Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் தவறான ஆட்களிடம் கவரப்படுகிறேன்?

நான் ஏன் தவறான ஆட்களிடம் கவரப்படுகிறேன்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் ஏன் தவறான ஆட்களிடம் கவரப்படுகிறேன்?

“அவனோடு ரொம்ப நெருக்கமா பழகக் கூடாதுன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும் அப்படிப் பழகுவதை நான் நிறுத்தவில்லை. ஒரு ஆண் வந்து என்னோடு பழகுவதை என்னால் நம்பவே முடியவில்லை.”​⁠நான்ஸி. a

“ஸ்கேட்டிங் செய்ற இடத்துக்கு நான் போய்க்கொண்டிருந்தேன், கொஞ்ச நாளைக்குப் பிறகு, அங்குள்ள ‘பிரெண்ட்ஸ்’களோடு பழக ஆரம்பித்தேன். கடைசியில் பார்த்தால், அவர்களுடைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைக்கே நானும் போய்விட்டேன்.”​⁠டேன்.

ஆரம்பத்தில், நான்ஸியும் டேனும் ஆன்மீக காரியங்களில் நல்ல ஆர்வத்துடன்தான் ஈடுபட்டு வந்தார்கள். கடவுள் பயமுள்ள ஒரு வீட்டில் நான்ஸி வளர்ந்து வந்தாள். ஒன்பது வயதாக இருந்தபோதே தனது மதத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தாள். டேன் விஷயத்தில், அவன் டீனேஜ் வயதில் முழுநேர ஊழியத்தில் அடியெடுத்து வைத்தான். ஆனால் இருவருமே ஆன்மீக வாழ்வில் சறுக்க ஆரம்பித்தார்கள். ஏன்? தவறான ஆட்களோடு சகவாசம் வைத்திருந்ததே காரணம்.

உங்கள் மீது தீய செல்வாக்கு செலுத்துகிறார்கள் என உங்களுக்குத் தெரிந்தும் யாரிடமாவது எதிர்பாராத விதத்தில் கவரப்பட்டிருக்கிறீர்களா? அவர்கள் ஒருவேளை உங்களுடைய வகுப்புத் தோழராக இருக்கலாம், அல்லது நீங்கள் காதல் வயப்பட்ட ஒருவராகக்கூட இருக்கலாம்; நீங்கள் அவரோடு சேர்ந்து காரியங்களை செய்திருக்கலாம்.

“கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்” என்ற பைபிள் அறிவுரை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். (1 கொரிந்தியர் 15:33, NW) ஆனால் யெகோவாவை வணங்காத எல்லாரையுமே கெட்ட கூட்டுறவுகள் என சொல்லிவிடலாமா? மெச்சத்தக்க நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்தால்? அதோடு, சக விசுவாசியே ஆன்மீக ரீதியில் மோசமான முன்மாதிரியாக இருந்தால்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்பு, இப்படிப்பட்டவர்களிடம் எப்படி, ஏன் கவர்ச்சி ஏற்படுகிறது என்பதை நாம் சிந்திக்கலாம்.

எது கவர்ச்சியை உண்டாக்குகிறது?

எல்லாருமே கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், யெகோவாவைப் பற்றி தெரியாத ஆட்களும்கூட சிறந்த குணங்களை வெளிக்காட்டலாம். அதனால், உண்மையான கடவுளை வணங்காதபோதிலும், சிலர் மரியாதைக்குரியவர்களாக, ஏன் கவரத்தக்கவர்களாகவும்கூட இருக்கலாம். இப்படிப்பட்ட ஆட்களுக்கு பைபிள் சத்தியங்கள் தெரியாததால் அவர்களை அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமா? இல்லவே இல்லை. “எல்லாருக்கும் நன்மை செய்யுங்கள்” என்று பைபிள் அறிவுரை தரும்போது, உங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் அது உட்படுத்துகிறது. (கலாத்தியர் 6:10) உங்களுடைய நெருங்கிய நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்தான், அதற்காக நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களைப் போல நடந்துகொள்ள வேண்டுமென இது அர்த்தப்படுத்தாது. (நீதிமொழிகள் 8:13; கலாத்தியர் 6:3) இத்தகைய நடத்தை உங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளைத்தான் மோசமானவையாக எடுத்துக்காட்டும்.

