Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பூமியை நகர்த்திய’ மனிதன்

‘பூமியை நகர்த்திய’ மனிதன்

‘பூமியை நகர்த்திய’ மனிதன்

போலந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“‘வெட்டிப் பேச்சு பேசுபவர்கள்’ சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கணிதத்தில் பூஜ்யம் என்றாலும் அதிகம் தெரிந்தவர்கள்போல் என் புத்தகத்தைக் கண்டனம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, பரிசுத்த வேதாகமத்தினுடைய சில பகுதிகளின் அர்த்தத்தை கொஞ்சமும் கூச்சமின்றி தங்களுடைய நோக்கத்திற்கு ஏற்றபடி திரித்துக் கூறுகிறவர்கள், என் புத்தகத்தில் குற்றங்குறைகளை கண்டுபிடித்து அதைக் கண்டனம் செய்யத் துணிகிறார்கள். அவர்களைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை; அப்படியே ஏதாவது கண்டனம் செய்தாலும் அதை மடத்தனமாகவே கருதுகிறேன்.”

இந்த வார்த்தைகளை மூன்றாம் போப் பாலிற்கு நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் எழுதினார். தான் எழுதிய புரட்சிகரமான புத்தகத்தின் முகவுரையில் இந்த வார்த்தைகளைக் குறிப்பிட்டார்; வான் கோளங்களின் சுழற்சிகள் பேரில் என்பதே அப்புத்தகத்தின் தலைப்பு; அது 1543-⁠ல் பிரசுரிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களைக் குறித்து, 16-வது நூற்றாண்டின் ஜெஸ்யூட் குருவான கிரிஸ்டஃப் கிலாவியஸ் இவ்வாறு சொன்னார்: “கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டில் முட்டாள்தனமான, தவறான கூற்றுகள் நிறைய உள்ளன.” ஜெர்மானிய இறையியலாளரான மார்ட்டீன் லூதர், கோப்பர்நிக்கஸைக் கண்டனம் செய்து இவ்வாறு புலம்பினார்: “இந்த முட்டாள், வானியல் என்ற அறிவியலையே தலைகீழாக்கிவிடுவான்.”

யார் இந்த நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்? ஏன் அவருடைய கருத்துக்கள் இந்தளவு சர்ச்சைக்குள்ளாயின? அவர் நவீனகால சிந்தனையாளர்கள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்?

அறிவுப் பசிகொண்ட இளைஞன்

கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம். பிறந்த தேதி, பிப்ரவரி 19, 1473. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், மிகாலை காப்பெர்நிக். அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார். நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும் மற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்தார். சிறந்த கல்விபெற நிக்கோலஸுக்கு உதவிய அவர், மதகுரு ஆகும்படியும் அவரை ஊக்குவித்தார்.

நிக்கோலஸ் முதலில் தனது சொந்த ஊரில் படிக்கத் தொடங்கினார்; பிறகு அருகேயிருந்த கெல்ம்நாவில் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டு மிகப் பழமையான எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார். 18-வது வயதில் போலந்தின் அப்போதைய தலைநகருக்கு, அதாவது கிராகெளவிற்கு சென்றார். அங்குள்ள யுனிவர்சிட்டியில் சேர்ந்து வானியலில் தனக்கிருந்த அறிவுப் பசியைத் தீர்க்கும் பொருட்டு அதை பயின்றார். கிராகெளவில் படிப்பை முடித்த பிறகு பால்டிக் கடல் பகுதியிலிருந்த ஃபிரம்பர்க் நகரத்திற்கு வரும்படியாக நிக்கோலஸை அவருடைய மாமா அழைத்தார்; அந்த சமயத்தில் அவருடைய மாமா, வார்ம்யா என்ற பகுதியின் தலைமைக் குருவாக ஆகிவிட்டிருந்தார். நிக்கோலஸும் சர்ச்சில் ஒரு விசேஷ பதவியை ஏற்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

என்றாலும் 23 வயதான நிக்கோலஸ் தன் அறிவுப் பசியைத் தீர்க்க விரும்பினார். எனவே அவருடைய மாமாவிடம் மன்றாடி, கிறிஸ்தவ சமயச்சட்டம், மருத்துவம், கணிதம் ஆகியவற்றைத் தொடர்ந்து கற்க அனுமதி பெற்றார். போலோக்னா, படூவா ஆகிய இத்தாலிய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் டொமேனிக்கோ மாரீயா நொவாரா என்ற வானியல் நிபுணருடனும் பியெட்ரோ பொம்பொனாட்ஸி என்ற தத்துவ வல்லுநருடனும் நெருங்கிப் பழகினார். பொம்பொனாட்ஸியின் போதனைகள், “இடைக்கால கருத்துக்களிலிருந்து [விடுபட] அந்த இளம் வானவியலாளருக்கு உதவின” என்பதாக ஸ்டாநிஸ்வாஃப் பஸாஸ்ட்கிவிக் என்ற சரித்திராசிரியர் கூறினார்.

