Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வீடில்லாத் திண்டாட்டம் ஏன்?

வீடில்லாத் திண்டாட்டம் ஏன்?

வீடில்லாத் திண்டாட்டம் ஏன்?

ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய நகரின் எல்லைப்பகுதியில் வாழ்கிறாள் 36 வயது ஜோஸஃபின். அவளுக்கு 6 முதல் 11 வயதுகளில் மூன்று பையன்கள். பிழைப்புக்காக பிளாஸ்டிக் பாட்டில்களையும் டப்பாக்களையும் சேகரித்து, பக்கத்திலுள்ள மறுசுழற்சி தொழிற்சாலைக்கு விற்கிறாள். இப்படி இடுப்பொடிய வேலைபார்த்தும் நாளொன்றுக்கு 90 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறாள். அந்த நகரில் இந்தப் பணத்தை வைத்து குடும்பத்திற்குச் சாப்பாடு போடவோ பிள்ளைகளைப் படிக்க வைக்கவோ முடியாது.

சாயங்காலம் வீடு திரும்புகிறாள்​—⁠அதை வீடு என்றே சொல்ல முடியாது, என்றாலும் அவளைப் பொறுத்தவரை அதுதான் வீடு. அதன் சுவர்கள் வெயிலில் காயவைத்த செங்கல்களாலும் களிமண்ணாலும் சிறுசிறு மரக் கிளைகளாலும் ஆனவை. கூரையோ, துருப்பிடித்த இரும்பு ஷீட்டுகளாலும் தகர ஷீட்டுகளாலும் பிளாஸ்டிக் ஷீட்டுகளாலும் ஆனது. காற்று பலமாக அடித்தால் விழாதிருப்பதற்காக, அதன்மீது கற்கள், மரத்துண்டுகள், பழைய உலோகச் சட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. கிழிந்த சாக்குப்பைகள்தான் அவளுடைய வீட்டு “ஜன்னல்களும்” “கதவுகளும்.” இதெல்லாம் காற்றுக்கோ மழைக்கோ தாங்காது, திருடர்களும் சுலபமாக நுழைந்துவிடலாம்.

சொல்லப்போனால், இந்தச் சிறிய வீடும்கூட அவளுடையதல்ல. எங்கே துரத்திவிடப் போகிறார்களோ என்ற பயத்தில்தான் ஜோஸஃபினும் பிள்ளைகளும் நித்தம்நித்தம் வாழ்கிறார்கள். அருகிலுள்ள சாலை விஸ்தரிக்கப்பட்டால், அவர்களுடைய அரைகுறை வீடும்கூட இல்லாமல் போய்விடும். உலகெங்கும் பல நாடுகளில் இதுபோன்ற சூழல் இருப்பது வருத்தகரமான விஷயம்.

உயிருக்கு ஆபத்தான வீடுகள்

சர்வதேச வீட்டுவசதி உதவித் திட்டத்தின் முதுநிலை அலுவலர் ராபன் ஷெல், “படுமோசமான வீடுகளில் வாழ்பவர்களின் நிலையைப்” பற்றி இவ்வாறு கூறுகிறார்: “பிள்ளைகள் தங்கள் வீட்டை நினைத்து அவமானப்படுகிறார்கள், . . . வீட்டிலுள்ள எல்லோரும் எப்போதுமே வியாதிப்படுகிறார்கள், அதுமட்டுமல்ல, . . . அரசாங்க அதிகாரியோ நிலத்தின் சொந்தக்காரரோ வந்து தங்களுடைய வீட்டை எப்போது உடைத்து நொறுக்கப் போகிறாரோ என்று அவர்களுக்கே தெரியாது.”

அத்தகைய சூழ்நிலையில் வாழ்வதால், பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பற்றிய கவலை பெற்றோரை பீடித்துக்கொள்கிறது. சூழ்நிலையைச் சரிப்படுத்த அவர்களால் முடிவதே இல்லை; அதற்குப் பதிலாக, உணவு, ஓய்வு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பிள்ளைகளுக்குச் செய்து கொடுப்பதிலேயே அவர்களுடைய பெரும்பாலான நேரமும் சக்தியும் போய்விடுகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு, ஏழைகள் முயற்சி செய்தால் தங்களுடைய சூழ்நிலையை மாற்றிக்கொள்ள முடியும் எனச் சொல்வது எளிது. ஆனால், அப்படிச் சொல்வது மட்டுமே பரிகாரம் ஆகிவிடாது. வீடில்லாத் திண்டாட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் உட்பட்டுள்ளன. அவற்றை எந்த மனிதனாலும் கட்டுப்படுத்த முடியாது. ஜனத்தொகை பெருக்கம், நகரமயமாக்குதல் அதிகரித்து வருதல், இயற்கைப் பேரழிவுகள், அரசியல் கொந்தளிப்புகள், நீங்காத வறுமை ஆகியவையே இதற்கு ஆணி வேர்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறுக மூடிய கையின் ஐந்து விரல்களைப்போல, இவை உலகிலுள்ள ஏழைகள் பலரை இறுகப்பிடித்து சக்கையாகப் பிழிந்துவிடுகின்றன.

