பைபிளின் அழகான சத்தியம் படைப்பாளரிடம் என்னை ஈர்த்தது
பைபிளின் அழகான சத்தியம் படைப்பாளரிடம் என்னை ஈர்த்தது
ட்சுயோஷி ஃப்யூஜீயீ சொன்னபடி
சில வருடங்களுக்கு முன், இக்கேநோபோ என்ற மலர் அலங்காரப் பள்ளியின் தலைமை ஆசிரியரான செனே இக்கேநோபோ என்பவரின் உதவியாளராகப் பணியாற்றினேன். அப்போது எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானிலுள்ள டோக்கியோ நகரின் இம்ப்பீரியல் மாளிகையில் கலைநயமிக்க ஓர் அறையில் மலர் அலங்காரம் செய்ய அவரோடுகூட போகும் வாய்ப்பு கிடைத்தது. பலத்த பாதுகாப்பின் கீழ் அங்கு நாங்கள் வேலை செய்தோம். இறுக்கமான அந்தச் சூழலில், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தரையில் விழாதவாறு கவனமாகப் பூக்களை அலங்கரித்தேன். அந்த மாளிகையில் மலர் அலங்காரம் செய்தது என் தொழிலுக்கே மகுடம் சூட்டியது. மலர் அலங்கரிக்கும் தொழிலில் நான் எப்படிக் காலடி வைத்தேன் என்பதை இப்போது விளக்குகிறேன், கேளுங்கள்.
நான் பிறந்த வருடம்: 1948. பிறந்த ஊர்: ஜப்பானிலுள்ள கோபே நகரின் வடமேற்கில் உள்ள நிஷிவாக்கி என்ற நகரம். பருவகால மாற்றங்களின் காரணமாக விதவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குவதை சிறு வயதிலிருந்தே பார்த்துப் பார்த்து சொக்கிப்போயிருக்கிறேன். என்றாலும், புத்த மத பக்தையான என் பாட்டி என்னை வளர்த்ததால், படைப்பாளரைப் பற்றிய எண்ணம் எனக்குக் கொஞ்சங்கூட வரவில்லை.
இக்கேபாநாவை, அதாவது மலர் அலங்காரம் செய்யும் கலையை, என்னுடைய அம்மா என் சொந்த ஊரில் இன்னமும் கற்றுத்தந்து வருகிறார். ஜப்பானில், இக்கேபாநா என்பது வெகு உயர்வாக மதிக்கப்படுகிற ஒரு கல்வித் துறையாகும், அது காடோ (பூக்களின் வழி) என்றும் அழைக்கப்படுகிறது. என்னுடைய அம்மா அந்தக் கலையை எனக்கு நேரடியாகச் சொல்லித் தராவிட்டாலும், அவருடைய ‘காற்று’ என் மீதும் வீசியது. எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டம் வந்தபோது, இக்கேபாநா உலகில் நுழைய வேண்டுமென்று தீர்மானித்தேன். என்னுடைய ஆசிரியரும் என் அம்மாவும் நான் ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்குமாறு ஆலோசனை கூறினார்கள், ஆனால் நான் மறுயோசனையின்றி, இக்கேநோபோ கல்லூரியில் சேரவே முடிவுசெய்தேன். இக்கேநோபோ என்பது ஜப்பானிலுள்ள இக்கேபாநா கலையின் மிகப் பழமை வாய்ந்த கல்வித் துறையாகும். அந்தக் கல்லூரியில் சேர்ந்ததும், மலர் அலங்காரம் செய்யும் கலையை மிக ஆர்வமாகப் பயில ஆரம்பித்தேன்.
