Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உயிரைக் காக்கும் வீடியோ!”

“உயிரைக் காக்கும் வீடியோ!”

“உயிரைக் காக்கும் வீடியோ!”

இளைஞர் கேட்கின்றனர்​—⁠நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற வீடியோ 1999-⁠ல் யெகோவாவின் சாட்சிகளால் இளைஞர்களுக்காகவே வெளியிடப்பட்டது. இன்று இந்த வீடியோ 30-⁠க்கும் அதிகமான பாஷைகளில் கிடைக்கிறது. இதைப் பற்றி உக்ரைனிலுள்ள ஒரு சபை கண்காணி இவ்வாறு எழுதினார்: “இந்த வீடியோ எங்கள் எல்லாருடைய மனதையும் தொட்டது! சிலர் இதை ஐந்து முறை பார்த்தார்கள். இன்னும் சிலர் ஏழு முறை பார்த்தார்கள்! பிற்பாடு, அநேக இளைஞர்கள் அதிலுள்ள சிறப்பம்சங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தார்கள். அநேகர் கண்கலங்கிப் போனார்கள். இளைஞர்கள்மீது யெகோவாவுக்கு அன்பும் உண்மையான அக்கறையும் இருக்கிறது என்பதை நாங்கள் எல்லாரும் உணர்ந்தோம். இளைஞர்களுடைய தேவைகளை இப்பொழுது என்னால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் அவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவ விரும்புகிறேன். அவர்களுடைய நெருங்கிய நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன்.”

உலகெங்கும் வாழும் இளைஞர்களை இந்த வீடியோ வெகுவாகக் கவர்ந்துள்ளது. உதாரணத்திற்கு, உருகுவேயில் வசிக்கும் 17 வயது லெட்டிசியா (இடதுபக்க படத்தில் இருப்பவள்) இவ்வாறு எழுதினாள்: “இந்த வீடியோவைப் பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன். அதிலுள்ள தகவல் மட்டுமல்ல, எங்களைப் போன்ற இளைஞர்கள்மீது யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் உள்ள அக்கறையும் என் நெஞ்சைத் தொட்டது. இந்த அருமையான வீடியோவிற்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. ஆனாலும் இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், மிக்க நன்றி!”

ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த 27 வயது சகோதரி பல முறை இந்த வீடியோவை பார்த்திருக்கிறார். இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணுக்கு இந்த வீடியோவைக் காட்டி உதவினார். அந்தச் சகோதரி இவ்வாறு எழுதினார்: “ஆன்னட் என்பவள் குடிப்பழக்கத்திற்கு ஆளானதோடு கெட்ட சகவாசத்திலும் சிக்கியிருந்தாள். அதுமட்டுமின்றி போதைப் பொருள்களைக்கூட எடுத்திருந்தாள். a ஆனால், இந்த வீடியோ அவளை அடியோடு மாற்றியது. கொஞ்ச காலத்திற்குள்ளேயே கெட்ட நண்பர்களையும் தவறான பழக்கங்களையும் அவள் விட்டொழித்தாள். ஆறு மாதத்திற்குப் பிறகு முழுக்காட்டப்பட்டாள். உண்மையில், இது உயிரைக் காக்கும் வீடியோ!” (g05 9/8)

2004-⁠ல் யெகோவாவின் சாட்சிகள் இளைஞருக்கென்று மற்றொரு வீடியோவை வெளியிட்டனர். இளைஞர் கேட்கின்றனர்​—⁠வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? என்பதே அதன் தலைப்பு. வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் தர இந்த டிவிடி அநேக இளைஞர்களை உற்சாகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.​—⁠மத்தேயு 6:⁠33.

[அடிக்குறிப்பு]

a பெயர் மாற்றப்பட்டுள்ளது.