Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

நண்பர்கள் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு என்னுடைய அம்மா காலமானார். அவருடைய மரணத்திற்குப் பிறகு என்னுடைய நெஞ்சுக்கு இனிய நண்பர்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. இவர்கள் என் உயிருக்கு உயிரானவர்கள். “உண்மையான நண்பர்களைப் பெறுவது எப்படி” (பிப்ரவரி 8, 2005) என்ற தொடர் கட்டுரையைப் படித்த பிறகுதான் இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்ததற்கு நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்!

ஓ. பி., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு 11 வயதாகிறது. அது என்னமோ தெரியவில்லை, ஃபிரென்ட்ஸ் பிடிப்பது எனக்கு கஷ்டமாக தெரிந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையைப் படித்த பிறகு, நான் ரொம்பவே மாறிவிட்டேன். என்னுடன் படிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்தப் பத்திரிகையைத் தந்தேன். அவள் மற்றவர்களைப் பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். இந்தக் கட்டுரைகளை வாசித்ததிலிருந்து அப்படிப் பேசுவதை அவள் நிறுத்திவிட்டாள்.

ஜே. கே., போலந்து

இந்தக் கட்டுரைகளைப் படித்தபோது ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது. அதாவது, நல்ல நண்பர்களைப் பெற முதலில் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும். அப்போஸ்தலர் 20:35-⁠ல் உள்ள அறிவுரைப்படி, மற்றவர்களுக்கு நான் என்னையே கொடுக்க தயாராக இருக்க வேண்டும். பொன்னான அறிவுரைகள்!

ஏ. கே., போலந்து

நண்பர்களைக் கண்டுபிடிப்பது எனக்கு எப்பொழுதும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஏன், கிறிஸ்தவ சபையில்கூட கடினமாக இருந்தது. ஆனால் நல்ல நண்பர்களைப் பெறுவதற்கு நான் மனந்திறந்து பேச வேண்டும், அதற்கு நானே வலியப் போய் பேச வேண்டும், அதோடு மற்றவர்களிடமிருந்து பரிபூரணத்தை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் போன்ற காரியங்களை இந்தக் கட்டுரையிலிருந்து புரிந்துகொண்டேன். யெகோவா சரியான நேரத்தில் நமக்கு உதவி அளிக்கிறார், அல்லவா!

எல். இஸட்., ரஷ்யா

எனக்கு ஏகப்பட்ட உடல்நல பிரச்சினைகள் இருப்பதால், மற்றவர்களோடு பழகுவது கடினமாக இருந்தது. இந்தக் கட்டுரையிலுள்ள அறிவுரைகளின்படி நடக்கத் தீர்மானித்தேன். உண்மையான நட்பை வளர்த்துக்கொள்ள மனந்திறந்து பேச வேண்டும், நம்முடைய உண்மையான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மெல்ல மெல்ல வெளிப்படுத்த வேண்டும் போன்ற அறிவுரைகள் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தன.

என். எம்., ஜப்பான்

மதிய உணவு இடைவேளையில் என்னுடைய வகுப்பிலுள்ளவர்களிடம் இந்தக் கட்டுரையைப் பற்றி பேசினேன். இந்தப் பத்திரிகையின் உதவியால் அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்கிறார்கள். பைபிளின் நடைமுறையான ஆலோசனைகளைச் சிறப்பித்துக் காட்டும் கட்டுரைகளைத் தயவுசெய்து தொடர்ந்து பிரசுரியுங்கள்.

எம். என்., ஜப்பான்

“ஆண்களும் பெண்களும் ‘சும்மா நண்பர்களாக’ இருக்க முடியுமா?” என்ற பெட்டியில் கொடுக்கப்பட்டிருந்த பதிலை நான் ரொம்ப ஆர்வத்தோடு வாசித்தேன். இதுவரை எந்த ஒரு பத்திரிகையோ புத்தகமோ இவ்வளவு எளிமையான, அதே சமயத்தில் தெளிவான பதிலை சொன்னதே இல்லை.

ஆர். கே., ஜெர்மனி

உங்கள் கட்டுரைகள் எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கின்றன. யெகோவாவுக்கு அதிகம் செய்ய வேண்டும் என்ற நம் குறிக்கோளை பலப்படுத்துவதோடு அவரை நம்முடைய நண்பராக்கிக்கொள்வதற்கும் உதவுகின்றன. நீங்கள் தருகிற ஊக்கமூட்டும் அறிவுரைகளுக்கு கோடி நன்றிகள்!

ஆர். வி. எச்., ஜெர்மனி

இந்தக் கட்டுரைகள் எனக்காகவே எழுதப்பட்டதுபோல் உணர்ந்தேன். எனக்கு 15 வயதாகிறது. நண்பர்களைப் பெறுவது எனக்கு கடினமாக இருந்தது. நண்பர்களைப் பெறுவதற்கும் பிரிந்துவிடாமல் தொடர்ந்து நண்பராக இருப்பதற்கும் நீங்கள் தந்துள்ள அறிவுரை மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மனம்திறந்து பேச எனக்கு உதவுமாறு ஜெபம் செய்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இந்தக் கட்டுரை கிடைத்தது. நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்!

பி. இ., பிரான்சு

சமீபத்தில் சில நண்பர்கள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள். நான் தனிமையில் வாடியதால் மனமுடைந்திருந்தேன். ஆனால், யெகோவா நம்மைக் கைவிடமாட்டார் என்பதை அறிந்தது எனக்கு ஊக்கமளித்தது. உண்மையான நண்பர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதன் பேரிலான நடைமுறை ஆலோசனைகளை வாசிப்பதும் வாழ்க்கையில் பொருத்துவதும் மிக பிரயோஜனமாக இருந்தன.

சி. சி., இத்தாலி

என் மகள் ஆன்மீக ரீதியில் நன்கு வளர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நட்புக்கு வயது வரம்பில்லை என்று இந்தப் பத்திரிகை வலியுறுத்துகிறது. இந்தக் கட்டுரை நிச்சயம் அவளுக்கு உதவும் என்று எனக்கு தெரியும். இது எனக்கு உதவியது.

ஏ. எல்., ஐக்கிய மாகாணங்கள்

உண்மையான நண்பனாக இருக்கவேண்டுமென்றால் நான் மற்றவர்கள்மீது அக்கறை காட்டவேண்டும், அதோடு என்னுடைய ஆள்தன்மையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை இப்பொழுது புரிந்துகொண்டேன். யெகோவா எனக்கு உதவுவார் என்பதில் எனக்கு துளிகூட சந்தேகமில்லை.

எம். வை., கனடா (g05 9/22)