கன்னி மரியாளிடம் ஜெபிக்கலாமா?
பைபிளின் கருத்து
கன்னி மரியாளிடம் ஜெபிக்கலாமா?
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும் மக்கள் மத்தியில் மரியாளைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சர்வவல்லமையுள்ள கடவுள் இந்த இளம் கன்னியை இயேசுவின் தாயாக இருப்பதற்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தனிப்பட்ட விதத்தில் அவரை ஆசீர்வதித்ததாக வேதவசனங்கள் சொல்கின்றன. இயேசுவின் பிறப்பு தனித்தன்மை வாய்ந்ததாக இருந்ததற்குக் காரணம் அவரைக் கர்ப்பந்தரித்தபோது மரியாள் கன்னியாக இருந்ததுதான். கிறிஸ்தவமண்டலத்தின் சில சர்ச்சுகள் காலங்காலமாக மரியாளுக்கு விசேஷித்த விதத்தில் ஆராதனை செலுத்திவருகின்றன. பொ.ச. 431-ல், எபேசுவின் ஆலோசனை மன்றம், “கடவுளின் தாய்” என மரியாளை யாவரறிய அறிவித்தது. இன்றும்கூட, மரியாளிடம் ஜெபம் செய்யும்படி அநேகர் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். a
சரியான நபரிடம் மட்டுமே ஜெபம் செய்ய வேண்டும் என்பதை நல்மனமுள்ள நபர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தைக் குறித்து பைபிள் என்ன கற்பிக்கிறது? கிறிஸ்தவர்கள் கன்னி மரியாளிடம் ஜெபிக்கலாமா?
‘எங்களுக்கு ஜெபம் செய்ய கற்றுக்கொடும்’
இயேசுவின் சீஷர்களில் ஒருவர் ‘ஆண்டவரே எங்களுக்கு ஜெபம் செய்ய கற்றுக்கொடும்’ என்று அவரிடம் கேட்டுக்கொண்டதாக லூக்காவின் சுவிசேஷப் பதிவு சொல்கிறது. அதற்கு இயேசு, “ஜெபஞ் செய்யும்போது: ‘பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக’” எனச் சொல்லும்படி சீஷர்களுக்குக் கற்பித்தார். அதே விதமாக தம்முடைய மலைப் பிரசங்கத்தின்போதும், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபம் செய்யும்படி கற்பித்தார்.—லூக்கா 11:1, 2; மத்தேயு 6:9, திருத்திய மொழிபெயர்ப்பு.
எனவே, இயேசுவின் பிதாவான யெகோவாவிடமே நாம் ஜெபம் செய்ய வேண்டும், அதாவது வணக்கத்திற்குரிய வார்த்தைகளை ஏறெடுக்க வேண்டும்; இதைத்தான் நாம் முதலாவதாகக் கற்றுக்கொள்கிறோம். வேறொருவரிடம் ஜெபிக்கும்படி யாத்திராகமம் 20:5, NW.
பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை. இது சரியே, ஏனெனில் யெகோவா “தனிப்பட்ட பக்தியை விரும்புகிற கடவுள்;” மோசேக்குப் பத்து கட்டளைகளைக் கொடுத்த சமயத்தில் தம்மைப் பற்றி அவர் அப்படித்தான் சொல்லியிருந்தார்.—ஜெபமாலையைப் பயன்படுத்தலாமா?
குறிப்பிட்ட சில ஜெபங்களை, அதாவது மரியே வாழ்க, பரமண்டல ஜெபம் போன்ற சில ஜெபங்களைத் திரும்பத்திரும்பச் சொன்னால் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என மரியாள் பக்தர்கள் அநேகர் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கர்கள் “மரியாளை வணங்கும்போது ஜெபமாலையையே மிக அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்” என கத்தோலிக்க சின்னங்கள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. ஜெபமாலை என்பது மணிகள் கோர்க்கப்பட்ட மாலையாகும், ஜெபங்களை எண்ணுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. “இது ஐந்து அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் பத்து மணிகளைக் கொண்டிருக்கிறது. அந்த ஒவ்வொரு அடுக்குக்கும் இடையே சற்று இடைவெளிவிட்டு வேறு விதமான ஒரு மணி கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஜெபமாலையைப் பயன்படுத்தி, ஐம்பது முறை ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ ஜெபமும், ஐந்து முறை ‘பரமண்டல ஜெபமும்’, ஐந்து முறை ‘பிதாவுக்கு மகிமை உண்டாவதாக’ ஜெபமும் சொல்லப்படுகிறது” என அதே புத்தகம் விளக்குகிறது. ஜெபமாலையைப் பயன்படுத்தி பக்தியோடு திரும்பத்திரும்பச் சொல்லப்படும் இந்த ஜெபங்களைக் கடவுள் விருப்பத்துடன் கேட்கிறாரா?
இதற்குச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க இயேசு தம் சீஷர்களுக்கு கூறிய அறிவுரைகளுக்கு மறுபடியுமாக நம் கவனத்தைத் திருப்பலாம். “நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் [அதாவது, சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லாதீர்கள்]; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 6:7) ஆகவே, தங்கள் ஜெபங்களில் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதைத் தவிர்க்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குத் திட்டவட்டமாய் கூறினார்.
