Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாட் ரூம்களைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?

சாட் ரூம்களைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

சாட் ரூம்களைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?

“எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம், அதனால் பொதுவாக யாரிடமும் பேச மாட்டேன்; ஆனால் சாட் ரூமில் மட்டும் தயக்கமில்லாமல் பேசிவிடுகிறேன், ஏனென்றால் நான் யாரென்று அவர்களுக்குத் தெரியாதே.”​—பீட்டர். a

“சாட் ரூமில் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.”​—அபிகேல்.

மெசேஜ் அனுப்பி உடனுக்குடன் ‘பேசிக்கொள்ளும்’ வசதி இன்டர்நெட்டில் இருக்கிறது. இதற்குப் பெயர்தான் சாட் ரூம். ஏகப்பட்ட ஆட்கள் அதைப் பயன்படுத்தலாம்; ஒருவர் மற்றவருடைய மெசேஜ்களை வாசித்து, அவற்றிற்குப் பதிலும் அளித்துக்கொள்ளலாம்.

சில சாட் ரூம்கள், குறிப்பாக இளைஞர்களைக் கவருகின்றன. வித்தியாசப்பட்ட கலாச்சாரங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சகலவிதமான விஷயங்களையும் பேச தினசரி சாட் ரூம்களைப் பயன்படுத்துகிறார்கள். உலகமுழுவதிலும் இருக்கிற இந்த சாட் ரூம் வசதியை சில ஸ்கூல்களும்கூட பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்க மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் மேற்பார்வையில், ஸ்பெயின், இங்கிலாந்து, அல்லது வேறு இடங்களில் இருக்கும் மாணவர்களிடம் சமூகப் பிரச்சினைகளைக் கலந்துபேசலாம். அதோடு, மாணவர்கள் தங்களது வகுப்பு புராஜக்ட் சம்பந்தமாக எஞ்ஜினியர், கெமிஸ்ட் போன்ற நிபுணர்களிடம் பேசலாம்.

ஆனால், சாட் ரூம்களைப் பயன்படுத்தும் அநேகர் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களை டிஸ்கஸ் செய்வதில்லை. நீங்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், என்னென்ன ஆபத்துகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

காமுகர்களின் வேட்டைக் களம்

அபிகேல் இவ்வாறு சொல்கிறாள்: “நான் சாட் ரூமில் சில பேரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களில் ஒருவன், 14 வயது பெண்கள் யாராவது எனக்குத் தெரியுமா என்று கேட்டான். அவர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்றான். அதற்காக அவர்களுக்குப் பணம் கொடுப்பதாகவும் சொன்னான்.”

அபிகேலுக்கு மாத்திரமல்ல, இன்னும் எத்தனையோ பேருக்கும் அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும் ஆன்-லைன் காமுகர்களுடைய பிரச்சினை இருப்பதால் சில அரசாங்கங்கள் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கென்றே பிரசுரங்களை வெளியிட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, சாட் ரூமில் பேச ஆரம்பித்தவுடனேயே செக்ஸைப் பற்றி பச்சை பச்சையாகப் பேசும் ஆட்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி ஐ.மா. ஃபெடரல் பீயுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) வெளியிட்ட ஒரு பிரசுரம் சொல்கிறது. அதோடுகூட சாட் ரூமில் பேசும் மற்ற சிலர், “ஒருவரிடம் முதலில் அக்கறைகாட்டி, அன்புகாட்டி, பாசமழை பொழிந்து, கிஃப்டுகள் வழங்கி, கொஞ்சங்கொஞ்சமாக வசீகரிப்பார்கள்.” அப்படிப்பட்டவர்களைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருக்கும்படி அது சொல்கிறது.

இந்தக் காமுகர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சில தந்திரங்களைப் பற்றி FBI வெளியிட்ட பிரசுரம் இவ்வாறு சொல்கிறது: “பிள்ளைகளின் பிரச்சினைகளை இவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, அனுதாபம் காட்டுகிறார்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த லேட்டஸ்ட் இசை, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் இவர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஆன்-லைனில் பிள்ளைகளிடம் செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளையோ விஷயங்களையோ கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதன் மூலம் அவர்களுடைய கூச்சத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலுகிறார்கள்.”

