்புகளிலிருந்தே பிறந்திருப்பதாகத் தெரிகிறது.
உண்மையில் பார்த்தால், எரிமலைகள் பூமியின் சரித்திரத்தில் வெகு காலமாகப் பயனுள்ள விதத்தில் பங்கு வகித்திருக்கின்றன. பூமியிலுள்ள கிட்டத்தட்ட “90 சதவீத கண்டங்களும் சமுத்திரப் பள்ளத்தாக்குகளும் எரிமலை வெடிப்புகளாலேயே உருவாகியிருக்கின்றன” என்று ஒரு பல்கலைக்கழக வெப் ஸைட் சொல்கிறது. ஆனால், சில எரிமலைகள் பயங்கர ஆக்ரோஷத்துடன் ஏன் வெடிக்கின்றன?
பூமியின் ஆழத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் கற்குழம்பு மேலே எழும்பும்போது எரிமலைகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன. சில எரிமலைகள், அந்த அக்கினிக் குழம்பை மெதுவாகக் கசிய விடுகின்றன, இதனால் மக்களை பெரும்பாலும் அவை திடுக்கிட வைப்பதில்லை. மற்ற எரிமலைகளோ ஓர் அணுகுண்டைவிட அதிக வீரியத்துடன் வெடித்துச் சிதறுகின்றன. இதற்குக் காரணம், எரிமலையை வெடிக்க வைக்கிற கற்குழம்பின் கலவையும் அதன் பசைத்தன்மையும், அதில் கலந்துள்ள பெருமளவான வாயுக்களும், கொதிநீரும் ஆகும். கற்குழம்பு மேற்பரப்பை நெருங்கும்போது, அதிலுள்ள நீரும் வாயுக்களும் படுவேகமாக விரிவடைகின்றன. ஒரு சோடா பாட்டிலைத் திறக்கும்போது, சோடா “புஸ்ஸென்று” எப்படி வெளியே வருகிறதோ, அப்படியே கற்குழம்பின் கலவை ஏற்ற நிலையை அடையும்போது எரிமலையிலிருந்து அது வெடித்து வெளியே வருகிறது.
ஆனால் நல்ல வேளையாக, வெடிப்பதற்கு முன்னரே அந்த எரிமலைகள் எச்சரிப்பு கொடுத்துவிடுகின்றன. 1902-ல், கரிபியன் கடலிலுள்ள மார்டினிக் தீவில் வெடித்த மௌன்ட் பிலே எனும் எரிமலையின் விஷயத்தில் அதுதான் நடந்தது. அந்த எரிமலைக்கு அருகிலிருந்த நகரமான செ. பியெரியில் அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது, அதனால் ஜனங்களை அங்கேயே தங்கும்படி அரசியல்வாதிகள் ஊக்கப்படுத்தினார்கள்; அந்த எரிமலை, சாம்பலைக் கக்கிக் கொண்டிருந்த போதிலும், வியாதியும் பயமும் அந்நகரத்தைப் பீடித்திருந்த போதிலும் ஜனங்களை அங்கிருந்து போக வேண்டாமென ஊக்கப்படுத்தினார்கள். சொல்லப்போனால், பெரும்பாலான கடைகள்கூட நாட்கணக்காக மூடப்பட்டு இருந்தன!
இயேசு பரலோகத்திற்குச் சென்ற நாளாகக் கருதப்படுகிற மே 8-ம் தேதியன்று, அங்கிருந்த அநேக கத்தோலிக்கர்கள் தங்கள் சர்ச்சுக்குப் போய், எரிமலையிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஜெபித்தார்கள். அதே காலையில், 8:00 மணிக்குச் சற்று முன், மெளன்ட் பிலே வீறுகொண்டு வெடித்தது; 200-லிருந்து 500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் அனல் பறக்கும் சாம்பலையும், தணலையும், கருங்கற்களையும், படிகத்தையும், மிகச் சூடான வாயுக்களையும் கக்கித் தள்ளியது. அதிலிருந்து வந்த அபாயகரமான கருத்த புகை மண்டலம் மலையிலிருந்து வேகமாகப் பரவி, முழு நகரத்தையும் மூழ்கடித்தது; ஏறக்குறைய 30,000 பேரைக் கொன்றுபோட்டது, சர்ச் மணியை உருக்கியது, துறைமுகத்திலிருந்த கப்பல்களை எரித்து நாசமாக்கியது. 20-ம் நூற்றாண்டிலேயே அதுதான் மிக மிகக் கொடிய எரிமலை வெடிப்பாக இருந்தது. ஆனால், அந்த எரிமலை கொடுத்த எச்சரிப்புகளுக்கு ஜனங்கள் செவிகொடுத்திருந்தால் இந்தளவுக்கு நாசம் ஏற்பட்டிருக்காது.