இக்கேபாநா உலகிற்குள் பிரவேசித்தேன்
ஜப்பானுடைய பாரம்பரிய கலையான இக்கேபாநாவின் மையப்பொருள் உயிர் ஆகும். ஏன் என்பதை இப்போது விளக்குகிறேன். ஒரு பூக்கடை முன் வைக்கப்படுகிற பக்கெட்டில் உள்ள மலர்கள் பார்க்க அழகாக இருக்கலாம், ஆனால் அவையே வயலிலுள்ள குட்டிக் குட்டிச் செடிகளில் அசைந்தாடுகிறதென்றால், அல்லது மலைகளிலுள்ள பெரிய மரங்களில் பூத்துக் குலுங்குகிறதென்றால் எப்படியிருக்கும்? இயற்கை சூழலில், அந்தக் குட்டிச் செடிகளும், பூக்கள் நிறைந்த மரங்களும் உயிர்த்துடிப்புடன் காட்சியளிக்கும், அதோடு பருவகால மாற்றங்களை அவை நினைப்பூட்டும். அத்தகைய சூழலிலுள்ள பூக்களைப் பார்ப்பதுதான் உங்கள் மனதிற்கு அதிக ரம்மியமாய் இருக்கும். உங்கள் மனதைத் தொட்ட இயற்கை காட்சியின் அழகை பூக்களையும் செடிகளையும் வைத்து அழகிய டிஸைனாக உருவாக்குவதே இக்கேபாநா கலையாகும்.
உதாரணத்திற்கு, இலையுதிர் காலத்தைப் போன்ற சூழலை உருவாக்க விரும்புகிறீர்களென்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, ஜென்ட்டியன் மற்றும் பாட்ரினியா போன்ற இலையுதிர் கால பூக்களையும், அச்சமயத்தில் துளிர்க்கும் இலைகளையும் நீங்கள் உபயோகிக்கலாம். பூந்தென்றல் அதன்மீது வீசுவது போல் தோன்றச் செய்ய வேண்டுமா? அப்படியானால், லேசாக அசைந்தாடும் இயுலாலியா என்ற செடியின் சில தண்டுப் பகுதிகளை அதில் வைக்கலாம், பார்ப்பவர்களுக்கு இலையுதிர் காலத் தென்றல் வீசுவது போலவே இருக்கும். பூக்களையும் செடிகளையும் சேர்த்து விதவிதமாக அலங்கரிப்பதன் மூலம் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிந்ததால் இந்த இக்கேபாநா கலையிடம் மிகவும் ஈர்க்கப்பட்டு, மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு பெரிய “குடும்பம்”
இக்கேபாநா என்ற இந்த மலர் அலங்கார கலை, 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது. இக்கேபாநா கல்லூரிகளில் பொதுவாக தலைமை ஆசிரியரின் ‘ஆட்சியே’ நடக்கிறது எனச் சொல்லலாம். தலைமை ஆசிரியரின் பதவி வழிவழியாகத் தொடர்கிறது. பாரம்பரிய கலைநியதிகளைப் பெற்றுக்கொள்ளும் அவர், சீஷர்கள் அடங்கிய ஒரு பெரிய ‘குடும்பத்திற்கு’ தலைவராகத் திகழ்கிறார். தனது அடுத்த சந்ததிக்கு,
அந்தப் பாரம்பரிய கலைநயங்களைக் கற்றுத்தருவதோடு, தன் காலத்துக்கு இசைவாக தான் நிறுவிய புதிய ஸ்டைல்களையும் கற்றுத்தர வேண்டும்.இக்கேநோபோ கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று, காடோ தொழில்நுட்பத் துறையில் இரண்டு வருட பயிற்சியை முடித்தேன்; பிறகு ஜனவரி 1971-ல் இக்கேநோபோ நிறுவனத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். ஜப்பான் முழுவதும் “இக்கேநோபோ நிறுவனத்தின் இக்கேபாநா கண்காட்சிகளை” திட்டமைத்து நடத்த ஏற்பாடுகள் செய்தேன். அதோடு, தலைமை ஆசிரியருடைய உதவியாளர்களில் ஒருவராக அவருடன் சேர்ந்து நாடு முழுவதும் பயணித்து கலைநயமிக்க மலர் அலங்காரங்களைச் செய்வதில் ஒத்தாசையாக இருந்தேன்.
