இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்து வருகின்றனவா?
இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்து வருகின்றனவா?
“சீதோஷ்ண மாற்றங்களால் நிகழ்கிற அசாதாரண சம்பவங்கள் எதிர்காலத்தில் படுமோசமான பாதிப்புகளை உண்டாக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். அப்படியானால், புதுவிதமான இயற்கை அபாயங்களும் மாபெரும் இழப்புகளும் நேரிடப் போகின்றன, அதற்கு நாம் தயாராய் இருக்க வேண்டும். . . . வருமுன் காப்பது மேல் என்பதால், நிகழப்போகிற திடீர் மாற்றங்களைச் சந்திக்க நாம் ஆயத்தமாக இருப்பது நல்லது.” “டாபிக்ஸ் ஜீயோ—வருடாந்தர மறுபார்வை; இயற்கை நாசங்கள் 2003.” (ஆங்கிலம்)
ஐரோப்பாவின் சில பாகங்கள் 2003-ம் வருடத்தின் கோடை வெயிலில் வெகுவாகப் புழுங்கிக் கொண்டிருந்தன. அனல் பறக்கும் வெயிலினால் இத்தாலி, நெதர்லாந்து, பிரான்சு, பிரிட்டன், பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஏறக்குறைய 30,000 பேர் உயிரிழந்தார்கள். இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் பருவமழை தொடங்குவதற்கு முன் வீசிய அனல் காற்று 1,500 பேரின் உயிரைச் சூறையாடியது. வறட்சியும் வரலாறு காணாத உஷ்ணமும் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை உசுப்பிவிட்டதால், எழுபது லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள காடுகள் சாம்பலாயின.
உலக வானிலை ஆராய்ச்சி நிறுவன அறிக்கையின்படி, “அட்லாண்டிக் சூறாவளி வீசும் காலப்பகுதியில், 2003-ல், 16 சுழல்காற்றுகள் உருவாயின. இது, 1944-96-ம் வருடங்களின்போது இருந்த 9.8 என்ற சராசரி எண்ணிக்கையைவிட மிக அதிகம், ஆனால் 1990-களின் மத்திபத்திலிருந்து வருடா வருடம் ஏற்பட்ட சுழல்காற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்குச் சமமாக உள்ளது.” 2004-ம் வருடத்திலும் சுழல்காற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தது; அந்த வருடத்தில், சூறாவளிப் புயல்காற்று கரீபியன் தீவையும், மெக்ஸிகோ வளைகுடாவையும் சின்னாபின்னமாக்கி, சுமார் 2,000 உயிர்களைப் பலிவாங்கியது.
2003-ல், பலத்த புயல்காற்று இலங்கையைத் தாக்கி, பெரு வெள்ளத்தை ஏற்படுத்தியது, விளைவு—குறைந்தது 250 பேர் இறந்துபோனார்கள். 2004-ல், மேற்கு பசிபிக் கடலில் குறைந்தது 23 கடும் புயல்கள் உருவாயின. அவற்றில் பத்து, ஜப்பானை தாக்கின; இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டது, சாவு எண்ணிக்கை 170-ஐயும் தாண்டியது. தென் ஆசியாவில், குறிப்பாக வங்காள தேசத்தில் பலத்த பருவ
மழையினால் உண்டான வெள்ளத்தில் கிட்டத்தட்ட 3 கோடி பேர் பாதிக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கானோர் வீடுவாசலை இழந்தார்கள், ஏறக்குறைய முப்பது லட்சம் பேர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து போக வேண்டியிருந்தது, 1,300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள்.2003-ம் வருடத்தின்போது பலமுறை பயங்கரமான பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டன. அல்ஜீரியாவிலுள்ள அல்ஜீயர்ஸ் நகரத்தில் மே 21 அன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 10,000 பேர் காயமடைந்தார்கள், 2,00,000 பேர் வீடுவாசலை இழந்து தவித்தார்கள். டிசம்பர் 26-ம் தேதியன்று காலை 5:26-க்கு, ஈரான் நாட்டிலுள்ள பாம் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தெற்கே பூமி பயங்கரமாக அதிர்ந்தது. அதிர்வின் அளவு 6.5-ஆக இருந்தது; இதனால் அந்நகரின் 70 சதவீதம் பாழாய்ப் போனது, 40,000 உயிர்கள் பறிபோயின, 1,00,000-க்கும் அதிகமானோர் வீடுகளில்லாமல் நடுத்தெருவில் நின்றார்கள். அந்த வருடத்தின் மிகக் கொடிய இயற்கைப் பேரழிவாக அது இருந்தது. அதுமட்டுமல்ல, அந்நகரத்திலிருந்த ஆர்கேபாம் என்ற 2,000 ஆண்டுகால கோட்டை ஒன்று அடையாளம் தெரியாதபடி நாசமானது; சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்த அந்த முக்கிய இடம் அழிந்ததால் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருவாய் குறைந்துபோனது.