கோப்பர்நிக்கஸ் ஓய்வு நேரங்களில் பழங்கால வானியல் நிபுணர்களுடைய புத்தகங்களைப் படித்து ஆராய்ந்தார். அந்த மும்முரமான ஆராய்ச்சியின்போது, லத்தீன் மொழி புத்தகங்களில் போதுமான தகவல்கள் இல்லாததை உணர்ந்தார். எனவே மூலவாக்கியங்களைப் படிப்பதற்காக கிரேக்க மொழியைக் கற்றார். பட்டப் படிப்பு முடிவடையும் சமயத்தில், அவர் கிறிஸ்தவ சமயச்சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார், அதோடு கணித வல்லுநராகவும், மருத்துவராகவும்கூட ஆகிவிட்டார். மேலும், கிரேக்க மொழியில் புலமை பெற்றிருந்ததால் கிரேக்கிலிருந்து நேரடியாக போலிஷ் மொழிக்கு ஒரு கட்டுரையை மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழிபெயர்த்த முதல் நபர் இவரே.

புரட்சிகரமான கோட்பாடு உருவானது

கோப்பர்நிக்கஸ் போலந்திற்குத் திரும்பியபோது தலைமை குருவாக இருந்த அவருடைய மாமா, அவரைத் தனக்கு செயலாளராகவும் ஆலோசகராகவும் மருத்துவராகவும் நியமித்தார்; இவ்வாறு, நல்ல அந்தஸ்துமிக்க பதவி அளித்தார். பின்வந்த ஆண்டுகளில் நிக்கோலஸ், மதத்திலும், சமுதாயத்திலும் பலதரப்பட்ட நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றார். அவருக்கு வேலைகள் அதிகமாக இருந்தபோதிலும் நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகளை நடத்தினார். இப்படியாக, ஒரு புரட்சிகரமான கோட்பாட்டிற்கு​—⁠பிரபஞ்சத்தின் நடுவில் பூமி நிலையாக இருப்பதில்லை, ஆனால், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோட்பாட்டிற்கு​—⁠ஆதாரங்களைச் சேகரித்தார்.

இக்கோட்பாடு, உயர்வாக மதிக்கப்பட்ட தத்துவஞானியான அரிஸ்டாட்டிலின் போதனைகளுக்கும் கிரேக்க கணித வல்லுநரான டாலமியின் கண்டுபிடிப்புகளுக்கும் எதிராக இருந்தது. அதோடு, பூமி நிலையாக இருக்கும் பட்சத்தில் சூரியன் மட்டும் கிழக்கிலே உதித்து வானத்தைக் கடந்து மேற்கிலே மறைவதாக தோன்றுகிற “உண்மை”யையும் கோப்பர்நிக்கஸின் கோட்பாடு மறுத்தது.

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோட்பாட்டை முதலில் உருவாக்கியது கோப்பர்நிக்கஸ் அல்ல, அரிஸ்டர்க்கஸ் என்பவரே. இவர் தன் கோட்பாட்டை பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். இவர் ஸேமாஸ் தீவைச் சேர்ந்த கிரேக்க வானியல் நிபுணர். பித்தகோரஸைப் பின்பற்றியவர்கள், பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு நெருப்பு இருப்பதாகவும் பூமியும் சூரியனும் அதைச் சுற்றி வருவதாகவும் போதித்தார்கள். ஆனால் பூமி சுற்றினால் என்ன ஆகும் என்பதை டாலமி இவ்வாறு எழுதினார்: “அதிலுள்ள மிருகங்களும் பாரமான மற்றவையும் அந்தரத்தில் தொங்கும், சீக்கிரத்திலேயே பூமியும் பிரபஞ்சத்திலிருந்து கீழே விழுந்துவிடும்.” மேலும், “அதைக் கற்பனை செய்து பார்க்கவே முட்டாள்தனமாக இருக்கிறது” என்றும் எழுதினார்.