ஃபுக்குவோக்கா விளையாட்டு மையத்திலிருந்த ஒரு மேடையில் மலர் அலங்காரம் செய்துகாட்டிக் கொண்டிருந்த தலைமை ஆசிரியருக்கு உதவியாக நான் அங்கு இருந்தேன்; அப்படிப்பட்ட ஒரு மேடையில் இருந்தது அதுதான் முதல் தடவை. ஆயிரக்கணக்கானோரின் முன்னிலையில் நின்றுகொண்டிருந்ததால் பயத்தில் வெடவெடத்துப் போயிருந்தேன். கை நடுக்கத்தில் பூக்காம்புகளை ஒடித்துவிட்டேன், கிளைகளை முறித்துவிட்டேன், செய்யக்கூடாததையெல்லாம் செய்தேன். ஆனால், பார்வையாளர்களிடம் தான் செய்வதை விளக்கிக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் பேச்சோடு பேச்சாக என்னுடைய ‘கோமாளித்தனங்களைப்’ பற்றியும் புண்படுத்தாத விதத்தில் ஜோக் அடித்தார். அவர் அப்படி ஜோக் அடித்தது என் படபடப்பைச் சற்றுத் தணித்து, என்னை நிதானத்திற்குக் கொண்டுவந்தது.
தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து பெரிய புள்ளிகள் வரும்போதெல்லாம், மலர் அலங்காரங்கள் செய்வதற்காக தலைமை ஆசிரியரோடு கூடவே நானும் போனேன். ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, இம்ப்பீரியல் மாளிகையிலுள்ள கலைநயமிக்க ஓர் அறையில் பூ அலங்கரிக்கச் சென்றதும் அப்படித்தான்.
தேசமெங்கும் இருந்த பயிற்சியாளர்களுக்கு மீண்டும் வகுப்புகள் நடத்துவதற்காக இக்கேநோபோ மையப் பயிற்சிப் பள்ளி ஒன்று பிற்பாடு நிறுவப்பட்டது; அங்கு கற்பிக்கிற வேலையும் பாடத்திட்டம் அமைக்கிற வேலையும் எனக்குக் கொடுக்கப்பட்டது; அதுமட்டுமல்ல, ஜப்பான் முழுக்க உள்ள 300 கிளை அலுவலகங்களில் சுமார் 2,00,000 பேருக்காகக் கொடுக்கப்படவிருந்த பேச்சுகளுக்குத் தேவைப்பட்ட பாடப் புத்தகங்களையும் திரைப்படங்களையும் தயாரிப்பதை மேற்பார்வை செய்கிற வேலையும் எனக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வகுப்புகளை மேற்பார்வையிட ஜப்பான் முழுவதும் பயணித்தேன். இக்கேநோபோ கலைத்துறைக்கு வெளிநாடுகளிலும் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன; வருடத்தில் பலமுறை நான் தைவான் நாட்டிற்கும் போய்வந்தேன். இவ்வாறு தலைமை ஆசிரியரின் நம்பிக்கைக்குரிய நபராக ஆனேன், பொறுப்புள்ள பதவியும் வகித்தேன்.
என் வேலையை நான் ரொம்பவே ‘ரசித்து ருசித்து’ வந்தேன், ஆனால் வாழ்க்கையில் எனக்கு முழுமையான திருப்தி இருக்கவில்லை. என்னுடைய வேலை, முழுக்க முழுக்க அழகான பொருள்களைச் சுற்றி அமைந்திருந்தபோதிலும், பல காரியங்கள் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தன. பயிற்சி பெறுபவர்கள் மத்தியில் எழுந்த பொறாமையும் எரிச்சலும், ஒருவர்மீது ஒருவர் பழிசுமத்தும் அளவுக்குச் சென்றது, இதனால் நான் சென்ற இடங்களிலிருந்த பயிற்சியாளர்கள் என்னிடம் அடிக்கடி வந்து ஆலோசனை கேட்டார்கள். ஆனால், பழைய பாரம்பரியங்களிலும் அதிகாரத்திலும் ஊறிக்கிடந்த ஓர் அமைப்பில், நிறைய விஷயங்கள் என் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. அநேகர் இக்கேபாநா கலையை உண்மையிலேயே நேசித்து, அந்த வகுப்பை சீரியஸாக எடுத்துக்கொண்டதால், அதை அவர்கள் மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் ஊக்கமாகச் செய்துகொடுத்தேன்.
