Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் அநேகர் பயத்தில் வாழ்கிறார்கள்?

ஏன் அநேகர் பயத்தில் வாழ்கிறார்கள்?

ஏன் அநேகர் பயத்தில் வாழ்கிறார்கள்?

பயம் எனும் காரிருள் இன்று மனிதகுலத்தை கவ்வியிருக்கிறது. இது கண்களுக்குத் தென்படாவிட்டாலும் பகுத்துணரக்கூடிய ஒரு மனநிலை. இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறபோதிலும், கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் ஒரு சூழல். இதற்குக் காரணம் என்ன? வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது எது சிலரை அச்சுறுத்துகிறது? ஏன் அநேகர் வேலையில் பாதுகாப்பு இல்லாததாக உணருகிறார்கள்? ஏன் பலர் தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பைக் குறித்து பயப்படுகிறார்கள்? வீட்டிற்குள்ளேயே என்ன ஆபத்துகள் இன்று ஆட்களை அச்சுறுத்துகின்றன?

பார்க்கப்போனால், பயத்திற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன, ஆனால் மக்களை சதா பாதிக்கும் நான்கு ஆபத்துகளையே நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம். அதாவது, நகரங்களில் நடைபெறும் வன்முறைகள், பாலியல் கொடுமைகள், கற்பழிப்பு, வீட்டு வன்முறைகள். முதலில், நகரங்களில் நடைபெறும் வன்முறையைப் பார்க்கலாம். மனிதரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் நகரங்களில் வசிப்பதால் இப்பொழுது இந்த விஷயம் முக்கியமாகவும் காலத்திற்கேற்ற ஒன்றாகவும் இருக்கிறது.

நகரங்களிலுள்ள ஆபத்துகள்

ஆரம்பத்தில் நகரங்கள் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருக்கலாம், ஆனால் இப்பொழுதோ நகரங்களை ஆபத்தானவையாக அநேகர் கருதுகிறார்கள். ஒருகாலத்தில் புகலிடமாக விளங்கியது, இன்றோ பீதியூட்டும் இடமாக மாறிவிட்டது. ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பொருட்களைத் தட்டிச் செல்வதற்கு நெரிசலான நகர்ப்புறங்கள் வசதியாக இருக்கின்றன. அதோடு, சில நகரங்களில், தெருவிளக்குகளும் இல்லை, போலீசாருடைய நடமாட்டமும் இல்லை, அதனால் இப்படிப்பட்ட மோசமான இடங்களுக்குள் நுழைவது ஆபத்தாக இருக்கிறது.

மக்கள் பயந்து நடுங்குவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. எண்ணற்றோர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள், இதனால் அநேகர் அஞ்சியஞ்சி வாழ்கிறார்கள். உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் பேர் வன்முறைக்குப் பலியாகிறார்கள் என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆப்பிரிக்காவில், ஒவ்வொரு வருடமும் 1,00,000 பேருக்கு 60.9 பேர் என்ற வீதத்தில் கொடூரமாக கொலை செய்யப்படுவதாக கணக்கிடப்படுகிறது.

