சோதிடம்—உங்கள் எதிர்காலத்தைக் காட்டுமா?
பைபிளின் கருத்து
சோதிடம்—உங்கள் எதிர்காலத்தைக் காட்டுமா?
வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி? காதலில் ஜெயிப்பது எப்படி? பணக்காரராவது எப்படி? அநேகர் இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடி சோதிடம் பார்க்கிறார்கள். கோடிக்கணக்கானோர் எதிர்காலத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆசையோடு ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் ராசிபலனைப் பார்க்கிறார்கள். ஏன், உலகத் தலைவர்கள்கூட நாள் நட்சத்திரம் பார்த்தே தீர்மானங்கள் எடுப்பதாக சொல்லப்படுகிறது.
சோதிடம் நம்பகமானதா? சோதிடர்கள் எதை வைத்து எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள்? கிறிஸ்தவர்கள் வான் கோள்களை வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தலாமா?
சோதிடம் என்றால் என்ன?
தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிற விதமாக, “வான் கோள்களின் நிலைகளைப் பொறுத்து ஒருவரது குணாதிசயத்தை அல்லது எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற நம்பிக்கையே” சோதிடம். ஒருவரது பிறப்பின்போது கிரகங்களும் ராசி மண்டலங்களும் இருக்கிற துல்லியமான நிலைகள், அவருடைய வாழ்க்கைமீது செல்வாக்கு செலுத்தலாம் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள். a ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இந்த வான் கோள்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றிய விவரங்கள் அடங்கியதுதான் ஜாதகம்.
ஆதிகாலத்திலிருந்தே மக்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறது. பாபிலோனியர்கள், சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு சூரியன், சந்திரன், கண்ணுக்கு புலப்பட்ட ஐந்து கிரகங்கள் ஆகியவற்றின் நிலைகளை வைத்து எதிர்காலத்தைக் கணித்தார்கள். இந்த வான் கோளங்கள் மனிதனின் நடத்தையில் செல்வாக்கு செலுத்தியதாக அவர்கள் கூறினார்கள். பிறகு ராசி மண்டலங்களின் அடிப்படையில் பலன்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.
சோதிடத்தின் சரித்திரத்தில் தோல்விகளே அதிகம்
சோதிடத்திற்கும் பாபிலோனுக்கும் இடையே இருந்த சம்பந்தத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது. மேலும் பாபிலோனிய சோதிடர்களைக் குறித்தும் பல முறை குறிப்பிடுகிறது. (தானியேல் 4:7; 5:7, 11) தானியேல் தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் கல்தேயாவில் (பாபிலோனில்) சோதிடம் மிகப் பரவலாக இருந்ததால் சோதிடர்களை “கல்தேயர்கள்” என்றே அழைத்தார்கள்.
பாபிலோனில் சோதிடம் செல்வாக்கு செலுத்தியதை தானியேல் கண்ணாரக் கண்டார்; அதுமட்டுமல்ல அந்நகரத்தின் அழிவை சோதிடத்தால் முன்னறிவிக்க முடியாமல் போனதையும் பார்த்தார். (தானியேல் ) ஏசாயா தீர்க்கதரிசி 200 ஆண்டுகளுக்கு முன்பு துல்லியமாக முன்னறிவித்த விஷயத்தைக் கவனியுங்கள். “உன்னுடைய ஜோதிடர் வந்து உன்னை ரட்சிக்கட்டும்—நட்சத்திரங்களை ஆராய்ந்து, வானங்களின் பாகங்களை வரைபடமிட்டு ஒவ்வொரு மாதமும் உனக்கு நடக்கப்போவதை சொல்கிறவர்கள் வரட்டும். . . . அவர்களால் தங்களைக்கூட ரட்சிக்க முடியாது” என்று அவர் ஏளனமாக கூறினார்.— 2:27ஏசாயா 47:13, 14, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.
ஆம், பாபிலோன் அழிவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால்கூட அதன் சோதிடர்களால் அதைக் கணிக்க முடியவில்லை. மேலும் அரசன் பெல்ஷாத்சாரின் அரண்மனை சுவற்றில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தி எழுதப்பட்டபோது சோதிடர்களால் அந்த மர்ம எழுத்துக்களுக்கு அர்த்தம்கூற முடியவில்லை.—தானியேல் 5:7, 8.
