Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பயத்திலிருந்து விடுதலை சாத்தியமா?

பயத்திலிருந்து விடுதலை சாத்தியமா?

பயத்திலிருந்து விடுதலை சாத்தியமா?

ஆபத்தான இன்றைய உலகில் வாழும் எவரேனும் பயத்திலிருந்து முற்றிலும் விடுபட முடியுமா? சாத்தியமே இல்லை. கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும்கூட ஆபத்துகளை எதிர்ப்படுகிறார்கள், அது அவர்களைக் கவலைகொள்ளச் செய்கிறது. உதாரணமாக, பொ.ச. முதல் நூற்றாண்டில், பல்வேறு இடங்களுக்குப் பயணித்த அப்போஸ்தலன் பவுல், கப்பற்சேதத்தாலும் ஆறுகளாலும் வழிப்பறி கொள்ளையராலும் நகரத்தினராலும் வந்த ஆபத்துகளை எதிர்ப்பட்டதாகக் கூறினார். (2 கொரிந்தியர் 11:25-28) அதே போலவே இன்றும் நம்மில் பெரும்பாலோர் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது.

என்றாலும், முன்னெச்சரிக்கையோடு ஞானமான நடவடிக்கைகள் சிலவற்றை நாம் எடுக்கலாம். இவ்வாறாக, ஆபத்துகளைக் குறைப்பதன் மூலம் நம்முடைய கவலைகளைத் தணிக்கலாம். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 22:3) அப்படியென்றால், நாம் எடுக்கக்கூடிய நடைமுறையான நடவடிக்கைகள் சில யாவை?

முன்னெச்சரிக்கைகள்

ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், வெகு காலத்திற்கு முன்பு பைபிள் எழுதப்பட்டபோதிலும், அதில் நல்ல நியமங்கள் பல உள்ளன, அவை இன்றுள்ள ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கும் நடைமுறையானவையாக இருக்கின்றன. உதாரணமாக, “ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்” என அது சொல்கிறது. (பிரசங்கி 2:14) உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதும் முடிந்தவரை இருளில் செல்வதைத் தவிர்ப்பதும் ஞானமான செயலாகும். தெரு விளக்குகள் நன்கு எரியும் இடங்கள் வழியாக வீடு திரும்புவதே நல்லது, ஒருவேளை அப்படி வருவதால் இன்னும் கொஞ்சதூரம் நடக்க வேண்டியிருந்தாலும் அதுவே ஞானமான செயல். “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்” என்றும்கூட பைபிள் கூறுகிறது. (பிரசங்கி 4:9, 12) நீங்கள் ஆபத்தான பகுதியில் வாழ்ந்துவந்தால், உங்களுடன் யாராவது துணைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?

யாராவது ஆயுதத்தைக் காட்டி மிரட்டினால், உங்களிடமுள்ள உடைமைகளைவிட உங்களுடைய உயிர் அதிக அருமையானது என்பதை நினைவிற்கொள்வது ஞானமானது. (மத்தேயு 16:26) கோபாவேசத்தில் மக்கள் கூட்டமாக திரண்டு வருகையில், அவர்கள் ஆபத்தானவர்கள், என்ன செய்வார்கள் என்றே தெரியாது என்பதையும் மனதில் வையுங்கள்.​—யாத்திராகமம் 23:⁠2.

இரட்டை அர்த்தமுள்ள ஆபாச பேச்சுகளைப் பேசியோ ஜோக்குகள் அடித்தோ உங்களைத் தொட்டுப் பேசியோ யாராவது உங்களிடம் தொல்லை பண்ணினால், அப்படிப்பட்ட ஆட்களை அடியோடு புறக்கணித்து விடுவதே மிகவும் நல்லது. உதாரணமாக, ஒழுக்கங்கெட்ட பெண் ஒருத்தி யோசேப்பை பிடித்து இழுத்தபோது அவன் “வெளியே ஓடிப்போனான்.” அதைப்போல நீங்களும் அந்த இடத்தைவிட்டு ஓடிப்போக வேண்டும். (ஆதியாகமம் 39:12) அப்படி ஓடிப்போவது சாத்தியமில்லை என்றால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “போதும், எதுவும் சொல்ல வேண்டாம்!” “என்னைத் தொடாதே!” அல்லது “இந்த மாதிரி பேசுவதெல்லாம் எனக்குப் பிடிக்காது.” உங்களால் முடிந்தால், இப்படிப்பட்ட தொல்லைகள் சகஜமாக காணப்படும் இடங்களைத் தவிருங்கள்.