பாதுகாப்பானவையாக கருதப்பட்ட இடங்கள், அமைப்புகள், இன்று பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பவையாக கருதப்படுகின்றன​—⁠ஆட்களுடைய விஷயத்திலும் இதைத்தான் பார்க்கிறோம். உதாரணமாக, பெரும்பாலான விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளும் கடைகளும் பயங்கர குற்றச்செயல் புரிவதற்கு ஏதுவான இடங்களாக இப்பொழுது கருதப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், பாதுகாப்பளிக்க வேண்டிய மதத் தலைவர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களே மக்களுடைய நம்பிக்கையில் மண்ணைத் தூவியிருக்கிறார்கள். இவர்களே சிறார் துஷ்பிரயோகம் செய்ததைப் பற்றிய அறிக்கைகள் வருவதால், பிள்ளைகளை மற்றவர்களுடைய கவனிப்பில் விடுவதற்கு பெற்றோர்கள் தயங்குகிறார்கள். போலீசார் மக்களுக்கு வேலியாக இருக்க வேண்டியவர்கள், ஆனால் இந்த “வேலி”யே பயிரை மேய்கின்றன​—⁠சில நகரங்களில் போலீசாருடைய லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் சர்வசாதாரணமாக காணப்படுகின்றன. சில நாடுகளில், உள்நாட்டுப் போர்களைப் பற்றிய சம்பவங்கள் மக்களுடைய நினைவுகளைவிட்டு நீங்காமல் இருக்கின்றன; இதற்குக் காரணம் “பாதுகாப்பு” படையினரே. அன்பானவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்ற பிறகு அவர்களைப் பற்றிய தகவலே இல்லை. ஆகவே, உலகின் பல்வேறு பகுதிகளில், பயம் எனும் காரிருளைப் போக்குவதற்குப் பதிலாக, போலீசாரும் படைவீரருமே அதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பயத்தின் குடிமக்கள்​—⁠லத்தீன் அமெரிக்காவில் நகர்ப்புற வன்முறை என்ற ஆங்கில நூல் இவ்வாறு கூறுகிறது: “லத்தீன் அமெரிக்காவின் தலைநகரங்களில் வசிக்கும் குடிமக்கள் சதா பயத்திலேயே வாழ்கிறார்கள். அந்நகரங்களில் சில, பூமியிலேயே மிகவும் ஆபத்தான இடங்களாகும். அந்தப் பரந்த பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் கொடூர மரணத்திற்கு ஆளாகிறார்கள். மூன்றில் ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வன்முறைக்குப் பலியாகிறார்.” உலகின் வேறு சில இடங்களிலும், தலைநகரங்களில்தான் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக வெடிக்கும்போது, இதைப் பயன்படுத்தி அநேகர் கடைகளைச் சூறையாட ஆரம்பித்துவிடுகிறார்கள், இதனால் ஊரில் பதட்டம் நிலவுகிறது. நகரத்தில் தொழில் செய்பவர்கள் இந்த வெறிபிடித்த கூட்டத்தாரிடம் எளிதில் சிக்கிக்கொள்ளலாம்.

அநேக நாடுகளில், ஏழைகளுடைய வாழ்க்கை தராதரங்களுக்கும் பணக்காரர்களுடைய வாழ்க்கை தராதரங்களுக்கும் இடையே பெரிய பிளவு ஏற்பட்டிருப்பதால், வன்மம் புகைந்து கொண்டிருக்கிறது. எண்ணற்ற மக்கள் அடிப்படை தேவைகள் பறிக்கப்பட்டது போல் உணருகிறார்கள்; இதனால் மேல்வர்க்கத்தினருடைய வட்டாரங்களில் புகுந்து இவர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். சில நகரங்களில் இது இன்னும் சம்பவிக்கவில்லை. இந்தச் சூழல் ‘டைம் பாம்’ மாதிரிதான்​—⁠எப்போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.

திருடர்கள் மற்றும் புரட்சிக்காரர்களுடைய அச்சுறுத்தல் மட்டுமல்ல, பயம் நிறைந்த இத்தகைய சூழலுக்கு பிற காரணிகளும் பங்களிக்கின்றன.

பேரச்சம் தரும் பாலியல் கொடுமை

விசில் சத்தங்கள், ஆபாசமான செய்கைகள், காமப் பார்வை ஆகியவையெல்லாம் லட்சோபலட்சம் பெண்களுக்கு அன்றாட கொடுங்கனவு. ஏஷியா வீக் இவ்வாறு கூறுகிறது: “நான்கு ஜப்பானிய பெண்களில் ஒருவர் பொது இடத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிறார்; அதில் 90 சதவீத சம்பவங்கள் ரயிலில் நடக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. . . . பாலியல் கொடுமைக்குப் பலியானவர்களில் 2 சதவீதத்தினரே நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படி அவர்கள் மெளனமாக இருந்துவிடுவதற்கு முக்கிய காரணமே காமுகர்களின் பழிவாங்கலுக்குப் பயப்படுவதே என்று பெரும்பாலோர் கூறினார்கள்.”

