Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விளையாட்டுச் சாமான்கள் அன்றும் இன்றும்

விளையாட்டுச் சாமான்கள் அன்றும் இன்றும்

விளையாட்டுச் சாமான்கள் அன்றும் இன்றும்

ஃபிலிப்பும் a அவனுடைய குட்டித் தோழர்களும் நூல்களைச் சுருட்டிச்சுருட்டி ஒரு பந்தைச் செய்திருக்கிறார்கள். அது துள்ளிக்குதித்து அவர்களுக்கு ஆட்டம் காட்டுகிறது, அதைப் பார்த்து அவர்களும் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள். ஃபுட்பால் விளையாடுவது போல அந்த வாண்டுகள் அதை உற்சாகமாக உதைத்து விளையாடுகிறார்கள். மைக் என்ற சிறுவன் தன் கையில் ரிமோட் கன்ட்ரோலை வைத்துக்கொண்டு தன்னுடைய குட்டிக் காரை முன்னும் பின்னுமாக ஓட்டுகிறான். அது அவனுடைய ஆர்டர்களுக்குக் கீழ்ப்படிவதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். ஆன்ட்ரேயா என்ற சிறுமியும் அவளுடைய ஃபிரண்டுகளும், பெரியவர்களான பிறகு எப்படியெல்லாம் சிங்காரித்துக்கொள்ளலாம் என்று வாயடித்தவாறே தங்கள் பொம்மைகளை சிங்காரிக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகள் எல்லாரிடமும் என்ன இருக்கிறது? மணிக்கணக்காக விளையாடுவதற்கான விளையாட்டுச் சாமான்கள். சில சமயங்களில், டெடிபேர் போன்ற பொம்மைகள் சிசுப்பருவத்திலிருந்தே குழந்தையின் இணைபிரியா தோழர்களாகிவிடுகின்றன. அவை குடும்ப ஃபோட்டோ ஆல்பத்திலும் இடம்பிடித்துவிடுகின்றன. விளையாட்டுச் சாமான்களின் வரலாறு என்ன? பிள்ளைகளுக்கு அவை ஏன் மிக முக்கியம்?

விளையாட்டுச் சாமான்களின் வரலாறு

என்ஸைக்ளோப்பீடியா ஒன்று இவ்வாறு சொல்கிறது: “பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், புதிர் விளையாட்டுகள் இவையெல்லாமே வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து தொன்றுதொட்டே வந்தவை. சாதாரண விளையாட்டுச் சாமான்களும் உண்டு, அதிநவீன விளையாட்டுச் சாமான்களும் உண்டு. உதாரணத்திற்கு, ஒரு சாதாரண குச்சியை குதிரையாக வைத்து விளையாடும் விளையாட்டுகளும் இருக்கின்றன, அதே சமயம் அதிநவீன இயந்திர விளையாட்டுச் சாதனங்களும் இருக்கின்றன.” ஆக, பொழுதுபோக்கிற்காக அல்லது சந்தோஷத்திற்காக பயன்படுத்தப்படும் எந்தவொரு கருவியும் விளையாட்டுச் சாமான்தான். பொதுவாக மனிதன் பொழுதுபோக்கை விரும்புவதால் ஆதிகாலத்திலிருந்தே விளையாட்டு சாமான்கள் இருந்து வந்திருப்பதுபோல் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு பூர்வ பாபிலோனியா, எகிப்து போன்ற நாடுகளில் பொம்மைகள் அல்லது பொம்மைகளின் பல்வேறு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விளையாட்டுச் சாமான்களிலேயே பொம்மைகள்தான் மிகவும் பழமையானவையாக இருக்கலாம். மற்றொன்று பந்து. முதன்முதலில் பந்து எப்போது விளையாட்டில் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய விவரம் எதுவும் இல்லை. ஆனால் கல்லாலான பந்தை உருட்டிவிட்டு கல் காய்களை கீழே சாய்க்கும் ஒருவித பந்து விளையாட்டு இருந்துவந்ததாக தெரிகிறது. இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட கல் காய்கள் எகிப்தில் ஒரு குழந்தையின் பழங்கால கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கல்லால் செய்யப்பட்ட யோ-யோ என்ற ஒருவித விளையாட்டுச் சாமான் மூன்றாயிரத்திற்கும் மேலான வருடங்களுக்கு முன்பு கிரீஸில் பயன்படுத்தப்பட்டது. இது பூர்வ சீனாவிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சான்றுகள் காட்டுகின்றன. ரோமைச் சேர்ந்த குழந்தைகள், கைப்பாவைகளையும், தந்தத்தாலான ஜாமட்ரிக் வடிவ துண்டுகளையும் விளையாட்டுச் சாமான்களாக பயன்படுத்தினார்கள். கிரீஸையும் ரோமையும் சேர்ந்த சிறுவர்கள் சின்னச்சின்ன கட்டை வண்டிகளைக்கூட விளையாட்டு சாமான்களாக பயன்படுத்தினார்கள். இதிலிருந்து, பொம்மை வாகனங்கள், ஆதிமுதலே பிரபலமாக இருந்துவந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது. ஒரு பொருட்காட்சியகத்தில் மிருகம்போன்ற ஒரு உருவம் வைக்கப்பட்டிருந்தது, அது களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது, அதற்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பூர்வ மெக்சிகோவில் அது ஒருவேளை பொம்மையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதைத் தவிர, அந்தக் கலாச்சாரத்திற்குரிய வேறு எந்தச் சக்கரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் ஆர்வத்திற்குரிய விஷயம். இடைக்காலங்களின்போது, விலங்குகளின் இரைப்பைகளில் காற்றடிக்கப்பட்டு முட்டைவடிவ அல்லது வட்டவடிவ பந்துகள் செய்யப்பட்டன. ஏறக்குறைய நவீன நாளைய ஃபுட்பாலைப் போலவே அவை ‘கோல்’ நோக்கி உதைக்கப்பட்டன அல்லது அனுப்பப்பட்டன.