ஜனத்தொகை பிரச்சினை

வருடா வருடம் இந்த உலகம், ஆறு கோடி எண்பது லட்சம் முதல் எட்டு கோடி வரையான மக்களுக்குக் கூடுதலாக உறைவிடம் அளிக்க வேண்டியிருக்கிறது என மதிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஜனத்தொகை செயற்பாட்டு நிதி அமைப்பின் கணக்குப்படி, 2001-⁠ல் உலக ஜனத்தொகை 610 கோடியைக் கடந்துவிட்டது, 2050-⁠க்குள்ளாக 790 முதல் 1,090 கோடிவரை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, அடுத்த இருபது வருடங்களில் எகிறவிருக்கும் அந்த அதிகரிப்பில் 98 சதவீதம் வளரும் நாடுகளில்தான் ஏற்படப்போவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது! வீட்டுவசதி அளிப்பதில் இமாலய பிரச்சினை இருப்பதையே இந்த மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனாலும், இந்தப் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கும் உண்மையைக் கவனியுங்கள்: பெரும்பாலான நாடுகளில், ஏற்கெனவே ஜனநெருக்கத்தால் திண்டாடிக்கொண்டிருக்கிற நகரங்கள்தான் இன்னமும் படுவேகமாக வளர்ந்துவருகின்றன.

நகரமயமாக்குதல்​—⁠ஒரு தொடர்கதை

நியு யார்க், லண்டன், டோக்கியோ போன்ற முக்கிய நகரங்கள், பெரும்பாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானவையாகத் திகழ்கின்றன. அதன் காரணமாக, வருடா வருடம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மக்கள் பணங்கொழிக்கும் நகர்ப்புறங்களுக்குப் படையெடுக்கிறார்கள்; முக்கியமாக படிப்புக்காகவும் வேலைக்காகவும் அவ்விடங்களுக்குச் செல்கிறார்கள்.

உதாரணமாக, சீனாவில் பொருளாதாரம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, அடுத்த சில பத்தாண்டுகளில், அதன் முக்கிய நகரங்களில் மட்டுமே 20 கோடிக்கும் அதிகமான அப்பார்ட்மென்டுகள் தேவைப்படும் என ஓர் அறிக்கை மதிப்பிடுகிறது. இது ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும் தற்போது இருக்கிற அப்பார்ட்மென்டுகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட இருமடங்காகும். எத்தகைய வீட்டு வசதி திட்டத்தால்தான் இத்தேவையை ஈடுகட்ட முடியும்?

உலக வங்கியின் அறிக்கைபடி, “ஒவ்வொரு வருடமும், சுமார் 1.2 முதல் 1.5 கோடி வரையான புதிய குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இவை வளரும் நாடுகளிலுள்ள நகரங்களின் எண்ணிக்கையைக் கூட்டுகின்றன.” தங்களுடைய வருவாய்க்குத் தகுந்த வீடுகள் இல்லாததால் நகர்ப்புறத்தைச் சேர்ந்த இந்த ஏழைகள் தங்களுடைய தகுதிக்கு ஏற்ற இடங்களில், அதுவும் எவருமே விரும்பாத இடங்களில் புகலிடம் தேடும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