இந்தியாவில் பாலியல் கொடுமைகள் பயங்கரமாக அதிகரித்திருக்கின்றன. இந்தப் பழக்கம் ‘ஈவ்-டீஸிங்’ என அழைக்கப்படுகிறது. “எப்பொழுதெல்லாம் ஒரு பெண் வாசல் படியைவிட்டு வெளியே வருகிறாளோ அப்பொழுதெல்லாம் பயப்படுகிறாள்” என அங்குள்ள பத்திரிகை ஆசிரியை ஒருவர் கூறுகிறார். “ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் அவமானத்தையும் அசிங்கமான வார்த்தைகளையும் எதிர்ப்படுகிறாள்.” ஓரளவு பாதுகாப்பான தெருக்கள் என நகர வாசிகள் பெருமையடித்துக்கொள்ளும் ஓர் இந்திய நகரத்திலிருந்து பின்வரும் அறிக்கை வருகிறது: “[இந்நகரத்தின்] பிரச்சினையே தெருக்களில் அல்ல, ஆனால் ஆபீஸ்களில்தான் இருக்கிறது. . . . சுற்றாய்வு செய்யப்பட்ட பெண்களில் 35 சதவீதத்தினர் வேலை செய்யுமிடங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறினார்கள். . . . வேலை செய்யுமிடத்தில் நடக்கும் பாலியல் கொடுமைக்குப் பயந்து, சம்பளம் குறைந்த வேலைகளுக்குப் போவதாக 52 சதவீத பெண்கள் சொன்னார்கள் . . . அங்கே அவர்கள் பெண்களுடன் [மாத்திரமே] வேலை செய்ய வேண்டியதாயிருக்கும்.”

கற்பழிக்கப்படும் பயம்

பெண்கள் தங்களுடைய கண்ணியத்தை இழப்பதைக் காட்டிலும் அதிகமான காரியங்களுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது. பாலியல் கொடுமை சிலசமயங்களில் கற்பழிக்கப்படும் பயத்தை ஏற்படுத்துகிறது. கற்பழிப்பு என்பது பெண்கள் பலர் கொலையைவிட அதிகமாக பயப்படும் ஒரு குற்றச்செயல். தனியாக இருக்கும் சமயத்தில், கற்பழிக்கப்படலாம் என்ற பயம் திடீரென அவளை கவ்விக்கொள்கிறது. தனக்கு முன்பின் தெரியாத அல்லது தான் நம்பாத ஓர் ஆளை அவள் பார்க்கலாம். தனது சூழ்நிலையை படப்படப்புடன் மதிப்பிட்டுப் பார்ப்பதற்குள் அவளுடைய இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ‘அவன் என்ன செய்வானோ? இப்போது நான் எங்கே ஓடுவேன்? கத்திக் கூச்சல்போட வேண்டுமா?’ அடிக்கடி நிகழும் இதுபோன்ற அனுபவங்கள் படிப்படியாக பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இத்தகைய பயத்தால், பெரும்பாலான பெண்கள் நகர்ப்புறங்களில் வாழவோ பட்டணங்களைச் சென்று பார்க்கவோ விரும்புவதில்லை.

“பயம், கவலை, துன்பம் ஆகியவையெல்லாம் நகர்ப்புறங்களில் வாழும் அநேக பெண்கள் அன்றாடம் அனுபவிப்பவை” என பெண்ணின் பயம் (ஆங்கிலம்) என்ற நூல் கூறுகிறது. “கற்பழிக்கப்படுவோமோ என பெண்கள் பயப்படுவதால் எப்பொழுதும் ஜாக்கிரதையாகவும் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டுமென்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்படுகிறது. இதனால், முக்கியமாக இரவு நேரங்களில், யாராவது ஒருவர் அவளுக்குப் பின்னால் மிக நெருக்கமாக வந்தால்கூட மனதில் ஒருவித இறுக்கம் உண்டாகிறது. இது . . . பெண்கள் ஒருபோதும் முற்றிலும் விடுதலை அடையாத ஓர் உணர்வு.”

வன்முறைச் செயல்கள் பெரும்பாலான பெண்களை பாதிக்கின்றன. என்றாலும், வன்முறை பற்றிய பயம் கிட்டத்தட்ட எல்லா பெண்களையும் பாதிக்கிறது. உலக ஜனத்தொகையின் நிலை 2000 (ஆங்கிலம்) என்ற ஐக்கிய நாட்டு சங்க பிரசுரம் இவ்வாறு கூறுகிறது: “உலகெங்கிலும் பெண்களில் குறைந்தபட்சம் மூவரில் ஒருவர் அடிக்கப்படுகிறார், பாலுறவுக்குப் பலவந்தப்படுத்தப்படுகிறார், அல்லது வேறெதாவது விதத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்​—⁠பெரும்பாலும் அவளுக்குத் தெரிந்த ஆட்களாலேயே இவையெல்லாம் செய்யப்படுகிறது.” இதைவிட வேறெங்காவது அதிகமாக பயம் ஊடுருவி காணப்படுகிறதா? மக்கள் தங்களுடைய சொந்த வீட்டிலேயே பயத்துடன் வாழ்வது எந்தளவு சகஜமாக இருக்கிறது?

