உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
இசையை ரசிக்கும் மழலைகள்
“குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பே இசையைக் கேட்டு புரிந்துகொள்ளும் சிறப்புத் திறனைப் பெற்றிருக்கிறார்கள்” என சொல்கிறது சைன்டிஃபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகை. குழந்தைகள் இசையின் ஒலிகளில் ஏற்படும் மாற்றத்தை மட்டுமல்ல அதன் வேகத்திலும் சந்தத்திலும் ஏற்படும் மாற்றங்களைக்கூட கண்டுபிடித்துவிடுகிறார்கள் என அந்த அறிக்கை சொல்கிறது. ஒரே மெட்டை வித்தியாசமான ஸ்வரங்களில் இசைத்தாலும்கூட அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இரண்டு மாத இளம் தளிர்கள், இனிமையான இசையில் பிரியப்படுகிறார்கள், கர்ணகடூரமான இசையில் அல்ல. “இன்னும் இரண்டு வாரங்களில் பிறக்கப் போகிற சிசுக்கள், அம்மாக்கள் தினமும் கேட்டு வந்த [பிரபல] டிவி ஷோவின் பாடலுக்கும் புதிதாகக் கேட்ட வேறொரு பாடலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொண்டதாக பெல்ஃபாஸ்ட் மாகாணத்திலுள்ள க்வீன்ஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பீட்டர் ஹெப்பர் என்பவர் கண்டுபிடித்தார்” என அந்தப் பத்திரிகை அறிக்கை செய்கிறது. (g05 6/22)
காரில் கலாட்டா—ஆபத்து
பெர்லினர் மார்கன்பாஸ்ட் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்தபடி, “கார் பயணிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது” என ஜெர்மனியின் தொழில்நுட்ப மேற்பார்வை சங்கம் TÜV எச்சரிக்கிறது. இல்லாவிட்டால், “டிரைவர்கள் தங்களை அறியாமலே முரட்டுத்தனமாக ஓட்ட ஆரம்பித்துவிடலாம், அது ஒருவேளை விபத்தில் போய் முடியலாம்.” அந்தக் கட்டுரையின்படி, காரில் “சண்டை” ஆரம்பமாகையில், எங்கும் ஒதுங்கிப் போக முடியாததால் நிலைமை மோசமாகலாம். எனவே கார் பயணிகள் கோபத்தைக் கிளறும் விஷயங்களைப் பற்றி பேசாதிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; இல்லாவிட்டால் அது கண்டிப்பாக வாய் சண்டையில் போய் முடியும். கார் பயணிகள் அனைவரும், ஒரே இலட்சியத்தைக் கொண்ட குழுவினராகத் தங்களைக் கருத வேண்டும். “முன் இருக்கையில் அமருபவர் வழிகாட்டுவதிலும், ரேடியோவை இயக்குவதிலும், கடினமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதிலும் எப்படியெல்லாம் உதவலாம் என்பதைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்” என அந்தக் கட்டுரை அறிவுரை கூறுகிறது. (g05 6/22)
திருமண மோசடி
3,000-க்கும் அதிகமான தென் ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் “திருமண” மோசடிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என அறிக்கை செய்கிறது ஜோஹெனஸ்பர்க்கில் வெளியாகும் செய்தித்தாளான சோவேடன். அப்படிப்பட்ட ஒரு மோசடியில், பெண்கள் வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக நினைத்துக்கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அது திருமண சான்றிதழாகும். இந்தச் சான்றிதழ், அயல்நாட்டு “மணமகனை” அந்நாட்டின் நிரந்தர பிரஜையாக ஆவதற்குத் தகுதி பெற செய்கிறது. அந்த “மணமகள்,” தான் இழந்துவிட்ட அடையாள ஆவணங்களை மாற்றுவதற்கு செல்லும்போதுதான் தனக்கு வேறொரு குடும்பப் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதை அறிகிறாள்; அல்லது, நிஜமான திருமணத்தைப் பதிவு செய்ய செல்லும்போதுதான் ஏற்கெனவே