Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜன்தர் மந்தர் தொலைநோக்கிகள் இல்லா வானியல் ஆய்வுக்கூடம்

ஜன்தர் மந்தர் தொலைநோக்கிகள் இல்லா வானியல் ஆய்வுக்கூடம்

ஜன்தர் மந்தர் தொலைநோக்கிகள் இல்லா வானியல் ஆய்வுக்கூடம்

இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

புது டில்லியிலிருக்கும் ஜன்தர் மந்தரைப் பார்க்க செல்கிறவர்கள், ‘நிஜமாகவே இது ஒரு வானியல் ஆய்வுக்கூடம்தானா?’ என்று அங்குள்ள கட்டட அமைப்புகளைப் பார்த்து வியப்புடன் கேட்கக்கூடும். நவீன ஆய்வுக்கூடங்களில் வானாராய்ச்சி சார்ந்த உயர்-தொழில்நுட்ப கருவிகள் ஏகமாய் இருப்பதைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு, ஒரு பெரிய பூங்காவில் கல்லால் கட்டப்பட்ட இந்த விசித்திரமான கட்டட அமைப்புகள் ஒரு ஆய்வுக்கூடமாகவே தெரிவதில்லை. ஆனால், 18-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜன்தர் மந்தர் கட்டப்பட்டபோது அது ஓர் ஆய்வுக்கூடம் போல்தான் இருந்தது. ஐரோப்பாவில் உருவமைக்கப்பட்ட தொலைநோக்கியும், அது போன்ற வேறு கருவிகள் எதுவும் ஜன்தர் மந்தரில் அப்போது இல்லாதிருந்தபோதிலும் வான் கோளங்களைப் பற்றி ஓரளவு விரிவான, அதோடு துல்லியமான தகவல்களை அந்த ஆய்வுக்கூடம் அளித்தது. இதுவே அதனுடைய சிறப்பாக இருந்தது.

ராஜபுத்திர மஹாராஜா இரண்டாம் சவைய் ஜெய்சிங், ஐந்து வானியல் ஆய்வுக்கூடங்களைக் கட்டினார். அவற்றில் மூன்றுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பெயர்தான் ஜன்தர் மந்தர். இப்பெயர் “யன்த்ரா” மற்றும் “மந்த்ரா” என்னும் சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து பிறந்தது; “யன்த்ரா” என்பதன் அர்த்தம், “கருவி.” “மந்த்ரா” என்பதன் அர்த்தம் “சூத்திரம்.” பேச்சு வழக்கில் அழுத்தத்திற்காக ஒரேவிதமாக தொனிக்கும் சொல்லைப் பயன்படுத்தும் பழக்கத்தால் ஜன்தர் மந்தர் என்ற பெயர் வந்தது.

1910-⁠ல் புது டில்லியில், ஜன்தர் மந்தரிலுள்ள ஒரு கருவியின் மீது ஒரு பெயர்ப்பலகை பொருத்தப்பட்டது. அதில் அந்த ஆய்வுக்கூடம் 1710-⁠ல் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. என்றாலும் 1724-⁠ல்தான் அது கட்டிமுடிக்கப்பட்டதாக பிற்பாடு நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலிருந்து தெரியவருகிறது. இந்தத் தேதியே உண்மையென்பதற்கு ஜெய்சிங்கின் வாழ்க்கை வரலாறு சான்றளிப்பதை நாம் பார்க்கப் போகிறோம். அதற்கு முன், இந்த ஆய்வுக்கூடத்தின் கருவிகளை ஒரு நோட்டமிடலாம் வாருங்கள்; உலகிலுள்ள இவ்வகையான ஆய்வுக்கூடங்களில் இதுவே மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.