வீட்டில் வன்முறை பற்றிய பயம்

மனைவிகளை அடிபணியச் செய்வதற்கு அவர்களை வீட்டில் அடிக்கும் பழக்கம் உலகெங்கிலும் நடக்கும் மாபெரும் அநீதி​—⁠இது ஒரு குற்றமென சமீபத்தில்தான் அநேக இடங்களில் ஏற்கப்பட்டுள்ளது. “குறைந்தபட்சம் 45 சதவீத பெண்கள் தங்களுடைய கணவனால் கன்னத்தில் அறையப்படுகிறார்கள், உதைக்கப்படுகிறார்கள் அல்லது அடிக்கப்படுகிறார்கள்” என இந்தியாவிலிருந்து வரும் ஓர் அறிக்கை கூறுகிறது. துணைகளை தாக்குவது ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், 15-⁠க்கும் 44-⁠க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள பெண்களைப் பற்றி ஃபெடரல் பீயுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அறிக்கை ஒன்று கூறுவதாவது: கார் விபத்துகளாலும் வழிப்பறி தாக்குதல்களாலும் கற்பழிப்புகளாலும் காயமடைவோரின் எண்ணிக்கையைவிட வீட்டில் நடந்த வன்முறையால் காயமடைந்தவர்கள்தான் அதிகம். ஆகவே, எப்பொழுதாவது வாக்குவாதம் ஏற்பட்டு கன்னத்தில் அறைவதைவிட வீட்டு வன்முறை அதிக ஆபத்தானதாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் வீட்டில் காயமேற்படும் பயத்திலும் செத்துப்போகும் பயத்திலும் வாழ்கிறார்கள். வீட்டு வன்முறைக்குப் பலியான மூன்று பெண்களில் ஒருவர் ஏதோவொரு சமயத்தில் தங்களுடைய உயிர் போய்விடும் பயத்தில் வாழ்ந்ததாக கனடாவில் நடத்தப்பட்ட தேசிய சுற்றாய்வு ஒன்று காண்பித்தது. ஐக்கிய மாகாணங்களில், ஆராய்ச்சியாளர்கள் இருவர் இவ்வாறு முடிவுக்கு வந்தார்கள்: “பெண்களுக்கு வீடு மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது, அதுவே பெரும்பாலும் கொடூரத்திற்கும் சித்திரவதைக்குமுரிய இடமாக இருக்கிறது.”

ஏன் அநேக பெண்கள் இத்தகைய ஆபத்தான உறவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள்? ‘அவர்கள் ஏன் உதவியை நாடுவதில்லை? ஏன் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை?’ என பெரும்பாலோர் யோசிக்கிறார்கள். அநேகருடைய விஷயத்தில், பயமே இதற்கு காரணம். பயம் என்பது வீட்டு வன்முறையின் பிரத்தியேக அம்சமென அழைக்கப்பட்டுள்ளது. துஷ்பிரயோகம் செய்யும் ஆண்கள் தங்களுடைய மனைவிகளை வன்முறையால் அடக்கிவிடுகிறார்கள், பின்பு அவர்களை மரண அச்சுறுத்தலில் மெளனிகளாக்கி விடுகிறார்கள். தாக்கப்பட்ட மனைவி உதவியை நாடுவதற்கு தைரியம் கொண்டாலும்கூட, அது அவளுக்கு எப்போதும் கிடைப்பதில்லை. ஏனென்றால் வன்முறைச் செயல்களை வெறுப்பவர்கள் மத்தியில்கூட, கணவனால் இழைக்கப்படும் வன்முறையை அற்பமாக கருதுகிற, புறக்கணித்து விடுகிற, அல்லது நியாயப்படுத்துகிற மனோபாவம் இருக்கிறது. அதோடு, துஷ்பிரயோகம் செய்கிற கணவன் வெளியில் மற்றவர்களுக்கு முன்பு நல்லவராக இருக்கலாம். இவர் மனைவியை அடித்தார் என்று சொன்னால் பெரும்பாலும் நண்பர்கள் நம்ப மாட்டார்கள். யாருமே நம்ப மாட்டார்கள் என்பதாலும், வேறெங்கு போவதென தெரியாததாலும், சதா பயத்தில் வாழ்வதைவிட வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்படும் மனைவிகள் பெரும்பாலோர் வந்துவிடுகிறார்கள்.

