Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மேன் தீவுக்கு எங்களோடு வாருங்கள்!

மேன் தீவுக்கு எங்களோடு வாருங்கள்!

மேன் தீவுக்கு எங்களோடு வாருங்கள்!

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சுறா மீன்களை உங்களுடைய சின்ன விழித்திரையில் கண்டுகளிப்பதற்கு ‘பெஸ்ட்’ இடங்களில் ஒன்றுதான் ஐரிஷ் கடல்​—⁠இது மேன் தீவுக்கு அருகே உள்ளது. ஐந்து டன் எடையுள்ள இந்த மென்மையான ஜீவராசிகள் சாப்பிடும் ஒரே வகை உணவு மிதவை நுண்ணுயிரிகளே. இந்தச் சுறா மீன்களைப் பார்க்க சுற்றுலா பயணிகள் பலர் மேன் தீவிலிருந்து கடற்பயணம் செய்கிறார்கள். குத்துமதிப்பாக சொன்னால், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸிலிருந்து மேன் தீவு ஒரே தூரம்தான். “இயற்கை வாழிடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற இடம்” இதுவே எனக் கூறுகிறார் உள்ளூர் இயற்கைவாதி பில் டேல்.

மேன் தீவின் சிறப்பம்சங்கள் என்னென்ன? 570 சதுர கிலோமீட்டருக்கு பச்சைக் கம்பளம் விரித்தது போல் பள்ளத்தாக்குகள், பழுப்புநிற சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஓடைகள், கண்ணைக் கவரும் வளைகுடாக்கள், செங்குத்தான மலைகள், கரடுமுரடான கடற்கரைகள் ஆகியவை அடங்கிய இந்த வீடே சுமார் 70,000 மக்களின் குடியிருப்பாகும். பிரிட்டிஷ் தீவுகளில் ஒன்றாக விளங்கும் மேன் தீவின் வரலாற்றுப் புகழ்மிக்க இந்தப் பொக்கிஷங்களில் சிலவற்றை எங்களோடு வந்து பாருங்கள்.

சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் அம்சங்கள்

மேன் தீவைச் சுற்றிப்பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் மேங்க்ஸ் பூனையைப் பார்க்க ஆசைப்படுவார்கள். அசாதாரணமான இந்த விலங்கு பூனை முகம் கொண்டது, ஆனால் இதன் பின்னங்கால்களோ முன்னங்கால்களைவிட மிகவும் நீண்டு காணப்படுவதால் இது நிற்கையில் முயல் போன்ற தோரணை உள்ளது. மேலும், மேங்க்ஸ் பூனைக்கு வால் கிடையாது. இதன் பூர்வீகத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாவிட்டாலும், நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாலுமிகள் பூனைக் குட்டிகளை ஆசியாவிலிருந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆசியாவில் வாலில்லா பூனைகள் வாழ்கின்றனவே, இவ்வாறுதான் தீவைச் சேர்ந்த இந்த இனம் உருவானது.

மேன் தீவில் ‘ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டூரிஸ்ட் டிராஃபி மோட்டார் சைக்கிள் ரேஸ்’ சுற்றிப் பார்க்க வருபவர்களைச் சுண்டியிழுக்கிறது. முக்கிய சாலைகளில் 60 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு இந்தப் பந்தயம் நடக்கும். 1907-⁠ல் நடைபெற்ற முதல் பந்தயத்தில், மணிக்கு 65 கிலோமீட்டரே சராசரி ‘டாப் ஸ்பீடு.’ ஆனால் இன்றோ சராசரி வேகம் மணிக்கு 190 கிலோமீட்டருக்கும் அதிகமாகும். இது ஓர் ஆபத்தான ஸ்போர்ட்தான், கடந்த ஆண்டுகளில் எண்ணற்ற வீரர்கள் இதனால் மடிந்திருக்கிறார்கள். a

இத்தீவின் தலைநகரான டக்ளஸின் முக்கிய வீதியில் குதிரைகளால் இழுக்கப்படும் வண்டிகள் கடந்தகாலத்தை கண்முன் கொண்டுவரும் நெஞ்சைவிட்டு நீங்கா நினைவலைகள். இவற்றில் மற்றொன்றுதான் 24 கிலோமீட்டர் தூரம் செல்லும் நீராவி என்ஜின் ரயில்கள்; இத்தீவில் ஆரம்ப காலங்களில் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட குறுகிய ரயில் பாதையின் எஞ்சிய சின்னங்கள் இவை மட்டும்தான். ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன்பு, மேங்க்ஸ் மின்சார ரயில் பயணம் ஆரம்பிக்கப்பட்டது, அவற்றின் சில டிராம்கார்கள் 600 மீட்டர் உயரத்திலிருக்கும் ஸ்நேஃபெல் சிகரத்திற்கு இன்றும் செல்கின்றன; இதுவே மேன் தீவின் மிகவும் உயரமான சிகரமாகும்.

