Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வலிமையான சாட்சி கொடுக்கும் இளைஞர்கள்

வலிமையான சாட்சி கொடுக்கும் இளைஞர்கள்

வலிமையான சாட்சி கொடுக்கும் இளைஞர்கள்

யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருக்கும் அநேக இளைஞர்கள், பள்ளியிலும் சரி கிறிஸ்தவ ஊழியத்திலும் சரி, தங்களுடைய விசுவாசத்தைக் குறித்து தைரியமாகச் சாட்சி கொடுக்கிறார்கள். அதில் மாபெரும் வெற்றியும் அடைகிறார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள். a

கிறிஸ்டீனா இவ்வாறு சொல்கிறாள்: “நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய டீச்சர், ஒவ்வொருவருக்கும் ஒரு டைரியைத் தந்து அதில் நாங்கள் செய்யும் அன்றாடக் காரியங்களைப் பற்றி எழுதச் சொன்னார். அந்த ஒவ்வொன்றையும் வாசித்துவிட்டு, தன்னுடைய கருத்தை எழுதித் தரப்போவதாகவும் சொன்னார். எனவே, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கவிருந்த பேச்சைப் பற்றி எழுத முடிவு செய்தேன். நான் எழுதியது டீச்சருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் என்னுடைய பேச்சை வந்து கேட்குமாறு ராஜ்ய மன்றத்திற்கு அவரை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று அவர் மட்டுமல்ல, என்னுடைய ஒன்றாம் வகுப்பு டீச்சரும் வந்தார். அதன்பிறகு, என்னுடைய பேச்சு எவ்வளவு நன்றாக இருந்ததென்று என் வகுப்பிலிருந்த எல்லாரிடமும் சொன்னார். எனக்கு அதிக சந்தோஷமாக இருந்தது. சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டில் இந்த அனுபவத்தை நான் சொன்னபோதும் என்னுடைய டீச்சர் வந்திருந்தார். பிற்பாடு ஒருசமயம், பயனியர் ஊழியம் செய்த என் சிநேகிதியும் நானும் அந்த டீச்சரை சந்தித்து நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைக் கொடுத்தோம். அவர் ஒரு மாவட்ட மாநாட்டிற்கும்கூட வந்திருந்தார்!”

ஆறு வயதிலேயே சிட்னி என்பவள் பைபிள் சத்தியங்களைக் குறித்து தன் வகுப்பிலுள்ள பிள்ளைகளிடம் தைரியமாகச் சாட்சி கொடுப்பதில் திறம்பட்டவளாக இருந்தாள். இறந்தவர்களுடைய நிலையைப் பற்றியும் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும்கூட பேசுவாள். “அவள் அதிக ஆர்வமும் தைரியமுமிக்க ஒரு குட்டி ஊழியக்காரி” என்று சிட்னியின் தாய் சொல்கிறார். பள்ளியின் முதல் வருட முடிவில் சிட்னி கவலையாக இருந்தாள். “என்னுடைய வகுப்பு மாணவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது, அவர்கள் எப்படித்தான் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளப் போகிறார்களோ?” எனச் சொல்லி வருத்தப்பட்டாள். பிறகு சிட்னிக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. அவளுடைய பள்ளியின் கடைசி நாளன்று ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பரிசை வண்ணக் காகிதத்தில் சுற்றித் தந்தாள். அந்தப் பரிசு, என்னுடைய பைபிள் கதை புத்தகம். இப்படி மொத்தம் 26 புத்தகங்களை அளித்தாள். அந்தப் பரிசை, வீட்டிற்குச் சென்று தங்கள் பெற்றோருடன் சேர்ந்து திறந்து பார்க்குமாறு சொன்னாள். அந்தப் புத்தகம் பிடித்திருந்ததா என்று மாணவர்களுக்கு ஃபோன் செய்தும் கேட்டாள். ஒரு மாணவி தன் தாயுடன் சேர்ந்து அந்தப் புத்தகத்திலுள்ள கதைகளை ஒவ்வொரு இரவும் படிப்பதாகச் சொன்னாள். சிட்னி தன்னுடைய பள்ளியை ஊழியம் செய்வதற்கான தன் பிராந்தியமாகக் கருதினாள்.

எலனுக்கு 15 வயதிருக்கும்போது, அவள் தன்னுடைய வரலாற்று ஆசிரியருக்கு நிறைய விழித்தெழு! பத்திரிகைகளைத் தந்தாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “அவருக்கு இந்தப் பத்திரிகை என்றாலே உயிர். அதை அவர் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வாசித்து வருகிறார். சமீபத்தில், என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற புத்தகத்தை அவருக்குத் தந்தேன். அவருடைய இரண்டு மகள்களும் அதை ஆர்வத்தோடு வாசிப்பதாகச் சொன்னார். எனவே, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தையும் அவருக்குத் தந்தேன். பிறகு, அவர் எனக்கு ஒரு ‘தேங்ஸ் கார்டு’ தந்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தார்: ‘இந்தப் புத்தகங்களுக்கு ரொம்ப நன்றி. நானும் என்னுடைய இரண்டு மகள்களும் அதைப் படிப்பதிலேயே மூழ்கியிருக்கிறோம். சின்ன வயசிலேயே, நீ இவ்வளவு மன உறுதியுடனும் ஒரே சிந்தையுடனும் இருப்பதைப் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீ பெற்றிருக்கும் தலைசிறந்த வரப்பிரசாதம் உன்னுடைய விசுவாசம்தான். ஒரு டீச்சராக நான் உனக்குச் சொல்லிக் கொடுக்க முடிந்ததைவிட நீ எனக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுத்துவிட்டாய்!’ பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்ல நாம் முயற்சி எடுக்கும்போது அதை அவர்கள் எந்தளவிற்குப் போற்றுகிறார்கள் என்பதை இந்த அனுபவம் எனக்குக் காண்பித்தது.”