சத்தியத்திலுள்ள அழகை முதன்முதலில் கண்டபோது
மதத்தையே நான் வெறுத்தேன், ஏனென்றால் மதம் மனதைக் குருடாக்கிவிடும் என்று நினைத்திருந்தேன். அதுமட்டுமல்ல, சமாதானம், சந்தோஷம் என்று வாய்கிழிய பேசுபவர்களின் மத்தியில் ஏகப்பட்ட போலித்தனத்தையும் பார்த்திருந்தேன். ஆனால், என் மனைவி கேக்கோ சிறு வயதிலிருந்தே சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்தாள். பல்வேறு மதங்களில் அவள் ஆர்வம் காட்டியிருந்தாள், அவற்றின் போதனைகளைக் கேட்டிருந்தாள், ஆனால் அவை எதுவுமே அவளுடைய ஆன்மீகப் பசியைத் தணிக்கவில்லை.
அதனால், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தபோது பைபிளைப் படிக்க கேக்கோ சம்மதித்தாள். கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் என்னிடம் அவள் சொல்வாள், மனதிற்குப் பிடித்த எந்தவொரு விஷயத்தையும் என்னிடம் சொல்லாமல் இருக்க மாட்டாள். அவள் சொன்ன விஷயங்கள் கேட்க இனிமையாகத்தான் இருந்தன, ஆனால் அவற்றில் அவளுக்கு இருந்தளவு எனக்கு ஈடுபாடு இருக்கவில்லை.
என்றாலும், பைபிளிலிருந்து தான் கற்றுவந்த விஷயங்களை கேக்கோ முழு நம்பிக்கையோடு என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் பயணம் செய்தபோதெல்லாம் பைபிள் சம்பந்தப்பட்ட ஓரிரு பத்திரிகைகளை என்னுடைய பையில் போட்டுவிடுவாள். ஆனால் வேண்டுமென்றே நான் அவற்றை வாசிக்கவில்லை. அத்தனை வருட காலமாக நான் கட்டிக்காத்துவந்த என்னுடைய தொழிலை விட்டுவிடாதிருக்க கவனமாயிருந்தேன். அதுமட்டுமல்ல, அப்போதுதான் நாங்கள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருந்தோம், பைபிள் போதனைகளை ஏற்றுக்கொண்டால் எங்கே அந்த வீட்டை விட்டுவிட வேண்டியிருக்குமோ என்ற எண்ணம் எப்படியோ என் மனதில் வந்திருந்தது. இதற்கிடையில், கேக்கோ மிக விரைவாக ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்தாள், கற்றுக்கொண்ட விஷயங்களைத் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்னை ஒதுக்கிவிட்டது போல் இருந்தது, தனிமையாக உணர்ந்தேன். அதனால் அவள் என்னிடம் சொன்ன விஷயங்களெல்லாம் சரியானவையே என்பது எனக்குத் தெரிந்திருந்தபோதிலும், அவளை எதிர்க்க ஆரம்பித்தேன்.
எதிர்த்தேன், ஆனாலும் ஈர்க்கப்பட்டேன்
பொதுவாக, வேலை முடிந்து இரவு லேட்டாகத்தான் வீடு திரும்புவேன், ஆனால் யெகோவாவின் சாட்சிகளது கூட்டங்களுக்கு கேக்கோ சென்று வருகிற இரவுகளன்று,
வேண்டுமென்றே இன்னும் லேட்டாகப் போவேன். விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு வீட்டிற்குப் போனால்கூட, கேக்கோ எனக்காகக் கரிசனையோடு காத்திருப்பாள், நான் வந்ததும் அன்று என்னவெல்லாம் நடந்ததென்று என்னிடம் விவரிப்பாள். ஆனால், சில மணிநேரத்திற்கு என் குடும்பமே வீட்டை விட்டுவிட்டு கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதை மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அவளை இன்னும் கடுமையாக எதிர்த்தேன், விவாகரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். என்னுடைய பயமுறுத்தல்களுக்கு கேக்கோ அடிபணியவில்லை, தொடர்ந்து உறுதியாகவே இருந்தாள்.கேக்கோவின் நடத்தையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்கள் உறவில் கீறல்கள் விழுந்தபோதிலும், ஆஸ்துமாவினால் அவள் அவதிப்பட்டபோதிலும், தான் செய்த எல்லாக் காரியங்களிலேயும் அவள் ரொம்பவே சந்தோஷமாக இருந்தாள். கேக்கோவுடைய சுத்த இருதயமும் அப்பாவித்தனமும் மென்மையும்தான் ஆரம்பத்தில் என்னை அவளிடமாக ஈர்த்திருந்தன. அவள் பைபிள் படிப்பை துவங்கியபோது எங்கு ஏமாற்றப்பட்டு விடுவாளோ என நான் பயப்பட்டதற்கான காரணமும் அதுவேதான்.
