Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சிரிப்பின் சக்தி

“வயிறு குலுங்க வெறும் அரை நிமிடத்திற்குச் சிரிப்பது, 45 நிமிடங்கள் முழு ஓய்வு பெறுவதற்குச் சமானம் என்பதாக விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.” ப்ஷீயாச்சூக்கா என்ற போலந்து வாராந்தர பத்திரிகை ஒன்று இதை அறிவிக்கிறது. “குபீரென்று வாய்விட்டுச் சிரிப்பது, மூன்று நிமிடத்திற்கு ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதற்குச் சமானமாகும்; பத்து முறை அன்புடன் புன்முறுவல் பூப்பதோ, துடுப்பு வலிப்பது போன்ற மெஷினில் பத்து நிமிடங்களுக்குக் கடுமையாய் உடற்பயிற்சி செய்வதற்குச் சமானம்” என்றும் அது கூறுகிறது. சிரிப்பதால் வரும் வேறுபல நன்மைகள்: நுரையீரலுக்குள் செல்லும் காற்றின் அளவு மும்மடங்கு அதிகரித்தல், அதோடு இரத்த ஓட்டம், செரிமானம், வளர்சிதை மாற்றம், மூளை செயல்பாடு, நச்சுப்பொருள் வெளியேற்றம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் ஏற்படுதல் போன்றவை ஆகும். சந்தோஷமான மனநிலையோடு இருக்க வேண்டுமானால், காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக உங்களைப் பார்த்தே நீங்கள் புன்முறுவல் பூக்க வேண்டும், அதுமட்டுமல்ல, உங்கள் மணத்துணையையும் உங்கள் பிள்ளைகளையும் பார்த்து புன்முறுவல் பூக்க வேண்டும் என அந்தப் பத்திரிகை ஆலோசனை கூறுகிறது. “நகைச்சுவை உணர்வோடு உங்களை நீங்களே பார்க்கப் பழகுங்கள், கஷ்டமான சூழ்நிலைகளிலும் நல்லதையே பார்க்க முயலுங்கள்” என்று அது மேலுமாகக் கூறுகிறது. (g05 10/22)

மதியநேர வெளிச்சமும்​—⁠இரவுநேர அமைதியும்

சமீபத்தில், ஆரோக்கியமான 56 குழந்தைகளின் தூக்கப் பழக்கத்தின் பேரில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வைப் பற்றி ஜர்னல் ஆஃப் ஸ்லீப் ரிஸர்ச் என்ற பத்திரிகை குறிப்பிட்டது; அந்த ஆய்வின்படி, “கணிசமான நேரத்திற்கு மதியநேர வெளிச்சத்தில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் இரவு நேரங்களில் நன்றாகத் தூங்கின.” ஆனால், காலை வெளிச்சத்திலும் மாலை வெளிச்சத்திலும் வைக்கப்பட்ட குழந்தைகளின் தூக்கத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஈவான் ஹாரிஸன் என்பவர்தான் அந்த ஆய்வை நடத்தினார்; அவரும் ஒரு தாய்தான். பகல் வெளிச்சத்தில் அதிக மணிநேரம் இருந்த பெரியவர்களுக்கு இரவில் நன்றாகத் தூக்கம் வந்ததை முந்தைய ஆய்வு காண்பித்ததால், அவ்வாறு வைக்கப்படுகிற குழந்தைகளுக்கும் இரவில் நன்றாகத் தூக்கம் வருமா என்பதைக் கண்டுபிடிக்கவே அவர் அந்த ஆய்வை நடத்தத் தீர்மானித்தார். (g05 10/22)

வரிகளைக் கறந்துவிடுகிறார்கள்

ராய்ட்டர்ஸ் நியூஸ் சர்வீஸ் பின்வரும் ஓர் அறிக்கையை வெளியிட்டது: இந்தியாவில், ராஜமுந்திரி நகரவாசிகளை 5 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கியைக் கட்ட வைப்பதற்காக அதிகாரிகள் முதலில், அபராதத் தொகைகளையும் வட்டியையும் விலக்குவதாக அறிவித்தார்கள். அந்தத் திட்டம் தோல்வி அடையவே, அந்த அதிகாரிகள் 20 கோஷ்டிகளுக்குக் கூலிகொடுத்து, வரிசெலுத்தாதவர்களின் வீடுகளுக்கு முன் நின்று முரசடிக்கும்படி செய்தார்கள். முரசடிப்பவர்கள் “பணம் செலுத்தத் தவறியவர்களின் வீடுகளுக்கு முன்பாக நின்றுகொண்டு ‘நிகழ்ச்சி நடத்தி,’ வீட்டிலுள்ளோரை வெளியே வரவழைக்கிறார்கள், பிறகு அவர்கள் செலுத்த வேண்டிய பாக்கி தொகையைப் பற்றி விளக்கி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதைச் செலுத்த வேண்டுமென அறிவிக்கிறார்கள். ஜனங்கள் பணத்தைச் செலுத்த ஒப்புக்கொள்ளும்வரை முரசொலியை அவர்கள் நிறுத்துவதில்லை” என்கிறார் நகராண்மை ஆணையர் டி. எஸ். ஆர். ஆஞ்சநேயூலூ. விசித்திரமான இந்தத் திட்டம் பலனளித்தது. முரசடிப்பவர்கள் இடைவிடாமல் முரசடித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, கட்டப்படாதிருந்த சொத்து வரியில் 18 சதவீதம் கட்டப்பட்டது. (g05 9/22)