இங்கிலாந்தில், 18-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் கல்வி சம்பந்தமான நோக்குடன் ஜிக்ஸா புதிர் அறிமுகப்படுத்தப்பட்டது. 20-⁠ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதே காலக்கட்டத்தில் க்ரயான் பென்சில்களும் பாப்புலராகத் தொடங்கின. அமெரிக்காவில் மட்டுமே ஒரேவொரு கம்பெனி மாத்திரம் 10,000 கோடி க்ரயான் பென்சில்களை உற்பத்தி செய்தது. நீங்கள் பார்க்கிறபடி, நவீன விளையாட்டுச் சாதனங்களில் சில ஆதிகாலத்தவையாகவே இருக்கின்றன. அவை மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கையும் வகித்திருக்கின்றன.

விளையாட்டும் விளையாட்டுச் சாமான்களும் எதற்காக?

சரியான விளையாட்டுச் சாமான்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசாங்கம் வெளியிட்ட ஒரு கையேடு, விளையாட்டுச் சாமான்களின் முக்கியத்துவத்தை இப்படியாக உணர்த்திக்காட்டியது: “விளையாட்டு, பிள்ளைகளின் இயல்பான செயல். பிள்ளைகள் கற்பதற்கும், வளருவதற்கும்​—⁠உடலளவில் மற்றும் மனதளவில் வளருவதற்கும்​—⁠மற்றவர்களுடன் பேசிப் பழகுவதற்கும், விளையாட்டு நிறைய வாய்ப்புகளைத் தருகிறது. விளையாடுவது பிள்ளையின் வேலை என்றால், விளையாட்டுச் சாமான்கள் பிள்ளையின் வேலைக்கருவிகள். பிள்ளைகள் திறம்பட வேலைகளைச் செய்ய அவர்களுக்குச் சரியான விளையாட்டுச் சாமான்கள் அவசியம்.”

விளையாட்டுச் சாமான்கள் பாப்புலராக இருப்பதற்கு முக்கிய காரணம் அவை சந்தோஷத்தை அளிப்பதுதான். ஆனாலும் பிள்ளையின் வளர்ச்சிக்குங்கூட அவை இன்றியமையாதவையாய் உள்ளன. பின்வரும் உதாரணங்களைச் சிந்தியுங்கள்: ஒரு பிள்ளை பொம்மை வண்டியைத் தள்ளுகையில் தன் தசைகளை வலுப்படுத்திக்கொள்கிறது. ஸ்கிப்பிங் செய்கையில் உடல் அங்கங்களை ஒத்திசைவுடன் செயல்படவைக்க கற்றுக்கொள்கிறது. பந்தை உதைக்க ஒற்றைக்காலில் நிற்கும்போது சமநிலையைக் கற்றுக்கொள்கிறது. அதேபோல்தான் சைக்கிள் ஓட்டும்போதும், பில்டிங் பிளாக்ஸ் வைத்து விளையாடும்போதும், பெயின்ட்டிங் செய்யும்போதும் உடல் அங்கங்களை கட்டுப்பாட்டுடன் மிகத் துல்லியமான விதத்தில் அசைக்கக் கற்றுக்கொள்கிறது.