நான் என்னதான் எதிர்த்தாலும், கேக்கோ தான் கற்றுவந்த காரியங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாள், ஒரு நல்ல மனைவியாகவும் நல்ல தாயாகவும் இருக்க முயன்றாள். நான் அவளை எதிர்த்தபோதிலும், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தன்னோடு வருமாறு அவள் என்னைக் கெஞ்சிய சமயங்களில் அவ்வப்போது அவற்றில் கலந்துகொண்டேன், கேக்கோவைக் குறித்து நான் பெருமைப்பட்டதால் ஒருவேளை அவற்றில் கலந்துகொண்டேன் போலும்.
அதேசமயம், யெகோவாமீது பொறாமைப்பட்டேன். கேக்கோ தன் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய முயன்றதைப் பார்த்தபோது, ஜனங்கள்மீது பைபிள் போதனைகள் ஏன் இந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். ‘யெகோவாவுக்காக என் மனைவி ஏன் எல்லாவிதக் கஷ்டங்களையும் அனுபவிக்க தயாராயிருக்கிறாள்?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
சீக்கிரத்திலேயே, கேக்கோவின் சபையிலிருந்து கிறிஸ்தவ சகோதரர்கள் சிலர் வீட்டிற்கு வந்து என்னைச் சந்திக்க முயன்றார்கள். அவர்களிடம் பேச வேண்டுமென்று எனக்குத் துளிகூட விருப்பம் இருக்கவில்லை. என்றாலும், கேக்கோவுக்கு ஏன் இந்தளவு மன நிம்மதி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டையே வெடித்துவிடும் போல் ஆனது, அதனால் கடைசியில் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன். என்னைச் சந்திக்க வந்த சகோதரர்களிடம் அதிகமதிகமாக நான் பழக ஆரம்பித்த பிறகு, அவர்களிடம் புத்துயிரளிக்கும் ஏதோவொன்று இருப்பதை உணர்ந்துகொண்டேன். வாராந்திர படிப்பு மூலம் கற்றுக்கொண்ட பைபிள் சத்தியங்கள் படிப்படியாக என் இதயத்தில் பதியத் தொடங்கின, என் கண்ணோட்டமும் விரிவடைந்தது.
இயற்கையிலுள்ள அழகும் சத்தியத்திலுள்ள அழகும்
இயற்கையின் அழகையும் சக்தியையும் இக்கேபாநாவின் மூலம் வெளிப்படுத்த முயன்றபோதெல்லாம், இயற்கையின் மகிமையையும் மகத்துவத்தையும் எப்படித் தெரிவிப்பது என நினைத்து நான் ரொம்பவே பதட்டப்பட்டிருக்கிறேன். இயற்கையின் அதி அற்புதங்களையெல்லாம் படைத்தது யெகோவாவே என்பதை நான் பிற்பாடு கற்றுக்கொண்டபோதுதான், எல்லாமே எனக்குத் தெளிவானது. தூசியிலும் தூசியான மனிதனால் படைப்பாளருடைய கலாபூர்வ திறமையோடு எப்படிப் போட்டிபோட முடியும்? யெகோவாதான் மிக உன்னதமான கலைஞர்! அவரது கைவண்ணத்தை அப்படியே பின்பற்ற முயலுவதன் மூலம் பூக்களை இன்னும் சிறந்த விதத்தில் அலங்கரிக்க ஆரம்பித்தேன். பார்க்கப்போனால், நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய மலர் அலங்காரங்களில் வித்தியாசம் தெரிவதாக, அதாவது வலிமையோடு மென்மையும் கூட்டப்பட்டிருப்பதாக ஜனங்கள் என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
