Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அது வானத்திலிருந்து விழுந்தது

அது வானத்திலிருந்து விழுந்தது

அது வானத்திலிருந்து விழுந்தது

டான்ஜானியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நட்சத்திரங்கள் நிறைந்த வானில் திடீரென்று ஓர் ஒளிக்கீற்று தோன்றி மறைவதை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை அதை நீங்கள் எரிநட்சத்திரம் என்று அழைத்திருப்பீர்கள். இது எரி விண்மீன் என்றும்கூட அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான எரி விண்மீன்கள் பூமியை வந்து சேர்வதற்குள் வளிமண்டலத்திலேயே முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. சில சமயங்களில் கல்லால் அல்லது உலோகத்தாலான இதன் துண்டுகள் கடும் வெப்பத்தையும் தப்பித்து, பூமியில் வந்து விழுகின்றன. இவற்றையே விண்கற்கள் என்று அழைக்கின்றனர். பெரும்பாலான விண்கற்கள் சிறியவை, ஆனால், சில விண்கற்களோ டன் கணக்கில் கனமுள்ளவை. ஆப்பிரிக்காவில், நமிபியாவில் விழுந்த ஒரு விண்கல்லின் எடை சுமார் 60 டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகிலேயே எட்டாவது பெரிய விண்கல்லான மபாசி விண்கல்லைப் பார்க்க இப்பொழுது டான்ஜானியாவுக்கு விஜயம் செய்யலாம் வாருங்கள். இந்த விண்கல் தெற்கு டான்ஜானியாவில் மபாசி என்ற மாகாணத்திலுள்ள மாரெங்கீ மலையில் காணப்படுகிறது. இந்த மலை, மலாவி மற்றும் ஜாம்பியா எல்லை பகுதிகளின் அருகில் உள்ளது. சுமார் 16 டன் எடையும் மூன்று மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட இந்த விண்கல்லில் 90 சதவீத இரும்பும், சுமார் 9 சதவீத நிக்கலும், சிறிது கோபால்ட், செம்பு, கந்தகம், பாஸ்பரஸ் போன்ற உலோகங்களும் உள்ளன.

இந்த விண்கல் எப்போது விழுந்ததென்று யாருக்குமே தெரியாது. ஆனால் இது நிச்சயம் பல வருடங்களுக்கு முன்பே விழுந்திருக்க வேண்டும்; ஏனெனில் இதைப் பற்றிய எந்தப் புராணக்கதைகளும் இல்லை. அக்டோபர் 1930-⁠ல் ஜோஹெனஸ்பர்கை சேர்ந்த டபிள்யு. ஷெச். நாட் என்ற நில ஆய்வாளர் இதைக் கண்டுபிடித்ததாக தெரிவித்தார். அதற்குப் பிறகு, இந்த விண்கல்லைச் சுற்றி ஆழமாகக் குழி தோண்டப்பட்டது. இதனால், ஏதோ மேடையில் ஒரு கல் வைக்கப்பட்டது போல் அது காட்சியளிக்கிறது. ஆக, அது எங்கே விழுந்ததோ அங்கேயேதான் உள்ளது.

அதைப் பார்த்ததன் ஞாபகமாக அதிலிருந்து ஒரு சின்ன துண்டை வெட்டி எடுத்துச் செல்ல சிலர் முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அதை வெட்டுவது மிகக் கடினமான வேலையாக இருந்தது. டிசம்பர் 1930-⁠ல் நில இயல் சங்கத்தை சேர்ந்த டாக்டர் டி. ஆர். கிரான்தெம் ஒரு ரம்பத்தைப் பயன்படுத்தி, விண்கல்லின் ஒரு துண்டை வெட்ட முயன்றார். அதை வெட்டுவதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது; ஏனென்றால் பத்து சென்டிமீட்டர் துண்டை வெட்ட அவருக்குப் பத்து மணிநேரம் எடுத்தது! இன்று இந்தத் துண்டை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில், விண்கற்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பார்க்கலாம்.

மபாசி விண்கல் உள்ள இடத்தை, எல்லோரும் கண்டுகளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு ஒரு சிறிய அறையில் சில பெஞ்சுகளும் டேபிள்களும் போடப்பட்டிருக்கின்றன. விண்கல் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு மண் வீட்டில், அந்த இடத்தின் வார்டன் தங்கியிருக்கிறார். அவர் பார்வையாளர் புத்தகத்தில் எங்களுடைய பெயர்களை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உலகத்தின் எல்லா மூலையிலிருந்தும் வந்து இந்த விண்கல்லைப் பார்த்துவிட்டு செல்வதை நாங்கள் கவனித்தோம். விண்கல்லைப் பற்றிய விஷயங்கள் அடங்கிய சிறுபுத்தகம் ஒன்றை நாங்கள் படித்தோம், பிறகு அந்த விண்கல்லின் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.

சில பிள்ளைகள் இந்த விண்கல்லின் மேல் உட்கார்ந்துகொண்டு விண்வெளி கப்பலை ஓட்டுவதாக நினைத்து விளையாடினார்கள். பக்கத்தில் இருந்த அமைதியான இடத்தில் சாவகாசமாகக் கொஞ்ச நேரத்தைக் கழித்தபோது, விண்வெளியிலிருந்து மபாசி மாகாணத்திற்கு இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கும் இந்த விநோத கல்லைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம். (g05 8/22)

[பக்கம் 14-ன் படம்]

விண்கல்லிலிருந்து வெட்டப்பட்ட துண்டுகள்