வீட்டில் ஏற்படும் பயத்தை சமாளித்தல்

மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் கணவனைக் குறித்து நீங்கள் பயப்பட்டால் என்ன செய்யலாம்? உங்கள் கணவருடைய நடத்தை உங்களுடைய அல்லது உங்கள் பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தையோ உயிரையோ திடீரென அச்சுறுத்துமென நீங்கள் உணர்ந்தால், வீட்டிலிருந்து வெளியே போய்விடுவதற்கான ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருப்பதே ஞானமான செயல். a தன்னுடைய சகோதரன் ஏசா சண்டைக்கு வந்தால், என்ன செய்வது என்பதைக் குறித்து யாக்கோபு முன்கூட்டியே கவனமாகத் திட்டமிட்டதாக பைபிள் விவரிக்கிறது. காரியங்கள் சுமுகமாக சென்றதால், அத்திட்டம் தேவைப்படவில்லை, ஆனாலும் அது ஞானமான முன்னெச்சரிக்கை செயலாக இருந்தது. (ஆதியாகமம் 32:6-8) அவசரநிலை ஏற்பட்டால் உங்களுக்கு அடைக்கலம் தரும் யாரையாவது தெரிந்து வைத்திருப்பது பாதுகாப்பு திட்டத்தின் பாகமாக இருக்கலாம். உங்களுடைய தேவைகளைப் பற்றி முன்னதாகவே அந்த நபரிடம் நீங்கள் பேசலாம். முக்கியமான ஆவணங்களையும் வேறுசில பொருட்களையும் எளிதாக எடுக்கும் இடத்தில் வைத்திருப்பது முக்கியம்.

உங்கள் கணவன் துஷ்பிரயோகம் செய்வதைப் பற்றி அதிகாரிகளிடம் அறிவிப்பதற்கும் அவர்களுடைய பாதுகாப்பை நாடுவதற்கும் தீர்மானிக்கலாம். b எல்லாருமே தங்களுடைய செயல்களின் விளைவுகளை எதிர்ப்பட வேண்டுமென பைபிள் கற்பிக்கிறது. (கலாத்தியர் 6:7) அரசாங்க அதிகாரிகளைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவ ஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமை செய்தால் பயந்திரு.” (ரோமர் 13:4) தெருவில் தாக்கப்படுவது எந்தளவு பெருங்குற்றமோ அதேபோல்தான் வீட்டில் தாக்கப்படுவதும் பெருங்குற்றம். ஒருவரை திருட்டுத்தனமாக பின்தொடருவதும் அநேக நாடுகளில் குற்றம்தான்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுப்பது ஓரளவுக்கு பயத்தை தணிக்கலாம். ஆனால் பைபிள் நடைமுறையான அறிவுரையை மட்டுமே தருவதில்லை. அது வெறும் சுய-உதவி புத்தகம் அல்ல. நம்பகமான தீர்க்கதரிசனங்கள் அடங்கிய புத்தகம்; கடவுள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார், எதிர்காலத்தில் என்ன செய்வார் என்பதைப் பற்றி அது வெளிப்படுத்துகிறது. பயத்திலேயே வாழ வேண்டிய மக்களுக்கு அது என்ன நம்பிக்கையைத் தருகிறது?

பயம் நிறைந்த சூழல் எதை அர்த்தப்படுத்துகிறது

அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதியது குறிப்பிடத்தக்கது: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் . . . இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-5) எப்பேர்ப்பட்ட பயம் நிறைந்த காலங்களை இந்த வார்த்தைகள் விவரிக்கின்றன!

இந்த ‘உலகத்தின் முடிவைப்’ பற்றி இயேசு பேசியபோது, அவர் இவ்வாறு கூறினார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான [அதாவது அச்சமூட்டும்] தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.” (மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:10, 11) ஆகவே, பயம் நிறைந்த சூழலுக்கு காரணமாக இருக்கும் இத்தகைய ‘அச்சமூட்டும் தோற்றங்களைக்’ கண்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால் அவை எதை அர்த்தப்படுத்துகின்றன?