பூமி, பிரபஞ்சத்தின் மத்தியில் நிலையாக அமைந்திருக்கிறது என்பதும், அதைச் சுற்றி அடுக்கடுக்காக உள்ள தெளிவான கோளங்களில் சூரியன், கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் நிலைகொண்டுள்ளன என்பதும் அரிஸ்டாட்டிலின் கருத்து. இந்தக் கருத்தையே டாலமியும் ஆதரித்தார். எனவே அந்தத் தெளிவான கோளங்கள் நகரும்போது அதில் நிலைகொண்டிருக்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் சேர்ந்து நகருவதாக டாலமி நினைத்தார். டாலமி, தனது கணித சூத்திரங்கள் மூலம் கிரகங்கள் இரவுநேர வானில் எப்படி நகருகின்றன என்பதை ஓரளவிற்கு துல்லியமாக விளக்கினார்.

டாலமியின் கோட்பாட்டில் குறைபாடுகளைக் கண்டதாலேயே, கிரகங்கள் ஏன் இப்படி வினோதமாக நகர்கின்றன என்பதற்கு வேறு விளக்கங்களைக் கண்டுபிடிக்க கோப்பர்நிக்கஸ் தூண்டப்பட்டார். தன் கோட்பாடு உண்மையென்பதை நிரூபிக்க பழங்கால வானியல் நிபுணர்கள் பயன்படுத்தின கருவிகளை கோப்பர்நிக்கஸ் மறுபடியும் உருவாக்கினார். அவை, இன்றுள்ள கருவிகளோடு ஒப்பிட எளிமையாக இருந்தாலும் அதைக் கொண்டு அவர் கிரகங்களுக்கும் சூரியனுக்கும் மத்தியில் உள்ள தூரத்தைக் கண்டுபிடித்தார். அவருடைய முன்னோர்கள் கண்ட மிக முக்கியமான வானியல் நிகழ்ச்சிகளின் துல்லியமான தேதிகளைக் கண்டுபிடிக்க பல வருடங்களைச் செலவிட்டார். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு கோப்பர்நிக்கஸ், சர்ச்சைக்குரிய கோட்பாட்டின் பேரில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்; பூமியும் மனிதவர்க்கமும் பிரபஞ்சத்தின் நடுவில் இல்லை என அந்தக் கோட்பாடு தெரிவித்தது.

கையெழுத்துப் பிரதி சர்ச்சைக்கு உட்பட்டது

கோப்பர்நிக்கஸ் தனது கோட்பாட்டிற்கு ஆதாரமளித்த வாதங்களுக்கும் கணித சூத்திரங்களுக்கும் மெருகூட்டினார். இதைத் தன் வாழ்நாளின் இறுதி வருடங்களின்போது செய்தார். முழுமை பெற்ற அந்தக் கையெழுத்துப் பிரதியில், அவரது முடிவுகளுக்கு ஆதாரமளிக்கும் நுட்ப விவரங்களே 95 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளன. கைப்பட எழுதப்பட்ட இந்த மூலப்பிரதி இன்றுவரை பாதுகாக்கப்பட்டு போலந்தில் கிராகெளவிலுள்ள யாகயெல்லன்யன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பெயர் கொடுக்கப்படவில்லை. எனவே, “கோப்பர்நிக்கஸ், தன் புத்தகத்திற்கு என்ன பெயரைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை” என்று ஃபிரெட் ஹோயல் என்ற வானியல் நிபுணர் எழுதினார்.

அந்தப் புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பே அதிலுள்ள விஷயங்கள் மக்களின் ஆர்வத்தைக் கிளறின. கோப்பர்நிக்கஸ் தன் கருத்துக்களின் சுருக்கத்தை கோமென்டார்யோலிஸ் என்ற புத்தகத்தில் வெளியிட்டார். அதன் விளைவாக அவருடைய ஆராய்ச்சிகளின் அறிக்கைகள் ஜெர்மனியையும் ரோமையும் சென்றெட்டின. கோப்பர்நிக்கஸின் கோட்பாடு பற்றிய செய்தி, 1533-⁠ன் தொடக்கத்திலேயே ஏழாம் போப் கிளமென்ட்டின் காதிற்கு எட்டியது. அதன்பிறகு 1536-⁠ல் கார்டினல் ஷொன்பெர்க், கோப்பர்நிக்கஸின் கருத்துக்களைப் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடும்படியாக அவரிடமே கேட்டு எழுதினார். ஜெர்மனியில் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த ஜேர்ஜ் யோயகிம் ரடிகுஸ், கோப்பர்நிக்கஸின் கருத்துக்களைப் படித்தபோது மிகவும் கவரப்பட்டார். எனவே கோப்பர்நிக்கஸை சந்திக்க வந்த அவர், அவருடனே இரண்டு வருடங்களைச் செலவிட்டார். 1542-⁠ல் அவர் ஜெர்மனிக்குத் திரும்பியபோது அந்தக் கையெழுத்துப் படிவத்தின் ஒரு பிரதியையும் எடுத்துச் சென்று அச்சாளரான பெட்ரெயுஸ் என்பவரிடமும், பிழைதிருத்துபவரான அன்ட்ரேயாஸ் ஓஸியான்டர் என்ற பாதிரியிடமும் கொடுத்தார்.