ஆபத்தான மாடிப்படிகள்

“ஒவ்வொரு வருடமும் மோட்டார் வண்டி விபத்துகளில் ஏற்படுகிற காயங்களின் எண்ணிக்கையைவிட [மாடிப்படிகளில் ஏறி, இறங்கும்போது] ஏற்படுகிற காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது” என ஐ.மா பத்திரிகையான த வீக் தெரிவிக்கிறது. “மாடிப்படிகளைப் பயன்படுத்தும் ஏறக்குறைய 1,091 அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் கால்தவறி விழுந்து உயிரிழக்கிறார்கள், 7,69,400 பேர் காயமடைகிறார்கள்” என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. எது அவர்களை அப்படித் தவறுதலாகக் கால்வைத்து கீழே விழும்படி செய்கிறது? “பொதுவாக, ஜனங்கள் கால் வைக்க வேண்டிய தூரத்தைத் தவறாகக் கணக்கிட்டு, தங்களுடைய ஒரு பாதத்தை தவறான இடத்தில் வைத்துவிடுகிறார்கள்” என்கிறது த வீக். (g05 9/22)

ஏறுவதா இறங்குவதா?

செங்குத்தான மலைச்சரிவில் ஏறியோ இறங்கியோ உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது வித்தியாசம் ஏற்படுமா? சில வழிகளில் அது வித்தியாசத்தை ஏற்படுத்தலாம் என்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள ஒரு மலையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; அங்கே இரண்டு மாதங்களுக்கு, 45 வாலண்டியர்கள் 30 டிகிரி செங்குத்தான மலைச்சரிவில் ஏறிப்போனார்கள், திரும்ப வருவதற்கு கேபிள் காரைப் பயன்படுத்தினார்கள். அதன்பின், இரண்டு மாதங்களுக்கு கேபிள் காரில் மேலே சென்றுவிட்டு, பிறகு அங்கிருந்து கீழே நடந்துவந்தார்கள். மலைமேல் ஏறுவது இறங்குவது, இரண்டுமே உடலிலிருந்த கெட்ட கொழுப்புகளைக் குறைக்க உதவியது என்றாலும், “டிரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கு மலைமேல் ஏறியதே அதிகமாக உதவியது, [அதேசமயம்] கீழே இறங்கியது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் குளுகோஸை உடல் நன்கு ஜீரணிப்பதற்கும் உதவியது” என டப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் & நியூட்ரிஷியன் லெட்டர் சொல்கிறது. எனவே, சர்க்கரை வியாதிக்கு மலையிலிருந்து கீழே இறங்கும் பயிற்சி நல்லதாக இருக்கும், அதோடு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருப்பவர்களுக்கும் அது கொஞ்சம் சுலபமாக இருக்கும். ஆனால், நகரவாசிகள் என்ன செய்யலாம்? உயர்ந்த கட்டிடங்களிலுள்ள லிஃப்ட்டுகளில் மேலே சென்றுவிட்டு, பிறகு படிக்கட்டுகளில் கீழே இறங்கி வரலாம். அல்லது, காரில் ஒரு குன்றின் உச்சிக்குச் சென்று இறங்கிவிட்டு, காரை மட்டும் கீழே அனுப்பிவிடலாம், பிறகு நடந்தே கீழே வரலாம். ஆனால், மலையிலிருந்து கீழே இறங்கிவரும் பயிற்சி, முழங்கால்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை நினைவில் வையுங்கள். (g05 10/8)

சாக்லேட்​—⁠நாய்களுக்கு ஆபத்து

சாக்லேட்டால் “நாய்களுக்கு வாந்தியும் வலிப்பும் ஏற்படும்,” அதுமட்டுமல்ல, “நிறைய சாப்பிடுவது [அவற்றை] கொன்றே போட்டுவிடும்” என பிபிசி செய்தி எச்சரிக்கிறது. சாக்லேட்டிலுள்ள தியோப்ரோமைன் என்ற வேதிப்பொருள் நாய்களுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கி, அவற்றின் இருதயம், சிறுநீரகங்கள், மத்திப நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதித்துவிடுகிறது. “[200 கிராம்] ப்ரௌன் சாக்லேட்டோ, பெண் லேப்ரடார் போன்ற [25 கிலோ] எடையுள்ள ஒரு நாயைச் சாகடிக்கும் அளவுக்குச் சக்தி பெற்றிருக்கிறது” என அந்த அறிக்கை சொல்கிறது. வெறும் 30 கிராம் இனிப்பில்லாத பேக்கிங் சாக்லேட் ஒரு சிறிய நாயைக் கொன்றுவிடலாம். ஆனால், செல்லப் பிராணிகளுக்குரிய கடைகளில் விற்கப்படுகிற நாய்களுக்கான செயற்கை சாக்லேட்டுகள் பாதுகாப்பானவை. (g05 10/8)

