Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தவறான ஆட்களுடன் பழகுவதை நான் எப்படி தவிர்ப்பது?

தவறான ஆட்களுடன் பழகுவதை நான் எப்படி தவிர்ப்பது?

இளைஞர் கேட்கின்றனர். . .

தவறான ஆட்களுடன் பழகுவதை நான் எப்படி தவிர்ப்பது?

“ஸ்கூலில், ஒரு பெண்ணோடு பழக ஆரம்பித்தேன். . . . அவள் போதைப்பொருட்களை எடுக்க மாட்டாள்; மோசமான பார்ட்டிகளுக்குப் போக மாட்டாள்; ஒழுக்கங்கெட்ட காரியங்களில் ஈடுபட மாட்டாள். கெட்ட பேச்சு பேச மாட்டாள். இதெல்லாம்போக படிப்பிலும் கெட்டிக்காரி. ஆனாலும் அவள் ஒரு கெட்ட தோழியாகத்தான் இருந்தாள்.”​—⁠பெவர்லி. a

பெவர்லி அந்தப் பெண்ணைக் கெட்ட தோழி என்று முடிவில் சொன்னதற்குக் காரணம்? அவளுடைய சகவாசத்தால் சில கெட்ட காரியங்களில் பெவர்லி சிக்கினாள். அதை இப்போது உணர்ந்து இவ்வாறு சொல்கிறாள்: “அவளுடன் தொடர்ந்து பழகியபோது நானும் மாயமந்திர புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். மாயமந்திரத்தைப் பற்றி நானே சொந்தமாக ஒரு கதை எழுதும் அளவுக்கு ஆகிவிட்டேன்.”

மெலானி என்ற ஒரு பெண் ஒழுக்கங்கெட்ட காரியத்தில் சிக்கினாள். கிறிஸ்தவனென சொல்லிக்கொண்ட ஒருவனே அதற்குக் காரணம்! நீங்கள் நண்பரைத் தேர்ந்தெடுக்கையில், அவர் நல்லவரா கெட்டவரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? கிறிஸ்தவராக இல்லாதவர்களுடன் நெருங்கிப் பழகுவது எப்போதுமே ஆபத்தானதா? அதேசமயம் கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள நட்பு எப்போதுமே பாதுகாப்பானதா?

குறிப்பாக, எதிர்பாலாருடன் உள்ள நட்பு பற்றி என்ன சொல்லலாம்? ‘அவர்(ள்) எனக்கு ஏற்ற மணத்துணையா’ என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், உங்களுடைய நட்பு ஆன்மீக விதத்தில் செழித்தோங்குமா என்பதை நீங்கள் எப்படி தெரிந்துகொள்வது? இந்த மாதிரியான கேள்விகளுக்கு பைபிள் நியமங்கள் எப்படி விடையளிக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

எப்படிப்பட்ட நண்பர்கள் நல்லவர்கள்?

ஸ்கூலில் தன்னுடன் படிக்கும் பெண், உண்மையான கடவுளை வணங்காததன் காரணமாக, அவளுடன் நட்புகொள்வதைக் குறித்து பெவர்லி ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்திருக்க வேண்டுமா? சக விசுவாசியாக இல்லாததால் ஒருவர் கீழ்த்தனமானவர், ஒழுங்கற்றவர் என்றெல்லாம் மெய் கிறிஸ்தவர்கள் நினைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் ஒருவருடன் நெருங்கிப் பழகும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டு கொரிந்திய சபையை இவ்வாறு எச்சரித்தார்: “தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, பொது மொழிபெயர்ப்பு) அவர் எதை அர்த்தப்படுத்தினார்?

கொரிந்திய கிறிஸ்தவர்களில் சிலர் எப்பிக்கூரருடன் கூட்டுறவு வைத்திருந்திருக்கலாம். இந்த எப்பிக்கூரர்கள் கிரேக்க தத்துவ ஞானி எப்பிகியுரஸைப் பின்பற்றினார்கள். நல்புத்தியுடனும் தைரியத்துடனும் தன்னடக்கத்துடனும் நியாயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று எப்பிகியுரஸ் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் போதித்தார். இரகசியமாக செய்யப்படும் தவறுகளைக்கூட கண்டித்தார். அப்படியென்றால், பவுல் ஏன் எப்பிக்கூரர்களையும் கிறிஸ்தவ சபையில் அவர்களுடைய எண்ணங்களைக் கொண்டிருந்தவர்களையும் ‘தீய நண்பர்களாகக்’ கருதினார்?