லக்ஸி வீல்

ஈயம், துத்தநாகம், வெள்ளி ஆகியவை இத்தீவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன, முக்கியமாக இவை கிரேட் லக்ஸி சுரங்கத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. இங்குள்ள கிரேட் லக்ஸி வீல் விக்டோரியா ராணி காலத்தைச் சேர்ந்த என்ஜினியர்கள் மற்றும் அதை வடிவமைத்த ராபர்ட் கேஸ்மன்ட்டின் திறமையைப் பறைசாற்றும் சின்னமாகத் திகழ்கிறது. ராபர்ட் கேஸ்மன்ட் என்பவர் வண்டிச் சக்கரங்கள் செய்பவரின் மகன். 1854-⁠ல் இதை அவர்கள் உருவாக்கினார்கள். இதன் விட்டம் 20 மீட்டருக்கும் அதிகம், பள்ளத்தாக்கின் மேலுள்ள நீர்தேக்கத்திலிருந்து வேகமாக கொட்டும் நீரின் சக்தியில் இந்த கிரேட் வீல் இயங்கியது. இந்த வீல், ஒரு நிமிடத்தில் இரண்டரை தடவை சுற்றுவதற்குள் 360 மீட்டர் ஆழத்திலிருந்து 950 லிட்டர் தண்ணீரை இறைத்தது. இவ்வாறு சுரங்கத்தின் அடிதளத்திலிருந்த தண்ணீரை வெளியேற்ற உதவியது. அதன் திருகு சுமார் 180 மீட்டர் நீளமுள்ள கம்பிகளாலான அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அமைப்பை செயல்பட வைத்தது. இந்த வீலின் அச்சு மாத்திரமே பத்து டன் எடை உடையது.

அந்த வீல் அமைப்பின் தென் முனையில் இரும்பு உருக்கினாலான மூன்று மனித கால்களின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது; அதன் விட்டம் இரண்டு மீட்டர். இப்போது இந்தத் தீவைப் பிரதிநிதித்துவம் செய்கிற இச்சின்னம் எப்படி வந்தது, அதன் சிறப்பு என்ன?

1246-⁠ம் ஆண்டிற்குப் பிறகு, இந்த மூன்று மனித கால்களின் சின்னம் அத்தீவின் அதிகாரப்பூர்வ அடையாளமாக உரிமை ஆவணத்தின் முத்திரையில் இடம்பெற்றது. இந்த வடிவம், பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க பூச்சாடியில் காணப்பட்டது. இது ஸ்வஸ்திக் சின்னத்துடன் தொடர்புடையது. இந்தச் சின்னம் சூரிய கதிர்களை அடையாளப்படுத்துவதாகவும், சூரிய வழிபாட்டுடன் சம்பந்தமுடையதாகவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படியானால், இது மேன் தீவுக்குள் எப்படி வந்தது? சிசிலி தீவார் இச்சின்னத்தை பயன்படுத்தினர். ஆகவே மத்திய தரைக்கடல் பகுதிகளுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்ததால் அங்கிருந்து வந்திருக்கலாம், அல்லது நார்ஸ்மென், அதாவது வைக்கிங் நாணயங்களிலிருந்து வந்திருக்கலாம். இன்று நாம் பார்க்கும் கவசம் பூண்ட மூன்று மனித கால்களின் சின்னம் மேன் தீவை ஆண்ட பிற்கால அரசர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வெற்றிகளும் தோல்விகளும் தழுவிய சரித்திரம்

பொ.ச. 43-⁠ம் ஆண்டில் இங்கிலாந்தை ரோமர்கள் வென்று, சுமார் 400 வருடங்களாக அங்கு தங்கியிருந்தனர்; ஆனால் மேன் தீவை அவர்கள் கண்டுகொள்ளாதது போல் தோன்றியது, இத்தீவை மோனா என ஜூலியஸ் சீசர் அழைத்தார். 9-⁠ம் நூற்றாண்டில் நார்ஸ்மென் படையெடுத்துச் சென்றனர்; 13-⁠ம் நூற்றாண்டின் மத்திபம் வரை இத்தீவில் அவர்கள் தங்கியிருந்தனர். ஸ்கான்டினேவியாவைச் சேர்ந்த துணிச்சல்மிக்க இவர்கள் இத்தீவை வாணிபத்திற்கும் அண்டை நாடுகளைச் சூறையாடுவதற்கும் ஏற்ற ஒரு மையமாக கருதினர். இந்தக் காலப்பகுதியில்தான், டின்வால்டு, அதாவது மேன் பார்லிமெண்ட் ஸ்தாபிக்கப்பட்டது. உலகிலேயே இதுதான் தொடர்ந்து இருந்துவரும் மிகப் பழைமையான தேசிய பார்லிமெண்டாக கருதப்படுகிறது. b

