Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்றைக்கும் தங்கம் தங்கம்தான்!

என்றைக்கும் தங்கம் தங்கம்தான்!

என்றைக்கும் தங்கம் தங்கம்தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஆஸ்திரேலியாவில் ஓர் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் வறண்ட ஓடையில் காலடி வைத்துச் செல்கிறார் ஓர் ஆய்வுப்பயணி. உச்சி வெயில் அவருடைய முதுகை நன்கு பதம்பார்க்க, வியர்வைத் துளிகள் மெல்ல கசிந்து, புழுதிபடிந்த சட்டையை நனைக்கின்றன. சிறிதும் தளராமல், சாப்பாட்டு தட்டின் அளவிலான ஒரு கருவியில் பொருத்தப்பட்டுள்ள நீண்ட உலோகக் கம்பியைப் பிடித்தவாறே நடக்கிறார். அப்படியே அந்த நிலத்தின் மீது அதிநவீன ‘மெட்டல் டிடெக்டரை’ ஆட்டிக்கொண்டு வருகிறார். பாறைமிக்க மண்ணில் மூன்றடி ஆழத்திற்குள் அதன் காந்தப்புலம் ஊடுருவிச் செல்கிறது. காதில் பொருத்தியிருந்த ‘ஹெட்போனுக்கு’ மெட்டல் டிடெக்டரிலிருந்து பலத்த விசில் சத்தத்தில் சமிக்கை வந்துகொண்டே இருக்கிறது.

இப்போது, அந்தப் பலத்த விசில் சத்தம் ‘டிக் டிக் டிக்’ என்ற மெல்லோசையாக மாறுகிறது, அவரது நாடித்துடிப்போ திடீரென அதிகரிக்கிறது​—⁠ஏதோ உலோகம் மண்ணுக்குள் புதைந்திருப்பதை சுட்டிக்காட்டும் சமிக்கையேதான் இது. அப்படியே மண்டியிட்டு, சிறிய குத்துக்கோடரியால் மளமளவென கெட்டியான மண்ணைத் தோண்டியெடுக்கிறார். அப்போது, துருப்பிடித்த ஆணியோ பழங்கால நாணயமோ அவரது கண்ணில் தட்டுப்படுகிறது. ஆனால் இன்னும் ஆழமாகத் தோண்டத் தோண்ட அவரது விழிகள் கூர்ந்து ஆராய்கின்றன​—⁠ஏதாவது தங்கம் கண்ணில் தட்டுப்படாதா என்று!

தேடல் தொடர்கிறது

தங்கத்தைக் கண்டுபிடிக்கும் முறைகள் மாறியிருக்கலாம், ஆனால், தகதகவென மின்னும் இந்த மஞ்சள் உலோகத்தை தொன்றுதொட்டே மனிதர் ஆவலாய் நாடித் தேடியிருக்கின்றனர். சொல்லப்போனால், உலக தங்க ஆய்வுக் குழுவின்படி, கடந்த 6,000 ஆண்டுகளாக 1,25,000 டன்னுக்கும் அதிகமான தங்கம் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. a எகிப்து, ஓப்பீர், தென் அமெரிக்கா போன்ற பண்டைய நாகரிகங்கள் தங்கத்திற்குப் பேர்பெற்று விளங்கின. என்றாலும், இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட எல்லா தங்கத்திலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான தங்கம் கடந்த 150 ஆண்டுகளில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.​—1 இராஜாக்கள் 9:⁠28.

1848-⁠ல், கலிபோர்னியாவிலுள்ள அமெரிக்க ஆற்றங்கரையில் அமைந்துள்ள “சட்டர்ஸ் மில்” என்ற மரத் தொழிற்சாலையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டபோது, தங்கத்தைத் தோண்டும் மோகம் தீவிரமானது. அதற்குப் பிறகு, தங்கத்தைத் தேடி வெள்ளம் போல் மக்கள் திரண்டுவர ஆரம்பித்தார்கள். அங்கு வந்த அனைவரும் கலிபோர்னியா மண்ணில் புதைந்துள்ள பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கும் ஆசைக் கனவில் மிதந்தார்கள். ஆனால் அநேகருடைய ஆசைக் கனவு பலிக்கவில்லை, என்றாலும் சிலருக்கு “அதிர்ஷ்டம்” அடித்தது. இங்கு தோண்டியெடுக்கப்பட்ட விலையுயர்ந்த தங்கத்தின் அளவை கேட்டால் நீங்கள் மலைத்துப்போவீர்கள். ரோம சாம்ராஜ்யம் அரசாண்ட காலப்பகுதி முழுவதும் உலகெங்கிலும் வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் பத்து டன் என்றால், 1851-⁠ல் மட்டுமே கலிபோர்னியா தங்க வயலிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் எடையோ 77 டன்!

