Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

அடங்காத பிள்ளைகள் திருந்தலாம்

“தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் அடங்காத பிள்ளைகள் அநேகர் வளர வளர திருந்திவிடுகிறார்கள்” என த ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாள் தெரிவிக்கிறது. “நன்கு அனுசரித்துப்போகிற டீனேஜர்களாகவும் அவர்கள் ஆகலாம்” என அது மேலும் தெரிவிக்கிறது. குடும்ப ஆய்வுகளுக்கான ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று 11 அல்லது 12 வயதிலுள்ள 178 பிள்ளைகளுடைய முன்னேற்றத்தைக் கவனித்து வந்தது; “மூர்க்கத்தனமாய் நடத்தல், ஒத்துழைக்க மறுத்தல், சுய கட்டுப்பாடு இல்லாதிருத்தல், வேலைகளில் கவனம் குறைதல், படு துருதுருப்பாக எதையாவது செய்துகொண்டே இருத்தல், சீறுகிற அல்லது சிடுசிடுக்கிற மனோபாவத்தைக் காண்பித்தல்” போன்றவற்றில் மூன்று அல்லது அதற்கும் அதிகமான குணங்களை அவர்கள் வெளிக்காட்டினார்கள். ஆனால், ஆறு வருடங்கள் கழித்து, அந்தப் பிள்ளைகளில் 100 பேர், “நல்நடத்தையுள்ள வாலிபர்களைப் போலவே ஆகியிருந்தார்கள்.” அவர்கள் அப்படித் திருந்துவதற்கு எது உதவியது? “மகிழ்ச்சியுள்ள வாலிபர்களாக மாறிய அந்தப் பிள்ளைகளுக்கு, அடாவடித்தனம் செய்கிற மற்ற பிள்ளைகளோடு சகவாசம் வைக்காததும் பெற்றோரின் உன்னிப்பான கவனிப்பும்தான் உதவியிருக்கும்” என அந்த அறிக்கை கூறுகிறது. (g05 8/8)

சுற்றுலாப் பயணிகளைக் கண்டு அஞ்சாத அம்மா கரடிகள்

“சூழியலில் ஆர்வமுள்ள சுற்றுப்பயணிகளின் சத்தம் காடுகளிலுள்ள ப்ரெளன் கரடிகளுக்கு எதிர்பாரா விதத்தில் அனுகூலமாகிவிடலாம்” என பிரிட்டனின் நியு ஸைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கையிடுகிறது. ஒதுக்குப்புறமான இயற்கை இடங்களுக்குச் செல்லும் பயணிகள் மிருகங்களின் நடவடிக்கைகளில் பெரும்பாலும் குறுக்கிடுகிறார்கள், இதனால் சிலசமயம் விபரீதங்கள் நிகழ்கின்றன. ஆனால் மேற்கு கனடாவிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்தில், வஞ்சிர வகை மீன்கள் முட்டையிடுகிற நீரோடைப் பகுதியில் வாழும் ப்ரெளன் கரடிகளை ஆராய்ந்து வரும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள்; அதாவது “பெரிய ஆண் கரடிகள் சுற்றுலாப் பயணிகளைத் தவிர்த்தாலும், . . . தாய் கரடிகளும் அவற்றின் குட்டிகளும் அவர்களைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை; அதற்குப் பதிலாக, பஸ்களின் சத்தத்தைக் கேட்டபோது, ஆபத்தான ஆண் கரடிகள் அந்த நீரோடைப் பகுதியிலிருந்து போய்விட்டதற்கு சிக்னல் கிடைத்ததாகவே நினைத்தன. எல்லா ஆண் கரடிகளும் அந்த இடத்தைவிட்டுப் போன பிறகும்கூட, பயணிகள் வரும்வரை பெண் கரடிகள் அங்கு வரவில்லை” என்கிறது அந்த ரிப்போர்ட். ஆண் கரடிகள் தங்கள் குட்டிகளை வந்து தாக்கிவிடுமோ என்ற பயமே இல்லாமல் வஞ்சிர வகை மீன்களை ஒரு பிடிபிடிக்க தாய் கரடிகள் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது. (g05 8/8)

சுகவீனத்தோடு வேலை செய்தால் . . .