டேனியேல் என்பவன் முதல் பைபிள் படிப்பை நடத்தியபோது அவனுக்கு ஆறு வயது. அவன் இவ்வாறு சொல்கிறான்: “என் அம்மாவுடன் பைபிள் படிப்புகளுக்கு போயிருக்கிறேன். ஆனால் நானே ஒரு பைபிள் படிப்பு எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன்.” ஆகவே, ராட்கிலிஃப் என்ற வயதான பெண்மணியைச் சந்திக்க அவன் தீர்மானித்தான். அவரிடம் ஏற்கெனவே பைபிள் பிரசுரங்களை அவன் கொடுத்திருந்தான். அப்படிக் கொடுத்தபோது அவரிடம் இவ்வாறு சொன்னான்: “இதுதான் எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம்: என்னுடைய பைபிள் கதை புத்தகம். ஒவ்வொரு வாரமும் உங்களைச் சந்தித்து, இதிலிருந்து சில கதைகளை வாசித்துக் காட்டட்டுமா?” ராட்கிலிஃப் அதற்கு ஒத்துக்கொண்டார். “அன்றைக்கே மறுபடியும் அவரைச் சந்தித்து பைபிள் படிப்பை ஆரம்பித்தோம்” என்று சொல்கிறார் டேனியேலின் தாய் லாரா. “டேனியேலும் ராட்கிலிஃப்பும் ஒருவர் மாறி ஒருவர் பாராவை வாசிப்பார்கள். பிறகு கதையின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் வசனங்களில் சிலவற்றை வாசிக்குமாறு டேனியேல் அவரிடம் சொல்வான். டேனியேலுடன் சேர்ந்து நானும் கூடப்போனாலும் ராட்கிலிஃப்புக்கு டேனியேல் சொல்லிக்கொடுப்பதுதான் பிடித்தது!” அதன்பின், டேனியேலும் ராட்கிலிஃப்பும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்கள். அதற்குள்ளேயே டேனியேலின் தங்கை நேட்டலியும் வாசிக்க கற்றுக்கொண்டதால் அவளும் அவர்களோடு கலந்துகொண்டாள். ராட்கிலிஃப் ஏகப்பட்ட கேள்விகள் கேட்பார். அதில் சில கேள்விகளுக்குப் பதிலளிப்பது ரொம்ப கடினமாக இருக்கும். ஆனால் டேனியேலும் நேட்டலியும், கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் என்ற சிறுபுத்தகத்தையும் பைபிளின் பின்னுள்ள கன்கார்டன்ஸையும் பயன்படுத்தி பைபிளிலிருந்து பதில்களைத் தருவார்கள். பிறந்ததிலிருந்தே கத்தோலிக்கராக இருந்த ராட்கிலிஃப் தான் கற்றுக்கொண்ட காரியங்களைக் குறித்து பூரித்துப்போனார். ஒருமுறை படிப்பின் முடிவில் இவ்வாறு சொன்னார்: “பல வருடங்களுக்கு முன்பே நான் பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!” வருத்தகரமாக, சமீபத்தில் ராட்கிலிஃப் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 91. ஆனால், அவர் பைபிள் படித்ததால் அதிலுள்ள அருமையான சத்தியங்களைத் தெரிந்துகொண்டார். பரதீஸ் பூமியில் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றியும் அறிந்துகொண்டார். டேனியேலுக்கு இப்போது பத்து வயதாகிறது. அவன் இரண்டு பைபிள் படிப்புகளை நடத்துகிறான். நேட்டலிக்கு எட்டு வயதாகிறது. அதே வயது சிறுமி ஒருத்திக்கு அவள் பைபிள் படிப்பு நடத்துகிறாள்.

கிறிஸ்டீனா, சிட்னி, எலன், டேனியேல், நேட்டலி போன்ற இளம் பிள்ளைகள் தங்களுடைய கிறிஸ்தவப் பெற்றோர்களைச் சந்தோஷப்படுத்துகிறார்கள். மிக முக்கியமாக அவர்கள் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறார்கள். இந்த இளம் பிள்ளைகள் காட்டும் அன்பை யெகோவா மறக்கவே மாட்டார்.​—நீதிமொழிகள் 27:11; எபிரெயர் 6:⁠10. (g05 9/8)

[அடிக்குறிப்பு]

a இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாப் பிரசுரங்களும் யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டவை.

[பக்கம் 18-ன் படங்கள்]

கிறிஸ்டீனாவும் (மேலே) சிட்னியும்

[பக்கம் 19-ன் படம்]

டேனியேலும் நேட்டலியும்

[பக்கம் 19-ன் படம்]

எலன்