கற்கட்டடங்களே கருவிகளாக

ஆய்வுக்கூடத்தில் நான்கு வித்தியாசமான கற்கட்டட அமைப்புகள் கருவிகளாக இருக்கின்றன. அதில் மிகச் சிறந்தது சாம்ராட் யன்த்ரா அல்லது உன்னத கருவி​—⁠இது, “அடிப்படையில் சரிசம மணிநேர சூரிய கடிகாரம் (equal-hour sundial).” இது ஜெய்சிங்கின் மிக முக்கியமான படைப்பு. இது, முக்கோண வடிவிலான ஒரு பெரிய கற்கட்டடம். இதன் உயரம் 21.3 மீட்டர், நீளம் 34.6 மீட்டர், அகலம் 3.2 மீட்டர். அதன் 39 மீட்டர் நீளமான கர்ணம் (hypotenuse) பூமியின் அச்சுக்கு இணையாக (parallel) இருக்கிறது, அதேசமயம் வடதுருவத்தை (North Pole) நோக்கியபடி இருக்கிறது. இந்த முக்கோணத்தின் இருபுறத்திலும் கால்வட்ட வடிவிலான அமைப்புகள் உள்ளன. அவற்றிலுள்ள குறியீடுகள் மணிநேரத்தையும், நிமிடத்தையும், வினாடியையும் சுட்டிக்காட்டுகின்றன. நேரத்தைக் காட்டும் சாதாரண சூரியக் கடிகாரங்கள் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்து வந்தபோதிலும் அந்த சாதாரண கருவியையே ஜெய்சிங் நுணுக்கமான கருவியாக மாற்றியமைத்தார். அதாவது வான்கோள்களின் பக்கச் சாய்வுகளையும் (declination) அவற்றோடு சம்பந்தப்பட்ட மற்ற குறியீட்டு புள்ளிகளையும் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தினார்.

ஆய்வுக்கூடத்தில் இருந்த மற்ற மூன்று கட்டட அமைப்புகள், ராம், ஜெயபிரகாஷ், மற்றும் மிஷ்ர யன்த்ராக்கள் ஆகும். அவை, சூரிய, நட்சத்திரங்களின் பக்கச் சாய்வு (declination), உயரம் (altitude), திசைக்கோணம் (azimuth) ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் விதத்தில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. சொல்லப்போனால், உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நகரங்களின் நண்பகல் வேளையை மிஷ்ர கருவி காட்டியது.

மிஷ்ர கருவியைத் தவிர மேற்குறிப்பிடப்பட்டுள்ள எல்லா கருவிகளுமே ஜெய்சிங்கின் படைப்புகளாகும். அப்போது இந்தியாவிலிருந்த கருவிகளிலேயே மிகவும் சிக்கலானதாகவும் நடைமுறையானதாகவும் நுணுக்கமானதாகவும் இருந்தவை ஜெய்சிங்கின் கருவிகளே ஆகும். அவை, திருத்தமான பஞ்சாங்கங்களும் வானியல் அட்டவணைகளும் தோன்ற வழிவகுத்தன. அந்தக் கருவிகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் நளினமாகவும் இருந்தன, அதோடு முக்கியமான தகவல்களைக் கண்டுபிடிக்க உதவின. ஆனால் தொலைநோக்கியும், மற்ற புதுப்புது படைப்புகளும் தோன்றியபோது அவை பழைய மாடல்களாகிவிட்டன. அப்படியென்றால் புத்திக்கூர்மையும் திறமையும் பெற்ற அந்த மாமேதை, ஐரோப்பாவில் கிடைத்த கருவிகளை, ஒரு தொலைநோக்கியைக்கூட ஏன் தன்னுடைய வானியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தவில்லை? மஹாராஜாவின் பின்னணியும் அந்தக் காலத்தின் வரலாறும் அதற்கான பதிலை அளிக்கின்றன.

‘கணித அறிவியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்தவர்’

ஜெய்சிங் 1688-⁠ல் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பிறந்தார். காச்சாவஹா ராஜபுத்திர இனத்தின் தலைநகரான அம்பரில் அவருடைய அப்பா மஹாராஜாவாக இருந்தார். அவருடைய ஆட்சி டில்லியிலிருந்த மொகலாய மன்னர்களின் ஆட்சிக்கு கீழ்ப்பட்டிருந்தது. இளவரசர் ஜெய்சிங், ஹிந்தி மொழி, சமஸ்கிருத மொழி, பெர்சிய மொழி, அரபு மொழி ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருந்தார். அதோடு கணிதத்திலும், வானியலிலும், ஜூடோ, கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார். ஆனால் அவற்றில் ஒரு பாடம் மட்டும் இளவரசருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய காலத்து பிரசுரம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “சவைய் ஜெய்சிங், சுயமாக சிந்திக்க ஆரம்பித்த சமயத்திலிருந்து முதிர்ச்சியை நோக்கி வளரும் சமயம் வரை கணித அறிவியல் (வானியல்) ஆராய்ச்சிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.”