பிற்பாடு, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகள் மேன் தீவை பல்வேறு காலங்களில் ஆண்டுவந்தன. பிறகு, 1765-⁠ல், பிரிட்டிஷ் பார்லிமெண்ட் இத்தீவை வாங்கியது. இன்று அதன் துணை ஆளுநர் பிரிட்டிஷ் ராணியின் விசேஷ பிரதிநிதியாக செயல்படுகிறார்; இங்கிலாந்திற்கு வெளியே ஒரு நிதி மையமாக ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்து வருகிறபோதிலும், இத்தீவு சுயாட்சி பெற்ற, முடியரசை சார்ந்த நாடாக விளங்குகிறது. இத்தீவுக்குச் சொந்தமாக தபால் தலைகளும் நாணயங்களும் கரன்ஸிகளும் இருக்கின்றன, இவை பிரிட்டிஷ் கரன்ஸிகளுக்கு இணையான மதிப்புடையவை.

மேங்க்ஸ் மொழி​—⁠கெல்டிக் மொழியுடன் தொடர்பு

மேன் தீவின் பண்டைய மொழி மேங்க்ஸ் ஆகும்; இது பரந்த இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கெல்டிக் தொகுதியில் ஒன்றாகும். மேங்க்ஸ் மொழி ஐரிஷ் கேலிக் மொழியின் ஒரு கிளைமொழி, இது ஸ்காட்டிஷ் கேலிக் மொழியுடன் தொடர்புடையது. 100-⁠க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், மேங்க்ஸ் மொழி பற்றி இவ்வாறு சொல்லப்பட்டது: “இது அழிந்துபோகப் போகும் ஒரு மொழி​—⁠தெற்கு அட்சரேகைகளை நோக்கி மிதக்கும் ஒரு பனிப்பாறை.” அது அப்படித்தான் நடந்தது. மேங்க்ஸ் மொழி பேசிய கடைசி நபர் 1974-⁠ல் தனது 97-⁠ம் வயதில் காலமானார்; ஆனால் மேங்க்ஸ் மொழி இத்தீவினுடைய பாரம்பரியத்தின் பாகமாக இருப்பதால், இப்போது பள்ளிகளில் மீண்டும் கற்றுத்தரப்படுகிறது.

ஐரிஷ் கேலிக் அல்லது ஸ்காட்டிஷ் கேலிக் போலின்றி, 1610-⁠ம் ஆண்டு பிற்பகுதி வரை மேங்க்ஸ் மொழி முழுக்க முழுக்க பேச்சு மொழியாகவே இருந்தது. 1707-⁠ல், அச்சிடப்பட்ட கிறிஸ்தவத்தின் கொள்கைகளும் கடமைகளும் என்ற புத்தகமே மேங்க்ஸ் மொழியில் முதன்முதல் வெளியிடப்பட்ட புத்தகமாகும். இதைத் தொடர்ந்து வேறுசில புத்தகங்களும் வெளிவந்தன.

1763-⁠க்குள், பைபிளை மேங்க்ஸ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு அவசர வேண்டுகோள்கள் பிறப்பிக்கப்பட்டன; ஏனென்றால் அப்போது அங்கிருந்த மக்களில் மூன்றில் இரு சதவீதத்தினர் மேங்க்ஸ் மொழியை மாத்திரமே பேசினார்கள். ஆனால் மொழிபெயர்ப்பதற்கு குறைவான வசதிகள்தான் இருந்தன, அறிஞர்களும் சிலர்தான் இருந்தார்கள். என்றாலும், 1748 முதற்கொண்டு பல்வேறு பைபிள் புத்தகங்கள் மெதுமெதுவாக தோன்ற ஆரம்பித்தன. 1775-⁠ல் பாதிரியார்களுடைய உபயோகத்திற்காக முழு பைபிளும் நாற்பது பிரதிகள் அச்சிடப்பட்டன; 1819-⁠ல் பொது மக்களுக்காக 5,000 பிரதிகள் வெளியிடப்பட்டன. இதற்கு மக்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? முதல் தடவையாக ஒரு தாய்க்கு அவளுடைய மகன் மேங்க்ஸ் மொழியில் வேதவசனங்களை வாசித்துக் காண்பித்தபோது, “இதுவரை நாங்கள் இருளில் இருந்திருக்கிறோம்” என அவள் கூறியது நெஞ்சைத் தொட்டது.