“உடம்பு சரியில்லாத போதிலும், தங்களையே வருத்திக் கொண்டு வேலைக்குச் செல்கிறவர்களுக்கு” இருதய நோய் வருகிற அபாயம் அதிகரிக்கலாம் என பிரிட்டனின் டெலிகிராஃப் ஆன்லைன் செய்தித்தாள் அறிவிக்கிறது. லண்டன் யுனிவர்சிட்டி காலேஜிலுள்ள விஞ்ஞானிகள், அந்நாட்டு அரசாங்க ஊழியர்களில் 10,000 பேருக்கும் அதிகமானோரின் ஆரோக்கியத்தையும் அவர்கள் வேலைக்குச் செல்கிற நாட்களின் பதிவையும் சுமார் பத்து ஆண்டு காலத்திற்கு ஆராய்ந்தார்கள். சுகவீனமாய் இருக்கையில்​—⁠வெறுமனே ஜலதோஷம் பிடித்திருக்கையில்கூட​—⁠வீட்டில் ஓய்வெடுக்காமல் வேலைக்குச் சென்ற 30-40 சதவீதத்தினருக்கு “அதற்கடுத்து வந்த ஆண்டுகளில் இரு மடங்கு அதிகமாக இருதய நோய் வந்தது” என அந்த ஆய்வின் இயக்குநரான சர் மைக்கேல் மார்மட் தெரிவித்தார். (g05 8/8)

பொழுதுபோக்குக்கு புத்தகங்களை வாசித்தால் நிறைய மார்க்

“பல மணிநேரம் பாடங்களைப் படிப்பது, பெற்றோரிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது, வகுப்பின்போது எழுதிவைத்த குறிப்புகளைப் பயன்படுத்துவது, அல்லது கம்ப்யூட்டரை உபயோகிப்பது” ஆகியவற்றைக் காட்டிலும், பொழுதுபோக்குக்காக வாசிப்பதே ஸ்கூல் பாடங்களில் நிறைய மார்க் வாங்க உதவுகிறது என மெக்ஸிகோ நகரின் மீலென்யோ என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. தங்கள் பாடப் புத்தகங்களையும், அதேசமயத்தில் பொழுதுபோக்கு புத்தகங்களையும் வாசிப்பதற்கு நேரம் செலவிடுகிற மாணவர்களே பள்ளியில் அதிகமாக வெற்றி பெறுகிறார்கள் என்பதை லட்சக்கணக்கான மாணவர்களின் உயர்நிலை பள்ளி அட்மிஷன் பரீட்சைகள் சுட்டிக்காட்டுகின்றன. மாணவர்கள் தேர்ந்தெடுக்கிற புத்தகங்கள், பள்ளிப் பாடங்களைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை, வாழ்க்கை வரலாறுகள், கவிதைகள், விஞ்ஞான விஷயங்கள் போன்றவை அடங்கிய பொழுதுபோக்கு புத்தகங்களாகவும் இருக்கலாம். ஆனால், அப்படி வாசிப்பதற்குப் பதிலாக ஒரு நாளைக்குப் பல மணிநேரம் டிவி முன் அமருகிற மாணவர்கள் குறைந்தளவே மார்க் வாங்குவதாக அந்த அறிக்கை காண்பிக்கிறது. (g05 8/8)

உட்கார்ந்தே இருப்பது, புகைபிடிப்பதைவிட கொடியது

“உட்கார்ந்த இடத்தைவிட்டு எழாதிருப்பது புகைபிடிப்பதைவிட மிகவும் கொடியது” என்பதை ஓர் ஆய்வு காட்டியது; அது, 1998-⁠ல் இறந்துபோன 24,000 ஹாங்காங் வாசிகளின் உடற்பயிற்சி பழக்கங்களைப் பற்றிய ஓர் ஆய்வாகும். உடல் உழைப்பில்லாமல் இருப்பது ஆயுசை குறைத்துவிடுவதாக, அதாவது ஆண்களில் 59 சதவீதமும் பெண்களில் 33 சதவீதமும் குறைத்துவிடுவதாக அந்த ஆய்வு வெளிப்படுத்தியது, இதை செளத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையிடுகிறது. “நீங்கள் புகைபிடிக்காதிருந்தால் நல்லது. ஆனால் அப்படிப் புகைபிடிக்காதிருந்தும் உடற்பயிற்சி செய்யாதிருந்தால் [இன்னமும்] அதிக அபாயத்தில்தான் இருக்கிறீர்கள்” என ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் சமுதாய மருத்துவத்துறை தலைவரான லாம் டை-ஹிங் தெரிவித்தார். உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பதைவிட கொஞ்சமாவது செய்வது நல்லது என்கிறார் அவர். உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக அரை மணிநேரம் நடப்பதில் அல்லது வீட்டைச் சுத்தம் செய்வதில் செலவிடும்படி அவர் ஆலோசனை கூறுகிறார். (g05 8/8)

பூட்டானில் புகையிலை விற்பனை தடை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இமாலயப் பிரதேசத்தில் பாதுகாப்பாக அமைந்துள்ள பூட்டான் ராஜ்யம் எல்லாவித புகையிலை பொருள்களின் விற்பனையையும் தடை செய்திருக்கிறது. ஆனால் இந்தத் தடை வெளிநாட்டு அரசியல் நிபுணர்களுக்கோ உல்லாசப் பயணிகளுக்கோ தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கோ பொருந்தாது. உலகிலேயே பூட்டான்தான் முதன்முதலில் இத்தகைய படியை எடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. பொது இடங்களில் புகைபிடிப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. “யாருமே புகைபிடிக்காத ஒரு நாடாக பூட்டான் திகழ வேண்டுமென்பதற்காக அந்த அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியின் ஓர் அம்சம்தான் இந்தத் தடை” என்கிறது பிபிசி செய்தி. (g05 8/22)