1700-⁠ல் தன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு 11 வயது ஜெய்சிங், அம்பர் நகரத்தின் மஹாராஜாவானார். சீக்கிரத்திலேயே, மொகலாய மாமன்னன், தென் இந்தியாவிலிருந்த தன்னுடைய அரண்மனைக்கு ஜெய்சிங்கை வரச்சொன்னார். அங்கு ஜெய்சிங், ஜெகன்னாத் என்பவரை சந்தித்தார்; இவர் கணிதத்திலும் வானசாஸ்திரத்திலும் புலமை பெற்றவர். பிற்பாடு இவர் ஜெய்சிங்கின் முக்கிய உதவியாளராக ஆனார். 1719-⁠ல் முகமது ஷாவின் ஆட்சி தொடங்கும் வரை இளைய மஹாராஜா ஜெய்சிங்கின் ஆட்சியில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. பிறகு தலைநகரான டில்லியில் புதிய மொகலாய மன்னருடன் நடக்கவிருந்த கூட்டத்திற்கு வரும்படியாக ஜெய்சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நவம்பர் 1720-⁠ல் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆய்வுக்கூடத்தைக் கட்டுவதற்கு ஜெய்சிங் முன்மொழிந்தார் என்பதுபோல் தெரிகிறது. 1724-⁠ல், அவர் முன்மொழிந்த ஆய்வுக்கூடம் கட்டிமுடிக்கப்பட்டது.

ஆய்வுக்கூடத்தைக் கட்டுவதற்கு மஹாராஜாவைத் தூண்டியது எது? இந்தியாவில் பஞ்சாங்கங்களும் வானியல் அட்டவணைகளும் துல்லியமான தகவல்களை அளிக்காததையும், வானசாஸ்திரம் அவ்வளவாக முன்னேற்றம் அடையாததையும் அவர் உணர்ந்தார். எனவே கண்களுக்கு புலப்பட்ட வான் கோள்களுக்கு ஏற்ப புதிய அட்டவணைகளைத் தயாரிக்க தீர்மானித்தார். வானியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் அது சம்பந்தமான ஆய்வுகளைச் செய்வதற்குக் கருவிகளை உருவாக்க வேண்டும் என்றுகூட ஆசைப்பட்டார். எனவே பிரான்சு, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வரவழைத்தார். இந்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வானியல் அறிஞர்களைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். அதுமட்டுமல்ல வானியல் சம்பந்தமான உண்மைத் தகவல்களைத் திரட்ட குழு ஒன்றை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார்; கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு சென்ற முதல் குழு இதுதான். அதோடு, அங்கிருந்து புத்தகங்களையும் கருவிகளையும் கையோடு எடுத்துவரும்படியாக உத்தரவிட்டார்.

கிழக்கும் மேற்கும் சந்திக்க முடியவில்லை

தொலைநோக்கி, நுண்ணளவி (micrometer), வெர்னியர் (vernier) போன்ற கருவிகள் ஐரோப்பாவில் இருந்தபோதிலும் ஜெய்சிங் ஏன் கல் கட்டடங்களை அமைத்தார்? அதோடு, கோப்பர்நிக்கஸ், கலீலியோ போன்றவர்களின் ஞாயிறு மையக் (heliocentric) கண்டுபிடிப்புகளைப் பற்றி தெரியாததுபோல அவர் நடந்துகொண்டதற்கு காரணமென்ன?

ஒரு காரணம் என்னவென்றால் கிழக்கத்திய மாமேதைகளுக்கும் மேற்கத்திய வானியல் அறிஞர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அது ஒன்றே காரணமல்ல. அந்த சமயத்திலிருந்த மத சூழலும் அதற்கு காரணமாக இருந்தது. பிராமண மேதைகள், கடலைக் கடந்தால் தங்களுடைய ஜாதியிலிருந்தே பிரித்துவைக்கப்படுவார்கள் என்று பயந்து ஐரோப்பாவிற்கு போக மறுத்தார்கள். தகவல் திரட்டுவதில் ஜெய்சிங்கிற்கு முக்கியமாக உதவியவர்கள், ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெஸ்யூட் மாமேதைகள். ஜெய்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வி. என். ஷர்மா குறிப்பிட்டபடி, கலீலியோவும் மற்ற விஞ்ஞானிகளும் நம்பிய கருத்தை, அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதென்ற கருத்தை ஏற்காதிருக்கும்படி ஜெஸ்யூட்டுகளும் கத்தோலிக்க சாமானியர்களும் எச்சரிக்கப்பட்டிருந்தனர்; இல்லையென்றால் ஒடுக்குமுறையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயமுறுத்தப்பட்டனர். அந்தக் கருத்து சர்ச்சின் சமய கோட்பாட்டிற்கு முரணாகவும் நாத்திகமாகவும் கருதப்பட்டது. எனவே ஐரோப்பாவுக்கு ஜெய்சிங் அனுப்பிய ஆட்கள், கோப்பர்நிக்கஸும் கலீலியோவும் எழுதிய புத்தகங்களையும் ஞாயிறு மையக்கருத்தை (heliocentric theories) ஆதரித்த புதிய கருவிகளையும் வாங்கிவராததில் ஆச்சரியமே இல்லை.

