Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நூறு கோடி மக்களுக்கு உணவளிக்க முயற்சித்தல்

நூறு கோடி மக்களுக்கு உணவளிக்க முயற்சித்தல்

நூறு கோடி மக்களுக்கு உணவளிக்க முயற்சித்தல்

ஒவ்வொரு நாளும் 100 கோடி மக்களுக்கு அரை வயிறு கஞ்சிதான் கிடைக்கிறது. இந்தக் கொடூரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சங்கம் விரும்புகிறது.

“தலைவிரித்தாடும் வறுமையை ஒழிப்பதே உங்களுடைய முதல் லட்சியம் என்று சொல்லியிருக்கிறீர்கள்” என ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் குறிப்பிட்டார். யாரிடம்? உலகிலேயே மிகப் பெரிய பதவிகளிலிருந்த ஆண்களிடமும் பெண்களிடமும். இவர்கள் செப்டம்பர் 8, 2000-⁠ல் நடைபெற்ற ஐ.நா. மிலெனியம் உச்சி மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள். உலகில் ஏழைகள் எதிர்ப்படும் கஷ்டங்களைக் குறித்து இவர்களில் அநேகர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தார்கள். “தலைவிரித்தாடும் வறுமை மனிதவர்க்கத்திற்கே அவமானம்” என பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி சொன்னார். கிரேட் பிரிட்டனின் பிரதமர் இன்னும் ஒருபடி மேலே சென்று, இவ்வாறு சொன்னார்: “வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்காவிற்குச் சிறிதும் உதவாததால் அது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மனித நாகரீகத்திற்கே இது அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.”

பசியில் வாடும் மக்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் உதவ மறுத்ததால் அவமானத்தைத் தேடிக்கொண்டன என்று அந்த இரண்டு தலைவர்களும் தெள்ளத் தெளிவாகச் சொன்னார்கள். அந்த மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள மக்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்த தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்தார்கள். அதற்கு ஆதாரமாக, எட்டுப் பகுதிகளைக் கொண்ட ஓர் உறுதிமொழியை எடுத்தார்கள். அதன் ஒரு பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “தற்போது வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பதால் நற்குணங்களை இழந்துவிட்டிருக்கும் 100 கோடிக்கும் அதிகமான சக மனிதர்களை​—⁠ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரை​—⁠காப்பாற்ற எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். . . . அதுமட்டுமல்ல, ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் ஆட்களின் எண்ணிக்கையையும் பசியில் தவிக்கும் மக்களின் எண்ணிக்கையையும் பாதிக்குப்பாதி குறைப்போம். 2015-⁠ம் ஆண்டிற்குள் இந்த லட்சியத்தை அடைவோம்.”

இந்த உயரிய லட்சியத்தை அடைய செப்டம்பர் 2000-லிருந்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?

சொல்லைவிட செயலுக்கே அதிக வலிமை

ஐ.நா. மிலெனிய பிரகடனத்தின் லட்சியங்களை அடைவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை உலக பொருளாதார அமைப்பின் ஒரு துறை (Global Governance Initiative) 2003-⁠ல் மேற்பார்வையிடத் தொடங்கியது. “மிக முக்கியமான அந்த லட்சியங்களை அடைய உலக நாடுகள் கொஞ்சம்கூட முயற்சி எடுப்பதே இல்லை” என ஜனவரி 15, 2004-⁠ல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை சொல்கிறது. மேலும், பசியின் கொடுமையைக் குறித்து அந்த அறிக்கை குறிப்பிடுவதாவது: “உலகத்தில் உணவே இல்லையென சொல்ல முடியாது; உண்மையில் அனைவருக்கும் போதுமான உணவையும் ஊட்டச்சத்தையும் அளிக்க முடியும். ஆனால் அதை வாங்குவதற்கு ஏழைகளிடம் பணம்தான் இல்லை.”

பொதுவாக, வறுமையைப் பற்றி அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “படுமோசமான இந்நிலைக்கு முக்கியக் காரணம் அரசாங்கங்களே​—⁠வசதிபடைத்தவையும் சரி வசதியற்றவையும் சரி. ஆனால், பணக்காரர்கள் உருவாக்கியுள்ள உலக பொருளாதார அமைப்புகளால் ஏழைகளுக்கு எந்தப் பிரயோஜனமும் இருப்பதில்லை. வசதிபடைத்த நாடுகள் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கின்றன. அந்தப் பொருளாதார அமைப்பை மாற்றுவதிலோ ஏழைகளின் படிப்படியான முன்னேற்றத்திற்கு உதவி அளிப்பதிலோ அவை அக்கறை காட்டுவதே கிடையாது.” அரசாங்கத் தலைவர்கள்மீது இத்தனை குறைகள் இருக்கிறபோதிலும், அவர்கள் வெறுமனே வாதாடிக்கொண்டுதான் இருக்கிறார்களே தவிர, ஒன்றையும் சாதிப்பதில்லை. அரசாங்கங்கள் அதனதனுடைய நன்மைக்காகவே தொடர்ந்து செயல்படுகின்றன. ஆனால் ஏழைகளின் நிலையில் மட்டும் எந்த மாற்றமும் கிடையாது. அதே பட்டினியும் பசியும்தான்.