கிட்டத்தட்ட அதேசமயத்தில், உலகின் மற்றொரு பாகத்திலும், அதாவது புதிய குடியேற்றப் பகுதியான ஆஸ்திரேலியாவிலும், தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. கலிபோர்னியா தங்க வயலில் ஆய்வு செய்வதில் அதிக அனுபவம் பெற்றிருந்த எட்வர்டு ஹார்கிரேவ்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்; நியூ சௌத் வேல்ஸிலுள்ள பாத்ரஸ்ட் என்ற சிறிய பட்டணத்திற்கு அருகிலுள்ள ஓர் ஆற்றில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்தார். 1851-⁠ல், விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த பல்லாரட்டிலும் பென்டிகோவிலும் பெருமளவில் தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைப் பற்றிய செய்தி பரவியபோது, தங்கத்தை நாடித் தேடுவோர் அங்கு படையெடுத்து வந்தார்கள். வந்திருந்த சிலர் சுரங்கம் வெட்டும் தொழிலில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் பலரோ விவசாயிகளாக அல்லது அலுவலர்களாக இருந்தார்கள், அவர்களுடைய கைகள் சுரங்கத் தொழில் புரிவோருடைய குத்துக்கோடரியை ஒருபோதும் தொட்டதில்லை. தங்கச் சுரங்கம் இருக்கும் ஒரு பட்டணத்தில் நிகழ்ந்த காட்சியை வர்ணிக்கையில், அந்நாளைய செய்தித்தாள் ஒன்று இவ்வாறு கூறியது: “பாத்ரஸ்ட் மீண்டும் பைத்தியமாகிவிட்டது. தங்கப் பித்து அதிதீவிரத்துடன் மீண்டும் வந்துள்ளது. ஆண்கள் ஒன்றுகூடி வருகிறார்கள், ஒருவரையொருவர் மடத்தனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள், பிறகு ஏதேதோ பிதற்றிக்கொள்கிறார்கள், அடுத்து என்ன நடக்குமோ என ஆச்சரியத்தோடு இருக்கிறார்கள்.”

அடுத்து என்ன நடந்தது? ஜனத்தொகை வெடிப்பு. 1851-⁠க்குப் பின்வந்த பத்தாண்டில், ஆஸ்திரேலியாவில் வசித்த மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது; உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலிருந்தும் ஆய்வாளர்கள் பலர் நம்பிக்கையோடு அங்கு வந்து குவிந்தார்கள். ஆஸ்திரேலியா எங்கும் பல்வேறு அளவுகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சுரங்கத்தில் குறைந்துபோனால், மற்றொன்று தோண்டப்பட்டது. 1856-⁠ம் ஆண்டில் மட்டுமே, ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 95 டன் தங்கம் தோண்டியெடுத்தார்கள். பிறகு, 1893-⁠ல், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கால்கூர்லி-பௌல்டர் என்ற இடத்திற்கு அருகே அமைந்திருந்த நிலப்பகுதியில் தோண்ட ஆரம்பித்தார்கள். அந்நாள் முதல், 1,300-⁠க்கும் அதிகமான டன் தங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது; அந்த இடம்தான் “2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உலகிலேயே தங்க தாதுக்கள் செழிப்பாக காணப்படும் இடம்” என விவரிக்கப்படுகிறது. அந்த இடத்திலிருந்து இன்றும் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது; இப்போது இதுதான் உலகிலேயே மிக ஆழமாக தோண்டப்பட்டிருக்கும் திறந்தவெளி தங்கச் சுரங்கம்​—⁠சுமார் இரண்டு கிலோமீட்டர் அகலத்திற்கும் சுமார் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கும் 400 மீட்டருக்கும் அதிக ஆழத்திற்கும் மனிதன் வெட்டிய பள்ளத்தாக்கு!