தொடரும் வேட்கை

ஜெய்சிங், மதவெறியும் குறுகிய மனப்பான்மையும் ஊறிப்போயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்தார். வானியல் துறையில் அறிவுப்பூர்வமான அபார படைப்புகளை அவர் படைத்திருந்தும் அதற்கு பின்வந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அத்துறை சிறிதளவே முன்னேற்றம் அடைந்தது. இருப்பினும் அறிவுப்பசி கொண்ட ஒரு மனிதனின் முயற்சிகளுக்கு ஜன்தர் மந்தர் ஆய்வுக்கூடம் சான்றாக இருக்கிறது.

ஜெய்சிங், வான் கோளங்களின் நகர்வுகளில் ஆர்வம் காட்டுவதற்கு வெகு காலத்திற்கு முன்னிருந்தே அவரைப் போன்ற பலர், பிரபஞ்சத்தின் அதிசயங்களைப் புரிந்துகொள்ள வானத்தில் தங்கள் கண்களை பதித்தார்கள். கடவுளின் அற்புதமான வேலைப்பாடுகளைப் பற்றி மனிதர்கள் அதிகமதிகமாக கற்றுக்கொள்ள ‘தங்கள் கண்களை தொடர்ந்து [வானத்துக்கு] ஏறெடுத்துப் பார்ப்பார்கள்’ என்பதில் சந்தேகமேயில்லை.​—⁠ஏசாயா 40:26; சங்கீதம் 19:1. (g05 7/8)

[பக்கம் 16-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சாம்ராட் யன்த்ரா நுணுக்கமான ஒரு சூரிய கடிகாரம். இந்த மிகப் பெரிய முக்கோணத்தின் நிழல், குறியீடுகள் உள்ள கால் வட்டத்தின் (வெண்ணிற வட்டத்தைப் பார்க்கவும்) மீது விழுந்தது

[பக்கம் 16-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஜெயபிரகாஷ் யன்த்ரா உட்குழிவுள்ள அரைவட்டங்களைக் கொண்டுள்ளது. உட்குழிவில் குறியீடுகள் இருந்தன. விளிம்பில் குறுக்கும் நெடுக்குமான ஒயர்கள் இருந்தன

ராம் யன்த்ராவின் உட்புறத்திலிருந்து பார்க்கும் ஒருவர் குறியீடுகளை வைத்து அல்லது ஜன்னல் ஓரத்திலிருந்து ஒரு நட்சத்திரத்தின் நிலையைக் கண்டறிய முடியும்

[பக்கம் 16-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மிஷ்ர யன்த்ரா வெவ்வேறு நகரங்களில் நண்பகல் வேளையைக் காட்டியது

[பக்கம் 17-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நேர்கோட்டு தோற்ற முறை வானியலில் மிகப் பழமையான இந்த முறையை ஜெய்சிங் மிகத் துல்லியமானதாக்கினார்

ஒரு நட்சத்திரத்தின் நிலையைக் கண்டுபிடிப்பதற்கு அதன் உயரமும் (வானில் அது எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதும்) திசைக்கோணமும் (அதாவது வடக்கி​லிருந்து எவ்வளவு தூரம் கிழக்கில் இருக்கிறது என்பதும்) தெரிந்திருக்க வேண்டும்

சாம்ராட் யன்த்ராவில் இரண்டு பேருடைய உதவியுடன் ஒரு நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து அதன் நிலையை குறித்து வைக்க முடிந்தது

[படத்திற்கான நன்றி]

கீழே: Reproduced from the book SAWAI JAI SINGH AND HIS ASTRONOMY, published by Motilal Banarsidass Publishers (P) Ltd., Jawahar Nagar Delhi, India

[பக்கம் 17-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இந்தியா

புது டில்லி

மதுரா

ஜெய்பூர்

வாரணாசி

உஜ்ஜயினி

ஜெய்சிங் ஐந்து ஆய்வுக்கூடங்களைக் கட்டினார். புது டில்லியில் இருக்கும் ஆய்வுக்கூடமும் அதில் ஒன்று

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

படம்: Courtesy Roop Kishore Goyal