‘ஆனால், ஜெபமாலை ஜெபங்களில் ஒன்றான பரமண்டல ஜெபத்தை திரும்பத்திரும்பச் சொல்லும்படிதானே இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார்?’ என்று யாரேனும் கேட்கலாம். பரமண்டல ஜெபத்தை மாதிரி ஜெபமாகத்தான் இயேசு கற்றுக்கொடுத்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும் மேற்கூறப்பட்ட விதமாக, சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லாதீர்கள் என்று எச்சரித்த பிறகே அவர் அந்த ஜெபத்தைக் கற்றுக்கொடுத்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மாதிரி ஜெபத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் இயேசு தமது சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்ததாக பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர் வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஆகவே, ஜனங்கள் அந்த ஜெபத்தை மனப்பாடம் செய்து திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இயேசு அதைக் கற்பிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. (மத்தேயு 6:9-15; லூக்கா 11:2-4) அந்த இரு சந்தர்ப்பங்களிலும் இயேசு ஒரே கருத்தைத்தான் சொன்னார், ஆனால் வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். எனவே, எப்படி ஜெபம் செய்வது, என்னென்ன காரியங்களுக்காக ஜெபம் செய்வது என்பதற்கான மாதிரியைத்தான் இயேசு தமது சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். எல்லாவற்றையும்விட முக்கியமாக, யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்பதையே அந்த ஜெபத்தில் அவர் கற்றுக்கொடுத்தார்.
மரியாளை மதித்தல்
கிறிஸ்தவர்கள் மரியாளிடம் ஜெபிக்கும்படி பைபிள் கற்பிக்காவிட்டாலும், கடவுளுடைய சித்தம் நிறைவேறுவதில் மரியாள் வகித்த பங்கை அது எந்த வகையிலும் அவமதிப்பதில்லை. அவரது மகன் மூலமாக கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதர்களுக்கும் நித்திய நன்மைகளைத் தரும். “எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று மரியாளே சொன்னார். “ஸ்திரீகளுக்குள்ளே . . . ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று மரியாளைக் குறித்து அவருடைய உறவினரான எலிசபெத் என்பவரும் கூறினார். ஆம், அவர் ஆசீர்வதிக்கப்பட்டவரே. மேசியாவைப் பிறப்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான பாக்கியம் மரியாளுக்குக் கிடைத்தது.—லூக்கா 1:42, 48, 49.
இருந்தாலும், வேதவசனங்கள் மரியாளை மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சொல்வதில்லை. யாகேல் என்பவளும்கூட, இஸ்ரவேல் தேசத்தாரின் நன்மைக்காக எடுத்த நடவடிக்கைகளுக்காக “ஸ்திரீகளுக்குள்ளே . . . ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று சொல்லப்பட்டாள். (நியாயாதிபதிகள் 5:24) விசுவாசமுள்ள யாகேல், மரியாள் போன்ற இன்னும் அநேக தேவபக்தியுள்ள பெண்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. இவர்கள் அனைவரும் நாம் பின்பற்றுவதற்குத்தான் தகுதியுள்ளவர்களே தவிர, நம்முடைய வணக்கத்திற்கு அல்ல.
இயேசுவை மரியாள் உண்மையுடன் பின்பற்றினார். இயேசு ஊழியம் செய்த அநேக சந்தர்ப்பங்களின்போது, ஏன், அவர் மரிக்கும் சமயத்தின்போதுகூட மரியாள் அவரோடு இருந்தார். அதுமட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவருடைய சகோதரர்களோடுகூட ‘ஜெபத்தில் தரித்திருந்தார்.’ ஆகவே, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மரியாளும் ஒருவர். இதன் காரணமாக, கிறிஸ்துவோடுகூட பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிற மணவாட்டி வகுப்பின் பாகமாக இருக்கும் நம்பிக்கையை அவர் பெற்றார்.—மத்தேயு 19:28; அப்போஸ்தலர் 1:14; 2:1-4; வெளிப்படுத்துதல் 21:2, 9.
ஆனால் மேற்கூறப்பட்ட எந்தக் காரணங்களும், மரியாளிடம் ஜெபிக்க நமக்கு அனுமதி அளிப்பதில்லை. இருதயப்பூர்வமான ஜெபம் வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் ‘ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்கும்படி’ சொல்லப்படுகிறார்கள். (ரோமர் 12:12) என்றாலும், அப்படிப்பட்ட எல்லா ஜெபங்களுமே இயேசுவின் மூலமாக யெகோவாவிடம் மட்டுமே ஏறெடுக்கப்பட வேண்டும்.—மத்தேயு 4:10; 1 தீமோத்தேயு 2:5. (g05 9/8)
[அடிக்குறிப்பு]
a மரியாளைக் கடவுளின் தாய் என்று சொல்வது பைபிளுக்கு முரணான திருத்துவக் கோட்பாட்டின் பேரில்—அதாவது கிறிஸ்துவைக் கடவுள் என்று சொல்லும் கோட்பாட்டின் பேரில்—சார்ந்திருக்கிறது.