இன்று உலகிலேயே அதிகமாய் தங்கம் வெட்டியெடுக்கப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது ஆஸ்திரேலியா. இத்தொழில் 60,000 ஆட்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. சுமார் 300 டன் தங்கத்தை, அதாவது (ஆஸ்திரேலியா டாலரில்) 500 கோடி டாலர் (17,000 கோடி ரூபாய்) மதிப்புள்ள தங்கத்தை, ஒவ்வொரு ஆண்டும் வெட்டி எடுக்கிறது. தங்கம் தோண்டியெடுப்பதில் ஐக்கிய மாகாணங்கள் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு மேலாக, உலகிலேயே மிக அதிகமான தங்கம் வெட்டியெடுப்பதில் முன்னணி வகிக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா. இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் சுமார் 40 சதவீதம் இந்த நாட்டிலிருந்தே வந்திருக்கிறது. உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 2,000 டன்னுக்கும் அதிகமான தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. விலையேறப் பெற்ற இத்தனை டன் தங்கமும் என்ன செய்யப்படுகிறது?

செல்வமும் அழகும் இணைகிறது

இன்றும் நாணயங்கள் தயாரிக்க ஓரளவு தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மின்ட் இப்பொழுது உலகிலுள்ள நாணய தயாரிப்பாளர்களில் முக்கிய ஒன்றாக விளங்குகிறது. இந்த நாணயங்கள் புழக்கத்தில் இல்லை என்றாலும், சேகரிப்பவர்கள் அவற்றை சேமித்து வைக்கிறார்கள். அதோடு, இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் சுமார் கால்வாசி தங்கம் பாளங்களாக மாற்றப்பட்டு, வங்கிப் பெட்டகங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஐக்கிய மாகாணங்கள்தான் மிக அதிகமான தங்கப் பாளங்களை வங்கிப் பெட்டகங்களில் நிரப்பி வைத்திருக்கிறது.

தற்பொழுது, ஒவ்வொரு ஆண்டும் தோண்டியெடுக்கப்படும் தங்கத்தில் சுமார் 80 சதவீதம்​—⁠சுமார் 1,600 டன்​—⁠தங்க ஆபரணங்களாக வடிவமைக்கப்படுகிறது. உலகிலேயே ஐக்கிய மாகாண வங்கிகளில் மிக அதிகமான தங்கம் இருக்கலாம், ஆனால் இதில் தங்க ஆபரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் தங்கம் இருக்கிறதென சொல்லலாம். மதிப்புமிக்கதாகவும் அழகாகவும் இருப்பதோடு, இந்த மென்மையான உலோகம் பற்பல வழிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற பண்புகளைப் பெற்றிருக்கிறது.

ஒரு பண்டைய உலோகத்தின் நவீன பயன்கள்

தங்கம் துருப்பிடிக்காத உலோகம் என்பதை பண்டைய எகிப்திலிருந்த பார்வோன்கள் அறிந்திருக்கலாம், அதனால்தான் இறந்துபோனவர்களுக்கு முகமூடியாக அதை பயன்படுத்தினார்கள். டூடன்காமன் என்ற பார்வோனின் கல்லறையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது, அந்த இளம் அரசனுடைய தங்க முகமூடி எவ்வித கறையுமின்றி மஞ்சள் நிறத்தில் தகதகவென மின்னியது. இது, தங்கம் அழியாதது என்பதை நிரூபிக்கிறது.

பிற உலோகங்களை அரித்தழிக்கும் நீரும் காற்றும் தங்கத்தைப் பாதிப்பதில்லை, அதனால் தங்கம் அதன் பொலிவை இழந்துவிடுவதில்லை. துருப்பிடிக்காத திறனையும் மின்சாரத்தைக் கடத்தும் ஒப்பற்ற திறனையும் ஒருங்கே பெற்றிருப்பதால், எலக்ட்ரானிக் கருவிகளில் பயன்படுத்துவதற்குச் சிறந்த சாதனமாக அது விளங்குகிறது. டிவி-கள், விசிஆர்-கள், செல்போன்கள், சுமார் 5 கோடி கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அதோடு, உயர்தரமான ‘காம்பேக்ட் டிஸ்க்’குகளில் ஒரு மெல்லிய அடுக்காக தங்கம் பயன்படுத்தப்படுகிறது, இது நீண்ட காலத்திற்கு ‘டேட்டா’க்களை அழியாமல் பாதுகாத்து வைக்க உதவுகிறது.