இயேசு இவ்வாறு கூறினார்: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” (லூக்கா 21:31) பரலோகத்திலிருந்து மனிதகுலத்தின் மீது ஆட்சி செய்வதற்கு கடவுள் ஸ்தாபிக்கும் ஓர் அரசாங்கத்தை நம்முடைய காலத்தில் எதிர்பார்க்கலாம். (தானியேல் 2:44) அப்பொழுது நிலைமை எப்படி இருக்கும்?

பயத்திலிருந்து விடுதலை!

போர்களோ கயவர்களோ இல்லாத சமாதானமான எதிர்காலத்தைப் பற்றி, கடவுளை நேசிக்கிற மக்களால் இப்பூமி நிறைந்திருக்கும் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. ‘தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாளைப்’ பற்றி இயேசுவின் அப்போஸ்தலனாகிய பேதுரு பேசினார். தீமை செய்வோர் யாருமே அப்போது இருக்க மாட்டார்கள் என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இந்தப் பூமியில் “நீதி வாசமாயிருக்கும்.” (2 பேதுரு 3:7, 9, 13) ஒருவரையொருவர் உண்மையிலேயே நேசிக்கும் நம்பகமான ஆட்கள் மத்தியில் வாழும்போது கிடைக்கும் நிம்மதியை சற்று கற்பனை செய்து பாருங்கள்! தற்போதைய ஆபத்தான காலங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்த எதிர்பார்ப்பு நமக்கு உதவுகிறது. தற்போதைய நிலைமை என்றென்றும் தொடராது.​—சங்கீதம் 37:9-11.

கவலைப்பட்டவர்களுடைய நன்மைக்காக, யெகோவாவின் தீர்க்கதரிசியிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.” (ஏசாயா 35:4) ஆகவே, உண்மை கடவுளுடைய ஊழியர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கலாம். (பிலிப்பியர் 4:6, 7) தம்மைப் பற்றி அறிந்த, தம்முடைய அன்பான பண்புகளைப் பிரதிபலிக்கிற மக்களால் இப்பூமியை நிரப்ப வேண்டுமென்ற தமது ஆதி நோக்கத்தை யெகோவா கைவிடவில்லை என்பதை அறிவது இப்போது பயத்தில் வாழும் மக்களுக்கு மிகவும் ஆறுதலளிக்கிறது.​—ஆதியாகமம் 1:26-28; ஏசாயா 11:⁠9.

மனிதகுலத்திற்காக தாம் கொண்டுள்ள அன்பான நோக்கத்தை யெகோவா நிறைவேற்றுவதை எதுவும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (ஏசாயா 55:10, 11; ரோமர் 8:35-39) இதை நாம் புரிந்துகொள்ளும்போது, மிகவும் பிரபலமான ஒரு சங்கீதத்தின் வார்த்தைகள் விசேஷ அர்த்தத்தை தருகின்றன. அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; . . . அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.’ (சங்கீதம் 23:1-4) பயம் நிறைந்த காலங்கள் மேன்மேலும் மோசமடைந்தாலும், பயமில்லா உலகம் சீக்கிரம் வரும், அது நிச்சயம் வரும். (g05 8/8)

[அடிக்குறிப்புகள்]

a மணத்துணையிடமிருந்து பிரிய வேண்டிய சில சூழ்நிலைகள் பைபிள் நியமங்களுக்கு இசைவாக இருக்கலாம், அவற்றைப் பற்றி அறிய ஆங்கில விழித்தெழு! பிப்ரவரி 8, 2002, பக்கம் 10-ஐ காண்க.

b வீட்டு வன்முறைக்குப் பலியானவர்கள் சம்பந்தமாக, விழித்தெழு! டிசம்பர் 8, 2001, பக்கங்கள் 3-12, மற்றும் விழித்தெழு! மே 8, 1993, பக்கங்கள் 3-14-ஐக் காண்க.

[பக்கம் 8-10-ன் படங்கள்]

பயமில்லாத உலகை விரைவில் கடவுள் கொண்டுவருவார்