பிள்ளையின் அறிவுத்திறனைப் பற்றியதென்ன? பாட்டுகளையும், நர்ஸரி ரைம்களையும் சொல்லிக்கொண்டே ஸ்கிப்பிங் செய்வது, அல்லது ஓடிப் பிடிப்பது மொழி கற்கும் திறனை அதிகரிக்கிறது. மேலும், பில்டிங் பிளாக்ஸ் வைத்து விளையாடும்போதும், விளையாட்டில் விதிமுறைகளைப் பின்பற்றும்போதும், ஜிக்ஸா புதிர்களை வைத்து விளையாடும்போதும், ‘டிராமாக்களில்’ நடிக்கும்போதும், ஃபேன்ஸி டிரஸ் போட்டியில் கலந்துகொள்ளும்போதும், இசைக் கருவிகளை இசைக்கும்போதும், கைவினை பொருட்களைச் செய்யும்போதும் பிள்ளையின் சிந்திக்கும் திறன் மற்றும் படைக்கும் திறன் அதிகரிக்கின்றன.

விளையாடுவதன் மூலம் பிள்ளைகள் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆம், பிள்ளைகள் பந்து விளையாட்டுகளில் சமூக திறமைகளை, அதாவது மற்றவர்களுடன் பழகும் திறமைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். டாக்டர் பிரூஸ் டன்கன் பெர்ரி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொள்கிறார்கள். எனவே தன்னலவாதிகளாக இல்லாமல் மற்றவர்களிடம் அதிக அனுதாபம் காட்டுகிறார்கள். மேலும், மற்றவர்களிடம் பண்பாக நடந்துகொள்ள கற்றுக்கொள்கிறார்கள். அதோடு, மற்றவர்கள்முன் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஏமாற்றங்களைச் சமாளிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.”

பிள்ளைகள் விளையாட்டுச் சாமான்களைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு காரணம் பெரியவர்களைப் பின்பற்றுவதற்காகும். கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் இவ்வாறு சொல்கிறார்: “பின்பற்றுவது மனிதனுடைய பிறவி குணம்.” ஆம், தினசரி வாழ்க்கையில் பெரியவர்கள் செய்யும் அநேக காரியங்களைப் பிள்ளைகள் பார்த்து அவற்றை தங்கள் விளையாட்டுக்களில் அப்படியே பின்பற்றுகிறார்கள், அதன் மூலம் அந்தக் காரியங்களைத் தாங்களும் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். பின்வருபவற்றைச் சற்று கற்பனை செய்யுங்கள்: ஒரு சிறுமி தன் பொம்மையைத் தாலாட்டுவாள், பெரியவளான பிறகோ நிஜமான குழந்தையைத் தாலாட்டுவாள். அந்தச் சிறுமி மற்ற சின்னஞ்சிறுசுகளுடன் சேர்ந்து செப்பு சாமான்களை வைத்து ‘உணவு’ தயாரிப்பாள், பெரியவளான பிறகோ நிஜ உணவைத் தயாரிப்பாள். அதேபோல், ஒரு சிறுவன் டுர்ர்ர்ர் . . . . . . என்று சவுண்டு கொடுத்தபடி “வண்டி”யை தள்ளுவான், பெரியவனான பிறகோ நிஜ வண்டியை ஓட்டுவான். என்றாலும் உங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாமான்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் உள்ளன. ஏன்?

சரியான விளையாட்டுச் சாமான்களைத் தேர்ந்தெடுங்கள்

“வன்முறையாகவும் சட்டத்திற்கு விரோதமாகவும் செயல்படும் சமுதாயத்தையே இன்றைய விளையாட்டுச் சாமான்கள் சித்தரிக்கின்றன” என்று லண்டன் செய்தித்தாள், த டெய்லி டெலிகிராஃப் சொல்கிறது. எல்லா பொம்மைகளுமே அப்படி இல்லையென்றாலும் பெரும்பாலான பொம்மைகள், “விகாரமாகவும், பயில்வான் போலவும், . . . முரட்டுத்தனமாகவும்தான் காட்சியளிக்கின்றன,” பாரம்பரிய பொம்மைகளைப் பார்க்க முடிவதேயில்லை என்று லா ஹார்நாடா என்னும் மெக்சிகோ நகர செய்தித்தாளின் ஒரு கட்டுரை சொல்கிறது. மார்கெட்டில் விற்பனையாகும் அநேக பொம்மைகள் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையையே ஊக்குவிக்கின்றன என்றும் மூர்க்கம், வலுச்சண்டை, அதிகாரம், அடக்குதல், அச்சம் போன்றவற்றை முன்னேற்றுவிக்கின்றன என்றும் பட்ரிஷியா எர்லிக் சொல்வதை அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டுகிறது. இவர் ஸோச்சிமில்கோ ஆட்டோனோமஸ் யூனிவர்சிட்டியின் ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிகிறார்.