ஓஸியான்டர் அந்தப் புத்தகத்திற்குக் கொடுத்த தலைப்பு, டெ ரெவலூட்யோனிபுஸ் அர்பியும் காயலெஸ்டியும் (வான் கோளங்களின் சுழற்சிகள் பேரில்) என்பதாகும். தலைப்பில், “வான் கோளங்களின்” என்ற சொற்றொடரை சேர்ப்பதன் மூலம் அந்தப் புத்தகம் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தார். அதோடு புத்தகத்திலுள்ள விளக்கக் கோட்பாடுகள், மத நம்பிக்கைகளை சார்ந்ததில்லை, அவற்றை உண்மையென்று எடுத்துக்கொள்ள தேவையுமில்லை என்று பெயரில்லாத ஒரு முகவுரையில் ஓஸியான்டர் எழுதினார். அனுமதியில்லாமல் செய்யப்பட்ட மாற்றங்களையும் சமரசங்களையும் கொண்டு அந்தப் புத்தகம் அச்சடிக்கப்பட்டது. ஆனால், 1543-⁠ல் கோப்பர்நிக்கஸின் உயிர் பிரிய சில மணிநேரங்கள் மட்டுமே எஞ்சியிருந்த சமயத்தில்தான் அவர் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்றார், அதுவரை அவர் அதைப் பெறவே இல்லை.

சுழற்சிகளின் பேரில்—⁠ஒரு புரட்சிப் புத்தகம்

ஓஸியான்டர், அந்தப் புத்தகத்தில் மாற்றங்களைச் செய்ததால், அது ஆரம்பத்தில் கண்டனம் செய்யப்படவில்லை. இத்தாலிய வானியல் நிபுணரும் இயற்பியல் அறிஞருமான கலீலியோ பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “புத்தகம் முதலில் அச்சிடப்பட்டபோது புனித சர்ச் அதை ஏற்றுக்கொண்டது. அது பரவலாக படிக்கப்பட்டது, யாரும் அதிலுள்ள கோட்பாடுகளை துளியும் எதிர்க்கவில்லை. ஆனால் பின்னர் மக்கள் அந்தப் புத்தகத்திலுள்ள கோட்பாடுகளின் பேரில் போதுமான ஆதாரங்களையும் அத்தாட்சியையும் பெற்றபோது அந்தப் புத்தகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்காமல் அதன் எழுத்தாளரை கண்டனம் செய்ய தொடங்கினார்கள்.”

லூத்தரன்களே முதன்முதலில் அந்தப் புத்தகத்தை “மடத்தனம்” என்று அழைத்தவர்கள். கத்தோலிக்கர்கள் தொடக்கத்தில் அந்தப் புத்தகத்தை எதிர்த்து எதுவும் சொல்லாவிட்டாலும் பிறகு அது அதிகாரப்பூர்வ கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிறதென தீர்மானித்து 1616-⁠ல் கோப்பர்நிக்கஸின் புத்தகத்தை தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் சேர்த்தார்கள். 1828-⁠ம் வருடம்வரை அது அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முகவுரையில் சார்ல்ஸ் க்லென் வாலிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவியதால், தாங்கள் பைபிளைக் கடைப்பிடிப்பதில்லை என்ற ஒரு பழிதூற்றுதல் எங்கே வந்துவிடுமோ என்று பயந்தார்கள். எனவே வசனங்களை ரொம்பவே சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக பைபிளின் ஒரு பகுதியின் சொல்லர்த்தமான அர்த்தத்திற்கு எதிர்மாறான எந்தவொரு கருத்தையும் கண்டனம் செய்ய தூண்டப்பட்டார்கள்.” a கோப்பர்நிக்கஸின் கோட்பாடு பைபிளின் போதனைக்கு எதிராக இருக்கிறது என்று நம்பப்படுவதைக் குறித்து கலீலியோ இவ்வாறு எழுதினார்: “[கோப்பர்நிக்கஸ்] பைபிளுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவருடைய கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்படுகையிலும் பைபிள் வசனங்கள் சரியாக புரிந்துகொள்ளப்படுகையிலும் இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இருக்காது என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.”