திருமணமாகிவிட்டதாகப் பதிவாகியிருப்பதைத் தெரிந்துகொள்கிறாள்! இத்தகைய “திருமணங்களை” ரத்து செய்வது சிக்கலானதாக இருக்கலாம். ஆனாலும், இவ்வாறு தங்களுக்கே தெரியாமல் நடந்த திருமணங்களை ரத்து செய்வதில் சுமார் 2,000 பெண்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்த மோசடியைத் தடுப்பதற்கு ஒரு புதிய சட்டம் போடப்பட்டிருக்கிறது; அதன்படி, அயல்நாட்டிலிருந்து வந்து மணம் செய்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிரந்தர பிரஜை உரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். (g05 5/22)
சூரியனும் கர்ப்பிணிகளும்
“கர்ப்பிணிகளில் பெருவாரியானோர் அவர்களுடைய பிறவாக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு விட்டமின் டி குறைபாடுடன் இருப்பது கவலை தரும் விஷயம் என ஓர் ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது” என்று ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சன்-ஹெரால்டு செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. விட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளின் கால்கள் வளைந்து போகலாம்; அதோடு, அவர்களுக்கு காக்காய் வலிப்பும், ரிக்கெட்ஸ் என்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோயும்கூட வரலாம். சிட்னியிலுள்ள செ. ஜார்ஜ் ஹாஸ்பிட்டலில் 1,000 கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், “வெளுத்த தோலுள்ள 10 பேரில் ஒருவருக்கும், கருத்த தோலுள்ள ஐந்து பேரில் ஒருவருக்கும் விட்டமின் டி குறைபாடு இருந்தது” தெரிய வந்தது. இந்தப் பிரச்சினைக்கு வெகு எளிய பரிகாரம் இருக்கிறது. மனிதர்களின் தோல்மீது இளவெயில் படும்போது அவர்களுக்குத் தேவைப்படும் சுமார் 90 சதவீத விட்டமின் டி தயாரிக்கப்படுகிறது. “பெரும்பாலான பெண்களைப் பொறுத்ததில், போதுமானளவு விட்டமின் டி-ஐப் பெறுவதற்குத் தினமும் சுமார் 10 நிமிடங்களோ வாரத்தில் ஒரு மணிநேரமோ சூரிய ஒளி தங்கள் மீது படும்படி பார்த்துக்கொண்டாலே போதும்” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. (g05 6/22)
கிருமிகளைப் பற்றிய கவலையா?
“கிருமிகளை வீட்டிலிருந்து அறவே ஒழித்துக்கட்டும் லட்சியம் அபத்தமானது மட்டுமல்ல, அது பெரும்பாலும் வீணானதும்கூட” என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. “உங்கள் வீட்டில் ரொம்ப வயதானவரோ, (6 மாதம்கூட ஆகாத) குழந்தையோ, படுத்த படுக்கையாக கிடப்பவரோ இருந்தால் மட்டும்தான் கவனம் தேவை; மற்றபடி, சமையல் மேடைமீது, கதவு பிடியில், அல்லது ஸ்பூனில் வெறும் நூற்றுக்கணக்கில் உள்ள பாக்டீரியாக்களால்” உங்கள் ஆரோக்கியத்துக்கு “ஆபத்து ஒன்றும் வராது.” கெட்டுப் போகும் தன்மையுள்ள உணவை மணிக்கணக்காக அப்படியே வைக்கும்போது அதில் பாக்டீரியா பெருகி, நஞ்சூட்டிவிடுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு, அப்படிப்பட்ட உணவுப் பதார்த்தங்களை ஃபிரிஜ்ஜில் வையுங்கள். உங்களைப் பாக்டீரியாவிடமிருந்து காத்துக் கொள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. “ஒரு நாளைக்கு பல தடவை சோப்புப் போட்டு கைகளைக் கழுவிக்கொண்டாலே போதும்” என்று சொல்கிறது அந்தச் செய்தித்தாள். (g05 7/8)
நினைவாற்றல் அதிகரிக்க, வாசியுங்கள்