இயற்கைப் பேரழிவுகளும் அரசியல் கொந்தளிப்புகளும்

வெள்ளப் பெருக்கு, மண் சரிவு, நிலநடுக்கம் ஆகியவை அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதிகளில் குடியிருக்க வேண்டிய நிலைக்கு அநேகர் தள்ளப்பட்டிருக்கிறார்கள், காரணம் வறுமை. உதாரணமாக, வெனிசுவேலா நாட்டு காராக்ஸ் நகரில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் “செங்குத்தான சரிவுகளில், எப்போதுமே நிலச்சரிவு ஏற்படுகிற புறம்போக்கு பகுதிகளில் வாழ்வதாக” மதிப்பிடப்படுகிறது. 1984-⁠ல், இந்தியாவிலுள்ள போபாலில் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானதும், அநேகர் காயமுற்றதும்கூட உங்களுக்கு ஞாபகமிருக்கும். இந்தளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன? அருகிலிருந்த குடிசைப் பகுதி ஒன்று, அத்தொழிற்சாலையின் காம்பவுண்டை தொடும் அளவுக்கு விரிவடைந்திருந்ததுதான்; அதற்கும் அந்தக் காம்பவுண்டுக்கும் இடையே வெறும் ஐந்தே மீட்டர் இடைவெளியே இருந்தது.

உள்நாட்டுப் போர்கள் போன்ற அரசியல் கொந்தளிப்புகளும்கூட வீடில்லாப் பிரச்சினைகளுக்கு பெரிதும் காரணமாயிருக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் நடந்த உள்நாட்டு சண்டையின்போது, 1984-⁠க்கும் 1999-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் 15 லட்சம் வரையான மக்கள், முக்கியமாக கிராமவாசிகள், தங்களுடைய வீடுகளை விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியதாயிற்று என மனித உரிமைகளின் ஒரு குழு 2002-⁠ல் வெளியிட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டது. அவர்களில் பலர் எந்த இடத்திலானாலும் போய்க் குடியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்; பெரும்பாலும் தங்களுடைய சொந்தபந்தங்களுடனும் அக்கம்பக்கத்தாருடனும் சேர்ந்து ஏற்கெனவே நிரம்பிவழிந்த தற்காலிகமான இடங்களிலும், வாடகை வீடுகளிலும், பண்ணை வீடுகளிலும், கட்டுமான இடங்களிலும் குடியிருந்தார்கள். சில குடும்பங்கள் குதிரை லாயத்தில் குடியிருந்ததாகச் சொல்லப்படுகிறது; ஓர் அறையில் 13 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தார்கள், முற்றத்தில் இருந்த பொதுகழிவறையையும், ஒரே தண்ணீர் குழாயையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த அகதிகளில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “மிருகங்களுக்காக கட்டின இடத்தில் நாங்கள் குடியிருக்கிறோம். இந்த இடத்தைவிட்டுப் போனாலே எங்களுக்குப் போதும்.”

பொருளாதார மந்தம்

முடிவாக, வீட்டுவசதிக்கும் ஏழைகளின் பொருளாதார நிலைக்கும் சம்பந்தமிருப்பதை மறுக்கவே முடியாது. முன்னால் குறிப்பிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கைபடி, வளரும் நாடுகளில் 1988-⁠ல் மட்டுமே 33 கோடி நகரவாசிகள் ஏழ்மையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது; அடுத்து வரும் ஆண்டுகளின்போதும் அந்தச் சூழ்நிலையில் அந்தளவு மாற்றம் ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளையும்கூட பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் ஏழ்மையில் இருக்கும்போது, நல்ல ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவோ, கட்டவோ அவர்களால் எப்படி முடியும்?

அதிகமான வட்டி, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக அநேக குடும்பங்களால் வங்கி கடனை அடைக்க முடிவதில்லை; பொதுச் செலவினங்களும் அதிகரித்து வருவதன் காரணமாக குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர முடிவதில்லை. சில நாடுகளில் வேலையில்லாதவர்களின் விகிதம் 20 சதவீதம்வரை உயர்ந்துள்ளதால், அத்தியாவசியமானவற்றைப் பெற்றுக்கொள்வது பெரும்பாடாக உள்ளது.

இவையும் இன்னும் பல காரணங்களும், பூமியின் எல்லாப் பாகங்களிலும் உள்ள கோடிக்கணக்கானோரைப் படுமோசமான இடங்களில் குடியிருக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. உபயோகிக்காமல் கிடக்கும் பஸ்களிலும், சரக்குப் பெட்டிகளிலும், கார்ட்போர்ட் பெட்டிகளிலும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மாடிப்படிகளுக்குக் கீழேயும், பிளாஸ்டிக் ஷீட்டுகளாலும் உடைந்துபோன மரத்துண்டுகளாலும் ஆன கூரைகளின் கீழும் வாழ்கிறார்கள். பாழடைந்துபோன தொழிற்சாலைகளில்கூட சிலர் குடியிருக்கிறார்கள்.

