Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

உடல் பருமன் “உடல் பருமன்​—⁠தீர்வு என்ன?” (டிசம்பர் 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளுக்காக உங்களைப் பாராட்டுகிறேன். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டதாலும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்ததாலும் 50 கிலோ குறைந்திருக்கிறேன். உடல் எடையை குறைத்ததால் அதிக தெம்பை பெற்றிருக்கிறேன். இதனால், ஊழியத்தில் எவ்வளவு நேரம் செலவழித்தாலும் அதிகமாக சோர்வடையாமல் இருக்க முடிகிறது.

எம். இ., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு கிட்டத்தட்ட 50 வயது. என்னுடைய ஆரோக்கியத்திற்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், குண்டாக இருப்பதைப் பற்றி முன்பு அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. இக்கட்டுரைகளைப் படித்த பின்போ, என்னுடைய எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டேன். நம் ஒவ்வொருவருடைய நலனிலும் யெகோவாவுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை இக்கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன.

எச். எஸ்., ஜப்பான்

உடல் பருமனைப் பற்றிய துல்லியமான தகவல்களுக்கு மிக்க நன்றி. இன்றே நான் உடற்பயிற்சி திட்டத்தை ஆரம்பித்துவிட்டேன். அதோடு, உணவு முறையையும் மாற்றிக்கொண்டேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் பத்திரிகைகளை வாசித்துவருகிறேன். இவை என் வாழ்க்கைக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்திருக்கின்றன!

என். ஜே., ஐக்கிய மாகாணங்கள்

நான் 160 கிலோ இருக்கிறேன். ஆனால், பக்கம் 5-⁠ல் உள்ள அட்டவணையின்படி நான் 76 கிலோதான் இருக்க வேண்டும். கூடுதலான எடையைக் குறைக்க நான் கடினமாக உழைக்க வேண்டும். இந்தக் கட்டுரையும் அதிலுள்ள அனுபவங்களும் நிச்சயம் எனக்கு உதவுமென்று நம்புகிறேன்.

டபிள்யு. ஓ., ஐக்கிய மாகாணங்கள்

யெகோவாவும் அவருடைய அமைப்பும் நம்முடைய ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், பக்கம் 5-⁠ல் உள்ள அட்டவணைதான் எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. நம்முடைய உடற்கட்டுக்கு ஏற்ற எடையைக் காண்பிக்கும் மற்றொரு அட்டவணையை அல்லவா சில டாக்டர்கள் உபயோகிக்கிறார்கள்? எனக்கு பெரிய உடற்கட்டு; அந்த அட்டவணைப்படி பார்த்தால், என்னைப் போலவே உயரமுடைய, ஆனால் சிறிய உடற்கட்டுள்ள ஒருவருடைய எடை வித்தியாசப்படுமே!

சி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: இந்தத் தகவலுக்காக உங்களுக்கு நன்றி. பொருத்தமான எடையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு வகையான அட்டவணைதான் பக்கம் 5-⁠ல் காண்பிக்கப்பட்டுள்ளது. மற்ற அட்டவணைகளைவிட இதுதான் சிறந்தது என்று காட்டுவதல்ல எங்களுடைய நோக்கம்.

ஒல்லியாக இருப்பவர்கள்தான் எப்போதும் வெற்றி பெறுவார்கள், குண்டாக இருப்பவர்கள் எதிலும் தோல்வியைத்தான் அடைவார்கள் என்ற பொதுவான கருத்தையே இந்தக் கட்டுரைகள் வெளிக்காட்டுகின்றன. எனவே, நான் குண்டாக இருப்பதால் சோம்பேறியானவள், ஏனோதானோவென்று வாழ்கிறவள் அல்லது எதற்குமே பயனில்லாதவள் என்றெல்லாம் அது அர்த்தப்படுத்துமா?

ஐ. ஜே., ஜெர்மனி

மனோ ரீதியில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன். குண்டாக இருக்கிறவர்கள் உடல் எடையை நிச்சயம் குறைக்க வேண்டும் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அவர்களால் குறைக்க முடியவில்லை என்றால்? அவர்கள் எப்படி உணர்வார்கள்?

ஒய். இஸட்., ரஷ்யா

ஒல்லியாக இருப்பவரையோ அல்லது ‘சரியான’ எடை உள்ளவரையோதான் யெகோவா நேசிக்கிறார் என்றும் அவர்களை மட்டும்தான் தம்முடைய சாட்சியாக இருக்க அவர் அனுமதிக்கிறார் என்றும் சில வாசகர்கள் நினைக்கலாம்.

ஆர். பி., ஜெர்மனி (g05 8/22)

“விழித்தெழு!” பதில்: மேற்கண்ட மூன்று வாசகர்களும் எங்களுடைய கட்டுரைகளில் குறிப்பிடப்படாத கருத்தையே எழுப்பியிருக்கிறார்கள். நிறைய சாப்பிடுவதால் மட்டும் ஒருவர் குண்டாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்திற்கு, சில மருந்துகளை உட்கொள்வதால் ஒருவர் குண்டாக இருக்கலாம். மரபியல் பண்புகளால் உடல் எடையை குறைப்பது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும், சரியான எடையை உடையவர்களைத்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்று நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. எங்களுடைய கட்டுரைகள், சத்துள்ள உணவுத் திட்டத்தின் மூலமும் நல்ல உடற்பயிற்சித் திட்டத்தின் மூலமும் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்குத் தூண்டுதலாக இருக்குமென்றும் நடைமுறை ஆலோசனைகளை அளிக்குமென்றும் நாங்கள் நம்புகிறோம். இதுபோன்ற திட்டங்கள் உயிரைக் காக்கின்றன. இதில் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தால், அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.