முன்பு அறிந்திராத பல விஷயங்களை பைபிள் சத்தியங்கள் எனக்குப் புரிய வைத்தன. இந்த உலகத்தின் ஆட்சியாளனாக இருக்கும் பிசாசாகிய சாத்தானே இன்று மனிதர்களுடைய துன்பத்திற்குக் காரணம் என்பதையும், ஆதாமிலிருந்து பெற்றுக்கொண்ட பாவத்தினால் நம்முடைய இருதயம் திருக்குள்ளதாய் இருக்கிறது என்பதையும் கற்றுக்கொண்டபோதுதான், நம்மைச் சுற்றி நடக்கிற காரியங்களின் உண்மையான அர்த்தம் எனக்கு ஒருவழியாக விளங்க ஆரம்பித்தது. (எரேமியா 17:9; 1 யோவான் 5:19) யெகோவா சமாதானமும், அன்பும், நீதியும், வல்லமையும், ஞானமும் மிக்க கடவுள் என்பதைத் தெரிந்துகொண்டேன் (உபாகமம் 32:4; ரோமர் 11:33; 1 யோவான் 4:8; வெளிப்படுத்துதல் 11:17); அன்பின் காரணமாகவே இயேசுவை நமக்காக மரிக்கும்படி அவர் அனுப்பினார் என்பதைக் கற்றுக்கொண்டேன் (யோவான் 3:16; 2 கொரிந்தியர் 5:14); துன்பமோ மரணமோ இல்லாத ஒரு காலம் வரவிருக்கிறது என்பதையும் கற்றுக்கொண்டேன் (வெளிப்படுத்துதல் 21:4). இந்தச் சத்தியங்களிலுள்ள அழகு என் மனதைக் காந்தமாய்க் கவர்ந்தது. அதுமட்டுமல்ல, ‘உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூர’ வேண்டுமென்ற இயேசுவின் போதனையின்படி யெகோவாவின் சாட்சிகள் வாழ்கிறார்கள். அதை நேருக்கு நேர் பார்த்தது, உண்மை மதம் இதுதான் என்பதை எனக்கு உறுதிப்படுத்தியது.—மத்தேயு 22:39.
தாண்ட வேண்டிய ஒரு முட்டுக்கட்டை
சத்தியம் என் மனதில் வேரூன்ற ஆரம்பித்த சமயத்தில், ஒரு சவாலை எதிர்ப்பட்டேன். சவ அடக்கத்தின்போது செய்யப்படும் புத்தமத சடங்குகளில் தலைமை ஆசிரியரால் கலந்துகொள்ள முடியாத பட்சத்தில், அடிக்கடி அவர் சார்பாக நான் சென்றிருந்தேன். யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுக்க நான் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அது எனக்கு ஒரு சோதனையாக அமைந்தது. அதனால் அந்த புத்த மதச் சடங்குகளில் இனி கலந்துகொள்ளப் போவதில்லை எனச் சொந்தமாகத் தீர்மானித்தேன். (1 கொரிந்தியர் 10:21) பிறகு, கூடிய சீக்கிரத்திலேயே நான் முழுக்காட்டுதல் பெறப் போவதைப் பற்றியும், வேறெந்த வணக்கத்திலும்—அது என் வேலை சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும்கூட—இனி கலந்துகொள்ளப் போவதில்லை என்பதைப் பற்றியும் தலைமை ஆசிரியரிடம் மரியாதையுடன் விளக்கினேன். அதற்கு அவர், ‘நீ ஒரு கிறிஸ்தவனாக ஆவதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை, மத விவகாரங்களில் உன் இஷ்டப்படியே நீ நடந்துகொள்ளலாம்’ என்று என்னிடம் சொன்னார். எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்! காரணம், என்னுடைய தீர்மானத்திற்காகக் கண்டிக்கப்படுவேன், பதவியை இழந்துவிடுவேன் என்றெல்லாம்தான் நான் நினைத்திருந்தேன்.