உங்கள் காரை யாராவது திருட முயலும்போது

மெக்சிகோ நகரில் கார் திருட்டு ஒரு பெரிய வியாபாரமாக ஆகிவிட்டிருக்கிறது என எல் யூனிவெர்ஸால் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 80 கார்கள் திருடப்பட்டு, விற்கப்படுகின்றன. தனியாகப் பயணம் செய்கிற ஆண்களைத்தான் திருடர்கள் அதிகமாய்க் குறிவைக்கிறார்கள், ஏனெனில் பெண்கள் கத்திகூச்சல் போடுவார்கள் அல்லது அவர்களோடு பிள்ளைகள் இருப்பார்கள், இதனால் தங்களுக்குப் பிரச்சினை ஏற்படும் என்றெல்லாம் அந்தத் திருடர்கள் நினைக்கிறார்கள் என ஒரு வழக்கறிஞர் சொல்கிறார். பிடிபடும் குற்றவாளிகளில் 85 சதவீதத்தினர் 18-லிருந்து 25-வரையான வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். கார்களைத் திருடுவதற்குக் கையாளப்படும் சில உத்திகள்: டிராஃபிக் சிக்னலில் வண்டியை நிறுத்தும் டிரைவரைத் துப்பாக்கியைக் காட்டி காரைவிட்டு இறங்கச் செய்தல், காரில் வேண்டுமென்றே மோதிவிட்டு டிரைவரை கீழே இறங்க வைத்தல், அல்லது கார்ஷெட்டைத் திறக்கிற டிரைவரை தாக்குதல் போன்றவை ஆகும். அப்படித் தாக்கப்படும்போது, டிரைவர்கள் எதிர்த்துப் போராடக்கூடாது, மாறாக அமைதியாய் இருந்து​—⁠அதுவும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்போது அப்படி அமைதியாய் இருந்து⁠—⁠முடிந்தவரை குற்றவாளிகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஞாபகத்தில் வைக்க முயல வேண்டும் என அந்தச் செய்தித்தாள் சிபாரிசு செய்கிறது. திருடப்பட்ட காரைத் திரும்ப மீட்பதற்கான வேலையை எளிதாக்குவதற்காக, கார் ஓனர்கள் தங்கள் கார் நம்பரையும், கார் கலரையும், சம்பந்தப்பட்ட வேறுசில விவரங்களையும் உடனடியாக போலீஸிடம் தெரிவிக்க வேண்டும். (g05 10/8)

டீனேஜ் டிரைவர்கள்

டிரைவிங் செய்வதிலிருந்து தங்களுடைய டீனேஜ் பிள்ளைகளைத் தடுக்க நினைத்திருக்கும் பெற்றோர்கள் சந்தோஷப்படலாம்; காரணம், அப்படிச் செய்வதன் நன்மைகளைக் குறித்து ஐ.மா.-வின் தேசிய ஆரோக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு கூடுதலான விவரங்களை அளித்திருக்கிறது. “ஆபத்துமிக்க நடத்தையில் ஈடுபடுவதற்கான உணர்வைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகம், 25 வயதுவரை முழு வளர்ச்சி அடைவதில்லை” என்பதை அந்த ஆய்வு காட்டியதாக த மையாமி ஹெரால்ட் என்ற சர்வதேச பத்திரிகை அறிவிக்கிறது. இதற்கு முன்னர், புலணுர்வுகளும் நரம்பியக்கங்களும் உச்சக்கட்டத்தை அடைகிற 18 வயதிற்குள்ளாகவே மூளை முழு வளர்ச்சி அடைந்துவிடுவதாகக் கருதப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் அளித்த புள்ளிவிவரங்களின்படி, “வயதில் மூத்த டிரைவர்களைவிட டீனேஜ் டிரைவர்கள் நான்கு மடங்கு அதிகமாக விபத்திற்குள்ளாகி, மூன்று மடங்கு அதிகமாக உயிரிழந்துவிடுவதற்கான அபாயம் இருக்கிறது”; ஆக, டீனேஜர்களுக்கு டிரைவிங் செய்யும்போது வெகு எளிதில் கவனச்சிதறலும், ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படுகிறது என்பதையே இது நிரூபிக்​கிறது. (g05 10/8)