வக்கிர புத்தியுள்ள பெரியவர்களைக் குறித்து மட்டும் ஜாக்கிரதையாக இருந்தால் போதாது. இளைஞர்களைக் குறித்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதாவது, பைபிளின் ஒழுக்க தராதரங்களை அறியாத அல்லது அறிந்தும் அவமதிக்கிற இளைஞரைக் குறித்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோடே என்னும் இளைஞரின் அனுபவத்தைக் கவனியுங்கள். இவர் மற்ற இளைஞர்களுடன் ஆன்-லைனில் சாட் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரைத் தனியொரு சாட் ரூமுக்கு அழைத்து, செக்ஸ் சம்பந்தமாக ஒரு மோசமான கேள்வியைக் கேட்டாள். அந்தப் பேச்சை உடனடியாக நிறுத்துவதற்கு வேண்டிய மனக்கட்டுப்பாடு கோடேக்கு இருந்தது.

செக்ஸைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் நம் எல்லாருக்கும் இயற்கையாகவே இருப்பதால் கோடேயைப் போல் மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கலாம். முன்பு குறிப்பிடப்பட்ட பீட்டர் இவ்வாறு சொன்னார்: “என்னிடம் சாட் செய்பவர்கள் செக்ஸைப் பற்றி பேசினால் உடனேயே அந்த சாட் ரூமில் பேசுவதை நிறுத்திக்கொள்வேன் என்றும் அந்தளவுக்கு மனக்கட்டுப்பாடு எனக்கு இருக்கிறது என்றும்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அநேக சமயங்களில், செக்ஸ் விஷயங்கள் பற்றி நிஜமாகவே மற்றவர்கள் பேசினபோது நான் தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருந்தேன். அதை நினைத்து பின்னால் மிகவும் வருத்தப்பட்டேன்.” ஒருவேளை நீங்கள் இவ்வாறு நினைக்கலாம்: ‘நான் யார் என்பதைச் சொல்லாமல் இருந்துவிட்டால்கூடவா, சாட் ரூமில் செக்ஸ் பற்றி பேசுவது ஆபத்தானது?’

ஆன்-லைனில் செக்ஸைப் பற்றி பேசுவது ஆபத்தானதா?

செக்ஸைப் பற்றி பைபிள் வெளிப்படையாகப் பேசுகிறது. (நீதிமொழிகள் 5:18, 19) இளமைப் பருவத்தில் மனிதனுக்கு செக்ஸில் அதிக ஆர்வம் இருப்பது உண்மைதான். எனவே இளைஞர்களாகிய நீங்கள் செக்ஸைப் பற்றி பேச வேண்டும். இந்த முக்கியமான விஷயம் சம்பந்தமாக உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். b ஆனால், நீங்கள் எப்படிப் பதில்களைப் பெறுகிறீர்கள் என்பதே மிக முக்கியம். ஏனென்றால், அதன்பேரில்தான் உங்களுடைய சந்தோஷமே​—⁠இப்பொழுதும் சரி எதிர்காலத்திலும் சரி​—⁠சார்ந்திருக்கிறது.

நீங்கள் ஆன்-லைனில் செக்ஸ் பற்றி சாட் செய்ய தீர்மானித்தாலும் சரி உங்களுடைய “ஃபிரண்ட்ஸ்களுடன்” செக்ஸ் பற்றி சாட் செய்ய தீர்மானித்தாலும் சரி, பைபிள் குறிப்பிடுகிற இளம் மனிதனுக்கு ஏற்பட்ட கதியே உங்களுக்கும் ஏற்படலாம். ஆர்வத்தின் காரணமாக அவன் ஒரு வேசியின் வீட்டருகே சுற்றித்திரிந்தான். முதலில் அந்த வேசி அவனிடம் வெறுமனே பேசினாள். அவள்மீது ஆசை வளர்ந்துவிட்ட பிறகோ அவனால் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள முடியவில்லை. ‘உடனே அவன் ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது போலவும், . . . ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறது போலவும் அவள் பின்னே சென்றான்.’​—⁠நீதிமொழிகள் 7:22, 23.