மெல்லிய தங்கத் தகடுகளுக்கு அசாதாரணமான பண்புகள் சில உண்டு. அந்த உலோகம் ஒளியுடன் செயல்புரிவதைச் சிந்தித்துப் பாருங்கள். மிகமிக மெல்லிய தகடுகளாக அதை அடிக்கும்போது, தங்கம் ஒளி ஊடுருவும் சாதனமாக மாறுகிறது. இந்தளவு மெல்லியதாக இருக்கும்போது, பச்சை ஒளி அலைகள் கடப்பதற்கு அது அனுமதிக்கிறது, ஆனால் புறச்சிகப்பு ஒளியை பிரதிபலிக்கிறது. தங்க தகடிடப்பட்ட ஜன்னல்கள் ஒளியை உள் வாங்கிக்கொண்டு வெப்பத்தை வெளியே கக்கிவிடுகின்றன. இதனால், நவீன விமானத்தினுடைய மாலுமியின் ஜன்னல்கள் தங்கத்தால் தகடிடப்படுகின்றன; அதைப் போலத்தான் புதிய ஆபீஸ் கட்டடங்கள் பலவற்றின் ஜன்னல்களும் செய்யப்படுகின்றன. அதோடு, விண்வெளிக் கலங்களின் சில பாகங்கள், அதாவது எளிதில் பாதிக்கப்படும் பாகங்கள், ஒளி ஊடுருவாத கெட்டியான தங்கத் தகடுகளால் மூடப்படுகின்றன. பலமான கதிர்வீச்சிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் அவற்றை இவை நன்றாக பாதுகாக்கின்றன.

பேக்டீரியாக்களாலும் தங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, சேதமடைந்த அல்லது சொத்தையான பற்களை சரிப்படுத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு பல் வைத்தியர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். பாதிப்படைந்த நரம்புகளை அல்லது இரத்த நாளங்களை வலுப்படுத்துவதற்கு உடலுக்குள் செலுத்தி பொருத்தப்படும் சிறிய ஒயர் டியூப்கள் போன்றவற்றில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

தங்கத்தின் பல்வகைப் பயனையும் மதிப்பையும் அழகையும் சிந்தித்துப் பார்க்கையில், கவர்ச்சியான இந்த உலோகத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து தேடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. (g05 9/22)

[அடிக்குறிப்பு]

a தங்கம் அதிக அடர்த்தியாக இருப்பதால், வெறும் 37 கன சதுர சென்டிமீட்டர் அளவுடைய தங்கக்கட்டி சுமார் 1 டன் எடையுள்ளதாக இருக்கும்.

[பக்கம் 25-ன் பெட்டி]

தங்கம் எங்கே கிடைக்கிறது?

பாறைகள்: எல்லா எரிமலைப் பாறைகளிலும் மிகச் சிறிய அளவுகளில் தங்கம் இருக்கிறது. கம்பெனிகள் சுரங்கம் தோண்டி, பாறைகளை நொறுக்கி வேதியியல் முறையில் தாதுப்பொருளிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்குத் தகுதியான அளவில் பூமியிலுள்ள சில பாறைகளில் தங்கம் நிறைந்து காணப்படுகிறது. உயர்தரமான தாதுவில் ஒரு டன் மண்ணுக்கு 30 கிராம் தங்கம் மாத்திரமே இருக்கிறது.

கனிமப்பாறைகள்: படிக அடுக்குகளுக்கு இடையே தகடு அல்லது கம்பி வடிவில் எப்போதாவது தங்கம் காணப்படுகிறது. இது கனிமப்பாறை தங்கம் (reef gold) என அழைக்கப்படுகிறது.