1611-⁠ம் ஆண்டு பதிப்பான ஆங்கில கிங் ஜேம்ஸ் வர்ஷனிலிருந்து இருபத்தைந்து மனிதர் இந்த பைபிளை மொழிபெயர்த்தனர்; அவர்களில் சிலரால் எபிரெய வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பையும் அலசிப்பார்க்க முடிந்தது. ஆங்கிலத்தில் ஜெஹோவா என அழைக்கப்படும் கடவுளுடைய பெயர் இதிலும் காணப்படுகிறது. c 1895-⁠ல் டபிள்யு. டி. ராட்கிளிஃப் இவ்வாறு எழுதினார்: இந்த பைபிள் “கல்வி கற்பதற்கு உதவும் சிறந்த நூல் என்பதை மேன் தீவைச் சேர்ந்த எந்தவொரு படித்த ஆளும் மறுக்கமாட்டார்.”

இன்று கிறிஸ்தவம்

பைபிள் மீதுள்ள மதிப்பு இத்தீவு வாசிகள் மத்தியில் குறைந்துவிடவில்லை, அதோடு பைபிள் படிப்பு நடத்துவதில் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள் பெயர் பெற்றவர்கள். டக்லஸிலுள்ள பெல்மான்ட் மலை அடிவாரத்தில் இயற்கை வனப்புமிக்க இடத்தில் அமைந்துள்ள அவர்களுடைய நவீன ராஜ்ய மன்றம் மே 1999-⁠ல் கட்டப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளான தன்னார்வ தொண்டர்களால் ஆறே நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடத்தைப் பற்றி ஐல் ஆஃப் மேன் எக்ஸாமினர் என்ற செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “இதை ஒரு சிறிய அற்புதம் என்றே புகழலாம்.”

மனதைக் கொள்ளைகொள்ளும் அழகிய இத்தீவைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், மென்மையாக பேசும் இத்தீவு வாசிகள் உங்களுடைய விஜயத்தை இன்பகரமானதாகவும் நெஞ்சைவிட்டு நீங்கா ஒன்றாகவும் ஆக்குவார்கள் என்பதில் நீங்கள் உறுதியுடன் இருக்கலாம். ஆனால் மேன் தீவு வாசியிடம் பேசுகையில் கவனமாயிருங்கள். அவரைப் பொறுத்தவரை மேன் தீவுதான் “முக்கிய நிலப்பகுதி,” இங்கிலாந்துதான் “அந்தத் தீவு.” (g05 7/8)

[அடிக்குறிப்புகள்]

a முன்னாள் டூரிஸ்ட் டிராஃபி பந்தைய வீரர் ஃபிரெட் ஸ்டீவன்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு, செப்டம்பர் 22, 1988 விழித்தெழு! ஆங்கில இதழில், “அதிக சவால், அதிக திரில்” என்ற கட்டுரையைக் காண்க.

b ஃபெரவீஸிய லோக்டிங், ஐஸ்லாந்திய ஆல்திங் என்ற இரு பார்லிமெண்ட்டுகளும் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டவை, ஆனால் இவை எதுவுமே தொடர்ந்து செயல்படவில்லை.

c ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ் கேலிக்கில் கடவுளுடைய பெயர் ஜிஹோபா என்றும் வேல்ஸ் மொழியில் இஹோவா என்றும் உச்சரிக்கப்படுகிறது.

[பக்கம் 24-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அயர்லாந்து

ஸ்காட்லாந்து

இங்கிலாந்து

வேல்ஸ்

ஐரிஷ் கடல்

மேன் தீவு

[பக்கம் 25-ன் படம்]

மேங்க்ஸ் எலக்ட்ரிக் ரயில்வே டிராம்கார்

[பக்கம் 25-ன் படம்]

கிரேட் லக்ஸி வீல்

[பக்கம் 25-ன் படம்]

மேன் தீவின் நீராவி என்ஜின் ரயில்

[பக்கம் 25-ன் படம்]

வாலில்லா மேங்க்ஸ் பூனை

[பக்கம் 26-ன் படம்]

சுறாமீன்

[பக்கம் 26-ன் படம்]

பீல் மலையிலிருந்து கடற்கரை காட்சி

[பக்கம் 26, 27-ன் படம்]

பீல் துறைமுகம், பின்னணியில் பீல் கோட்டை

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

நடுப்பகுதியிலுள்ள சின்னத்தைத் தவிர எல்லா படங்களும்: Copyright Bill Dale, IsleOfManPhotos.com

[பக்கம் 26-ன் படங்களுக்கான நன்றி]

சுறாமீன்: The Basking Shark Society; வலது உட்படமும் பின்னணியும்: Copyright Bill Dale, IsleOfManPhotos.com