Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாருக்கும் ஒரு வீடு தேவை

எல்லாருக்கும் ஒரு வீடு தேவை

எல்லாருக்கும் ஒரு வீடு தேவை

“குடும்பமாக சுகநலத்தோடும் சந்தோஷத்தோடும் தரமான வாழ்க்கை வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருக்கிறது; இதில் . . . நல்ல வீட்டு வசதியோடு வாழ்வதும் அடங்கும்.”​—⁠மனித உரிமைகள் பற்றிய சர்வதேச உறுதிமொழி, பிரிவு 25.

இடம்விட்டு இடம் பெயரும் பண்ணை ஆட்களின் பெருங்கூட்டம் ஒரு பகுதியில் மெதுவாகக் குடியேறுகிறது. இங்கே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ‘டிரெய்லர்’களில் குடித்தனம் நடத்துகிறார்கள். இதுதான் இப்போதைக்கு அவர்களுடைய வீடு. இத்தகைய ‘டிரெய்லர்கள்’ நிறுத்தப்படும் இடங்கள் பார்க்கியாடோரெஸ் என அழைக்கப்படுகின்றன; இவை நகரத்திற்கு வெளியே குறைந்த வாடகையில் கிடைக்கிற இடங்களாகும். இங்கே கழிவுநீரை அகற்றுதல், சுத்தமான குடிநீரைப் பெறுதல், குப்பைகளை நீக்குதல் போன்ற அடிப்படை வசதிகள் மிக மிகக் குறைவாக இருக்கின்றன, அல்லது அறவே இருப்பதில்லை. “இது ரொம்பவும் ஏழ்மைப்பட்ட இடம்; இந்த மாதிரியான இடத்தில்தான் [பண்ணை ஆட்களால்] குடியிருக்க முடியும்” என இந்தக் குடியிருப்பு பகுதியைப் பற்றி ஒரு நிருபர் விவரித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன், இப்படிப்பட்ட சில குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களை அதிகாரிகள் வெளியேற்ற ஆரம்பித்தார்கள். அப்போது அந்தப் பண்ணை ஆட்களின் சில குடும்பங்கள் தங்களுடைய “மொபைல்” இல்லங்களை விற்றுவிட்டு நகரின் மையத்தில் உள்ள ஜனநெருக்கடியான பகுதிகளிலும் அப்பார்ட்மென்டுகளிலும் கார் ஷெட்டுகளிலும் குடிபுகுந்தார்கள். மற்றவர்களோ தங்கள் உடைமைகளையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொண்டு, தங்குவதற்கான ஓர் இடத்தைத் தேடிச் சென்றார்கள். ஆம், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் அவர்கள் திரும்பிவந்து தங்குவதற்கு​—⁠தங்களுடைய வீடு என்று சொல்லிக்கொள்வதற்கு​—⁠ஓர் இடம் வேண்டுமே!

இது, ஏழை நாடுகளில் உள்ள சூழ்நிலை என நினைக்கிறீர்களா? இல்லை. உண்மையில் இது, அ.ஐ.மா., தெற்கு கலிபோர்னியாவில் இருக்கிற மெக்கா நகருக்கு அருகே உள்ள சூழ்நிலை. பாம் ஸ்பிரிங்ஸ் என்ற பணக்கார நகரத்திற்குக் கிழக்கே உள்ள இந்த இடத்திற்கு காரில் ஒரு மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம். அ.ஐ.மா.-வில் சொந்தமாக வீடுகள் வாங்குவது என்றுமில்லாத அளவுக்கு இப்போது அதிகரித்து வருகிறது; அதோடு, 2002-⁠ல் ஒரு சராசரி குடும்பத்தின் வருமானம் சுமார் 42,000 டாலராக (18,90,000 ரூபாயாக) இருந்தது. என்றாலும், 50 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்க குடும்பங்கள் போதுமான வீட்டுவசதியின்றியே இன்னும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்படுகிறது.

வளரும் நாடுகளின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அரசாங்க, சமூக, மத முயற்சிகள் ஒருபுறமிருந்தாலும், வீடில்லாத் திண்டாட்டம் உலகெங்கும் படுமோசமாகிக் கொண்டேதான் வருகிறது.