இயற்கைப் பேரழிவுகள் அதிகரிக்குமா?
நிலவியல் மற்றும் சீதோஷ்ணம் சம்பந்தப்பட்ட பேரழிவுகள் கடந்த பத்தாண்டில் 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருப்பதாய் செஞ்சிலுவை, செம்பிறை சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் வெளியிட்ட 2004 உலகப் பேரழிவுகள் அறிக்கை (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. “வெகு காலத்திற்கு இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை இது காட்டுகிறது” என அந்த அறிக்கை சொல்கிறது; டிசம்பர் 26 அன்று, இந்தியப் பெருங்கடலில் சீறியெழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாக்குதலுக்கு முன்னர் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அபாயகரமான இடங்களில் ஜனத்தொகை அதிகமானால், காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டால், எதிர்காலத்தில் நல்ல நிலைமை வருமென்றே எதிர்பார்க்க முடியாது.
அதுமட்டுமல்ல, தொழில்மயமாக்கப்பட்ட அநேக நாடுகள் பசுங்கூட வாயுக்களை அதிகமதிகமாக காற்றிலே கலக்கச் செய்கின்றன. இப்படிக் காற்றில் கலக்கப்படுகிற வாயுக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவது, “அதிகரித்து வருகிற ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கொடுக்க மறுப்பதைப் போல் இருக்கிறது: இதனால் அதிகப்படியான பிரச்சினைகளை நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும்” என விஞ்ஞானம் பத்திரிகையிலுள்ள தலையங்கக் கட்டுரை ஒன்று கூறியது. பேரழிவைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி கனடா நாட்டிலிருந்து வந்த ஓர் அறிக்கை குறிப்பிடுகையில், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் இவ்வாறு சுட்டிக்காட்டியது: “சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுதான் மனித சமுதாயம் முழுவதுமே ஒன்றுபட்டு எதிர்ப்பட வேண்டிய மிகப் பெரிய பிரச்சினை, மிகப் பரவலாக இருக்கும் பிரச்சினை, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பிரச்சினை.”
என்றாலும், புவிச்சூடேற்றத்திற்கு மனித நடவடிக்கைகள் காரணமா இல்லையா என்பதன் பேரில் இந்த உலக சமுதாயத்தால் ஒருமித்த முடிவுக்குக்கூட வர முடியவில்லை, பிறகு எங்கே அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியும்? இந்த நிலைமை பைபிளிலுள்ள ஓர் உண்மையை நினைவுபடுத்துகிறது: ‘தன் நடைகளை நடத்துவது மனுஷனாலே ஆகிறதல்ல.’ (எரேமியா 10:23) என்றாலும், அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறபடி, நிலைமை இப்படியே இருந்துவிடப் போவதில்லை. உண்மையில், மனித சமுதாயத்திலுள்ள கொந்தளிப்பான நிலைமைகள் உட்பட, தற்கால பிரச்சினைகள் அனைத்துமே, நம்முடைய மீட்பு சமீபம் என்பதற்குக் கூடுதலான அத்தாட்சிகளையே அளிக்கின்றன. (g05 7/22)
[அடிக்குறிப்பு]