என்ன செய்யப்பட்டு வருகிறது?

இத்திண்டாட்டத்தைச் சமாளிப்பதற்கு, அக்கறையுள்ள ஆட்கள் ஏற்கெனவே பெருமளவில் முயற்சி செய்துவருகிறார்கள்; சில அமைப்புகளும் அரசாங்கங்களும்கூட முயன்று வருகின்றன. ஜப்பானில், குறைந்த செலவில் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக அநேக ஏஜன்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1994-⁠ல் தென் ஆப்பிரிக்காவில் வீட்டுவசதி திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதன் பலனாக, நான்கு அறைகள் உடைய பத்து லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. கென்யாவில் ஒவ்வொரு வருடமும் நகர்ப்புறங்களில் 1,50,000 வீடுகளையும் கிராமப்புறங்களில் அதைவிட இரண்டு மடங்கு வீடுகளையும் கட்டிக்கொடுக்கும் பிரமாண்டமான வேலையில் இறங்குவதே மற்றொரு வீட்டுவசதி திட்டத்தின் ‘கனவு.’ மடகாஸ்கர் போன்ற பிற நாடுகளோ, குறைந்த செலவில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான முறைகளைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றன.

“நகரங்கள் எக்கச்சக்கமாக அதிகரித்து வருவதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கவும் சரிப்படுத்தவும்” வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்காட்டும் விதத்தில் UN-HABITAT போன்ற பன்னாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. லாபம் கருதாத நிறுவனங்களும் அரசியல் சாராத அமைப்புகளும்கூட உதவிக்கரம் நீட்ட முயலுகின்றன. லாபம் கருதாத ஒரு நிறுவனம் பல நாடுகளைச் சேர்ந்த 1,50,000-⁠க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு, அவர்களுடைய படுமோசமான குடியிருப்பு சூழ்நிலையிலிருந்து மீளுவதற்கு உதவியிருக்கிறது. 2005-⁠ற்குள்ளாக எளிய, குறைந்த விலையுள்ள நல்ல வீடுகளைப் பெற்றுக்கொள்ள பத்து லட்சம் ஜனங்களுக்கு அது உதவியிருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.

இந்த அமைப்புகளில் பல, படுமோசமான சூழல்களில் வசிப்போருக்கு நடைமுறையான உதவியளிக்கும் தகவல்களை எளிதில் கிடைக்க வழிசெய்திருக்கின்றன; அத்தகவல்கள், சூழ்நிலையை மிகச் சிறந்த விதத்தில் சமாளிப்பதற்கும், அவற்றைச் சீரமைப்பதற்கும்கூட அவர்களுக்கு உதவுகின்றன. உங்களுக்கு உதவி தேவையென்றால், நிச்சயமாகவே இந்த ஏற்பாடுகளை நீங்களும்கூட முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு நீங்களே உதவி செய்துகொள்ளவும் முடியும்; அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய அநேக அடிப்படை காரியங்கள் உள்ளன.​—⁠பக்கம் 7-⁠ல் “உங்கள் வீடும் ஆரோக்கியமும்” என்ற பெட்டியைக் காண்க.

உங்களுடைய சூழ்நிலையைச் சரிப்படுத்த முடியுமா, முடியாதா என்பது ஒருபுறமிருக்க, எந்தவொரு மனிதனாகட்டும், மனித அமைப்பாகட்டும் இந்தத் திண்டாட்டத்திற்குக் காரணமான ஐந்து அம்சங்களின் இறுக்கமான பிடியிலிருந்து ஜனங்களை விடுவிக்கவே முடியாது. பொருளாதார வளர்ச்சிக்கும் மனிதாபிமான உதவிக்குமான தேவை தீவிரமடைந்து வருவதாலும், அது அவசரமானதாக இருப்பதாலும் சர்வதேச சமுதாயத்தினரால் அதைச் சமாளிப்பது வெகு கடினமாகி வருகிறது. ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் மோசமடைந்து வருகிற ஏழ்மையான சூழலில் லட்சோபலட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். நிரந்தரத் தீர்வுக்கு ஏதேனும் வழி உண்டா? (g05 9/22)

[பக்கம் 7-ன் பெட்டி]