எப்பிக்கூரர்கள் மெய்க் கடவுளை வணங்காதவர்கள். அவர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாததால், இருக்கிற வாழ்க்கையை முழுமையாக அனுபவித்துவிடவே விரும்பினார்கள். (அப்போஸ்தலர் 17:18, 19, 32) இப்படிப்பட்டவர்களுடன் கூட்டுறவு வைத்திருந்ததால்தான் கொரிந்திய சபையில் இருந்த சிலர் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அதனால்தான் கெட்ட கூட்டுறவைக் குறித்து பவுல் எச்சரித்து எழுதியிருக்கிற அதே 1 கொரிந்தியர் 15-⁠ம் அதிகாரத்தில், உயிர்த்தெழுதலைக் குறித்த ஆதாரங்களும் அதிகம் உள்ளன. உயிர்த்தெழுதல் நம்பிக்கைமீது அந்தப் பூர்வ கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்தை மறுபடியும் புதுப்பிக்கவே அவை எழுதப்பட்டன.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுள் பக்தி இல்லாதவர்களுக்குக்கூட நல்ல பண்புகள் இருக்கலாம். ஆனால் அவர்களை நெருங்கிய நண்பர்களாக தேர்ந்தெடுத்தால் உங்களுடைய சிந்தனை, விசுவாசம், நடத்தை எல்லாமே பாதிக்கப்படும். ஆகவே, கொரிந்தியர்களுக்குப் பவுல் எழுதின இரண்டாவது கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.”​—⁠2 கொரிந்தியர் 6:14-18.

ஃபிரெட் என்ற 16 வயது இளைஞன், பவுலின் வார்த்தைகள் எவ்வளவு ஞானமானவை என்பதைப் புரிந்துகொண்டான். முன்பு, ஸ்கூல் பிராஜக்ட் ஒன்றில், அதாவது வளர்ந்து வரும் ஒரு நாட்டுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் வேலையில் கலந்துகொள்ள தீர்மானித்திருந்தான். ஆனால் பிறகு அவனும் அவனுடைய நண்பர்களும் அதற்காக ரெடியாகிக் கொண்டிருந்த சமயத்தில் அவன் மனதை மாற்றிக்கொண்டான். “அவர்களுடன் மணிக்கணக்காக நேரம் செலவழிப்பது என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை என உணர்ந்தேன்” என்கிறான் அவன். எனவே ஃபிரட் அந்த ஸ்கூல் பிராஜக்டில் கலந்துகொள்ளாமல், திக்கற்றவர்களுக்கு வேறு விதங்களில் உதவ முடிவு செய்தான்.

சக கிறிஸ்தவர்களுடன் கொள்ளும் நட்பு

கிறிஸ்தவ சபையிலிருப்பவர்களிடம் நட்பு கொள்வது பற்றி என்ன சொல்லலாம்? இளம் தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.” (2 தீமோத்தேயு 2:20, 21) ஆக, கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கனவீனமாக நடந்துகொள்பவர்கள் சிலர் இருக்கலாம் என்ற உண்மையை பவுல் இங்கு மூடிமறைக்காமல் சொன்னார். அப்படிப்பட்டவர்களை விட்டு விலகி இருக்கும்படி தீமோத்தேயுவை வெளிப்படையாகவே எச்சரித்தார்.

அப்படியென்றால் சக கிறிஸ்தவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டுமென்று அர்த்தமா? இல்லை. அதேசமயத்தில், உங்களுடைய நண்பர்களிடம் குற்றங்குறைகளே இருக்கக்கூடாதென எதிர்பார்க்கவும் கூடாது. (பிரசங்கி 7:16-18) எனினும், ஓர் இளைஞர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அல்லது அவருடைய பெற்றோர் சபையில் வைராக்கியமாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நெருங்கிய நண்பராக தேர்ந்தெடுப்பது ஞானமானது என்றும் சொல்லிவிட முடியாது.

“பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” என்று நீதிமொழிகள் 20:11 சொல்கிறது. ஆகையால், பின்வரும் கேள்விகளைக் கேட்பது ஞானமாக இருக்கும்: “யெகோவாவிடம் கொண்டுள்ள உறவே அந்த நபருடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறதா? அல்லது அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் “உலகத்தின் ஆவியை,” அதாவது மனப்பான்மையைப் பிரதிபலிக்கின்றனவா? (1 கொரிந்தியர் 2:12; எபேசியர் 2:2) அந்த நபருடன் பழகுவது யெகோவாவை வணங்க வேண்டுமென்ற உங்களுடைய ஆசையை அதிகரிக்கிறதா?

யெகோவாவையும் ஆன்மீக காரியங்களையும் நெஞ்சார நேசிப்பவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால் பிரச்சினைகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் கடவுளைச் சேவிப்பதற்கு இன்னும் அதிகமான உற்சாகத்தையும் பெறுவீர்கள். தீமோத்தேயுவுக்குப் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.’​—⁠2 தீமோத்தேயு 2:22.

எதிர்பாலாருடன் கொள்ளும் நட்பு

நீங்கள் வயது வந்தவராகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவராகவும் இருந்தால் உங்களுடைய மணத்துணையை தேர்ந்தெடுப்பதில் எப்படி இதே நியமங்கள் பொருந்துகின்றன என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? திருமணம் செய்யப்போகும் நபரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கலாம். அவை உங்களை கவர்ந்திருந்தாலும் அவருடைய ஆன்மீகநிலையே உங்களை முக்கியமாக கவர வேண்டும்.