ஆறுகள்: சூரியன், மழை, காற்று ஆகியவற்றின் காரணமாக, தங்கம் நிறைந்த கனிமப்பாறைகள் சிதைந்து கழிகளிலும் ஆறுகளிலும் சிறுசிறு துகள்களாக குவிகின்றன. இந்த முறையில் கிடைக்கும் தங்கம் வண்டல் மண் தங்கம் (alluvial gold) எனப்படுகிறது.

பூமியின் பரப்பில்: ஒழுங்கற்ற வடிவில் கட்டித் தங்கம் பூமியின் மேற்பரப்பில் அங்குமிங்கும் கட்டிகளாக உருவாவது போல் தெரிகிறது. சிலசமயங்களில், இந்தக் கட்டிகள் பிரமாண்டமான அளவுகளில் காணப்படலாம். ஆஸ்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய தங்கக் கட்டி த வெல்கம் ஸ்ட்ரேன்ஜர் என அழைக்கப்பட்டது; அதன் எடை சுமார் 70 கிலோகிராம்! அது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 1869-⁠ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவே, மிகப் பெரிய தங்கக் கட்டிகளின் வீடாக திகழ்கிறது; இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 25 மிகப் பெரிய தங்கக் கட்டிகளில் 23 இங்குதான் கிடைத்துள்ளது. இன்று வைரத்தைப் போன்ற தரமான கற்கள் கிடைத்தாலும், தீக்குச்சியின் முனை அளவிலான மிகச் சிறிய தங்கக் கட்டிகளைக்கூட காண்பது அரிது.

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது?

மெட்டல் டிடெக்டரிலுள்ள முக்கிய பாகங்களே பொதுவாக இரண்டு ‘காயில்’கள்தான். இந்தக் காயில்களில் ஒன்றின் வழியாக மின்சாரம் பாயும்போது, காந்தப்புலம் உருவாகிறது. மெட்டல் டிடெக்டரை தங்கத் துண்டு போன்ற உலோகப்பொருள் ஒன்றின்மேல் கொண்டுவரும்போது, அந்தப் பொருளில் வலிமையற்ற காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. மெட்டல் டிடெக்டரிலுள்ள இரண்டாவது காயில் இந்த வலிமையற்ற காந்தப்புலத்தை கண்டுபிடித்து, ஒளி, அளவுமானி, அல்லது சத்தத்தின் வாயிலாக ஆப்பரேட்டருக்கு சிக்னல் தருகிறது.

[பக்கம் 25-ன் படங்கள்]

1800-களில் தங்கம் அதிகமாக தோண்டி எடுக்கப்படத் தொடங்கியது:

1. சட்டர்ஸ் மில், கலிபோர்னியா, அ.ஐ.மா.

2. பென்டிகோ கழி, விக்டோரியா, ஆஸ்திரேலியா

3. கோல்டன் பாய்ன்ட், பல்லாரட், விக்டோரியா, ஆஸ்திரேலியா

[படங்களுக்கான நன்றி]

1: Library of Congress; 2: Gold Museum, Ballarat; 3: La Trobe Picture Collection, State Library of Victoria

[பக்கம் 26-ன் படங்கள்]

தங்கத்தின் நவீனகால பயன்கள்

உயர்தரமான ‘காம்பேக்ட் டிஸ்க்’குகளில் மெல்லிய அடுக்காக தங்கம்

விண்வெளிக் கலங்களில் தங்க தகடுகள்

மைக்ரோசிப்களில் தங்கம் பயன்படுத்​தப்படுகிறது

தங்க தகடிடப்பட்ட ஒயர்கள் மின்சாரத்தைக் கடத்தும் சிறந்த திறனுடையவை

[படங்களுக்கான நன்றி]

NASA photo

Carita Stubbe

Courtesy Tanaka Denshi Kogyo

[பக்கம் 26-ன் படம்]

உலகிலேயே மிகவும் ஆழமாக தோண்டப்பட்டிருக்கும் திறந்தவெளி தங்கச் சுரங்கம், கால்கூர்லி​—⁠பௌல்டர், மேற்கு ஆஸ்திரேலியா

[படத்திற்கான நன்றி]

Courtesy Newmont Mining Corporation

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

Brasil Gemas, Ouro Preto, MG