விழித்தெழு! உயிரைக் காப்பாற்றியது
விழித்தெழு! உயிரைக் காப்பாற்றியது
தவறாமல் விழித்தெழு! பத்திரிகையை வாசிப்பவர்கள் அதில் வெளியாகும் கட்டுரைகள் எவ்வளவு பயனுள்ளவை என்பதை அறிந்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரு ஜெர்மானிய தம்பதியினருக்கு அதில் வெளியான கட்டுரை ஒன்று உயிரைக் காப்பாற்றுமளவுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவர்கள் கடந்த டிசம்பரில் தாய்லாந்திலுள்ள கவு லாக் என்ற இடத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றார்கள்; மார்ச் 8, 2001 விழித்தெழு!-வில் வெளியான, “கொலைகார அலைகள்—உண்மையும் பொய்யும்” என்ற கட்டுரை அந்தச் சமயத்தில் அவர்களுக்குக் கைகொடுத்தது.
அந்தத் தம்பதியரின் அனுபவத்தை, ஃபிராங்கன்பாஸ்ட் (ஸெல்பா டாக்ப்ளாட்) என்ற ஜெர்மானிய செய்தித்தாள் அறிக்கை செய்தது: “‘நாங்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்தோம்’ என மனைவி ராஸ்வீடா கஸெல் சொல்கிறார். நீச்சலடித்த பிறகு அவரும் அவரது கணவரும் ஹோட்டலுக்குத் துணி மாற்றச் சென்றார்கள். மறுபடியும் கடற்கரைக்குத் திரும்பி வந்தபோது அவர்கள் கண்ட திகில் காட்சியைப் பற்றி கணவர் ரைனர் கஸெல் இவ்வாறு விவரிக்கிறார்: ‘பத்து நிமிஷத்துக்குப் பிறகு பீச்சுக்குத் திரும்பி வந்தோம், கடலையே காணோம்.’ கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் [நான்கு மைல்] தூரத்திலிருந்த பவளப் பாறை வரைக்கும் கடல் தரையை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘கடல் அப்படி உள்வாங்கியபோது, நீச்சலடித்துக் கொண்டிருந்த அனைவரையும் உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டது.’ அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டபடி, “விழித்தெழு! பத்திரிகையில் படித்த ஒரு கட்டுரைதான் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாக கஸெல் தம்பதியர் சொல்கிறார்கள்.” ஏனென்றால், சுனாமி வருவதற்கு முன் பெரும்பாலும் விநோதமான விதத்தில் கடலிறக்கம் ஏற்படும் என அந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டிருந்தது.
அதைப் படித்திருந்ததால், “இராட்சத அலையை அவர்கள் கொஞ்ச தூரத்தில் பார்த்ததும் திரும்பி ஓட ஆரம்பித்தார்கள். “தண்ணீர் சுமார் 12 முதல் 15 மீட்டர் [40 முதல் 50 அடி] உயரத்திற்கு சுவர் போல் எழும்பி வந்தது ரைனர் கஸெலுக்கு நினைவிருக்கிறது. அவருடைய கண்ணைவிட்டு மறையாத சோகமான காட்சி என்னவென்றால், கடற்கரையிலிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் மலைத்துப் போய் அப்படியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்ததுதான். அவர் சொல்கிறார்: ‘அவர்கள் சிலை மாதிரி நின்றார்கள். பாதுகாப்பான இடத்துக்கு ஓட வேண்டுமென நான் கூப்பாடு போட்டும் ஒரு ஆள்கூட இடத்தைவிட்டு அசையவில்லை.’ அவர்களில் யாரும் உயிர் தப்பவில்லை.”
கஸெல் தம்பதியரைப் பற்றி அந்தச் செய்தித்தாள் இதையும் குறிப்பிட்டது: “அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதால், விடுமுறையைக் கழிக்கச் சென்ற அந்தச் சமயத்தில்கூட, அருகிலிருந்த சபையில் கூட்டங்களுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்; கவு லாக்கிலிருந்து 140 கிலோமீட்டர் [85 மைல்] தூரத்திலிருந்த அந்தச் சபையைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் சுனாமியைப் பற்றி கேள்விப்பட்டபோது, அத்தனை பேரும் இவர்களைத் தேடிக்கொண்டு கவு லாக்குக்கு வந்தார்கள்.”
அதன் பிறகு அந்தத் தம்பதியர் பத்திரமாக ஜெர்மனி போய் சேர்ந்தார்கள். அவர்கள், விழித்தெழு! பத்திரிகையிலிருந்த பயனுள்ள தகவலுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்த தாய்லாந்து நாட்டவருக்கும், முக்கியமாக அவர்களது ஆன்மீக சகோதரர்களுக்கும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்! அந்தச் சகோதரர்கள் உண்மையான கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டினார்களே! (g05 7/22)