அதனால்தான், ‘கர்த்தருக்கு’ உட்படாதவரைத் திருமணம் செய்வதைக் குறித்து பைபிள் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 7:39; உபாகமம் 7:3, 4; நெகேமியா 13:25) கிறிஸ்தவரல்லாதவர்கூட நம்பகமானவராக இருக்கலாம், ஒழுக்கமானவராக இருக்கலாம், இரக்கமானவராக இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பண்புகளில் முன்னேற வேண்டும், திருமண வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டும் என்றெல்லாம் நீங்கள் ஆசைப்படுவது போல் அவர் ஆசைப்பட மாட்டார்.

மறுபட்சத்தில், யெகோவாவிற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து உத்தமமாக இருப்பவர்களோ தங்கள் வாழ்க்கையில் என்னதான் நடந்தாலும் கிறிஸ்தவ பண்புகளை வளர்ப்பதில் கண்ணும்கருத்துமாக இருக்கிறார்கள், அவற்றைப் போற்றி பாதுகாப்பார்கள். மணத்துணைவரிடம் அன்பு காட்டுவதையும் யெகோவாவிடம் நல்ல உறவு வைத்திருப்பதையும் பைபிள் சம்பந்தப்படுத்தி பேசுகிறதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். (எபேசியர் 5:28, 33; 1 பேதுரு 3:⁠7) ஆக, மணத்துணைவர்கள் இருவருமே யெகோவாவை நேசிக்கும்போது ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதற்கு அதிகமாக தூண்டப்படுகிறார்கள்.

அப்படியானால் சக கிறிஸ்தவர்களிடையே நடக்கும் திருமணங்கள் நிச்சயம் வெற்றிபெறும் என்று அர்த்தமா? இல்லை. உதாரணத்திற்கு ஆன்மீக காரியங்களில் அவ்வளவாக அக்கறைகாட்டாத ஒருவரை நீங்கள் திருமணம் செய்தால் என்ன நேரிடலாம்? ஆன்மீக ரீதியில் பலவீனமாக இருக்கும் அவர் இவ்வுலக அழுத்தங்களைத் தாக்குபிடிக்க முடியாமல் கிறிஸ்தவ சபையிலிருந்து விலகிச் சென்றுவிடலாம். (பிலிப்பியர் 3:18; 1 யோவான் 2:19) உங்களுடைய துணைவர் ‘உலகத்தின் அசுத்தங்களில்’ சிக்கிவிட்டால் உங்கள் மண வாழ்வை துன்பமும் துயரமும்தான் ஆட்டிப்படைக்கும். அப்படிப்பட்ட வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டோம்.​—2 பேதுரு 2:20.

திருமண நோக்குடன் பழக ஆரம்பிப்பதற்கு முன்பு இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டும்: இவர் ஆன்மீக விஷயங்களில் ஆர்வங்காட்டுகிறாரா? ஒரு கிறிஸ்தவராக நல்ல முன்மாதிரி வைக்கிறாரா? பைபிள் சத்தியங்களில் நன்கு வேரூன்றி இருக்கிறாரா? அல்லது ஆன்மீகத்தில் முன்னேற இன்னும் அவருக்கு சமயம் தேவையா? அவருடைய வாழ்க்கையில் யெகோவா மீதுள்ள அன்பே முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? ஆகவே இவ்வாறெல்லாம் சிந்தித்து, அவர் மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். ஆனாலும் இறுதியில் தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, அவர் யெகோவாவிற்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்பதிலும் உங்களுக்கு நல்ல ஒரு மணத்துணைவராக இருப்பார் என்பதிலும் நீங்கள் நிச்சயமாக இருக்க வேண்டும்.

இதையும்கூட நினைவில் வையுங்கள்: “தவறானவர்களிடம்” கவர்ந்திழுக்கப்படுபவர்கள் முதலாவதாக தவறான காரியங்களிடம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்; அவை தகாத பொழுதுபோக்குகளாக அல்லது தகாத செயல்களாக இருக்கலாம். சபையில் நல்ல முன்மாதிரியை வைக்கும் இளைஞர்கள் உங்களுடன் அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். எனவே உங்கள் இருதயத்தை ஆராயுங்கள்.

உங்கள் இருதயத்திற்கு புத்திமதி தேவைப்படுகிறது என்று நினைத்தால் ‘நான் எதற்கும் உதவாதவன்’ என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இருதயத்திற்கு புத்திமதி அளிக்க முடியும். (நீதிமொழிகள் 23:12) நீங்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்லதையும் நல்லதையே செய்யும் நண்பர்களையும் விரும்புகிறீர்களா? யெகோவாவின் உதவியோடு நீங்கள் அப்படிப்பட்ட விருப்பத்தை வளர்த்துக்கொள்ளலாம். (சங்கீதம் 97:10) அதோடு, எது நன்மை எது தீமை என்பதைப் பகுத்தறியும் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் யார் நல்ல நண்பராக, கட்டியெழுப்பும் நண்பராக இருக்க முடியும் என்பதை நீங்களே சுலபமாக தீர்மானித்துவிடலாம்.​—⁠எபிரெயர் 5:14. (g05 8/22)

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 12-ன் படம்]

நல்ல நண்பர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற உதவுவார்கள்