“உயர்ந்த லட்சியத்தை அடைய செயல்படுதல்” என்ற தலைப்பில் உலக பொருளாதாரக் கருத்தரங்கில் வழங்கப்பட்ட ஓர் ஆங்கில ஏடு இவ்வாறு எச்சரிக்கிறது: “சர்வதேச வியாபாரக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும், தேசிய கொள்கைகள் உணவுப் பற்றாக்குறையை தீர்க்க அதீத கவனம் செலுத்த வேண்டும், பயனளிக்கும் முயற்சிகள் இன்னுமதிகமாக எடுக்கப்பட வேண்டும்; இப்படியெல்லாம் செய்யாவிட்டால் உலகில் பெரும்பான்மையினர் பசியால் தவிதவிப்பார்கள்.” அப்படியென்றால், நல்ல கொள்கைகளை ஏற்படுத்தி “பயனளிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டியது” யார்? உலக மக்களின் வாழ்க்கை முறையை முன்னேற்றுவிக்க 2000-⁠ல் தீர்மானமெடுத்த அந்த அரசாங்கத் தலைவர்களே அதைச் செய்ய வேண்டும்.

ஒருமுறை வாக்கு தவறுவது ஏமாற்றத்தில் விளைவடையும்; பலமுறை வாக்கு தவறுவது அவநம்பிக்கையில் விளைவடையும். ஏழைகளின் நிலையை மேம்படுத்துவதாகச் சொல்லிவிட்டு அதை நிறைவேற்றாமல் போயிருப்பதால் உலக அரசாங்கங்கள்மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வறுமையிலிருக்கும் கரீபியன் நாட்டில் ஐந்து பிள்ளைகளையுடைய ஒரு தாய் தன்னுடைய குடும்பத்திற்கு ஒரேவொரு வேளைதான் உணவளிக்க முடிகிறது. அவர் சொல்கிறார்: “என் கவலையெல்லாம் இன்றைக்கு என்னுடைய பிள்ளைகளுக்குச் சாப்பாடுபோட முடியுமா என்பதுதான். யார் பதவிக்கு வந்தால் எனக்கென்ன? இதுவரை பதவியிலிருந்த யாரும் எங்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லையே.”

பைபிள் எழுத்தாளரான எரேமியா சொன்னதாவது: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) மனித அரசாங்கங்கள் ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமற்போயிருப்பது, பைபிளின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபித்திருக்கிறது.

ஆனால், மனிதர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க ஓர் ஆட்சியாளர் இருக்கவே இருக்கிறார். அவற்றைத் தீர்ப்பதற்கான விருப்பமும் சக்தியும் அவருக்கு இருக்கிறது. அவர் யார் என்றும் பைபிள் நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவர் ஆட்சிக்கு வந்த பிறகு யாரும் பசியில் தவிக்க மாட்டார்கள்.

நம்பிக்கைக்கு ஆதாரம்

“எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது: ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.” (சங்கீதம் 145:15) மனிதனுக்கு உணவளிப்பதில் அக்கறையாய் இருக்கும் இவர் யார்? நம்முடைய சிருஷ்டிகரான யெகோவா தேவன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வறுமையிலும் மற்ற பிரச்சினைகளிலும் மனிதர்கள் கஷ்டப்பட்டிருந்தாலும், யெகோவா தேவன் எப்போதுமே அவர்கள்மீது அக்கறையுடையவராக இருந்திருக்கிறார். மனித அரசாங்கங்களின் தோல்விகளை அவர் கவனித்திருக்கிறார். அவற்றிற்குப் பதிலாக வெகு சீக்கிரத்தில் தம்முடைய அரசாங்கத்தைக் கொண்டுவரப்போவதாக பைபிளில் சொல்லியிருக்கிறார்; இதை நிச்சயம் நம்பலாம்.

“நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன்” என்று யெகோவா சொல்கிறார். (சங்கீதம் 2:6) இப்பிரபஞ்சத்தின் மிகப் பெரிய அதிகாரி சொன்ன இந்த வார்த்தைகள் நம் நம்பிக்கைக்கு உரம் சேர்க்கின்றன. மனித அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்து, வறுமையில் வாடும் மக்களுக்கு என்றுமில்லாத அளவுக்கு நன்மைகளை வாரிவழங்குவார்.

பசியால் வாடும் அனைவருக்கும் இந்த ராஜாவின் மூலம் யெகோவா உணவளிப்பார். “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்” என்று ஏசாயா 25:6 சொல்கிறது. இவ்வுலகில் எந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தாலும்சரி, கடவுளுடைய ராஜ்யத்தில் இயேசுவுடைய அரசாட்சியில் சத்துள்ள உணவை அபரிமிதமாகப் பெறுவார்கள். பைபிள் யெகோவாவைப் பற்றி இவ்வாறு சொல்கிறது: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.”​—⁠சங்கீதம் 145:16. (g05 7/22)

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

“வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்காவிற்குச் சிறிதும் உதவாததால் அது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மனித நாகரீகத்திற்கே இது அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.”​—⁠பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேர்

[பக்கம் 20-ன் படம்]

எத்தியோப்பியா: இந்த நாட்டில் சுமார் 1.3 கோடி மக்கள் உணவுக்காக மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள். அதில் ஒரு பிள்ளையின் படம்

[பக்கம் 20-ன் படம்]

இந்தியா: இந்தப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சத்துணவைப் பெறுகிறார்கள்

[பக்கம் 20-ன் படங்களுக்கான நன்றி]

மேலே: © Sven Torfinn/Panos Pictures; கீழே: © Sean Sprague/Panos Pictures