உங்கள் வீடும் ஆரோக்கியமும்

உலக சுகாதார அமைப்பின்படி, நல்ல ஆரோக்கியத்திற்கு, பொதுவாக ஒரு வீட்டில் குறைந்தபட்சம் கீழ்க்கண்ட வசதிகள் இருக்க வேண்டும்:

◼ மழைநீர் உள்ளே வராதிருக்க நல்ல கூரை வேண்டும்

◼ மோசமான சீதோஷ்ண நிலையிலிருந்து பாதுகாக்கவும், மிருகங்கள் உள்ளே வராதிருக்கவும் நல்ல சுவர்களும் கதவுகளும் வேண்டும்

◼ பூச்சிகள், முக்கியமாக கொசுக்கள், உட்புகாதிருக்க ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் கம்பி வலை வேண்டும்

◼ வெயில் காலத்தில் சூரிய வெளிச்சம் நேரடியாகச் சுவரில் படாதிருக்க ஸன்ஷேடுகள் வேண்டும்

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

ஆப்பிரிக்க கிராமங்களில் பாரம்பரிய வீடுகள்

பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்க நிலப்பரப்பை பாரம்பரிய வீடுகள் அலங்கரித்தன. வித்தியாச வித்தியாசமான வடிவங்களில் சிறிய, பெரிய வீடுகள் அங்கிருந்தன. கென்யாவைச் சேர்ந்த கிக்கூயூ மற்றும் லூவோ சமுதாயத்தினர் வட்டமான சுவர்களையும் கூம்பு வடிவ கூரையையும் கொண்ட வீடுகளை விரும்பினர். கென்யாவையும் டான்ஜானியாவையும் சேர்ந்த மசாய் சமுதாயத்தினரும் மற்றவர்களும் கிட்டத்தட்ட செங்கோண வடிவமுடைய வீடுகளைப் பயன்படுத்தினர். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் சில வீடுகளின் புல்கூரைகள் தரையைத் தொட்டாற்போல் இருந்தன, தேன்கூடுபோல் காட்சி அளித்தன.

அப்படிப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு எளிதில் கிடைக்கிற பொருள்கள் பயன்படுத்தப்பட்டன, அதனால் வீடில்லாத் திண்டாட்டம் அவ்வளவாக இருக்கவில்லை. தண்ணீர் ஊற்றி குழைக்கப்பட்ட மண், வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. கூரை வேய்வதற்கு வேண்டிய மரம், புல், கோரைப்புல், மூங்கில் இலைகள் போன்றவை, அருகிலிருந்த காடுகளிலிருந்து எளிதில் கிடைத்தன. ஆகவே, ஒரு குடும்பம் வசதியானதாக இருந்தாலும் சரி வசதியற்றதாக இருந்தாலும் சரி, எல்லோருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருந்தது.

ஆனால், அப்படிப்பட்ட வீடுகளில் சில குறைபாடுகளும் இருந்தன. பெரும்பாலான கூரைகள் எரியக்கூடிய பொருள்களால் வேயப்பட்டிருந்ததால், தீப்பிடிக்கும் ஆபத்து அதிகம் இருந்தது. அதுமட்டுமல்ல, திருடர்கள் மண் சுவரில் துளைபோட்டு பொருள்களைச் சுலபமாகத் திருட முடிந்தது. அதனால்தான், ஆப்பிரிக்காவில் அந்தப் பாரம்பரிய வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, அவற்றிற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பொருள்களாலான வீடுகள் பெருமளவில் உருவெடுத்து வருகின்றன.

[படங்களுக்கான நன்றி]

தகவல் மூலம்: ஆப்பிரிக்க பாரம்பரிய கட்டடக்கலை (ஆங்கிலம்)

குடிசைகள்: Courtesy Bomas of Kenya Ltd - A Cultural, Conference, and Entertainment Center

[பக்கம் 5-ன் படம்]

ஐரோப்பா

[படத்திற்கான நன்றி]

© Tim Dirven/Panos Pictures

[பக்கம் 6-ன் படம்]

ஆப்பிரிக்கா

[பக்கம் 6-ன் படம்]

தென் அமெரிக்கா

[பக்கம் 7-ன் படம்]

தென் அமெரிக்கா

[பக்கம் 7-ன் படம்]

ஆசியா

[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]

© Teun Voeten/Panos Pictures; J.R. Ripper/BrazilPhotos

[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]

JORGE UZON/AFP/Getty Images; © Frits Meyst/Panos Pictures