அதுபோலத்தான் ஆன்-லைனில் செக்ஸைப் பற்றி பேசுவதுங்கூட. இன்னுமதிக ‘கிக்’ கொடுக்கும் விஷயங்களைத் தேடிப்போக அது உங்களை எளிதில் தூண்டிவிடலாம். பிலிப் என்ற ஒரு டீனேஜ் பையன் இவ்வாறு சொன்னான்: “நான் ஆன்-லைனில் ஒருவரிடம் சாட் செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென்று என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு ஆபாச படம் தோன்றியது. நான் சாட் செய்துகொண்டிருந்த நபர் அந்தப் படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.” ஆபாச படங்களைப் பார்ப்பதற்கான ஆசை உங்கள் மனதில் புகுந்துவிட்டால் மேன்மேலும் அப்படிப்பட்ட படங்களைப் பார்க்க தூண்டப்படுவீர்கள்; ‘அடல்ட்’ சாட் ரூமில் நுழைய முயலுவீர்கள். c இவ்வாறு, ஆபாச படங்களைப் பார்க்கும் கண்ணியில் சிக்கிக்கொள்ளும் அநேகர் அடுத்தபடியாக ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு தவிர்க்க முடியாத பின்விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.​—⁠கலாத்தியர் 6:7, 8.

உங்களுடன் ஆன்-லைனில் செக்ஸைப் பற்றி பேச விரும்புகிறவர்களுக்கு உங்கள் நலனில் எந்த அக்கறையும் கிடையாது. இவர்கள் உங்களை ஒழுக்கங்கெட்ட பேச்சில் சிக்கவைத்து, ஒழுக்கங்கெட்ட நடத்தையில் தள்ளப்பார்க்கிறார்கள். தங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள். d சாலொமோன் ராஜா தன் மகனை ஒரு காமுகியிடமிருந்து காப்பாற்ற நினைத்து இந்த வார்த்தைகளை எழுதினார்: “உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. சேர்ந்தால் உன் மேன்மையை [அதாவது, மதிப்பை] அந்நியர்களுக்கு . . . கொடுத்துவிடுவாய். அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்.” (நீதிமொழிகள் 5:8-10) இந்த வசனத்தின் நியமத்தை இப்படிப் பொருத்திச் சொல்லலாம்: செக்ஸைப் பற்றி அலசும் சாட் ரூம்கள் அருகே போகாதே. போனால், தங்களுடைய ஆசைகளுக்கு உன்னைப் பலியாக்க நினைக்கிற ஆசாமிகளிடம் உன் மதிப்பை நீ பறிகொடுப்பாய்.

‘தங்கள் சுயரூபத்தை மறைப்பவர்கள்’

ஆனால், ‘ஆன்-லைனில் செக்ஸைப் பற்றி பேச எனக்கொன்றும் விருப்பமில்லை’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். அதோடு, நாம் யார் என்று சொல்லாமல் பேசுவதற்கும், கூச்சமின்றி பேசுவதற்கும் சாட் ரூம்தான் சரியான இடம் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பீட்டர் மற்றும் அபிகேலைப் போல நீங்களும் நினைக்கலாம். e ஆனாலும், இதில் இன்னுமொரு ஆபத்து இருப்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

அடையாளத்தை மறைத்துக்கொள்வது சாட் ரூம்களுக்கே உரிய அம்சம்; அது வஞ்சகர்களாக மாறிவிட உங்களைத் தூண்டலாம். அபிகேல் இவ்வாறு சொல்கிறாள்: “நான் சாட் ரூமில் பேச ஆரம்பித்த பின், பேசுபவரைப் பொறுத்து ஆள் மாறாட்டம் செய்துகொள்வேன்.” அபிகேலைப் போல, ஒவ்வொரு சாட் ரூம் குரூப்புக்கு ஏற்றவாறு நீங்களும் ஆள் மாறாட்டம் செய்யத் தூண்டப்படலாம். புதுப்புது ஆட்களை நண்பர்களாக்கிக்கொள்ளும் முயற்சியில், அவர்களைப் போலவே பேசவும் அவர்கள் ஆர்வங்காட்டுகிற விஷயங்களில் ஆர்வங்காட்டவும் நீங்கள் தொடங்கிவிடலாம். அல்லது, உங்களுடைய சில எண்ணங்களும் உணர்ச்சிகளும் உங்கள் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் பிடிக்காது என்று நினைத்துக்கொண்டு, அவற்றைப் பகிர்ந்துகொள்ள சாட் ரூம்தான் ‘பெஸ்ட்’ என நீங்கள் யோசிக்கத் தொடங்கிவிடலாம். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் நீங்கள் மற்றவர்களை வஞ்சிக்கிறீர்கள் என்றே அர்த்தம். எப்படியென்றால், நீங்கள் யாரென்பதை மறைப்பதால் சாட் ரூமில் பேசுபவர்களை வஞ்சிக்கிறீர்கள். அதேசமயம், உங்களுடைய உண்மையான உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் சொல்லாததால் அவர்களையும் வஞ்சிக்கிறீர்கள்.