நிறைய ஞாபக சக்தி வேண்டும், என்ன செய்வது? “அற்புதமாக கிடைத்துவிடுமென நினைத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதுதான் அதற்கு வழி” என சொல்கிறது ஃபோல்யா ஆன்லைன் என்ற பிரேசில் நாட்டு செய்தித்தாள். உங்கள் மூளையை ஊக்குவிக்க சிறந்த வழிகளில் ஒன்று வாசிப்பதுதான். அதெப்படி? இவான் இஸ்க்யேர்டோ என்ற நரம்பியல் நிபுணர் இவ்வாறு சொல்கிறார்: “ஒருவர் ‘மரம்’ என்ற வார்த்தையை வாசித்து முடித்த மாத்திரத்தில், அதுவரை அவர் தெரிந்து வைத்திருக்கும் எல்லா மரங்களும் மனதில் ஓடி மறைகின்றன; அதுவும், நொடியை நூறாகப் பிரிக்கையில் கிடைக்கும் ஒரு பகுதி நேரத்திற்குள் அவ்வாறு ஓடி மறைகின்றன.” “இதெல்லாம் எவ்வித தூண்டுதலும் இல்லாமல் தானாகவே நடக்கின்றன” என அவர் சொல்கிறார். இதுபோன்ற வேலையை மனதுக்குக் கொடுக்கும்போது, அல்ஸைமர் போன்ற நோய்களால் நம் மூளை பாதிக்கப்படாதிருக்கும் என அவர் நம்புகிறார். “நம் ஞாபக சக்தியை எந்தளவுக்கு உபயோகிக்கிறோமோ அந்தளவுக்கு அதைப் பாதுகாப்போம்” என்று பிரேசிலில், சாவோ பாலோ மாகாணத்திலுள்ள ரிசர்ச் சென்டர் ஃபார் மெமரி டிஸார்டர்ஸ் எனும் அமைப்பைச் சேர்ந்த வாக்னர் காடாஸ் என்ற நரம்பியல் நிபுணர் சொல்கிறார். (g05 7/8)
அதிகரித்து வரும் செல் போன் செய்திகள்
“செல் போன் வாயிலாக உலகெங்கும் வருடத்திற்கு 36,000 கோடிக்கும் அதிகமான செய்திகள் அனுப்பப்படுகின்றன” என இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “சராசரியாக, ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 100 கோடி சுருக்க செய்திகள் அனுப்பப்படுகின்றன.” சுருக்க செய்தி சேவை அல்லது SMS என்பது இப்போது அதிக பயனுள்ளதாக ஆகிவருகிறது. அதிகமதிகமான கம்பெனிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய செல் போன்களில் செய்திகளை அனுப்புகின்றன. அதுமட்டுமல்ல, மக்கள் போப்புடைய ஜெபங்களை செல் போன் வாயிலாக தவறாமல் பெற்றுக்கொள்ள ‘சந்தா’ செய்ய முடியும். நெதர்லாந்திலுள்ள போலீஸார், திருட்டு செல் போன்களுக்கு SMS செய்து அவை திருடப்பட்டவை என்பதைத் தெரிவிப்பதன் மூலம் வாங்க வருபவர்களை எச்சரிக்கிறார்கள். மேலும், மூன்று முறை “விவாகரத்து செய்கிறேன்” என்று சொல்வதன் மூலம் விவாகரத்து பெற மத சட்டம் இடமளிக்கும் சில நாடுகள், அத்தகைய செய்தியை SMS செய்ய அதிகாரப்பூர்வ அனுமதி அளித்திருக்கின்றன. (g05 7/8)
பொம்மைகளின் இரைச்சல்—ஜாக்கிரதை!
“பொம்மைகளின் இரைச்சலால் இம்சைக்குள்ளாகும் இளசுகள்” என்ற தலைப்புச் செய்தி டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் வெளியாகியது. “மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்பட்ட 40 பொம்மைகளை ஆராய்ந்ததில் குறைந்தது 25 பொம்மைகளாவது பிள்ளைகளின் காதுகளைப் பாதிக்குமளவுக்கு இரைச்சல் மிக்கவையாக இருந்தன”; இதை, கனடாவைச் சேர்ந்த காது நிபுணர்களின் ஆய்வுக்குழு ஒன்று கண்டுபிடித்ததாக அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. பொம்மை செல் போனில் எழும் உச்சளவான ஒலி 115 டெசிபல்களாகப் பதிவாகியது. காது நிபுணரான ரிச்சர்ட் லாராக் தெரிவிக்கிறபடி, அந்த ஒலி அளவு “ஜெட் பிளேனின் இரைச்சலைவிட குறைவானது என்றாலும் பெரும்பாலான டிஸ்கோ கிளப்புகளில் எழும் இரைச்சலைவிட அதிகமானதாக” இருக்கிறது. ஹெல்த் கனடா நிறுவனம் தற்போது அனுமதிக்கிற அளவு 100 டெசிபல்களாகும். “30 நிமிடங்களுக்கு 87 டெசிபல்கள் என்ற அளவில் இரைச்சல் இருந்தால் அது காதுகளைப் பாதிக்காது” என அந்த ஆய்வு தெரிவித்ததாகக் கட்டுரை குறிப்பிட்டது. (g05 7/22)