வன்முறையைத் தூண்டும் விளையாட்டுச் சாமான்களைப் பயன்படுத்துவது, “பிள்ளைகளின் கற்கும் திறனையும் வளர்ச்சித் திறனையும் பாதித்து பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று ஐக்கிய மாகாணங்களில் உள்ள பள்ளிக்கூட மனோதத்துவ நிபுணர்களுடைய தேசிய அமைப்பு திட்டவட்டமாகச் சொல்கிறது. வன்முறையான வீடியோ கேம்ஸும் கம்ப்யூட்டர் கேம்ஸும் பிள்ளையை மூர்க்கமாக்கி தவறு செய்யும் அளவிற்கு தூண்டலாம். எனவே பெரியவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பிலுள்ள பிள்ளைக்கு விளையாட்டுச் சாமான்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.​—⁠பக்கம் 26-லுள்ள பெட்டியைக் காண்க.

தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இன்று விளையாட்டுச் சாமான்கள் பற்பல தினுசுகளிலும் அதிநவீன டிஸைன்களிலும் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் விலை அதிகமாக இருக்கலாம் அல்லது அவை பிள்ளைகளுக்கு சீக்கிரத்திலேயே போரடித்துவிடலாம் அல்லது பிள்ளைகளுக்கு எவ்வித பிரயோஜனமும் தராதிருக்கலாம். ஆஸ்திரேலியாவில் ஐந்து பிள்ளைகளையுடைய லீயன் என்ற ஒற்றைத் தாய் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய பெரிய மகன்கள் விளம்பரங்களைப் பார்த்து மயங்கிப்போய், விலையுயர்ந்த கம்ப்யூட்டர் கேம்ஸ் வாங்கித்தரும்படி நச்சரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால், சாதாரண ஒரு பேட்டையும் ரப்பர் பாலையும் வைத்துத்தான் கொல்லைப்புறத்தில் நிறைய நேரம் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு போதுமான உடற்பயிற்சியும் அதிலேயே கிடைத்துவிடுகிறது. என்னை பொறுத்தவரை சாதாரண விளையாட்டுச் சாமான்களே நீடித்து உழைக்கின்றன. என் பிள்ளைகளின் கற்பனைத் திறன்களையும் அதிகரிக்க வைக்கின்றன.”

நீங்களே விளையாட்டுச் சாமான்களை உருவாக்குங்களேன்

நீங்கள், லேட்டஸ்ட் விளையாட்டுச் சாமான்களை வாங்குமளவு வசதி இல்லாத சிறுவன் அல்லது சிறுமி என்றால் கவலைப்படாதீர்கள்! உங்களுடைய படைக்கும் திறனுக்கும் கற்பனைத் திறனுக்கும் கொஞ்சம் வேலை கொடுங்கள். உலகில் நிறைய இடங்களில் உங்களைப் போன்ற சிறு பிள்ளைகள் விளையாட்டுச் சாமான்களைத் தாங்களே உருவாக்குகிறார்கள்.

இந்தப் பக்கங்களிலுள்ள படங்களைப் பாருங்கள். இந்தப் பிள்ளைகள் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்? இந்த ‘கார்களில்’ சிலவற்றை உருவாக்குவது ரொம்ப சுலபமான காரியமல்லதான். ஒரு ‘காரை’ செய்வதற்கு பழைய ஒயர் துண்டுகளை சேகரித்து அவற்றை சரியான முறையில் வளைக்க வேண்டும். ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கை வட்ட வடிவில் வெட்டி அவற்றைக் ‘காரின்’ சக்கரங்களாக பயன்படுத்தலாம். இந்தப் படத்தில் கூல் டிரிங்க்ஸ் பாட்டில்களையும் பால் பாட்டில்களையும் வைத்து செய்யப்பட்டிருக்கும் ரயில் வண்டியை பாருங்களேன்! கட்டைத் துண்டுகளை வைத்து செய்யப்பட்டிருக்கும் ட்ரக் வண்டியைப் பாருங்களேன்! சில சமயங்களில் இப்படிப்பட்ட பொம்மை வண்டிகளிலேயே நம் வீட்டை சுற்றி வலம் வரமுடியும். அதற்கு சிறந்த அத்தாட்சியாகத்தான், வீட்டிலேயே செய்யப்பட்ட இந்த ஆப்பிரிக்க நாட்டு ஸ்கூட்டர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டை அனுபவித்து மகிழ விளையாட்டுச் சாமான்கள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டியதில்லை என்பதை இந்தப் பிள்ளைகள் உணர்ந்திருக்கிறார்கள். அவற்றை உருவாக்குவதிலும் மகிழ்ச்சி இருக்கிறது. நீங்களும் இதை ‘ட்ரை’ செய்து பாருங்களேன்! (g05 8/8)

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 26-ன் பெட்டி/படம்]

ஒரு நல்ல விளையாட்டுச் சாமான் . . .