இன்று கோப்பர்நிக்கஸ் நவீன வானியலின் தந்தையென அநேகரால் போற்றப்படுகிறார். ஆம், அவருக்குப் பின் தோன்றிய கலீலியோ, கெப்ளர், நியூட்டன் ஆகிய விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தைப் பற்றிய அவருடைய விவரிப்புகளுக்கு மெருகூட்டினார்கள். என்றாலும் வான்-இயற்பியல் வல்லுநர் ஓயன் ஜிங்க்ரிச் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீண்டகாலமாக மதிக்கப்படும் விஞ்ஞான கருத்துக்கள் உண்மையில் எவ்வளவு வலுவற்றதாக இருக்க முடியும் என்பதை கோப்பர்நிக்கஸ் தன் புத்தகத்தின் மூலம் காண்பித்திருக்கிறார்.” கோப்பர்நிக்கஸ் தன்னுடைய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், கணிதம் ஆகியவற்றைக் கொண்டு மதத்தின் பேரிலும், விஞ்ஞானத்தின் பேரிலும் மக்களின் மனதில் ஊறிக்கிடந்த தப்பெண்ணங்களை எடுத்துப்போட்டார். அதுமட்டுமல்ல, அவர் மக்களின் மனதில் “சூரியனை நிறுத்தி, பூமியை நகர்த்தினார்” என்றும் சொல்லலாம். (g05 7/22)

[அடிக்குறிப்பு]

a உதாரணத்திற்கு, சூரியன் நடுவானத்தில் நிறுத்தப்பட்டதாக சொல்லும் யோசுவா 10:13, பொதுவாக சூரியனே நகர்கிறது, பூமியல்ல என்பதை நிரூபிக்க பயன்படுத்தப்பட்டது.

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

வான் கோளங்களின் சுழற்சிகள் பேரில்

கோப்பர்நிக்கஸ் தன்னுடைய புத்தகத்தை ஆறு பகுதிகளாக பிரித்திருக்கிறார். அவருடைய புத்தகத்தின் சில முக்கியமான கருத்துக்கள் கீழே:

● எத்தனையோ “பயணிகளின்” நகர்வுகளை ‘சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சூரியன்’ கட்டுப்படுத்துகிறது. அதில் நம்முடைய கிரகமும் ஒன்று.

● கிரகங்கள் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதில் பூமியும் ஒன்று. பூமி ஒரு நாளைக்கு ஒரு முறை அதன் அச்சிலேயே சுழல்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது.

● சூரியனை மையமாக கொண்டு சுற்றிவரும் கிரகங்களின் வரிசையில், முதலாவது புதன், இரண்டாவது வெள்ளி, அதற்கு அடுத்து வருவது பூமியும் சந்திரனும், பிறகு செவ்வாய், வியாழன், கடைசியாக சனி.

[படத்திற்கான நன்றி]

Title page of Copernicus’ work: Zbiory i archiwum fot. Muzeum Okręgowego w Toruniu

[பக்கம் 12-ன் படம்]

கோப்பர்நிக்கஸ் உபயோகித்த ஆய்வுக்கருவி

[படத்திற்கான நன்றி]

Zbiory i archiwum fot. Muzeum Okręgowego w Toruniu

[பக்கம் 13-ன் படங்கள்]

போலந்திலுள்ள ஃபிரம்பர்க் நகரத்திலிருந்த வானியல் ஆய்வுக்​கூடத்தில், கோப்பர்நிக்கஸின் படிப்பறையிலிருந்து இப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன

[படத்திற்கான நன்றி]

Zdjecie: Muzeum M. Kopernika we Fromborku; J. Semków

[[பக்கம் 14-ன் படம்]

பூமியை நடுவில் கொண்ட அமைப்பு

[படத்திற்கான நன்றி]

© 1998 Visual Language

[பக்கம் 14-ன் படம்]

சூரியனை நடுவில் கொண்ட அமைப்பு

[படத்திற்கான நன்றி]

© 1998 Visual Language

[பக்கம் 15-ன் படம்]

இன்று நாம் அறிந்திருக்கும் சூரியமண்டலம்