கிறிஸ்தவ இளைஞர்கள் பழகுவதற்கு நல்லவர்களாக இருக்க வேண்டும்தான். ஆனால் சிலர் அதற்கும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார்கள். அதாவது, ஆன்மீக காரியங்கள் மீது அதிக ஆர்வம் இல்லாத அல்லது துளிகூட ஆர்வமே காட்டாத ஆட்களிடம் நெருங்கிய பந்தத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட டேன் ‘ஸ்கேட்டிங்’கில் கில்லாடி ஆனான். ஸ்கேட்டிங் செய்யும் இடத்திலிருந்த ஆட்களிடம் தினமும் பழக ஆரம்பித்தான், ஆனால் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் அல்ல. கடைசியில், டேன் தனது புதிய “பிரெண்ட்ஸ்”களோடு சேர்ந்துகொண்டான்; ஒழுக்கங்கெட்ட நடத்தையிலும் போதைப் பொருட்களை உபயோகிப்பதிலும் ஈடுபட ஆரம்பித்தான். அவனுடைய வாழ்க்கை பாணியும் கிறிஸ்தவ வாழ்க்கை பாணியும் ஒத்துப்போகாததால், தான் செய்துவந்த ஊழியத்தை விட்டுவிட்டான், கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதையும்கூட நிறுத்திவிட்டான். உண்மை வணக்கத்தின் பக்கம் அவன் திரும்பி வருவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குள் பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ஆன்மீக காரியங்களில் அதிக நாட்டமில்லாத சக விசுவாசி ஒருத்தியிடம் மிலானி கவரப்பட்டாள். “அவளைக் கொஞ்சம் உற்சாகப்படுத்த வேண்டும் என என்னிடம் சொல்லப்பட்டிருந்ததால், நான் அவளுடன் பழக ஆரம்பித்தேன்” என மிலானி கூறுகிறாள். உண்மைதான், ‘பலவீனரைத் தாங்கும்படி’ கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆனால் மிலானி தனது புதிய நண்பியை ‘பார்’களில் சந்திக்க ஆரம்பித்தாள், இவ்வாறு அவளுடைய நண்பர்களோடு பழகியது மோசமான நடத்தையில் ஈடுபடுவதற்கு அவளை வழிநடத்தியது.

குடும்பத்தின் பங்கு

இதுபோன்ற கவர்ச்சிகளுக்கு குடும்பச் சூழ்நிலைகளும் பங்களிக்கலாம். உணர்ச்சி ரீதியில் விலகியிருக்கிற, அக்கறையற்ற பையன்கள் மீதே தனக்கு ஏன் கவர்ச்சி ஏற்படுகிறது என மிஷெல் யோசித்துப் பார்த்தாள். அது அவளுடைய அப்பாவை அவளுக்கு நினைவுபடுத்தியது. அவரிடம் ஒருபோதும் நெருங்கிய பாசப்பிணைப்பை அவள் அனுபவித்ததில்லை, அவளோடு அவர் ஒருபோதும் நேரம் செலவழித்ததே இல்லை. அணுக முடியாத அப்பாவுடைய விருப்பத்தையும் கவனத்தையும் பெறத் துடிப்பது அவளுக்கு அந்தளவு பழக்கமாகிவிட்டதால், அவளை அறியாமலேயே இப்படிப்பட்ட ஆட்களுடன் பழகுவதற்கு கவர்ந்திழுக்கப்படுவதாக நினைக்கிறாள்.

இதற்கு நேரெதிராக, கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட இளைஞன் ஒருவன் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி அறியத் துடிக்கலாம். தன்னுடைய பெற்றோர்கள் அளவுக்கதிகமாய் கட்டுப்படுத்துவதாக அவன் நினைக்கலாம். ஆனால் ஓர் இளைஞன் அப்படி நினைக்கிறானோ இல்லையோ, பெற்றோருடைய கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற இந்த ‘உலகத்தாருடன் சிநேகம்’ கொள்வதுதான் பரிகாரமா? (யாக்கோபு 4:4) பில்லுக்கு நடந்ததை சிந்தித்துப் பாருங்கள்.