a சூரிய வெப்பம் பூமியில் சரிசமமாக இல்லாதிருப்பது, கடலில் நீரோட்டத்தை உண்டாக்கி, குளிர் பிரதேசங்களிடமாக வெப்பத்தைக் கடத்துகிறது.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
சோளக்காட்டில் ‘வளர்ந்த’ எரிமலை
1943-ல், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோள விவசாயி ஒருவர் தன்னுடைய வயலில் சோளத்தோடு வேறொன்றும் ‘வளர்ந்ததை’ பார்த்தார். ஒருநாள், தன் வயல் நிலத்தில் விரிசல்கள், அதாவது வெடிப்புகள் உண்டாவதைப் பார்த்தார். மறுநாள், அந்த வெடிப்புகள் ஒரு சிறிய எரிமலையாக ‘வளர்ந்திருந்தன.’ ஒரு வாரம் கழித்து, அந்தச் சிறிய குன்று 150 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்திருந்தது! ஒரு வருடம் கழித்து, அது 360 மீட்டராக ‘வளர்ந்திருந்தது.’ கடல் மட்டத்திலிருந்து 2,775 மீட்டர் உயரத்திலுள்ள அந்தக் குன்று கடைசியில் 430 மீட்டரை எட்டியது. பாரீகூட்டீன் என்று அழைக்கப்பட்ட அந்த எரிமலை 1952-லிருந்து வெடிப்பதை திடீரென நிறுத்திவிட்டது, இன்னமும்கூட அது அப்படியே அமைதியாக இருக்கிறது.
[படத்திற்கான நன்றி]
U. S. Geological Survey/Photo by R. E. Wilcox
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
பேரழிவிலிருந்து தேசங்களைக் கடவுள் காப்பாற்றியபோது
பஞ்சம் என்பது ஒருவகையான இயற்கைப் பேரழிவே. பதிவு செய்யப்பட்ட பண்டைய கால பஞ்சங்களில் ஒன்று, யாக்கோபின், அதாவது இஸ்ரவேலின் மகனான யோசேப்புடைய காலத்தின்போது பூர்வ எகிப்தில் நிலவிய பஞ்சமாகும். அந்தப் பஞ்சம் ஏழு வருடங்கள் நீடித்தது; எகிப்து, கானான், மற்றும் வேறுசில நாடுகளையும் அது பாதித்தது. ஆனால், முழு நாடுமே பட்டினியில் வாடவில்லை, ஏனெனில் அந்தப் பஞ்சத்தைக் குறித்து யெகோவா ஏழு வருடங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தார். அந்த ஏழு வருடங்களிலே, எகிப்தில் அபரிமிதமான விளைச்சல் இருக்கும் என்றும்கூட அவர் முன்னறிவித்திருந்தார். கடவுளுடைய வழிநடத்துதலில் பிரதம மந்திரியாகவும் உணவு நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்ட தேவபயமுள்ள யோசேப்பின் மேற்பார்வையில், எகிப்தியர்கள் “அளவுக்கு அடங்காத” தானியத்தைச் சேகரித்தார்கள். இதனால், எகிப்து தேசத்தாருக்கு மட்டுமல்ல, யோசேப்பின் குடும்பத்தார் உட்பட, ‘சகல தேசத்தாருக்கும்’ எகிப்தில் உணவு இருந்தது.—ஆதியாகமம் 41:49, 57; 47:11, 12.
[பக்கம் 7-ன் படங்கள்]
ஹெய்டி 2004 வெள்ளம் பெருக்கெடுக்கிற வீதிகளில், சிறுவர்கள் குடிநீரைச் சுமந்து செல்லும் காட்சி. காடுகள் படுவேகமாக அழிக்கப்பட்டு வந்ததால் மிகப் பெரியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன
[படங்களுக்கான நன்றி]
பின்னணி: Sophia Pris/EPA/Sipa Press; உள்படம்: Carl Juste/Miami Herald/Sipa Press
[பக்கம் 9-ன் படம்]
அநேக நாடுகள் பசுங்கூட வாயுக்களைக் காற்றிலே கலக்கின்றன
[படத்திற்கான நன்றி]
© Mark Henley/Panos Pictures