Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

தப்பெண்ணம் “தப்பெண்ணம் அடியோடு ஒழியுமா?” (அக்டோபர் 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. அவற்றை வாசித்தபோது, தப்பெண்ணத்தோடு இருப்பவர்களைப் பார்த்தாலே பிடிக்காத என்னிடமே ஓரளவு தப்பெண்ணம் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தேன். என்ன வேடிக்கை! இந்தப் பத்திரிகை எனக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

எம். யூ., ஐக்கிய மாகாணங்கள்

சொந்த நாட்டைவிட்டு வெகு தொலைவில் வேறொரு நாட்டில் வாழ்ந்து வந்தாலும் நான் தப்பெண்ணத்திற்கு ஆளாகவில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அதற்கு ஆளாகியிருப்பவர்களுக்காக அனுதாபப்பட இந்தத் தொடர் கட்டுரைகள் எனக்கு உதவியிருக்கின்றன. சீக்கிரத்தில் யெகோவா இந்தப் பிரச்சினையை அடியோடு ஒழிக்கப் போகிறார் என்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!

டி. ஜி., நார்வே

தப்பெண்ணம் பற்றிய பிரச்சினையை அலசி ஆராய்வதன் மூலம் மக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வதற்கு என் பாராட்டுக்கள். ஆனால் 8-⁠ம், 9-⁠ம் பக்கங்களில் உள்ளதை வைத்துப் பார்க்கையில், நீங்களே வேறுபாடு காட்டுவது போல் தோன்றுகிறது. இரண்டு யூத வழிப்போக்கர்கள், அடிபட்டுக் கிடந்த ஒருவனுக்கு உதவ மனமில்லாமல் சென்றதாக அங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஏன் யூதர்களை மட்டும் குத்திக் காட்டுகிறீர்கள்?

எச். எச்., ஐக்கிய மாகாணங்கள் (g05 6/22)

“விழித்தெழு!” பதில்: யூதராக இருந்த இயேசுதான், நல்ல சமாரியனைப் பற்றிய இந்தக் கதையைச் சொன்னார். இயேசுவின் நாட்களில் இருந்த யூதர்களில் பலருக்கு சமாரியர்களைப் பற்றிய தப்பெண்ணம் இருந்தது. எனவே பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் நல்ல அயலானாக இருக்க முடியும் என்பதைக் காட்டுவதன் மூலம் இயேசு யூதர்களுக்கு மதிப்புமிக்க பாடத்தைப் புகட்டினார்.

இளைஞர்கள் எனக்கு 15 வயதாகிறது, என் மத நம்பிக்கைகளைப் பற்றி ஆசிரியர்களிடமும் தோழர்களிடமும் நான் அடிக்கடி பேசுவேன். “தங்கள் விசுவாசத்தைப் பற்றி தைரியமாக பேசும் இளைஞர்கள்” (அக்டோபர் 8, 2004) என்ற கட்டுரையில் சொல்லியிருந்தது முழுக்க முழுக்க சரி; பள்ளியில் சாட்சிகொடுப்பது உண்மையிலேயே பாதுகாப்பை அளிக்கிறது. இதுபோன்ற அருமையான கட்டுரைகளைத் தவறாமல் வெளியிடுங்கள்!

ஆர். பி., ஜெர்மனி (g05 6/22)

மனநோய் “நீங்கள் நேசிக்கிற ஒருவருக்கு மனநோய் இருக்கையில்” (அக்டோபர் 8, 2004) என்ற கட்டுரைக்கு நன்றி தெரிவிக்கிறேன். வருடக்கணக்காக என் அம்மா மனநோயால் அவதிப்படுகிறார்கள். அதைச் சமாளிப்பதற்கு உதவியை நாடும்படி அவரை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும், இப்படி நாடுவதில் வெட்கப்பட எதுவும் இல்லை என்றும் இப்போது புரிந்துகொண்டேன்.

எம். பி., உக்ரைன்

எனக்கு 16 வயதுதான் ஆகிறதென்றாலும் பல வருடங்களாக மனச்சோர்வின் பிடியில் சிக்கித் தவிக்கிறேன். அப்படிக் கஷ்டப்படும்போது சமாளிப்பதற்கு உதவும் பயனுள்ள கட்டுரையைப் பிரசுரித்ததற்காகக் கோடானுகோடி நன்றி. இக்கட்டுரையால் என்னைப் போல் இன்னும் எத்தனையோ பேர் நிச்சயம் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.

கே. ஜே., ஜெர்மனி

இதுபோன்ற கட்டுரைகளைப் பிரசுரித்துக்கொண்டே இருங்கள்! அதிக பொறுமையாகவும் அன்பாகவும் இருப்பதற்கும் தேவையான உதவியைப் பெறுவதற்கும் அவை எங்கள் அனைவருக்கும் உதவுகின்றன. இத்தகைய கொடிய வியாதியே இல்லாத கடவுளுடைய புதிய உலகில் வாழ்வதற்கு எவ்வளவாய் ஏங்குகிறோம்!

கே. எஃப்., ஐக்கிய மாகாணங்கள் (g05 6/22)

வெண் படை நோய் “வெண் படை நோய் என்றால் என்ன?” (அக்டோபர் 8, 2004) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நோய் என்னை பீடித்திருக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் வெளியிட்டதிலிருந்து இதை இன்னும் நன்கு சமாளிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவர் மீதும் ஆழ்ந்த கரிசனை காட்டும் கிறிஸ்தவ அமைப்பில் இருப்பதற்கு ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்!

சி. ஹெச்., ஜெர்மனி

கடந்த 25 வருடங்களாக வெண் படை நோயால் அவதிப்படுகிறேன். நான் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேர் என்னைப் போலவே மனதுக்குள் துவண்டு போயிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டது ரொம்பவே ஆறுதலாக இருந்தது. இந்த நோயைப் பற்றி பலருக்கும் தவறான கருத்து இருக்கிறது, ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தால் அவர்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த நோயைப் பற்றி எழுதியதற்காக ரொம்ப ரொம்ப நன்றி!

கே. எஸ்., ஜப்பான் (g05 7/8)