சிறு பிராயத்திலிருந்தே அவனுடைய தாயார் அவனுக்கு வேதவசனங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இருந்தாலும், தனது வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க பில் விரும்பவில்லை, அப்படி செய்தால் தனது சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாக நினைத்துக்கொண்டான். உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையைவிட்டு வெளியே வந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆசையில், ஒரு கும்பலுடன் நட்புகொள்ள ஆரம்பித்தான்; அது அவனை போதைப்பொருளுக்கும் வன்முறைக்கும் குற்றச்செயலுக்கும் கொண்டுபோய்விட்டது. போலீசார் அவனை துரத்திக்கொண்டு வந்தபோது வண்டியில் படுவேகமாக சென்றான், அப்போது அவனுக்கு காயமேற்பட்டு, கடைசியில் பல மாதங்களாக கோமாவில் படுத்துவிட்டான். அவன் பிழைக்க மாட்டான் என டாக்டர்கள் நினைத்தார்கள். மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், பில் குணமடைந்தான். ஆனால் பார்வையிழந்து, உடல் ஊனமுற்ற நிலைக்கு வந்துவிட்டான். கசப்பான ஓர் அனுபவத்திலிருந்து அவன் பாடம் கற்றுக்கொண்டான், இப்போது ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவனாக வாழ்கிறான். ஆனால் வாழ்க்கையில் ‘அடிபட்டு’ தெரிந்துகொள்வது நீடித்த பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் அவன் உணர்ந்துகொண்டான்.

வேறுசில செல்வாக்குகள்

சிறந்த நண்பர் என்றால் எப்படி இருப்பார் என்ற விஷயத்தில், மீடியா சில சமயங்களில் இளைஞருடைய எண்ணங்களை செல்வாக்கு செலுத்துகிறது. உதாரணமாக, முதலில் கொடியவராகவோ மோசமானவராகவோ காட்டப்படும் ஒரு ஹீரோ பிறகு அதிக இரக்க குணம் படைத்தவராக இருப்பது போல் புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமாக்கள், மியூசிக் வீடியோக்கள் போன்றவை சித்தரித்துக் காட்டுவதை இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். உணர்ச்சியற்றவராகவும் சுயநலக்காரராகவும் தோன்றுகிற ஆட்கள் உண்மையில் கனிவானவராகவும் பாசமானவராகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தைத்தான் மக்கள் மனதில் இது ஏற்படுத்துகிறது. அதோடு, இந்த நல்ல குணங்களை வெளியில் கொண்டு வருவதற்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு நல்ல நண்பர், பெரும்பாலும் ஓர் எதிர்பாலார் என்ற கருத்தைத்தான் மீடியா கொடுக்கிறது. இந்தக் கருத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நிஜ வாழ்க்கையில் இந்தக் கற்பனை காதல் எந்தளவு சாத்தியமென நினைக்கிறீர்கள்? வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இளைஞர்கள் சிலர் இப்படிப்பட்ட கற்பனைக் காதலில் விழுந்து, சுயநலக்காரரை, வன்முறைக்காரரை நண்பராக்கிக் கொண்டு​—⁠கல்யாணமும்கூட செய்துகொண்டு​—⁠அவர்கள் இரக்க குணம் படைத்தவர்களாக “மாறுவார்கள்” என்ற எண்ணத்தில் காலமெல்லாம் வீணாக காத்திருந்திருக்கிறார்கள்.

தவறான ஆட்களிடம் கவர்ந்திழுக்கப்படுவதற்கு மற்றொரு காரணத்தையும் சிந்தித்துப் பாருங்கள்: சிலர் தங்களை கவர்ச்சியற்றவர்களாக கருதுவதால், தங்களை கவர்ச்சியாக கருதுகிற யாரிடமும் சரணாகதி அடைந்துவிடுகிறார்கள். திருமணத்தைப் பற்றி பைபிள் சொல்வதை, அதாவது ‘கர்த்தருக்குள் மட்டுமே’ மணமுடிக்க வேண்டுமென சொல்வதை, முன்பு குறிப்பிடப்பட்ட நான்ஸி அறிந்திருந்தாள். (1 கொரிந்தியர் 7:39) என்றாலும், தன்னை யாருக்கும் பிடிக்காதென அவள் எப்போதும் நினைத்துக்கொண்டாள், அதனால் தன்னோடு வேலை செய்கிற யெகோவாவின் சாட்சியல்லாத ஒருவனுடைய காதல் வலையில் விழுந்துவிட்டாள். அவனோடு வெளியில் சுற்ற ஆரம்பித்தாள், கிட்டத்தட்ட ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் பேராபத்துக்குச் சென்றுவிட்டாள்.