உலகெங்கும் திண்டாட்டம்

உலகெங்கும் சேரிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகம், அதாவது உலகெங்கும் உள்ள நகரவாசிகளின் எண்ணிக்கையில் 32 சதவீதம் எனக் கணிக்கப்படுகிறது. பிரேசிலில் ஃபவெலாஸ், அதாவது சேரிகள் கிடுகிடுவென பெருகிவருகின்றன; இந்தச் சேரிகள் “முதன்முதலாகத் தோன்றிய நகரங்களையும்விட” சீக்கிரத்தில் “பெரியதாகி ஜனநெருக்கடி மிக்கவை ஆகிவிடக்கூடும்” என அந்நாட்டு நகரமயமாக்கும் வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். நைஜீரியாவில் உள்ள சில நகரங்களில் 80 சதவீதத்திற்கு மேலான ஜனங்கள் சேரிகளிலும் புறம்போக்கு பகுதிகளிலும் வாழ்கிறார்கள். “கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால், உலகெங்கும் உள்ள சேரிவாசிகளின் எண்ணிக்கை அடுத்த 30 வருடங்களில் சுமார் 200 கோடியாக உயர்ந்துவிடும்” என ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னன் கூறினார்.

என்றாலும், உலகெங்கும் உள்ள ஏழைகள் எந்தளவு மோசமான, பரிதாபமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இத்தகைய புள்ளிவிவரங்கள் ஓரளவுக்குக்கூட காட்டுவதில்லை. ஐக்கிய நாடுகளின் அறிக்கைபடி, வளரும் நாடுகளில் இரண்டில் ஒரு பாகத்திற்கும் அதிகமானோருக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை, மூன்றில் ஒரு பாகத்தினருக்குச் சுத்தமான தண்ணீர் இல்லை, நான்கில் ஒரு பாகத்தினருக்குச் சரியான வீடு இல்லை, ஐந்தில் ஒரு பாகத்தினருக்கு நவீன மருத்துவ வசதி இல்லை. வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலோர் தங்களுடைய செல்லப் பிராணிகளைக்கூட இது போன்ற சூழ்நிலையில் வாழவிடமாட்டார்கள்.

சர்வதேச உரிமை

குடியிருக்க தகுந்த இடம் இருப்பது மனிதனின் ஓர் அடிப்படை தேவை என்பது பொதுவாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. 1948-⁠ல், ஐக்கிய நாடுகள் ஏற்றுக்கொண்ட மனித உரிமைகளைப் பற்றிய சர்வதேச உறுதிமொழி, திருப்தியான வீட்டுவசதியையும் தரமான வாழ்க்கையையும் பெற ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருக்கிறது என அறிக்கையிட்டது. ஆம், ஒவ்வொருவருக்கும் நிச்சயமாகவே நல்ல ஒரு வீடு தேவை.

1996-⁠ல், ஐ.நா.-வின் ஹாபிடெட் அஜென்டா எனப் பிற்பாடு அறியப்பட்ட ஆவணத்தைப் பல நாடுகள் ஏற்றுக்கொண்டன. அனைவருக்கும் நல்ல வீட்டுவசதி செய்துகொடுப்பது பற்றிய திட்டவட்டமான ஒப்பந்தங்கள் அதில் விளக்கப்பட்டிருந்தன. பிற்பாடு ஜனவரி 1, 2002-⁠ல் ஐ.நா. இந்த ஆவணத்திற்குச் சட்டப்பூர்வ வடிவம் கொடுத்து, முழுமை பெற்ற திட்டமாக ஆக்கியது; இவ்வாறு அதிலுள்ள ஒப்பந்தங்களை மேலும் உறுதிப்படுத்தியது.

சில பணக்கார நாடுகள், சந்திரனில் குடியிருப்புகள் அமைப்பதற்கும் செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுப் பயணம் செய்வதற்கும் அனுமதி கேட்க ஆரம்பித்திருக்கிற இந்தச் சமயத்தில், அந்நாடுகளில் பெருகிவருகிற ஏழை எளியோர் குடியிருப்பதற்கு இந்தப் பூமியில்கூட ஒரு நல்ல இடம் இல்லாதிருப்பது வேடிக்கைதான். வீடில்லாத் திண்டாட்டம் உங்களை எப்படிப் பாதிக்கிறது? எல்லாருமே வசதியான சொந்த வீட்டில் குடியிருக்கும் ஒரு காலம் வருமா? அதை எதிர்பார்க்கலாமா? (g05 9/22)

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

சந்திரனில் குடியிருப்புகள் அமைப்பது பற்றி சில நாடுகள் யோசித்துக்​கொண்டிருக்கிற இச்சமயத்தில், அவற்றின் குடிமக்கள் பலருக்கு இந்தப் பூமியில் வாழக்கூட நல்ல வீடுகள் இல்லை

[பக்கம் 2, 3-ன் படம்]

ஆசியாவைச் சேர்ந்த அகதிகளின் ஒரு குடும்பம்.

ஒரு நகரில் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்கிற 3,500 குடும்பங்கள் தண்ணீருக்காகவும் சுகாதாரத்திற்காகவும் ஏங்கித்தவிக்கின்றன

[படத்திற்கான நன்றி]

© Tim Dirven/Panos Pictures

[பக்கம் 4-ன் படம்]

வட அமெரிக்கா