அவநம்பிக்கை

உலகெங்குமே, பொதுவாக அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் ஜனங்கள் நம்புவதில்லை என பாரிஸில் வெளியாகும் தினசரியான இன்டர்னேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் அறிவிக்கிறது. அரசியல் தலைவர்கள் “நேர்மையற்றவர்களாக, அளவுக்கதிகமான அதிகாரமுடையவர்களாக, மற்றவர்களுடைய செல்வாக்குக்கு வெகு எளிதில் அடிபணிந்துவிடுபவர்களாக, நெறிகெட்டு நடப்பவர்களாக இருக்கிறார்கள்” என பெரும்பாலோர் நம்புகிறார்கள், இதை 60 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வதேச சுற்றாய்வு ஒன்று காண்பித்தது. ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில், 80 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் அரசியல்வாதிகளின் நாணயத்தைக் குறித்து சந்தேகப்பட்டார்கள். அரசியல்வாதிகளைவிட, தொழிலதிபர்களுக்குக் கொஞ்சம் நல்ல பெயர் இருக்கிறது, ஏனென்றால் பதிலளித்தவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் மட்டுமே, தொழிலதிபர்கள் நாணயமற்றவர்களாயும் நெறிகெட்டவர்களாயும் இருப்பதாகக் கருதினார்கள். உலகளாவிய பாதுகாப்பைக் குறித்து கேட்கப்பட்டபோது, மேற்கு ஐரோப்பாவிலிருந்த 55 சதவீதத்தினருக்கு எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையே இருக்கவில்லை. எகிப்திலிருந்த 70 சதவீதத்தினர் “எதிர்காலம் ஒளியற்று இருப்பதாக” தெரிவித்தார்கள். ஆனால் உலக நிலைமை கட்டாயம் மேம்படும் என்ற மிக நம்பிக்கையான மனநிலை பதிலளித்தவர்களில் 50 சதவீதத்தினருக்கு இருந்ததை ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காண்பித்தது. (g05 8/22)

வங்கியில் பணத்தை அல்ல, நேரத்தைச் சேமிக்கிறார்கள்

ஸ்பெயினில் புதுவிதமான வங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுய சேவை தொண்டு நிறுவனங்கள் “நேர வங்கிகளை” உருவாக்கியுள்ளன; ஜனங்கள் ஒருவருக்கொருவர் சேவைகளைப் பரிமாறிக்கொள்ள இந்த வங்கிகள் உதவுகின்றன. “காசு பணமில்லாமல் செயல்படும் முதல் வங்கி இந்த ‘நேர வங்கிதான்’” என்கிறார் உடல்நல மற்றும் குடும்பநல ஸ்பானிய நிறுவன இயக்குநரான எல்வீரா மென்டேத் என்பவர். வயதானவர்களைக் கவனித்துக்கொள்வது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, சமைப்பது, சுத்தம் செய்வது அல்லது கற்றுக்கொடுப்பது போன்ற சில வேலைகளைச் செய்ய முன்வரும் ஆட்களுடைய பெயர்களை இந்த வங்கிகள் பட்டியலிட்டு வைத்துக்கொள்கின்றன. இங்கு பரிமாற்றம் செய்யப்படுவது மணிநேரம் ஆகும்; எல்லாவித வேலைகளுக்கும் சம அளவு மதிப்புதான் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, குவாண்டம் இயற்பியலை ஒரு மணிநேரத்திற்குக் கற்றுக்கொடுப்பதும் சரி, ஒரு மணிநேரம் சிகை அலங்கார வேலை செய்வதும் சரி, ஒரு மணிநேரம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதும் சரி, எல்லா வேலைகளுமே சரிசமமாகக் கருதப்படுகின்றன. இந்தச் சேவையிலிருந்து நன்மையடையும் நபர் வேறு ஏதாவது வேலை செய்துகொடுப்பதன் மூலம் அதற்கு ஈடுகட்டுகிறார், அவர் செலவிட்ட நேரம் அவருடைய கணக்கில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு இந்த நேர வங்கிகள், நல்ல அக்கம்பக்கத்தார் இடையே முன்பு ஒரு காலத்தில் இருந்த உதவிசெய்யும் மனப்பான்மையைத் திரும்பவும் ஒழுங்கமைத்து புதுப்பிக்க முயற்சி செய்கின்றன. (g05 8/22)