● பிள்ளையின் வயதிற்கு, செயலாற்றலுக்கு, மற்றும் சரீர திறமைகளுக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்

● சரியாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். நீடித்து உழைக்கவும் வேண்டும். (பிள்ளைகள் பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கும் இயல்புடையவர்கள்)

● பிள்ளைகளைக் கவர்ந்திழுத்து ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்

● பிள்ளையின் படைப்புத் திறனையும் கற்பனைத் திறனையும் தூண்ட வேண்டும்

● நியாயமான விலையில் கிடைக்க வேண்டும்

● தீங்கற்றதாக இருக்க வேண்டும்

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

விளையாட்டுச் சாமான் சம்பந்தப்பட்ட ஆபத்துகளைத் தவிர்க்க . . .

● பெரிய பிள்ளைகளின் விளையாட்டுச் சாமான்களைச் சிறு பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள்

● கொடுக்கப்பட்டுள்ள எல்லா பாதுகாப்பு லேபிள்களையும் அறிவுரைகளையும் கவனமாக படியுங்கள். முடிந்தால் பிள்ளையிடம் படித்துக்காட்டுங்கள்

● பிள்ளைக்கும் அவனோடு சேர்ந்து விளையாடும் மற்ற பிள்ளைகளுக்கும் விளையாட்டுச் சாமானைப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக்கொடுங்கள். அதோடு விளையாடி முடித்த பிறகு உரிய இடத்தில் அதை திரும்ப வைப்பதற்கும் கற்றுக்கொடுங்கள்

● அளவுக்கதிகமான சத்தம் உண்டுபண்ணும் விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதை தவிருங்கள்

● அவ்வப்போது விளையாட்டுச் சாமான்களைப் பரிசோதித்து பாருங்கள். அவை உடைந்து போயிருந்தால், நிறைய சந்தர்ப்பங்களில் அவற்றை ரிப்பேர் செய்ய அல்லது உடனடியாக தூக்கிப்போட வேண்டியிருக்கும்

● ஒன்றைக் குறிபார்த்து சுடும் துப்பாக்கி போன்ற விளையாட்டுச் சாமான்களையும் கூர்முனையுடைய விளையாட்டுச் சாமான்களையும் மின்சாரத்தால் இயங்கும் விளையாட்டுச் சாமான்களையும் பெரியவர்களின் மேற்பார்வையில் பெரிய பிள்ளைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

● சில விளையாட்டுச் சாமான்களில் உள்ள பாகங்கள் வாயில் போட்டுக்கொள்ளுமளவு மிகவும் சிறியதாக இருக்கும். அவற்றை சிறு பிள்ளைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்

[பக்கம் 24-ன் படம்]

சக்கரங்கள் பொருத்தப்பட்ட கட்டைகளில் சிங்கமும் முள்ளம்பன்றியும், பொ.ச.மு. இரண்டாவது மிலெனியம், ஈரான்

[படத்திற்கான நன்றி]

சிங்கமும் முள்ளம்பன்றியும்: Erich Lessing/Art Resource, NY

[பக்கம் 25-ன் படம்]

களிமண் பொம்மை, சுமார் பொ.ச.மு. 600, இத்தாலி

[பக்கம் 25-ன் படம்]

பம்பரம், சுமார் பொ.ச.மு. 480, பூர்வ கிரேக்க காலம்

[பக்கம் 25-ன் படம்]

சோள உமியிலிருந்து செய்யப்பட்ட பொம்மை, பூர்வ அமெரிக்கா

[பக்கம் 25-ன் படம்]

க்ரயான் பென்சில்கள், 1900-⁠களின் ஆரம்பத்தில், அமெரிக்கா

[பக்கம் 26-ன் படங்கள்]

வீட்டிலேயே செய்யப்பட்ட விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாடும் பிள்ளைகள்

[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]

களிமண் பொம்மை: Erich Lessing/Art Resource, NY; பம்பரம்: Réunion des Musées Nationaux/ Art Resource, NY; சோள உமி பொம்மை: Art Resource, NY