மிகச் சரியாக ஒரு வருடம் கழித்து, இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவின் வடபகுதியைச் சேர்ந்த மேற்குக் கரையோரத்திற்குச் சற்றுத் தொலைவில், 9.0 என்ற அதிர்வளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சரித்திரத்திலேயே இதுவரை நடந்திராத படுபயங்கர சுனாமி அலைகளை உண்டாக்கியது. அந்தக் கொலைகார அலைகள் 2,00,000-க்கும் அதிகமான உயிர்களைப் பறித்தன, ஏராளமானோரைக் காயப்படுத்தின, வீடுகளை அபகரித்துச் சென்றன, இன்னும் அநேகர் காயமும் அடைந்தனர், வீடுகளையும் இழந்தனர். ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளும்கூட, அதாவது நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 4,500-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்திலிருந்த பகுதிகளும்கூட, சுனாமியின் கொடூரப் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாயின.
பேரழிவுகள் மேலும் தொடருமா?
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் காரியங்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றனவா? மனிதர்களுடைய நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் உண்டாகும் மாற்றங்கள்தான் உலக சீதோஷ்ண நிலை மாறுபடுவதற்கும் மோசமான சீதோஷ்ண நிலை உருவாவதற்கும் காரணம் என்று அநேக விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். இது உண்மையென்றால், மனிதர்களுடைய எதிர்காலம் ஆபத்தானதாகவே இருக்கும். போதாக்குறைக்கு, அதிகமதிகமான மக்கள் தாங்களாக இஷ்டப்பட்டு அல்லது வேறு வழியில்லாமல் அழிவு ஏற்படுவதற்கான அதிக சாத்தியமுள்ள இடங்களில் இப்போது வாழ்ந்து வருகிறார்கள்.
பேரழிவுகளின்போது உண்டாகும் சாவுகளில் 95 சதவீதம், வளர்ந்துவருகிற நாடுகளில் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. மறுபட்சத்தில், பணக்கார நாடுகளில் சாவு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பொருளாதார நஷ்டங்களில் 75 சதவீதம் அங்கேதான் ஏற்படுகின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் சில, இவ்வாறு ஏற்படும் பெருத்த நஷ்டங்களை ஈடுகட்ட தங்களிடம் போதிய பணம் இருக்குமா என்றும்கூட யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன.
பேரழிவுகளுக்குக் காரணமாயுள்ள இயற்கை மாற்றங்கள் சிலவற்றைப் பற்றியும், அத்தகைய பேரழிவுகளின் தீவிரத்தை அதிகப்படுத்துகிற மனித நடவடிக்கைகள் பற்றியும் அடுத்த கட்டுரையில் ஆராய்வோம். அதோடு, வருங்கால சந்ததியினர் இந்தப் பூமியில் பாதுகாப்பாக வாழ்வதற்கு வேண்டிய மாற்றங்களைச் செய்ய மனிதர்களுக்கு இப்போது திறமும் மனமும் இருக்கிறதா என்று சிந்திப்போம். (g05 7/22)
[பக்கம் 3-ன் படம்]
பிரான்ஸ் 2003 ஐரோப்பாவில் கோடை கால அனல் காற்று வீசியதில் 30,000 பேர் உயிரிழந்தார்கள்; ஸ்பெயினில் 44.8 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது
[படத்திற்கான நன்றி]
Alfred/EPA/Sipa Press
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
ஈரான் 2003 பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பம் 40,000 உயிர்களைப் பலிவாங்கியது; பிணங்கள் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்படும் இடத்தில் பெண்கள் தங்கள் சொந்தபந்தங்களுக்காக அழுது புலம்புகிறார்கள்
[படத்திற்கான நன்றி]
பின்னணியும் பெண்களும்: © Tim Dirven/Panos Pictures