இன்டர்நெட்டின் இந்த சாட் ரூம் வசதி சமீபத்தில்தான் அறிமுகமானது. ஆனால், பொய் சொல்லி வஞ்சிக்கும் பழக்கம் மனிதர்களுக்கு ஆதிமுதற்கொண்டே இருந்திருக்கிறது. சாட் ரூமை பயன்படுத்தும் சிலருடைய தந்திரமான செயலுக்குக் காரணகர்த்தா யார் தெரியுமா? முதன்முதலில் பொய் சொன்ன பிசாசாகிய சாத்தானே என பைபிள் கூறுகிறது. முதல் பொய்யைச் சொல்வதற்கு முன் தன்னுடைய அடையாளத்தை அவன் மறைத்தான். (ஆதியாகமம் 3:1-5; வெளிப்படுத்துதல் 12:9, 10) பொய்யர்களால் வஞ்சிக்கப்படாதிருக்க, தாவீது ராஜாவுடைய உதாரணத்தை நீங்கள் பின்பற்றலாம். அவர் இவ்வாறு எழுதினார்: “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் [அதாவது, தங்கள் சுயரூபத்தை மறைப்பவர்களிடத்தில்] நான் சேருவதில்லை.”​—⁠சங்கீதம் 26:4.

ஆரம்பத்தில் பார்த்த விதமாக, சில சாட் ரூம்கள் பிரயோஜனமானவையாக இருக்கலாம். ஆனால், யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பும் இளைஞர்கள் இந்த நவீன பேச்சுத்தொடர்பு முறையைப் பயன்படுத்தும்போது பன்மடங்கு ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஒருவேளை நீங்கள் ஸ்கூல் புராஜக்ட் விஷயமாக சாட் ரூமைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் உங்கள் பெற்றோரை அல்லது முதிர்ச்சி வாய்ந்த ஒரு பெரியவரை உங்களுடன் இருக்கச் சொல்லுங்கள். சாட் ரூம்களில் ‘நுழைவதை’ குறித்து மிகவும் ஜாக்கிரதையாக இருப்பதற்கு இன்னும் இரண்டு காரணங்களை அடுத்த இதழில் வெளிவரும் கட்டுரை எடுத்துரைக்கும். அதோடு, சாட் ரூம்களைப் பயன்படுத்தும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தாலும்கூட, சில பிரச்சினைகள் எழும்போது அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதைப் பற்றியும் அது கலந்தாலோசிக்கும். (g05 9/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகம், திருமணத்திற்கு முன் பாலுறவு, தற்புணர்ச்சிப் பழக்கம் போன்ற விஷயங்களுக்கு நம்பத்தகுந்த மற்றும் பைபிள் சார்ந்த அறிவுரையைத் தருகிறது.

c குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் ‘அடல்ட்’ சாட் ரூம்களைப் பயன்படுத்த முடியும் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், அதில் வழக்கமாக ஆபாச காரியங்கள்தான் பேசப்படுகின்றன, பார்க்கப்படுகின்றன. ஆனாலும், ஒன்பது வயது பொடிசுகள்கூட தங்களுடைய வயதைக் கூட்டிச்சொல்லி அப்படிப்பட்ட சாட் ரூம்களில் பேசுகிறார்கள் என்பதைச் சுற்றாய்வுகள் காட்டுகின்றன.

d நீங்கள் சாட் செய்துகொண்டிருக்கும் நபர்களைப் பார்க்க முடியாது என்பதால், எதிர்பாலார் என்று நீங்கள் நினைத்துப் பழகும் ஒருவர், உண்மையில் உங்களைப் போலவே ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம்.

e ஆன்-லைனில் சாட் செய்பவர்கள் தங்கள் பெயரையோ, விலாசத்தையோ, தொலைபேசி எண்ணையோ முன்பின் தெரியாதவர்களிடம் கொடுக்கவே கூடாது என இன்டர்நெட் பாதுகாப்பு​—⁠பெற்றோர்களுக்கு வழிகாட்டி என்ற ஆங்கிலப் பிரசுரம் ஆலோசனை தருகிறது.

[பக்கம் 14, 15-ன் படம்]

ஆன்-லைனில் பேசுவது ஆபத்தானதாக இருக்கலாம்