அந்த முட்டுக்கட்டையைத் தாண்டிவந்த பிறகு, ஜூன் 1983-ல், அதாவது பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக கிறிஸ்தவ மாநாடு ஒன்றில் முழுக்காட்டுதல் பெற்றேன். முழுக்காட்டப்பட்டு தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, கேக்கோ புன்னகை பூத்த முகத்தோடும், நீர் ததும்பிய கண்களோடும் என்னை வரவேற்றாள். என்னுடைய கண்களிலும் நீர் கோர்த்துக்கொண்டது, இந்தச் சந்தோஷத்திற்காக கேக்கோவுடன் சேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொன்னேன்.
வேலையை விட்டுவிட தீர்மானித்தேன்
ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய நிலையை தலைமை ஆசிரியர் பெருமளவு புரிந்துகொண்டிருந்தார். என்னுடைய வேலை நியமனங்களை முன்பைவிட அதிக கவனமாக, மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட விதத்தில் செய்ய முயன்றேன். என்றாலும், என் வேலையையும் என் கிறிஸ்தவ வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த முயன்றேன். வருடத்தில் பல மாதங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டேன், இப்படியே ஏழு வருடங்களுக்குச் செய்தேன்.
ஆனால், என்னுடைய ஒரே மகனின் ஆன்மீக நிலை பற்றியும் கேக்கோவின் மோசமான உடல்நிலை பற்றியும் நான் தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்தது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட வேண்டுமென்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு முதலிடம் தர வேண்டுமெனவும் விரும்பினேன். இந்தத் தேவைகளும் விருப்பங்களும் இருந்ததால், மலர் அலங்கார வேலையை விட்டுவிடுவது பற்றி யெகோவாவிடம் ஜெபித்தேன். இந்தத் தீர்மானத்தில் நான் உறுதியாக இருப்பதை தலைமை ஆசிரியர் புரிந்துகொண்டார், கடைசியில், 42-வது வயதில் ஜூலை 1990-ம் வருடம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலையிலிருந்து நான் ஓய்வுபெற்றேன்.
சத்தியத்தின் அழகைக் காண மற்றவர்களுக்கு உதவுகிறேன்
சத்தியத்தைக் கண்டடைய மற்றவர்களுக்கு உதவுவதற்காக, வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சீக்கிரத்திலேயே முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். தற்போது வாரத்திற்கு ஒருமுறை மலர் அலங்காரக் கலையைக் கற்றுத்தந்து வருகிறேன், ஆனால் இக்கேநோபோவின் கெடுபிடியான ஸ்டைலில் அல்ல. சபையில் ஒரு மூப்பராகச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன், கேக்கோ இப்போது பயனியர் ஊழியம் செய்து வருகிறாள், முன்பு போல அந்தளவுக்கு ஆஸ்துமாவினால் அவள் அவதிப்படுவதில்லை. எங்கள் மகனுக்குத் திருமணம் ஆகிவிட்டது, பக்கத்து சபையில் ஓர் உதவி ஊழியனாக இருக்கிறான். குடும்பமாக யெகோவாவுக்குச் சேவை செய்வது எங்கள் எல்லாருக்கும் எத்தனை பெரிய, அரிய ஒரு பாக்கியம்!
இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியில், என்னுடைய சொந்தத் தோட்டத்தில் செடிகளை வளர்த்து, அவற்றை மலர் அலங்காரத்தில் பயன்படுத்தப்போகிற காலத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். என் அருமை குடும்பத்தோடு சேர்ந்து யெகோவாவின் மகத்தான பெயரை என்றென்றும் துதிக்க வேண்டுமென்பதுதான் என் உள்ளப்பூர்வ ஆசை, ஏனெனில் அழகான எல்லாவற்றையும் படைத்தவர் அவர்தானே! (g05 8/8)
[பக்கம் 23-ன் படம்]
இயற்கையின் அழகைக் குறித்த உங்கள் எண்ணத்தை இக்கேபாநாவின் மூலம் தெரிவிக்கலாம்
[பக்கம் 23-ன் படங்கள்]
மனைவி, மகன், மற்றும் அவனது குடும்பத்தோடு