இந்த அனுபவங்கள் காட்டுகிறபடி, கெட்ட செல்வாக்கு செலுத்தும் ஆட்களிடம் ஏன் ஓர் இளைஞர் கவர்ந்திழுக்கப்படுகிறார் என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. அதோடு, இப்படிப்பட்ட ஆட்களுடன் பழகுவதை நியாயப்படுத்துவதற்கும் அநேக வழிகள் இருப்பது போல தோன்றுகிறது. இருந்தாலும், இப்படிப்பட்ட ஆட்களுடன் நட்பு வைத்துக்கொள்வது வேதனைமிக்க விளைவுகளைத்தான் கொண்டுவரும், சொல்லப்போனால் பேராபத்தையும்கூட கொண்டுவரலாம். ஏன்?

நட்பின் வலிமை

உண்மை என்னவென்றால், உங்களுடைய நண்பர்கள் போல் நீங்கள் ஆகிவிடுகிறீர்கள். இதனால், நாம் யாருடன் நேரம் செலவிடுகிறோமோ அவர்கள் நம்மீது அதிக சக்தியும் செல்வாக்கும் செலுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த சக்தி நன்மையானதாகவோ தீமையானதாகவோ இருக்கலாமென நீதிமொழிகள் 13:20 காட்டுகிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” ஒரு காரில் பயணம் செய்யும் இருவரைப் போலவே, நெருங்கிய நண்பர்களும் ஒரே திசையில் செல்வதும் ஒரே இடத்தைப் போய்ச்சேர்வதும் தவிர்க்க முடியாததாக ஆகிறது. ஆகவே உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய நண்பர் செல்லும் பாதை நான் போக விரும்பும் இடத்திற்கு என்னை கொண்டுபோய் சேர்க்குமா? என்னுடைய ஆன்மீக இலக்குகளிடம் அது என்னை கொண்டு செல்லுமா?’

நேர்மையாக மதிப்பிடுவது கஷ்டமாக இருக்கலாம் என்பது உண்மையே. பலமான உணர்ச்சிகள் உட்பட்டிருக்கலாம். ஆனால் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் உணர்ச்சிகள் மாத்திரமே நம்பகமான வழிகாட்டியா? “உன்னுடைய இஷ்டப்படி செய்” என்றே பலர் அறிவுரை கொடுப்பதை நீங்கள் கேள்விப்படலாம். ஆனால் நீதிமொழிகள் 28:26 இவ்வாறு கூறுகிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்.” ஏன்? ஏனென்றால் “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” (எரேமியா 17:9; எண்ணாகமம் 15:39) திருக்குள்ளது என்பதன் அர்த்தம் உண்மையற்றது அல்லது வஞ்சிப்பது என்பதாகும். வஞ்சிக்கிறவரையும் துரோகியையும் நீங்கள் நம்புவீர்களா? அடையாள அர்த்தமுடைய நமது இருதயம் நம்மை வஞ்சிக்கலாம். எனவே, நாம் சரியென நினைப்பதால் ஓர் உறவு நல்ல உறவாக ஆகிவிடாது.

எல்லாவற்றையும்விட கடவுளுடைய வார்த்தையே நம்பகமான வழிகாட்டி. உங்களுடைய அபூரண இருதயத்தைப் போலின்றி, பைபிள் நியமங்கள் ஒருபோதும் உங்களுக்குத் துரோகம் இழைக்காது, உங்களை ஏமாற்றியும் விடாது. ஒருவர் நல்ல நண்பரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவலாம்? ஆருயிர் நண்பரை​—⁠மணத்துணையை​—⁠தேர்ந்தெடுப்பதில் தப்பு செய்வதை எப்படி தவிர்க்கலாம்? அடுத்த இதழில் இந்தக் கேள்விகள் சிந்திக்கப்படும். (g05 7/22)

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 20-ன் படம்]

சிறந்த நண்பரைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை மீடியா செல்வாக்கு செலுத்தலாம்