இன்றைக்கும்கூட சோதிடர்களால் முக்கியமான சம்பவங்களைக் கணிக்க முடிவதில்லை. அறிவியல் ஆய்வாளர்களான ஆர். கல்வரும் ஃபிலிப் ஐயானாவும் 3,000-த்திற்கும் அதிகமான வானியல் கணிப்புகளை அலசி ஆராய்ந்ததில் 10 சதவிகிதம் மட்டுமே துல்லியமானதென கண்டுபிடித்திருக்கிறார்கள். சோதிடர்களைவிட, தகவல்களை ஆராயும் பகுத்தாய்வாளர்களால் சம்பவங்களை இன்னும் துல்லியமாக கணிக்க முடிந்திருக்கும்.
பைபிள் போதனைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது
சோதிடம் எதிர்காலத்தைத் துல்லியமாக முன்னறிவிக்க தவறியதால் மட்டுமே எபிரெய தீர்க்கதரிசிகள் அதிலிருந்து விலகியிருக்கவில்லை. மோசேயிடம் கடவுள் கொடுத்திருந்த சட்டம், அஞ்சனம் பார்ப்பதைக் குறிப்பாக கண்டனம் செய்தது. “குறிசொல்லுகிறவனும் . . . அஞ்சனம் பார்க்கிறவனும் . . . உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என்று சொன்னது.—உபாகமம் 18:10-12.
சோதிடம் என்ற வார்த்தையை அந்த வசனம் குறிப்பிடாவிட்டாலும், நாம் தவிர்க்க வேண்டிய காரியங்களில் அதுவும் உட்படுகிறது என்பதில் சந்தேகமேயில்லை. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சோதிடத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: இதுவும் “குறிசொல்லுதலில் ஒருவகைதான். சூரியன், சந்திரன், கிரகங்கள், நிலை மாறாத நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பார்த்தும் அவற்றை விளக்கியும் உலக சம்பவங்களையும் மனித விவகாரங்களையும் கணிப்பதை அது உட்படுத்தும்.” எல்லாவித குறிசொல்லுதலும்—நட்சத்திரங்களை வைத்து சொல்லப்பட்டாலும் சரி வேறு பொருட்களை வைத்து சொல்லப்பட்டாலும் சரி—கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமானவை. ஏன்? அதற்கு நல்ல காரணம் இருக்கிறது.
நம்முடைய வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நட்சத்திரங்களைக் காரணங்காட்டுவதற்கு பதிலாக, “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (கலாத்தியர் 6:7) நாம் சொந்தமாகத் தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரத்தைப் பெற்றிருப்பதால் நம்முடைய செயல்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். (உபாகமம் 30:19, 20; ரோமர் 14:12) நம் கட்டுப்பாட்டை மீறி நமக்கு ஏதேனும் விபத்து நேரிடலாம் அல்லது ஏதேனும் வியாதி வரலாம் என்பது உண்மைதான். ஆனால் இப்படிப்பட்ட துன்பங்களுக்குக் காரணம் நம்முடைய ஜாதகம் அல்ல, ஆனால் ‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்தான்’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:11, NW.
மற்றவர்களுடன் பழகும்போது தயவு, இரக்கம், மனத்தாழ்மை, சாந்தம், நீடியபொறுமை, அன்பு போன்ற குணங்களை தரித்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (கொலோசெயர் 3:12-14) நண்பர்களிடமும் மணத் துணைவர்களிடமும் நம்முடைய உறவு நிலைத்திருப்பதற்கு இப்படிப்பட்ட குணங்கள் இன்றியமையாதவை. மணத் துணைவரை தேர்ந்தெடுப்பதற்கு “ஜாதக பொருத்தம்” பார்ப்பதில் பிரயோஜனமில்லை. மனோதத்துவ நிபுணரான பெர்னார்டு ஸில்வர்மன் 3,500 தம்பதிகளின் ஜாதகத்தை ஆராய்ந்தார்; அவர்களில் 17 சதவிகிதத்தினர் பிற்பாடு விவாகரத்து செய்திருந்தனர். ஆக, ‘ஜாதகம் பார்த்து’ திருமணம் செய்தவர்களும்கூட மற்றவர்களைப் போலவே விவாகரத்து செய்ததைத்தான் அவர் கவனித்தார்.
சோதிடம் நம்பகமற்றது என்பதும் மக்களை ஏமாற்றுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அது, நம் தவறுகளுக்கு நம்மை குற்றப்படுத்தாமல் நட்சத்திரங்களைக் குற்றப்படுத்த நம்மை தூண்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, சோதிடத்தைக் கடவுளுடைய வார்த்தை நேரடியாக கண்டனம் செய்கிறது. (g05 8/8)
[அடிக்குறிப்பு]
a சோதிடத்தில் பயன்படுத்தப்படும் 12 வித்தியாசமான விண்மீன் குழுக்களே ராசி மண்டலங்கள்.