அடிவாங்கிய பெண்கள் துணிந்து வீட்டை விட்டு வெளியே போனாலும், மற்றொரு வகை கொடுமைக்கு ஆளாகிறார்கள், அதாவது அவர்கள் பின்தொடரப்படுகிறார்கள். இப்படி 15 சதவீத பெண்கள் பின்தொடரப்பட்டதாக வட அமெரிக்காவில், லூஸியானா என்ற மாநிலத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டியது. அவர்களுடைய பயத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்களை அச்சுறுத்திய ஒருவர் நீங்கள் எங்கே போனாலும் தொடர்ந்து உங்கள் பின்னே வருவார். உங்களுக்கு போன் செய்வார், உங்களைப் பின்தொடருவார், உங்களைக் கண்காணிப்பார், உங்களுக்காக காத்திருப்பார். உங்களுடைய செல்லப்பிராணியையும்கூட கொலை செய்துவிடுவார். இதெல்லாம் திகிலை உண்டாக்க செய்யப்படும் நடவடிக்கைகள்!

ஒருவேளை இப்படிப்பட்ட பயத்திற்கு நீங்கள் பலியாகாமல் இருக்கலாம். ஆனால், அனுதினமும் நீங்கள் செய்யும் காரியங்களை பயம் எந்தளவுக்கு பாதிக்கிறது?

நீங்கள் செயல்படும் விதத்தை பயம் பாதிக்கிறதா?

பயம் நிறைந்த சூழலில் நாம் வாழ்வதால், நாம் எடுக்கும் எத்தனை தீர்மானங்களில் பயம் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பதை நாம் அறியாமல் இருக்கலாம். நீங்கள் செயல்படும் முறையை பயம் எவ்வளவு அடிக்கடி பாதிக்கிறது?

வன்முறை பற்றிய பயம் இரவில் வீட்டிற்குத் தனியாக வராதபடி உங்களையோ உங்களுடைய குடும்பத்தினரையோ தடுத்திருக்கிறதா? பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யாதபடி பயம் உங்களைப் பாதித்திருக்கிறதா? வேலைக்குப் போய் வருவதைப் பற்றிய பயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலையை பாதித்திருக்கிறதா? அல்லது, சக தொழிலாளிகளைப் பற்றிய பயமோ அல்லது தினமும் தொடர்புகொள்ள வேண்டிய ஆட்களைப் பற்றிய பயமோ நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேலைமீது செல்வாக்கு செலுத்தியிருக்கிறதா? பயம் உங்களுடைய சமூக வாழ்க்கையை அல்லது நீங்கள் அனுபவிக்கும் பொழுதுபோக்கை பாதித்திருக்கிறதா? குடித்துவிட்டு கலாட்டா செய்பவர்களையும் கட்டுக்கடங்காத கூட்டத்தினரையும் பற்றிய பயம் நீங்கள் ஏதாவது விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் இசை கச்சேரிகளுக்கும் போவதை தடுத்திருக்கிறதா? பயம் உங்களுடைய பள்ளி காரியங்களைப் பாதித்திருக்கிறதா? பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தங்களுடைய பிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விடுவார்களோ என்ற பயம் இருக்கிறது; எந்தப் பள்ளிக்கூடத்திற்கு அவர்களை அனுப்புவது என்று தீர்மானிக்கும் விஷயத்தில் பயம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய பிள்ளைகள் நடந்தோ பஸ்ஸிலோ போவதற்குப் பதிலாக தாங்களே அழைத்துச் சென்று கூட்டி வருகிறார்கள்.

சொல்லப்போனால், மனிதகுலம் பயம் சூழ்ந்த ஓர் உலகில் வாழ்கிறது. ஆனால் வன்முறை பயம் பெரும்பாலும் மனித சரித்திரம் முழுவதும் இருந்து வந்திருக்கிறது. ஏதாவது மாற்றத்தை நாம் உண்மையிலேயே எதிர்பார்க்க முடியுமா? பயத்திலிருந்து விடுதலை என்பது வெறும் கனவா? அல்லது எந்தவித நாசமோசத்திற்கும் பயப்படாமல் எதிர்காலத்தில் வாழலாமென எதிர்பார்ப்பதற்கு ஏதாவது பலமான காரணம் இருக்கிறதா? (g05 8/8)